Published:Updated:

“மக்கள் ‘பாகுபலி’ ‘ஆர்ஆர்ஆர்’ மாதிரியான படங்களைப் பார்க்கக் கூடாது!”

அடூர் கோபாலகிருஷ்ணன்
பிரீமியம் ஸ்டோரி
அடூர் கோபாலகிருஷ்ணன்

இன்னைக்கு பேன் இந்தியா படங்கள்னு சொல்றாங்க. ஒரு படத்துக்கு சப்டைட்டில் போட்டாலே அது பேன் இந்தியா படம்தான்.

“மக்கள் ‘பாகுபலி’ ‘ஆர்ஆர்ஆர்’ மாதிரியான படங்களைப் பார்க்கக் கூடாது!”

இன்னைக்கு பேன் இந்தியா படங்கள்னு சொல்றாங்க. ஒரு படத்துக்கு சப்டைட்டில் போட்டாலே அது பேன் இந்தியா படம்தான்.

Published:Updated:
அடூர் கோபாலகிருஷ்ணன்
பிரீமியம் ஸ்டோரி
அடூர் கோபாலகிருஷ்ணன்

மலையாளத் திரையுலகின் மலைக்க வைக்கும் படைப்பாளியான அடூர் கோபாலகிருஷ்ணன், தன் திரையுலகப் பயணத்தில் 50-வது ஆண்டைத் தொட்டிருக்கிறார். எழுத்தாளர் இமையம் சிறுகதைகளின் தொகுப்பை வெளியிட சென்னை வந்திருந்த அவரிடம் உரையாடினேன். ‘‘என் முதல் படம் ‘சுயம்வரம்’ 1972-ம் ஆண்டு வெளியானது. இப்போ திரும்பிப் பார்க்கிறப்போ, இன்னமும் நிறைய பண்ண வேண்டி இருக்குன்னு தோணுது. நேரம் இருக்கு. பணமும் கிடைக்கும். ஆனா, புதுசா சொல்ல என்கிட்ட ஏதாவது இருக்கும்போதுதான் படம் எடுக்க இறங்குவேன். சமத்துவம், பெண்ணுரிமை பற்றியெல்லாம் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் இந்தக் காலத்திலும் இருக்கு’’ என்று 81 வயதிலும் பேரார்வத்துடன் பேசுகிறார்.

‘‘இந்த 50 ஆண்டுகளில் மலையாளத் திரைப்பட உலகம் எப்படிப் பரிணமித்திருக்கிறது?’’

‘‘நான் வந்த காலம் வேறு. அப்போ எல்லாருமே சினிமாவை இன்ஸ்டிட்யூட்களில் படிச்சிட்டு வந்தார்கள். அதனால், திரைப்பட உலகில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்தன. இன்னொரு பக்கம், சினிமான்னா பாட்டு, பைட்டு, காமெடி போன்ற கமர்ஷியல் விஷயங்கள் இருக்கணும்ங்கிற எழுதப்படாத விதியும் இருந்தது. இன்னைக்கு எல்லாத்தையும் உடைச்சு வந்திருக்கோம். ‘ஜல்லிக்கட்டு’, ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ மாதிரி நிறைய படங்கள் வித்தியாசமா வந்திட்டிருக்கு. அதெல்லாம் நல்ல படங்களாவும் இருக்கு.”

“மக்கள் ‘பாகுபலி’ ‘ஆர்ஆர்ஆர்’ மாதிரியான படங்களைப் பார்க்கக் கூடாது!”

‘‘கொரோனா காலத்தில் ஓ.டி.டி-யில் நல்ல மலையாளத் திரைப்படங்கள் வந்தன. ஆனால், நீங்கள் ஓ.டி.டி-க்குப் படம் எடுக்கமாட்டேன் என்று சொல்லியிருக்கிறீர்களே?’’

‘‘ஓ.டி.டி வந்த சமயம் நிறைய வித்தியாசமான படங்கள் வந்தது உண்மைதான். ஆனா, இப்போ நிலைமை தலைகீழ். அங்கயும் தியேட்டர்ல வெற்றி பெறச் சாத்தியமுள்ள கதைகளை மட்டுமே தேர்வு செய்றாங்க. இன்னும் சில நிறுவனங்கள், தியேட்டர்ல ஹிட் ஆன படங்களை மட்டுமே வாங்குறதுன்னு முடிவுக்குக்கூட வந்தாச்சு. என் சினிமாக்களைத் தியேட்டர்லதான் பார்க்கணும். டி.வி-யிலோ கம்ப்யூட்டரிலோ பார்த்தா அதன் அழகை உணர முடியாது.

அதேமாதிரி, இன்னைக்கு பேன் இந்தியா படங்கள்னு சொல்றாங்க. ஒரு படத்துக்கு சப்டைட்டில் போட்டாலே அது பேன் இந்தியா படம்தான். இன்னைக்கு படங்களை நாலைந்து மொழிகள்ல ரிலீஸ் பண்றாங்க. அது நல்லதுதான். நான் நேரடியா மலையாளத்துல படம் பண்ணுனா எத்தனை பேருக்கு ரீச் ஆகும்னு நினைக்கறீங்க? அதையே டப்பிங் பண்ணுனா இன்னும் அதிமான மக்களைப் போய்ச் சேரும். இது நல்லதா கெட்டதான்னு கேட்டீங்கன்னா, அது அவங்கவங்க பார்வையைப் பொறுத்தது. முன்னாடியெல்லாம், வங்காளிகள் ரசனை வேற மாதிரி இருந்துச்சு. இன்னைக்கு பேன் இந்தியா கலாசாரத்தால அவங்களோட ரசனையும் கமர்ஷியலா மாறிட்டு வருது. அங்கயும் ஆக்‌ஷன் படங்களை எதிர்பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க.”

‘‘மலையாளத் திரையுலகில் பெண்களுக்கு எதிராக நிகழும் பாலியல்ரீதியான வன்கொடுமைகள் குறித்து ஆண் இயக்குநர்கள், நடிகர்கள் மெளனம் காப்பது சரிதானா?’’

‘‘அது அப்படி இல்லை. பெண்களுக்கு எப்போ எல்லாம் அநீதி நடக்குதோ, அப்போ எல்லாம் குரல் கொடுத்துக்கிட்டுதான் இருக்கோம். ஆனா, யாரோ ஒருத்தர் இன்னொருத்தர் மேல பாலியல்ரீதியான குற்றத்தைச் சுமத்தியிருக்காங்க என்பதாலேயே, குற்றம் சுமத்தப்பட்டவர் தப்பு செஞ்சார்னு ஆகிடாது. உங்க கேள்விக்குப் பின்னால் இருக்கிற ஒரு வழக்கில இப்போ நீதிமன்றத்தைவிட ஊடகங்கள்தான் விசாரணை நடத்துது. ஒரு நீதிபதியே ஒரு குற்றத்தை நேர்ல பார்த்தாலும் அவரால தண்டனை தர முடியாது. ஏன்னா, அதற்கு சாட்சிகள் வேண்டும். என்னைப் பொறுத்தவரை, ஒரு நிரபராதி குற்றவாளி ஆக்கப்பட்டுடக் கூடாது.”

‘‘நீங்க பிலிம் இன்ஸ்டிட்யூட்ல படிச்சவர். அங்கு படிச்சிட்டு வந்தாத்தான் நல்ல படங்கள் பண்ண முடியும்னு நம்புறீங்களா?’’

‘‘இன்ஸ்டிட்யூட் போகாமலும் ஒருத்தர் நல்ல இயக்குநரா இருக்க முடியும்தான். ஆனால், உங்களுடைய படங்கள் இமிட்டேஷனாதான் இருக்கும். ஒரிஜினலான படங்கள் எடுக்கணும்னா நிறைய நிறைய நல்ல படங்களைப் பார்க்கணும். எது நல்ல படம் என்பதை பிலிம் இன்ஸ்டிட்யூட்கள்தான் கத்துக்கொடுக்கும்.”

‘‘ ‘பாகுபலி 2’ படத்தை விமர்சனம் செய்திருந்தீர்கள். ‘ஆர்ஆர்ஆர்’ பார்த்தீர்களா?’’

“இந்த மாதிரி படங்களை நான் பார்ப்பதில்லை. என் பங்களிப்பாகப் பத்து ரூபாய்கூட அந்த மாதிரி படங்களுக்குப் போவதை நான் விரும்பவில்லை. மாறாக குறைந்த பட்ஜெட்டில் படம் எடுக்கும் இயக்குநர்களுக்கு என் பங்களிப்பைத் தருவேன். எனக்கு பிரமாண்டங்கள் தேவையில்லை. மக்கள் இந்த மாதிரியான படங்களைப் பார்க்கக்கூடாது. ஆனாலும் பார்க்கிறாங்க. என்ன பண்ண முடியும்?”

‘‘கேரள கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி எப்படி இருக்கிறது?’’

‘‘ரொம்ப நல்லா இருக்கு. பொதுவா ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தால் அடுத்த 5 ஆண்டுகளைப் பத்தி மட்டும்தான் கவலைப்படுவாங்க. ஆனா, எங்க முதல்வர் பினராயி விஜயன் வருங்காலத்தைப் பற்றி, வருங்காலச் சந்ததியினரைப் பற்றிச் சிந்திக்கிறார். மக்களுக்குத் தேவையான நிறைய திட்டங்களைக் கொண்டு வர்றார். சந்தோஷமா இருக்கு! கேரளத்தில் இன்னும் பல ஆண்டுகளுக்கு கம்யூனிஸ்ட் கட்சி இருக்கும். தமிழ்நாட்டில் தி.மு.க போன்ற பலம் வாய்ந்த கட்சிகள் இருந்ததால் கம்யூனிஸ்ட்கட்சிகளுக்கான தேவை பெரிதாக இல்லை. அதற்காக, கம்யூனிச சித்தாந்தமே நீர்த்துப்போய்விட்டதாக அர்த்தமில்லை. ஆனால், காலத்திற்கு ஏற்றபடி கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களை நவீனப்படுத்திக்கொள்ள வேண்டும். இளைஞர்களும் கம்யூனிஸ்ட் சித்தாந்தங்களைத் தேடிப் படிக்கவேண்டும். ஏனென்றால் அதுதான் மானுடத்தைப் பற்றிப் பேசுகிறது.”

“மக்கள் ‘பாகுபலி’ ‘ஆர்ஆர்ஆர்’ மாதிரியான படங்களைப் பார்க்கக் கூடாது!”

‘‘தமிழக அரசியலையும் ஆட்சியையும் கவனிக்கிறீங்களா?’’

‘‘நிச்சயமா. தமிழ்நாட்டைப் பற்றிய செய்திகளைத் தொடர்ச்சியா தெரிஞ்சுக்கிறேன். மு.க.ஸ்டாலின் அற்புதமாக ஆட்சி செய்கிறார். நிதி நிர்வாகத்துல தமிழ்நாட்டை கேரளம் உதாரணமா எடுத்துக்கணும். பொருளாதாரம் படிச்ச ஒருத்தரை நிதியமைச்சரா உங்க முதலமைச்சர் நியமிச்சிருக்கிறார். அது எவ்வளவு பெரிய விஷயம். தேசத்தின் வளர்ச்சியில தமிழ்நாட்டின் பங்கு நிறைய. பல இடங்கள்ல மக்களுக்காக ஒதுக்குற பணம் எங்க போகுதுன்னு தெரியாது. ஆனா, தமிழ்நாட்டுல சமூகநீதி இருக்கிறதால, அரசு ஒதுக்குற பணம் மக்கள் நலத்திட்டங்களுக்குப் போய்ச் சேருவது கண்கூடாத் தெரியுது. பள்ளி இடைநிற்றல் பழங்குடியினர் மத்தியில் அதிகமா இருக்கு. அவங்களை மைய நீரோட்டத்துக்குக் கொண்டு வரணும். அது இங்க சரியா நடக்குது.”

‘‘இன்னைக்கு நாடு முழுவதும் வெறுப்பரசியல் பரவிக்கிட்டு வருதே? அதுக்கு எதிரா கலைஞர்கள் என்ன பண்ண முடியும்னு நினைக்கிறீங்க?’’

“தென்னிந்தியாவுல, குறிப்பா கேரளத்திலும் தமிழ்நாட்டிலும் அந்த வெறுப்பரசியல் இன்னும் வரலைன்னுதான் சொல்லணும். ஆனா, சினிமாக்காரங்களால என்ன பண்ண முடியும்னு நினைக்கிறீங்க? நாங்கதான் இந்தப் பிரச்னைகளைப் பத்தி எல்லாம் பேசாம, பாட்டு, டான்ஸ், பைட்டுன்னு கடந்து போயிடுறோமே.”

‘‘உங்களின் பூர்வீக இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின..?’’

“அது அங்குள்ள கிராமப் பஞ்சாயத்தின் முடிவு. என்னைப் பொறுத்தவரைக்கும் நினைவு இல்லமெல்லாம் தேவையில்லை. இறந்ததற்கு அப்புறம்தானே நாம எல்லாம் நினைக்கப்படுறோம். நான்தான் உயிரோட இருக்கேனே! (சிரிக்கிறார்). ஆனால், என் பெயரைப் பயன்படுத்தாம அந்த வீட்டை ஒரு பண்பாட்டு ஆய்வு நிலையமா மாத்திக்கலாம். அதுதான் என் விருப்பம்.”

‘‘கேரளத்தில் அரசு வீடு கட்டும் திட்டத்துக்காக உங்கள் பூர்வீக நிலங்களை தானமாக வழங்கியிருக்கிறீர்கள். நிலத்துக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவு பற்றி உங்கள் புரிதல் என்ன?’’

‘‘ஒவ்வொரு நாளும் மக்கள் தொகை பெருகிக்கிட்டே இருக்கு. அதுக்கேத்த மாதிரி இடப்பற்றாக்குறையும் பெரிசாகிட்டே இருக்கு. வேறு எதுல வளர்ச்சி இருக்கோ இல்லையோ, நிலத்தின் விலை மட்டும் ஒவ்வொரு நிமிஷமும் கூடிக்கிட்டே போகுது. இங்கு பலருக்கு நிலமோ, வீடோ இல்லை. அப்ப என்னால என்ன செய்ய முடியும்? என்கிட்ட இருக்கிறதை இல்லாதவங்களோடு பகிர்ந்துக்க மட்டுமே முடியும். நான் செஞ்சது அதுதான். அந்த நிலத்துல நாலஞ்சு குடும்பங்கள் வாழ முடியும். எனக்கு அதுபோதும்.”