Published:Updated:

``தியேட்டரில் தம்பி ராமையா அழுகையை அடக்க 15 நிமிஷம் ஆச்சு..!’’ - சமுத்திரக்கனி

அடுத்த சாட்டை

"பள்ளியும் இல்லாமல் வீடும் இல்லாமல் மூன்றாவது இடம் ஒன்று வேண்டும்னு மாடசாமி ஐயா எழுதியிருந்தாரு. அடுத்த படம் ‘இன்னொரு சாட்டை’ இதைப்பத்திதான். ‘அடுத்த சாட்டை’ படம் காசு சம்பாதிக்கிறதுக்கான படம் இல்லை’’ - சமுத்திரக்கனி

``தியேட்டரில் தம்பி ராமையா அழுகையை அடக்க 15 நிமிஷம் ஆச்சு..!’’ - சமுத்திரக்கனி

"பள்ளியும் இல்லாமல் வீடும் இல்லாமல் மூன்றாவது இடம் ஒன்று வேண்டும்னு மாடசாமி ஐயா எழுதியிருந்தாரு. அடுத்த படம் ‘இன்னொரு சாட்டை’ இதைப்பத்திதான். ‘அடுத்த சாட்டை’ படம் காசு சம்பாதிக்கிறதுக்கான படம் இல்லை’’ - சமுத்திரக்கனி

Published:Updated:
அடுத்த சாட்டை

அரசு பள்ளியின் நிலையை, கல்வியின் முக்கியத்துவத்தை, ஆசிரியர்களின் அலட்சியத்தை எதார்த்தமாக உயிர்ப்புடன் விளாசிய படம் 'சாட்டை'. 2012 ஆம் ஆண்டு அன்பழகன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, தம்பி ராமையா, யுவன், மகிமா நம்பியார் ஆகியோர் நடிப்பில் இமான் இசையில் வெளியானது. விமர்சகர்களாலும், மக்களாலும் கொண்டாடப்பட்டு இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது.

இப்படத்தின் இரண்டாம் பாகமான ‘அடுத்த சாட்டை’ வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது. சமுத்திரக்கனி, தம்பி ராமையா, அதுல்யா, யுவன் உட்பட பலர் நடித்துள்ளனர். அன்பழகனே இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ஆசிரியர் பகவான், “மாணவர்கள் என்னை பாசப்போராட்டத்தால் போகவிடாமல் தடுத்தது அதிகம் பேசப்பட்டது. நிறைய பேர் எங்கிட்ட பேசுனாங்க. சமுத்திரக்கனி அண்ணனும் பேசுனாரு. ’நான் நடிச்சேன். நீ வாழ்ந்துட்ட தம்பி’னு சொன்னாரு. கல்வி கற்க இயலாத சூழலில் இருந்து நிறைய மாணவர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு கத்துக்கொடுத்து வழிகாட்றதுலதான் ஒரு ஆசிரியரின் வேலை முழுமையடையும். அந்தச் சூழலை ’சாட்டை’ படம் மூலமாகச் சொல்லியிருந்தார்.

ஆசிரியர் பகவான்
ஆசிரியர் பகவான்

மாணவர்களுக்குப் பிடித்த பாடம் என்று எதுவுமில்லை. மாணவர்களுக்குப் பிடித்த ஆசிரியர் எடுக்கக்கூடிய எல்லாப் பாடமும் அவர்களுக்குப் பிடிக்கும். பள்ளிக்கு ஒருவர் சமுத்திரக்கனியாக இருக்கும்பட்சத்தில்தான் பள்ளியிலும் கல்வியிலும் மாற்றம் வரும். இன்னும் நிறைய சாட்டைகள் உருவாக வேண்டும். மாணவர்கள் மத்தியிலும் கல்வியிலும் புரட்சியை ஏற்படுத்தட்டும்” என்று பேசினார்.

எழுத்தாளர் மாடசாமி பேசும்போது, “நான் பாப்புலாரிட்டிக்கு எதிரானவன். சூர்யா, சமுத்திரக்கனியைப் பார்க்கிறபோது பாப்புலாரிட்டியின் இன்னொரு முகத்தைப் பார்க்க முடிகிறது. ஆசிரியர் கூட்டங்களில் மறக்காமல் பேசப்படுகிறவராக சமுத்திரக்கனி இருக்கிறார்.

எழுத்தாளர் மாடசாமி
எழுத்தாளர் மாடசாமி

சுவரில்லா வகுப்பறைகளை நானும் நடத்தியிருக்கிறேன். வகுப்பறையைத் தாண்டுவது எளிதான விஷயம் இல்லை. கல்லூரிப் பேராசிரியர்கள் முதல் வகுப்பறைகள் வரை கேலியாகவே படங்களில் வந்திருக்கிறது. கேலிக்குரிய இடத்தை சிந்தனைக்குரியதாக மாற்றியிருக்கிறார். ஆசிரியரை கதாநாயகனாகக் காட்டியிருக்கிறார். கல்வியைக் கலையாக்குகிறார். இமாலய சாதனை அது. அவரது குரல் வெல்லும்” என்றார்.

இயக்குநர் மற்றும் நடிகர் சமுத்திரக்கனி பேசும்போது, “ ‘சாட்டை’ படம் முதல்நாள் தியேட்டர்ல நானும் தம்பி ராமையா அண்ணனும் பார்த்துட்டு இருந்தோம். திரையில் மிகப்பெரிய மேஜிக் நடந்துட்டு இருக்கு. அப்போ அண்ணன் அழுதுட்டே, ‘நாம எங்கேயோ கெடந்தோம்டா. அப்பா டைரக்டர் கிடையாது; அம்மா தயாரிப்பாளர் கிடையாது. ஆனால், நம்ம இரண்டு பேரும் சினிமாவுக்கு வந்து, உருண்டு புரண்டு ஒரு இடத்துல நிக்கிறோம். நம்மளைப் பார்த்து கை தட்டுறாங்க’னு சொன்னாரு. அவர் அழுகையை அடக்க 15 நிமிஷம் ஆச்சு. ஒரு பொறுப்புடன் இருக்கக்கூடிய நடிகனாக என்னை நிலைநிறுத்தியவர் அன்பழகன்.

சமுத்திரக்கனி
சமுத்திரக்கனி

பெருசா ஆ..ஊனு சொல்ற படம் ‘அடுத்த சாட்டை’ இல்லை. பார்வையாளனோடு உரையாடுகிற, தன்னுடைய ஆசிரியரை நினைவுப்படுத்துகிற திரைப்படம்தான் இது. இந்தத் திரைப்படம் வந்தபின் எந்த ஆசிரியரும் தன்னுடைய மாணவனை, ’வெளிய போ’னு சொல்லவே மாட்டாரு. பள்ளியும் இல்லாமல் வீடும் இல்லாமல் மூன்றாவது இடம் ஒன்று வேண்டும்னு மாடசாமி ஐயா எழுதியிருந்தாரு. அடுத்த படம் ‘இன்னொரு சாட்டை’ இதைப்பத்திதான். ‘அடுத்த சாட்டை’ படம் காசு சம்பாதிக்கிறதுக்கான படம் இல்லை’’ என்று பேசினார்.

படத்தின் தயாரிப்பாளர் பிரபு திலக், படத்தின் முக்கிய நடிகர்கள், சமுத்திரக்கனியின் ஆசிரியர்கள், ரூட்டு தல விவகாரத்தில் அதிரடி நடவடிக்கைகளை எடுத்த காவல் உயர் அதிகாரி ஈஸ்வர், இராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், அன்னை கல்விக் குழுமத்தின் தாளாளர் ஹியூமாயுன், பின்னணி பாடகர்கள், பிரபல இயக்குநர்கள், திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் என அரங்கமே நிரம்பி வழிய, இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.