Election bannerElection banner
Published:Updated:

நேரடியாக விஜய் டிவியில் ரிலீஸாகும் `ஏலே'... தயாரிப்பாளரின் திடீர் முடிவுக்குக் காரணம் என்ன?!

ஹலிதா ஷமீம், ஏலே
ஹலிதா ஷமீம், ஏலே

'ஏலே' படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதற்கு பிரச்னைகள் எழுந்தன. அதனால், படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகும் என நினைத்திருந்த நிலையில், தற்போது தயாரிப்பாளரிடம் இருந்து அறிக்கை ஒன்று வெளியாகி இருக்கிறது.

'பூவரசம் பீப்பி', 'சில்லுக் கருப்பட்டி' போன்ற படங்களை இயக்கிய ஹலிதா ஷமீம் இயக்கத்தில் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் 'ஏலே'. பிப்ரவரி 12-ம் தேதி படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு செய்து, அதற்கான அறிவிப்புகள் எல்லாம் வெளியான நேரத்தில் படத்தின் ரிலீஸில் சில சிக்கல்கள் எழுந்தன.

ஏலே
ஏலே

'மாஸ்டர்' படத்தைப் போலவே 'ஏலே' திரைப்படமும் தியேட்டரில் வெளியான 30 நாட்களுக்குள்ளேயே ஓடிடியில் ரிலீஸ் செய்ய படத்தின் தயாரிப்பாளர் சஷிகாந்த் திட்டமிட்டிருந்தார். இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்கள். "தியேட்டரில் ரிலீஸான 35 நாட்களுக்கு முன்னதாகவே படத்தை ஓடிடியில் வெளியிடமாட்டோம்" என கையெழுத்துப்போட்டு கொடுத்தால்தான் படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்யவிடுவோம் என்றனர் தியேட்டர் உரிமையாளர்கள். இதற்கு தயாரிப்பாளர் Y NOT சஷிகாந்த், ரிலையன்ஸ் நிறுவனம் ஒப்புக்கொள்ளவில்லை. அதனால், படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகும் என நினைத்திருந்த நிலையில், தற்போது தயாரிப்பாளரிடம் இருந்து அறிக்கை ஒன்று வெளியாகி இருக்கிறது.

அந்த அறிக்கையில், "சில ஆச்சர்யமான புதிய விதிகளாலும், தவிர்க்கமுடியாத காரணங்களாலும் 'ஏலே' படத்தை எங்களால் தியேட்டரில் திரையிட முடியவில்லை. இந்தப் படத்தை பிப்ரவரி மாதம் 28-ம் தேதி மதியம் 3 மணிக்கு நேரடியாக விஜய் தொலைக்காட்சியில் வெளியிட இருக்கிறோம்" என தயாரிப்பு நிறுவனம் குறிப்பிட்டிருக்கிறது. தயாரிப்பாளரின் இந்த முடிவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏலே
ஏலே

சஷிகாந்த்தின் இந்த முடிவு தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் என எல்லாத்தரப்பிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. தியேட்டரில் ரிலீஸாகாமல் டிவியில் படம் ரிலீஸாவதில் படக்குழுவினரும் அப்செட்.

விஜய் டிவியில் பிப்ரவரி 28-ம் தேதி படம் ஒளிபரப்பாவதற்குள் வேறு சில மாற்றங்களும் நடக்கலாம் என்கிறார்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு