Published:Updated:

‘’ #ExitPoll அநியாயத்தப் பார்த்தா நாம எல்லாரும் சிவப்புக்கு மாறணும் போல..!’’ - ‘ஜிப்ஸி’ விழாவில் யுகபாரதி

Cast and crew at the audio launch of 'Gypsy'. ( V Nagamani )

ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள, இயக்குநர் ராஜு முருகனின் 'ஜிப்ஸி' டிரெயிலரும், பாடல்களும் வெளியாயின. படத்தின் கதைக்களத்துக்கும், கருத்தியலுக்கும் ஏற்றார் போல ஒரு இடதுசாரி அமைப்பின் அரசியல் மாநாடு சத்யம் தியேட்டரில் நடந்தால் எப்படி இருக்குமோ, அப்படி இருந்தது ஜிப்ஸியின் இசை வெளியீடு.

‘’ #ExitPoll அநியாயத்தப் பார்த்தா நாம எல்லாரும் சிவப்புக்கு மாறணும் போல..!’’ - ‘ஜிப்ஸி’ விழாவில் யுகபாரதி

ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள, இயக்குநர் ராஜு முருகனின் 'ஜிப்ஸி' டிரெயிலரும், பாடல்களும் வெளியாயின. படத்தின் கதைக்களத்துக்கும், கருத்தியலுக்கும் ஏற்றார் போல ஒரு இடதுசாரி அமைப்பின் அரசியல் மாநாடு சத்யம் தியேட்டரில் நடந்தால் எப்படி இருக்குமோ, அப்படி இருந்தது ஜிப்ஸியின் இசை வெளியீடு.

Published:Updated:
Cast and crew at the audio launch of 'Gypsy'. ( V Nagamani )

எப்போது பாராளுமன்றத் தேர்தல் முடியும், எப்போது தேர்தல் நடைமுறைகள் விடுவிக்கப்படும் என ஜிப்ஸியாய் ராஜூமுருகன் அலைந்துகொண்டிருந்து இருப்பார் போல. தேர்தல் முடிந்து சட்டென உயரும் பெட்ரோல் விலை போ, சட்டென வந்து நிற்கிறது ஜிப்ஸியின் டிரெய்லரும் , பாடல்களும். படத்தின் கதைக்களத்துக்கும், கருத்தியலுக்கும் ஏற்றார் போல ஒரு இடதுசாரி அமைப்பின் அரசியல் மாநாடு சத்யம் தியேட்டரில் நடந்தால் எப்படி இருக்குமோ, அப்படி இருந்தது ஜிப்ஸியின் இசை வெளியீடு.

தன் பெயருக்கேற்ற கதாபாத்திரத்தை முதன்முறையாக நடித்துள்ள ஜீவா எனப் பாராட்டிய பாடலாசிரியர் யுகபாரதி, அவர் அணிந்திருந்த சிவப்பு சட்டையையும் சுட்டிக்காட்ட, "ஐயோ.. நான் இந்த கலர் கொஞ்சம் பளிச்சுனு இருக்கும்னு தான் போட்டுகிட்டு வந்தேன்," எனக் கூறி சமாளித்தார் ஜீவா. வந்தவுடன், பஞ்சாபைச் சேர்ந்த இடதுசாரிப் பாடகர், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான புரட்சியாளர் பந்த் சிங்கைப் பார்த்து நலம் விசாரித்துவிட்டு தன் இருக்கையில் அமர்ந்த ஜீவாவைக் கட்டித் தழுவினார் யுகபாரதி.

Jiiva with Banth Singh
Jiiva with Banth Singh
V Nagamani

பின்னர் மேடையில் பேசிய யுகபாரதி, "நேத்து எக்சிட் போல்ங்கிற பேர்ல நடத்தப்பட்ட அநியாயத்தப் பார்த்தா, இனிமே தமிழ்நாட்டுல இருக்குற எல்லாருமே கருப்புச் சட்டைய கழட்டி வச்சுட்டு சிவப்புச் சட்டையப் போட்டுகிட வேண்டியதான்னு தோணுது. என்ன இருந்தாலும், என் தமிழ் மக்கள் கண்டிப்பா அவங்களுக்கு ஒரு சீட்டு கூட தரமாட்டாங்கனு தெரியும். நம்ம எதிராளிங்க அப்படிப்பட்டவங்க," என முதலில் மறைமுகமாகச் சொன்னார்.

ஆனால், அடுத்ததாக, படத்தின் தயாரிப்பாளர் அம்பேத்குமாரைப் பற்றி பேசியபோது, "இவர் மாதிரி ஒரு தயாரிப்பாளர் கிடைத்ததுதான் இந்தப் படத்தோட பெரிய பலமே. 'ஜிப்ஸி' இந்தியா முழுக்க 90 நாட்களுக்கு மேலா படமாக்கப்பட்டது. நான் அவ்வப்போது அம்பேத்துக்குக் கால் பண்ணி படம் எப்படி போய்க்கிட்டு இருக்குனு அப்டேட் கேப்பேன். அவரும் சொல்வார். ஒரு நாள் அப்படிப் பேசும்போது, படம் அடுத்து காசியில படமாக்கப்பட இருக்குது, நாமளும் போவோம்னு சொன்னார். அது நரேந்திர மோடி தொகுதியாச்சே. நான் வேண்டாம் நான் வரலன்னு சொன்னேன். அப்போதான் அவரு, 'அட, நான் ஒன்னும் புண்ணியம் தேடக் காசிக்குப் போகல. காசி எவ்வளவு அழுக்கா இருக்குனு பாப்போம் வாங்க'ன்னு, சொன்னார். இன்னும் மூனு நாளுல தெரிஞ்சிடும். இந்தியாவோட மொத்த அழுக்கையும் போக்கியிருக்கோமா இல்லையான்னு," என நேரடியாகவே பாராளுமன்றத் தேர்தல் முடிவைக் குறித்தும், பா.ஜ.க குறித்தும் நேரடியாகவே விமர்சனம் வைத்தார்.

முன்னதாகப் பேசிய இயக்குநர் கரு பழனியப்பன், "இந்தப் படம் ராஜு முருகனுக்கு, ஜீவாவுக்கு, சந்தோஷ் நாராயணுக்குனு எல்லாருக்கும் வெற்றியைத் தேடித் தரணும். அதைவிட முக்கியமா இதோட தயாரிப்பாளர் அம்பேத்குமாருக்கும் வெற்றியத் தேடித் தரணும்," என்றார். அதை விளக்கியவர், "ஒரு முறை என்னுடய உதவியாளரோட ஒன்னுவிட்ட தம்பிக்கு ஒரு மருத்துவ உதவிகேட்டு அம்பேத்துக்கு கால் பண்ணுனேன். அரசு மருத்துவமனைதான். ஆனாலும், அம்பேத் மாதிரி ஒரு சட்டமன்ற உறுப்பினர் வந்தா ஒழுங்கா நடத்துவாங்கன்னு அவர் உதவி கேட்டேன். ஆனா, அவர் அதுக்காக எடுத்துக்கிட்ட மெனக்கெடல் இருக்கே. அதுதான் முக்கியம். தன் கம்பேனியில வேல பாக்குற இயக்குநர் இல்லை. அந்த இயக்குநரோட நண்பரும் இல்ல. அந்த இயக்குநரோட, நண்பரோட, உதவியாளரோட, ஒன்னுவிட்ட தம்பிக்காக வந்து நின்னு எல்லாத்தையும் நடத்திக் கொடுக்குற ஒருத்தர் எப்படிப்பட்டவரா இருப்பார்? அந்த ஒரு வாரம் அவர் கூட பழக வாய்ப்பு கிடைச்சுது. அந்த சமயத்துல அவர் தொகுதி மக்கள் அவருக்குக் கால் பண்ணும்போது எல்லா அழைப்பையும் எடுத்துப் பேசி, அவங்க பிரச்னைக்கு ஆள் அனுப்பி, தீர்வு கண்டு, ஒரே நேரத்துல அரசியல்,சினிமான்னு ஈடுபாட்டோட இருக்குற ஒருத்தரக் கண்டிப்பா நாம ஜெயிக்க வைக்கணுமா இல்லையா," என்றார்.

Karu Palaniappan at Gypsy audio launch
Karu Palaniappan at Gypsy audio launch
V Nagamani

மேலும், தன் ஸ்டைலில் நக்கலாக, "அம்பேத் கண்டிப்பா மீண்டும் சட்டமன்ற உறுப்பினர் ஆகிடுவார். ஆனா, அவர் மாதிரியே, ஒரு தீவிர அரசியல் கருத்தியலோடு இருக்குற, அதை சினிமாவுல பேசுற ராஜு முருகனும், அடுத்த சட்டமன்றத்துல, அம்பேத்துக்குப் பக்கத்து இருக்கையில அமர வேண்டும்னு கேட்டுக்கிறேன்," எனக் கூறிவிட்டு விடைபெற்றார் பழனியப்பன்.

பழனியப்பன் மட்டுமல்லாது, இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி, லெனின் பாரதி, மாரி செல்வராஜ், சீனு ராமசாமி, மீரா கதிரவன், நெல்சன் வெங்கடேசன், முத்து, சரவண ராஜெந்திரன், இசையமைப்பாளர் இமான், தயாரிப்பாளர்கள் ஆர்.பி. செளத்ரி, எஸ். ஆர். பிரபு, எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மதன் உள்ளிட்டோரும் பங்கேற்று படத்தை வாழ்த்திப் பேசினர்.

Launch of Banth Singh's book at Gypsy Audio Launch
Launch of Banth Singh's book at Gypsy Audio Launch
V Nagamani

விழாவுக்கு இடையில், புரட்சிப் பாடகர் பந்த் சிங்கின் புத்தகம் வெளியானது. தேனிசைச் செல்லப்பா, எஸ். ராமகிருஷ்ணன், என இருவரையும் அழைத்து புத்தகம் வெளியிடப்பட்டது. அவர் குறித்து ஒரு காணொலி திரையிடப்பட்டது. "பஞ்சாப் மாநிலத்தில் 2000ம் ஆண்டு, அவர் மகள் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார். இதை எதிர்த்து நீதி கேட்ட பந்த் சிங்கின் இரு கைகள் மற்றும் ஒரு காலை வெட்டி எடுத்து பழிதீர்த்தனர், ஆதிக்க சாதியினர். இருப்பினும் தொடர்ந்து போராடிய சிங் தனது பாடல்கள் மூலமும், கனத்த குரல்மூலமும், ஆதிக்க சக்திகளுக்கு எதிராகப் போராடி வருகிறார்", என் அந்தக் காணொலியில் கூறப்பட்டது. அது திரையிடப்பட்டதும் 'ஜிப்ஸி' படத்தில் நடிக்க வைத்ததற்காக ராஜு முருகனுக்கு நன்றி தெரிவித்துவிட்டு உரத்த குரலில் ஒரு பாடலையும் பாடினார், பந்த் சிங்.

விழாவில் பேசிய சந்தோஷ் நாராயணன், "எப்பவும் ஒரு ஆடியோ லாஞ்ச்ல பேசும்போது இவ்வளோ பேசணும்னு லிஸ்ட்டெல்லாம் போட்டதில்ல. ஆனா, இன்னிக்கு நிறைய பேர இங்கக் குறிப்பிட்டே ஆகணும். கிட்டத்தட்ட 200 இசைக் கலைஞர்கள் இந்தப் படத்துக்காக உழைச்சுருக்காங்க. பல நாடுகளுக்குப் பயணிச்சு இந்தப் படத்துக்காக பல இசைக் கலைஞர்களைச் சந்தித்து, இப்போ இருக்குற இசை வடிவம் எப்படி இருக்கு, மக்கள் எதை ரசிக்கிறாங்கன்னு பல விஷயங்களை இந்தப் படத்துக்காகப் பண்ணியிருக்கோம். அதுமட்டுமில்லாம, இந்தப் படத்துல வர 'தேசாந்திரி' பாட்டோட ட்யூன்தான் நான் முதல் முதலா கம்போஸ் பண்ணுன ட்யூன். அந்த ட்யூன ஓ.கே பண்ணுன இயக்குநருக்கும் நன்றி சொல்லணும்," என்றார்.

Jiiva at Gypsy audio launch
Jiiva at Gypsy audio launch
V Nagamani

இறுதியாகப் பேசிய நடிகர் ஜீவா, "என் வாழ்க்கை முறையே ஒரு ஜிப்ஸி மாதிரிதான் இருக்கும். என் வீட்டுக்குள்ளேயே, அப்பா ராஜஸ்தானி, அம்மா தமிழ், மனைவி பஞ்சாபின்னு ஒரு கலவையாத்தான் இருக்கோம். அப்படி இருக்கும் போது இந்தக் கதை எனக்கு வரும்போது ரொம்ப 'க்ளோஸ் டு ஹார்ட்' மாதிரி இருந்தது," என்றார். மேலும், படத்தைப் பற்றி, "'ஜிப்ஸி' முழுக்க முழுக்க ஒரு ஆடியன்ஸ் கண்ணோட்டத்துல இருக்குற படம். அந்தக் கேரக்டரே அப்படிப்பட்டதுதான். எப்படி இப்போ ஒரு நாள் முழுக்க நாம் டி.வி. செல்ஃபோன் இல்லாம இருந்தா ஒரு நிம்மதியான வாழ்க்கை இருக்குமோ அப்படிப்பட்டது ஜிப்ஸியோட வாழ்க்கை. நம்ம தமிழ்நாட்டுல என்ன பிரச்னை இருக்கு, மக்கள் எப்படி வாழ்ந்துக்கிட்டு இருக்காங்கன்னு செய்திகள் மூலமா தெரிஞ்சுக்கிறோமோ, அதேபோல இந்தியா முழுக்க மக்கள் எப்படி இருக்காங்கன்னு இந்தப் படம் பார்த்து தெரிஞ்சுக்கலாம்," என்றார், ஜீவா.

படக்குழுவிலிருந்து, இயக்குநர் ராஜு முருகன், நாயகி நடாஷா, மலையாள இயக்குநரும் நடிகருமான லால் ஜோஸ், ஒளிப்பதிவாளர் செல்வகுமார் உள்ளிட்டொரும் பேசினர்.