Published:Updated:

உலக அழகி மட்டுமல்ல... பல கோடி இந்தியர்களின் மனநல மருத்துவர்! #HappyBirthdayAishwarya

Aishwarya Rai Bachan

இன்று ஐஸ்வர்யா ராய்க்கு 46 வயது நிறைவடைகிறது. கால் நூற்றாண்டாக அவரை ரசிக்கிறேன். இந்தக் காலம் எத்தனை கொடூரமானது! அவருக்கு வயதாகி வருகிறது என நம்பவே விரும்பாத ஒரு தலைமுறை எங்களுடையது.

உலக அழகி மட்டுமல்ல... பல கோடி இந்தியர்களின் மனநல மருத்துவர்! #HappyBirthdayAishwarya

இன்று ஐஸ்வர்யா ராய்க்கு 46 வயது நிறைவடைகிறது. கால் நூற்றாண்டாக அவரை ரசிக்கிறேன். இந்தக் காலம் எத்தனை கொடூரமானது! அவருக்கு வயதாகி வருகிறது என நம்பவே விரும்பாத ஒரு தலைமுறை எங்களுடையது.

Published:Updated:
Aishwarya Rai Bachan

தொன்னூறுகளின் முற்பகுதி. அப்போது 10 வயதுச் சிறுவனான‌ எனக்கு அந்த பெப்ஸி விளம்பரப் பெண் வகைதொகையின்றிப் பிடித்துப் போனார். அதுவும் அவர் அவ்விளம்பரத்தில் முதன்மைப் பாத்திரம் அல்ல. அப்போது உச்சம் நோக்கி வளர்ந்து கொண்டிருந்த‌ நடிகரான அமீர் கானும், மாடலிங் வாழ்வைத் தொடங்கியிருந்த மஹிமா சௌத்ரியும் பிரதானப் பாத்திரங்களாய் நடித்த ஒரு நிமிட விளம்பரத்தின் இறுதியில் ஒரு திருப்புமுனைக் காட்சிக்காக சில நொடிகள் மட்டுமே வருவார் அந்தப் பெண். "I am Sanjana. Got another Pepsi?" என்று கேட்பார். அவ்வளவுதான்... அதற்கே இதயம் சிதறியது!

அந்த விளம்பரப் பெண்... அந்த மாடல்... அந்த சஞ்சனாதான் இன்றைய ஐஸ்வர்யா ராய் பச்சன்!

Aishwarya Rai
Aishwarya Rai

எனக்கு மட்டுமல்ல. என் போன்ற ஏராளமான 90-ஸ் கிட்ஸ்களுக்கும், எங்களினும் மூத்த‌ 80ஸ் கிட்ஸ்களுக்கும் அப்படித்தான் இதயம் சிதறியிருக்கும். இத்தனைக்கும் அவர் அப்போது உலக அழகியும் அல்ல; நடிகையும் அல்ல. வெறும் மாடல்... இந்தியாவின் ஆயிரக்கணக்கான மாடல்களில் ஒருவர். அப்போது அவருக்குச் சுமார் இருபது வயது.

அதற்கு அடுத்த ஆண்டே, 1994-ல், ஃபெமினா இதழ் நடத்துகிற‌ மிஸ் இந்தியா போட்டியில் இரண்டாமிடம் பெறுகிறார். அப்போது ஐஸ்வர்யா ராய் தோற்றது சுஷ்மிதா சென்னிடம்! இரண்டாமிடம் பெற்றதுபோக, மிஸ் கேட்வாக், மிஸ் மிராகுலஸ், மிஸ் போட்டோஜெனிக், மிஸ் பர்ஃபெக்ட் டென், மிஸ் பாப்புலர் ஆகிய பட்டங்களையும் வென்றார். மிஸ் இந்தியா போட்டியில் இரண்டாமிடம் பெற்றதன் அடிப்படையில் அந்த ஆண்டில் தென்னாப்பிரிக்காவின் சன் சிட்டியில் நடந்த மிஸ் வேர்ல்ட் என்ற உலக அழகிப் போட்டியில் கலந்துகொண்டார். (ஃபெமினாவின் மிஸ் இந்தியா போட்டியில் முதலிடம் பிடிப்பவர் மிஸ் யூனிவர்ஸ் போட்டியிலும், இரண்டாமிடம் பிடிப்பவர் மிஸ் வேர்ல்ட் போட்டியிலும், மூன்றாமிடம் பிடிப்பவர் மிஸ் இன்டர்நேஷனல், மிஸ் எர்த், மிஸ் சூப்பர்நேஷனல் போன்ற போட்டிகளில் ஒன்றிலும் கலந்துகொள்வது வழக்கம்.)

1994-ம் ஆண்டின் மிஸ் வேர்ல்ட் பட்டத்தை வென்றார் ஐஸ்வர்யா ராய். பதினெட்டு ஆண்டுகளுக்குப் பின் ஓர் இந்தியப் பெண்ணுக்குக் கிடைத்த வெற்றி அது. அதே ஆண்டு சுஷ்மிதா சென் மிஸ் யூனிவர்ஸ் பட்டம் பெற்றார். இந்த இரு நிகழ்வுகளும் இந்திய ஃபேஷன் உலகையும், சராசரி இந்திய‌ப் பெண்கள் தம்மை அலங்கரித்துக்கொள்ளும் விதத்தையும் புரட்டிப் போட்டன. பணக்காரர்களுக்கும் மாடல்களுக்கும் மட்டுமென கருதப்பட்ட அழகுப் பொருள்கள் வெள்ளமென நுகர்வோர் சந்தைக்குள் பாய்ந்தன. ஐஸ்வர்யா ராய் இந்தியப் பெண்களின் ஆதர்சம் ஆனார்!

மிஸ் வேர்ல்ட் போட்டியில் மிஸ் போட்டோஜெனிக் மற்றும் ஆசிய, ஓசனியா பிராந்தியங்களின் அழகு ராணி என்ற பட்டத்தையும் வென்றார். இதில் கவனிக்க வேண்டியது மிஸ் இந்தியா போட்டியிலும் அவர் மிஸ் போட்டோஜெனிக் பட்டத்தை வென்றிருந்தார் என்பதே. அதாவது புகைப்படத்தில் வசீகரமாய் உறைகின்ற முகம். ஐஸ்வர்யா ராயின் வெற்றியின் ரகசியமே இதுதான். 90-கள் மற்றும் 2000-களில் ஐஸ்வர்யா ராயின் புகைப்படங்களே இந்திய ரசிகர்கள் மத்தியில் கோலோச்சின. வண்ணமயமான புகைப்படங்கள். அப்போது வீடியோக்கள் பரவலாகவில்லை. அதனால் அந்தச் சமயத்தில் புகைப்படங்களில் அழகாகத் தெரியும் பெண் எளிதாகப் பேரழகி என ரசிகர்கள் மனதில் உறுதி செய்யப்பட்டு விடுவாள். ஐஸ்வர்யா ராய் இந்திய ரசிகர்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றது அப்படித்தான்.

aishwarya rai
aishwarya rai

பொதுவாய் கர்நாடகப்புறத்துப் பெண்களுக்கு உரித்தான ஒரு முக வசீகரம் (Cuteness) ஐஸ்வர்யா ராய்க்கு உச்சம் பெற்றிருந்தது. தாய் மொழி துளு; சொந்த ஊர் மங்களூர். நடிகைகளில் இதே வகைமையில் மேலும் சில பேரழகிகள் உண்டு: சரோஜா தேவி (தாய் மொழி கன்னடம்; சொந்த ஊர் பெங்களூர்) மற்றும் தீபிகா படுகோன் (தாய் மொழி கொங்கணி, சொந்த ஊர் பெங்களூர்). அந்த வடமேற்குத் தக்காண பீடபூமியின் ஏதோ ஒரு ரகசிய அம்சம் அம்மண்ணின் பெண்களுக்கு அழகை அள்ளியூட்டி விடுகிறது!

உலக அழகிப் பட்டம் கையோடு கொண்டுவரும் உலகச் சுற்றுலாக்களையும் மாடலிங் சம்பிரதாயங்களையும் முடித்து ஆசுவாசமாய் அமர்ந்தபோது, சினிமா ஐஸ்வர்யா ராயின் கதவுகளைத் தட்டியது. அழைத்தவர் இந்தியாவின் அதிகம் மதிக்கப்பட்ட இயக்குநரான மணிரத்னம். படம் `இருவர்'. முதல் படத்திலேயே இரட்டை வேடம். எம்.ஜி.ஆரின் முதல் மனைவியான தங்கமணி மற்றும் அவரது அரசியல் வாரிசான ஜெயலலிதா இருவரையும் தழுவிய கதாபாத்திரங்கள். முதல் படத்திலேயே இரு பாத்திரங்களின் குணநலன்களுக்கும் செம்மையாக வித்தியாசம் காட்டி இருந்தார்.

aishwarya rai
aishwarya rai

அப்பாவிப் புதுமனைவியான சொப்புவாய் புஷ்பவல்லியாகட்டும், பொய் மச்சம் ஒட்டி ஆனந்தனை ஆழம் பார்க்கும் கல்பனாவாகட்டும், ஆனந்தன் சுடப்படும்போது கேமரா முன் வந்து அதிர்ச்சியுறுவதாகட்டும் பெரும்பாலும் நேர்த்தியான நடிப்பு. அந்த முதல் படத்திலேயே அவர் வரும் எல்லாக் காட்சிகளிலும் உடன் நடித்தது மோகன்லால் என்ற நடிப்பு அசுரன் என்பதால் எழுந்த ஒருவித‌ அழுத்தம் காரணமாய் இருக்கலாம். இத்தனையும் தாண்டி `இருவர்' வியாபாரரீதியாகத் தோல்வியுற்றது.

அதே ஆண்டு (1997) அதிகம் பிரபலமற்ற பாபி தியோலுடன் 'Aur Pyaar Ho Gaya' படத்தில் பாலிவுட் பிரவேசம். அது ஓடவில்லை என்றாலும் அதில் நடித்ததற்காக ஸ்டார் ஸ்கிரீன் விருதுகளின் சிறந்த புதுமுக நடிகைக்கான விருதைப் பெற்றார் ஐஸ்வர்யா.

முதல் இரண்டு படங்களும் ஓடாத நிலையில் அடுத்த ஆண்டு மீண்டும் தமிழுக்கு வந்தார். ஷங்கரின் இயக்கத்தில் ஜீன்ஸ். அதிலும் இரட்டை வேடம். மதுமிதா என்ற நவயுக நாகரிகப்பெண் பாத்திரம் ஒன்று; வைஷ்ணவி என்ற கிராமத்துப் பெண் பாத்திரம் மற்றது. அவற்றையும் நன்றாகச் செய்திருந்தார். பிறகு ரிஷி கபூர் இயக்கத்தில் 'Aa Ab Laut Chalen' படம். அது தோல்வி என்பது மட்டுமல்லாது அவர் நடிப்பு (அமெரிக்காவில் வாழும் இந்தியப் பாரியம்பர்யம் தழுவிய பெண்) பற்றிய எதிர்மறை விமர்சனங்களையும் பெற்றது.

தமிழில் ஐஸ்வர்யா ராய் மொத்தம் ஆறு படங்கள் செய்திருக்கிறார்: `இருவர்', `ஜீன்ஸ்', 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்', 'குரு', 'ராவணன்' மற்றும் 'எந்திரன்'. இவற்றில் மூன்று திரைப்படங்கள் மணிரத்னம் இயக்கம், இரண்டு படங்கள் ஷங்கர் இயக்கம்.

aishwarya rai
aishwarya rai

வைரமுத்து ஒருவகையில் கொடுத்து வைத்தவ‌ர். தமிழில் ஐஸ்வர்யா ராய் நடித்த அத்தனை படங்களிலும் அவரை வர்ணித்து எழுதிய ஒரே பாடலாசிரியர் அவர் தான். (தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வந்த `தாளம்', `ஜோதா அக்பர்' படத்தில் கூட அவரே!)

தனி வாழ்க்கையில் ஆரம்ப ஆண்டுகளில் உடன் நடித்தவர்களான‌ சல்மான் கான் மற்றும் விவேக் ஓபராயுடன் காதல் முறிவு ஏற்பட, பின் தன்னைவிட மூன்று வயது இளைய அபிஷேக் பச்சனை மணந்தத‌ன் மூலம் இந்தியாவின் வலிமை வாய்ந்த திரைக்குடும்பம் எனக் கருதப்படும் அமிதாப் பச்சன் வீட்டு மருமகளானார். பெரும்பாலான சினிமாக்காரர்கள் கல்யாணம் போல் அல்லாமல் ஒற்றுமையாகக் குடும்பம் நடத்தி வருகின்றனர். சொந்த வாழ்விலும் அழகி என நிரூபித்திருக்கிறார்.

உண்மையில் அழகென்ற சொல்லுக்கு அர்த்தம் ஐஸ்வர்யாதான். ஐஸ்வர்யா ராயின் தனித்துவம் பச்சை நீலக் கண்கள். சமசரமே அற்ற அழகி. Maxim, Times of India, Filmfare உள்ளிட்ட‌ பல பத்திரிகைகளின் சிறந்த அழகிகள் பட்டியலில் தொடர்ந்து இடம் பெற்றவர் ஐஸ்வர்யா ராய். குறிப்பிட்ட காலகட்டத்தில் 90-களின் மத்தி முதல் 2000களின் மத்தி வரை சுமார் பத்து ஆண்டுகள் – இந்த மொத்த‌ பூமியின் போட்டியற்ற பேரழகியாகத் திகழ்ந்தார். அக்காலத்தே அவர் அழகின் உச்ச உதாரணம்.

கொஞ்சமாய் யோசித்தால் அப்படி நீடிப்பது மிகச் சிரமமான காரியம் என்பது புரியும். தினம் அழகழகாய் புதிது புதிதாய் மாடல்களும், நடிகைகளும் வந்துகொண்டிருக்கும் சூழலில் ஒரு ரசிகன் ஏன் சில ஆண்டுகள் முன்பு வந்த ஒரு நடிகையைக் கட்டியழ வேண்டும். அதையுடைத்துத் தன் அழகால் கட்டி வைத்திருந்தார் ஐஸ்வர்யா ராய்!

அவருக்குப் பின் எத்தனையோ பேர் உலக அழகி மற்றும் பிரபஞ்ச அழகிப் பட்டம் பெற்றுவிட்டனர். ஆனால், அவரளவு ரசிகர்கள் மனத்தில் நீடித்த புகழ்பெற முடியவே இல்லை. இன்றும் அழகி என்று சொன்னால் அவர் பெயர்தான் கணிசமானோருக்கு நிழலாடும். ``பெரிய ஐஸ்வர்யா ராய்னு நினைப்பு” என்ற சொலவடை மிகச் சகஜம்!

இன்று ஐஸ்வர்யா ராய்க்கு 46 வயது நிறைவடைகிறது. கால் நூற்றாண்டாக அவரை ரசிக்கிறேன். இந்தக் காலம் எத்தனை கொடூரமானது! அவருக்கு வயதாகி வருகிறது என நம்பவே விரும்பாத ஒரு தலைமுறை எங்களுடையது. இன்றும் “I am Sanjana” என்று அந்தப் பெப்ஸி விளம்பரத்தில் கண்களாலும், உதடுகளாலும் வசீகரமாய்ப் புன்னகைத்த அந்த இளமையான முகம் மானசிகத்தை விட்டு அகல மறுக்கிறது.

ஹைஸ்கூலில் 90 விழுக்காடு மதிப்பெண்க‌ள் பெற்று மருத்துவராக விரும்பிய ஓர் அழகான‌ இளம் பெண்ணை விதி அவள் கற்பனைகூட செய்து பார்த்திராத திசையில் உலகின் பெரும் புகழுக்கு அழைத்துப் போய்விட்டது. ஆனால், இந்த வழியிலும் கூட‌ ஐஸ்வர்யா ராய் எண்ணற்றோருக்கு வைத்தியம் பார்த்திருக்கிறார் என்பதை எவரும் மறுக்க முடியுமா! எத்தனை கோடி இதயங்கள் அவர் கண்ணசைவில் துடித்திருக்கும்!

Aishwarya Rai
Aishwarya Rai

உலகி அழகிப் போட்டியில் ஐஸ்வர்யா ராய் வென்றபோது உலக அமைதிக்காகப் பாடுபட விரும்புவதாக‌ச் சொன்னதாகச் செய்திகள் வந்தன. அதற்கேற்ப சுனாமி நிதி, கண் தானம், எய்ட்ஸ், போலியோ சொட்டு மருந்து, தட்டுப் பிளவு சிகிச்சை போன்ற பல விஷயங்களின் விழிப்புணர்வுக்காக அரசு மற்றும் தனியார் அமைப்புகளுடன் இணைந்து குரல் கொடுத்து வருகிறார். போக, உத்தரப்பிரதேசத்தின் தௌலத்பூர் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட பெண்களுக்கான பள்ளி ஒன்றை உருவாக்கி இருக்கிறார்.

அழகான பெண்களால் தான் உலக யுத்தங்கள் நடந்திருக்கின்றன. க்ளியோபாட்ரா முதல் அதற்குப் பல உதாரணங்கள் உண்டு. ஆனால், நவீன கிளியோபாட்ராவான‌ ஐஸ்வர்யா ராய் அழகாகவும் இருந்து உலகை அழகாக்கவும் செய்கிறார் - தனது இருப்பின் மூலமும், செயல்களின் வழியாகவும். நிச்சயம் பிரபஞ்சப் பேரழகிதான்!