Published:Updated:

வடசென்னை-2 எப்போது? - ஐஸ்வர்யா சொல்லும் ரகசியம்

ஐஸ்வர்யா ராஜேஷ்
பிரீமியம் ஸ்டோரி
ஐஸ்வர்யா ராஜேஷ்

ஓரளவு சமைக்க வரும். சமைக்கப் பிடிக்கும். லாக்டௌன்ல பேக்கிங் கத்துக்கிட்டேன். கேக் வகைகள், பிரௌனினு நிறைய பண்ணினேன்.

வடசென்னை-2 எப்போது? - ஐஸ்வர்யா சொல்லும் ரகசியம்

ஓரளவு சமைக்க வரும். சமைக்கப் பிடிக்கும். லாக்டௌன்ல பேக்கிங் கத்துக்கிட்டேன். கேக் வகைகள், பிரௌனினு நிறைய பண்ணினேன்.

Published:Updated:
ஐஸ்வர்யா ராஜேஷ்
பிரீமியம் ஸ்டோரி
ஐஸ்வர்யா ராஜேஷ்
’காக்கா முட்டை’ வெளியாகி ஆறு ஆண்டுகள். தடுப்பூசி போட்டுக்கொண்டு முக்கியமான சமூகக் கடமையை நிறைவேற்றிய திருப்தியோடு ஏகப்பட்ட எனர்ஜியில் மின்னிய ஐஸ்வர்யா ராஜேஷிடம் பேசினேன்.

``லாக்டௌன் சூழலால வீட்ல பாதுகாப்பா இருக்கீங்களா?’’

“தடுப்பூசி போடும்போது ‘உங்களுக்குக் காய்ச்சல் வரலாம். மாத்திரை எடுத்துக்குங்க’ன்னு சொன்னாங்க. வீட்டுக்குப் போனதும், காய்ச்சல் வரும்னு நைட்டெல்லாம் எதிர்பார்த்தேன். பெட்டுக்கு பக்கத்துலேயே எனக்கு எங்க அம்மா மாத்திரை ரெடியா எடுத்து வச்சிருந்தாங்க. ஆனா, ஜுரம் வரல. முன்னாடியெல்லாம் சானிட்டைசர்னா என்னான்னு தெரியாம இருந்தோம். இப்ப சானிட்டைசர் இல்லேனா நம்ம வாழ்க்கையே இல்லைங்கற காலகட்டத்துல இருக்கோம். இந்தக் கொரோனா ரெண்டாவது அலையில, டபுள் மாஸ்க் போட வேண்டியிருக்கு. மூணாவது அலை வராம இருக்கத்தான் இவ்ளோ போராட்டம்னுகூட எடுத்துக்கலாம். நிச்சயம் இதெல்லாம் கடந்து போகணும்னு நம்புறேன்.”

``போன லாக்டௌன்ல டல்கோனா காபி செய்து அசத்துனீங்க... இந்த டைம் என்ன ஸ்பெஷல்?’’

“எங்க அம்மா சூப்பரா சமைப்பாங்க. நான் செம குக்னு சொல்ல மாட்டேன். ஓரளவு சமைக்க வரும். சமைக்கப் பிடிக்கும். லாக்டௌன்ல பேக்கிங் கத்துக்கிட்டேன். கேக் வகைகள், பிரௌனினு நிறைய பண்ணினேன். டல்கோனா காபியும் அந்த டைம்ல ஹிட் அடிச்சது. ஹெல்த்தியா சாப்பிடுறதும் பிடிக்கும்னாலும் ஐஸ்க்ரீம், சாக்லெட், ஸ்வீட்ஸ் அதிகம் சாப்பிடுவேன். என்னோட டயட் ஸ்பாயில் ஆகுறதே, டெசர்ட்ஸ்னாலதான்.”

வடசென்னை-2 எப்போது? - ஐஸ்வர்யா சொல்லும் ரகசியம்

`` ‘காக்கா முட்டை’யில் இருந்துதான் ஐஸின் கரியர் டாப் கியரில் ஆரம்பிச்சது..?’’

“நிச்சயமா! ஒரு கதையைக் கேட்கும்போது, ‘அதுல எமோஷனல் டச் இருக்கா, குடும்பத்தோடு பார்க்கறவங்க கனெக்ட் ஆவாங்களா’ன்னு பார்த்துதான் பண்ணிட்டிருக்கேன். அப்படி கதைகளுக்குத்தான் முன்னுரிமை கொடுத்திட்டிருக்கேன். பொதுவா கதை கேட்கும்போது நமக்கே சின்னதா ஒரு ஜட்ஜ்மென்ட் இருக்கும். அந்தக் கதையை என்னால பண்ணமுடியும்னு நம்பிக்கை வந்த பிறகுதான் அதுல கமிட் ஆவேன். படத்தை முடிச்சிட்டுப் பார்க்கும்போது, ‘அந்த சீனை அப்படிப் பண்ணியிருக்கலாம். இன்னும் பெட்டரா நடிச்சிருக்கலாம்’னு தான் மனசுல ஓடும்.

‘காக்கா முட்டை’யை தி.நகர்ல ஒரு ப்ரீவியூ தியேட்டர்லதான் பார்த்தோம். அம்மாவும், அண்ணனும் ‘படம் ரொம்ப நல்லா இருக்கு’ன்னு பாராட்டினாங்க. ‘நிஜமாகவே நல்லா நடிச்சேனா’ன்னு திரும்பத் திரும்ப அவங்ககிட்ட கேட்டுக்கிட்டே இருந்தேன். ரெண்டாவது தடவையா அந்தப் படத்தைப் பாண்டிச்சேரியில் பார்த்தேன். முதல்நாளே நல்ல விமர்சனங்கள் வந்ததால, ஒரு சந்தோஷத்துடனே பார்க்கப் போனேன். தியேட்டர் ஹவுஸ்ஃபுல். நான் அவ்ளோ ஃபேமஸான ஆக்ட்ரஸா இல்லேனாலும், ஒரு சேஃப்டிக்காக முகத்துல ஸ்கார்ஃப் கட்டிக்கிட்டுத்தான் போனேன். படம் முடிஞ்சு வெளியே வந்த யங்ஸ்டர் ஆடியன்ஸ் அத்தனை பேரும், ‘டேய் அந்த அம்மா கேரக்டர்ல நடிச்ச பொண்ணு சூப்பர்ல.. ‘கூடை மேல கூடை’ வச்சு பொண்ணு மாதிரியே இருக்கு. ஒருவேள அதோட அக்காவா இருக்குமோ’ன்னு பேசிக்கிட்டிருந்தாங்க. ஒரு படம் வெற்றியடையும்போது நமக்கே பயங்கரமான ஒரு ஃபீல் இருக்கும். அதை விவரிக்க முடியாது.”

``இப்ப ‘ப்ளான் பி’, ‘டிரைவர் ஜமூனா’, ‘பூமிகா’ன்னு ஹீரோயின் சென்ட்ரிக் படங்கள் பண்றீங்க... முழுப் படத்தையும் தோள்ல சுமக்க வேண்டியது வருமே..?’’

“நிஜமாகவே, ஹீரோயின் சென்ட்ரிக் படங்கள் பண்றது மிகப்பெரிய பொறுப்பாகிடுது. ‘கனா’ பண்ணும்போது அருண்ராஜா காமராஜ்மீது செம கான்பிடன்ஸ் இருந்துச்சு. அந்த டீம்ல நம்பிக்கை குறைவா இருந்தது எனக்கு மட்டும்தான். ஏன்னா, எனக்கு அப்ப கிரிக்கெட் தெரியாது. மூணு வயசு குழந்தைங்க வரை இன்னிக்கு கிரிக்கெட்டைத் தெரிஞ்சு வச்சிருக்காங்க. எல்லாருமே விரும்புற ஒரு விளையாட்டை நாம தப்பா பர்ஃபாம் பண்ணினா காலியாகிடுவோம்னு பயம் இருந்துச்சு. ஆனா, படம் ரிலீஸ் ஆன அப்ப, அஞ்சு ஹீரோக்கள் படம் ரிலீஸ் ஆகியிருந்தது. அஞ்சு பேர் போட்டோக்களுக்கு மத்தியில் என்னோட போட்டோவும் இருந்தது இன்னும் நினைவில் இருக்கு. எனக்கு கிரிக்கெட் டிரெய்ன் பண்ணின ஆர்த்தி சங்கர், ‘பெண்கள் கிரிக்கெட் அணி 2018க்கு முன்னாடி எப்படி இருந்துச்சு. இப்ப எப்படி இருக்கு’ன்னு சமீபத்துல ஒரு போட்டோ அனுப்பினாங்க.

‘கனா’ கொடுத்த நம்பிக்கையில்தான் ‘க/பெ.ரணசிங்கம்’ல நடிச்சேன். அது ஹெவி ஸ்கிரிப்ட். சில சீன்கள்ல கிளிசரின் போடாமலேயே நடிச்சேன். அது ஓடிடியில் ரிலீஸ் ஆகும்போது மனசே வரல. ஏன்னா அவ்ளோ நல்ல படம் அது. தியேட்டரில் வந்திருந்தா நல்லாருந்திருக்கும். ‘ப்ளான் பி’, ‘டிரைவர் ஜமுனா’ ரெண்டுமே வித்தியாசமான கதைகள். இதுல ‘பூமிகா’வை ஃபீமேல் சென்ட்ரிக் பிலிம் இல்லைன்னு சொல்லிக்கலாம். இது ஹாரர் த்ரில்லர். ‘இயற்கையே ரிவஞ்ச் எடுத்தா எப்படி இருக்கும்’ என்பதுதான் கதைக்கரு. அதாவது கொரோனா வைரஸ் மாதிரி... எனக்கு அதோட கதை ரொம்பப் பிடிச்சிருந்தது. முதல்முறையா போலீஸா நடிக்கறேன்.”

`` ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ தமிழ் ரீமேக், ‘ஐயப்பனும் கோஷியும்’ தெலுங்கு ரீமேக்னு அசத்துறீங்க. ரீமேக் படங்கள்ல கவனம் எடுத்துக்கற விஷயங்கள் என்னென்ன?’’

“ஒரிஜினல் படத்தைப் பார்த்தவங்க ரீமேக்கைப் பார்க்கும்போது அவங்க மைண்டுல ரீமேக்தான் ஓடும். எப்பவுமே ஒரிஜினல் ஒரிஜினல்தான். அதை ரீக்ரியேட் பண்றது ரொம்ப சிரமம். படத்தையும் கேரக்டரையும் பற்றி கம்பேரிஸன் அதிகம் வரும். ஆனா, ‘கிரேட் இந்தியன் கிச்ச’னைப் பார்த்த உடனேயே நிறைய பேர் அந்தப் படத்தைப் பார்க்கணும், தமிழக கிராமங்களுக்கும் அந்தக் கதை போய்ச் சேரணும்னு விரும்பினேன். தமிழ் ரீமேக்கும் நல்லா வந்திருக்கு.”

``தெலுங்கில் நானியோட ‘டக் ஜெகதீஷ்’ல என்ன ரோல்..?’’

“நானியோட முறைப்பொண்ணா நடிக்கறேன். என் கேரக்டர் பெயர் சந்திரா. நிஜமாகவே அவரோட ரசிகையா இருந்திருக்கேன். இங்க விஜய்சேதிபதி எப்படியோ அங்கே நானி. அவரும் செட்ல என்ட்ரி ஆனதும் ‘ஒரு சீனை எப்படி பெஸ்ட்டா கொண்டு வர்றது... சக நடிகர்களை கம்ஃபோர்ட் ஜோன்ல அழகா வச்சுக்கறது’ன்னு நேச்சுரலாகவே யோசிக்கறவர்.”

``சந்திரான்னு சொன்னதும் ‘வட சென்னை’ பத்மா ஞாபகத்துக்கு வர்றாங்க. ‘வட சென்னை 2’ எப்போ வரும்?’’

“இந்தக் கேள்வியை நீங்க வெற்றிமாறன் சார்கிட்டதான் கேட்கணும். எப்போன்னு தெரியல. கண்டிப்பா பண்ணலாம்னு சொல்லியிருக்கார். ‘வட சென்னை’ கமிட் ஆகுறப்ப வெற்றி சார்கிட்ட தனுஷ் சார் பெரிய ஸ்டார். முதல் சீனிலேயே அவரைத் திட்டினா, நான் தியேட்டர்ல போய்ப் படம் பார்க்கும்போது ரசிகர்கள் என்னை அடிக்க வந்திடக்கூடாதுன்னு சொன்னது ஞாபகத்துல இருக்கு. ஆனா, நம்பமாட்டீங்க. முதல் நாள் சத்யம் தியேட்டர்ல ஓப்பனிங் ரெஸ்பான்ஸ் எப்படி இருக்குன்து பார்த்துட்டு வரலாம்னு போனேன். நான் கெட்டவார்த்தை பேசும்போது, தியேட்டர்ல ஆடியன்ஸ் அத்தனை பேரும் எழுந்து நின்னு, கைதட்டி ரசிச்சாங்க. எனக்கு பயங்கர ஷாக். எல்லாரும் என்ஜாய் பண்ணினது எனக்கு ஆச்சரியமாகிடுச்சு. பத்மாவை நிறைய பேருக்குப் பிடிச்சிருந்தது. வெற்றி சார்கிட்ட ‘உங்க எல்லாப் படத்திலும் நான்தான் நடிக்கணும்’னு கேட்டிருக்கேன். ‘அந்த கேரக்டர் உங்களுக்கு கரெக்ட்டா இருந்தா உங்களத்தான் கூப்பிடுவேன்’ன்னார். ‘அசுரன்’ல கூட என்னை ஏன் சார் கூப்பிடலைன்னு கேட்டேன். ‘உங்க ஏஜுக்கான கேரக்டர் இல்லாததால கூப்பிடலை’ன்னு சொன்னார்.”

வடசென்னை-2 எப்போது? - ஐஸ்வர்யா சொல்லும் ரகசியம்

``உங்களுக்கு ஒரு கதை செட் ஆகலைனா, அந்தக் கதைக்குப் பொருத்தமான ஹீரோயினை நீங்களே ரெக்கமண்ட் பண்ணுவீங்களாமே?’’

“நான் கதை கேட்கும்போது, அந்தக் கதையில் என்னை வச்சுப் பார்ப்பேன். சில நேரங்கள்ல அப்படிக் கதை கேட்கும்போது, வேற ஒரு ஆக்ட்ரஸ் எனக்கே விஷுவலைஸ் ஆவாங்க. ஒரு பெரிய இயக்குநர் எனக்கு ஒரு கதை சொன்னார். அப்ப அவர்கிட்ட ‘இந்தக் கதையில எனக்கு என்னைப் பார்க்க முடியல. இதுல அவங்களதான் பார்க்க முடியும். இந்தக் கேரக்டரை அவங்களுக்குக் குடுக்கலாமே சார்’னு சொன்னேன். அந்த டைரக்டரும் அந்த ஹீரோயினை நடிக்க வச்சிருந்தாங்க. படம் நல்லா போச்சு. அந்த நடிகைக்கும் நல்ல பெயர் கிடைச்சது.

சில கதைகள் எனக்குப் பிடிக்கும். ஆனா, உடனடியா ஷூட் கிளம்பணும்னு சொல்லும்போது அந்த டைம்ல எனக்கு அதைப் பண்ணமுடியாத சூழல் இருந்தால் சொல்லிடுவேன். இண்டஸ்ட்ரீயில நிறைய குட் ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க. ரெஜினா, ஆண்ட்ரியா, வரலட்சுமி, மஞ்சிமா மோகன்னு நிறைய பேர் அழகா தமிழ் பேசி நடிக்கறவங்க. ‘நெஞ்சம் மறப்பதில்லை’ல ரெஜினா அவ்ளோ சிறப்பா நடிச்சிருந்தாங்க. ஆனா, அந்தப் படத்துக்கான ரிவியூஸ் பார்க்கும்போது அவங்களுக்கான அங்கீகாரம் சரியா கிடைக்கலைன்னு தோணுச்சு. அப்படி விஷயங்கள் நடக்கும்போதும் கொஞ்சம் வருத்தம் இருக்கும்.”

`` ‘டாடி’க்குப் பிறகு பாலிவுட்ல அடுத்து?’’

“சமீபத்துலகூட நெட்ஃபிளிக்ஸ் ஆடிஷனுக்காக இந்தியில பேசி வீடியோ அனுப்பி வைக்கச் சொன்னாங்க. என்னால சரளமா பேச முடியல. மும்பைக்கே போய்க்கூட ஆடிஷன்ல கலந்திருக்கேன். அவங்க என்னை ‘நீங்க சூப்பரா பர்ஃபாரம் பண்றீங்க. ஆனா இந்தி பேச வரலியே’ன்னு சொல்லிடுறாங்க. அதனாலேயே இந்தியில படங்கள் வர மாட்டேங்குது. ‘டாடி’யில நடிக்கும்போதுகூட என் அண்ணியை ஷூட்டிங் அழைச்சிட்டுப் போயிருந்தேன். அவங்க இந்தி பேசுவாங்க. வீட்ல இருக்கும்போது ‘ரகு தத்தா’ங்கற மாதிரி கத்துக்கிட்டேன். தவிர, ‘டாடி’யில எனக்கு அந்த டீமே சப்போர்ட் பண்ணினாங்க. அங்கே ஃப்யூச்சர்ல நடிப்பேன்.”