Published:Updated:

'' 'விஜய்க்கு சந்தனம்; எனக்கு ரத்தமா'னு கேட்டார், அஜித்!" - பேரரசு

ஊர் பெயர்களையே தன் படங்களுக்கு டைட்டிலாக வைக்கும் வித்தியாசமான இயக்குநர் பேரரசுவுடன் ஒரு கலந்துரையாடல்.

பேரரசு
பேரரசு

இயக்குநர் சங்கத் தேர்தல் பணிகளில் இருந்த இயக்குநர் பேரரசு, தனது சினிமா பயணம் குறித்து நம்மிடம் பேசியதிலிருந்து. 

perarasu
perarasu

"ராம.நாராயணன் சார்கிட்ட  உதவி இயக்குநரா என்னோட சினிமா  பயணத்தை ஆரம்பிச்சேன். ஒன்றரை வருட முயற்சிக்குப் பிறகுதான் சேர்ந்தேன். 1987-ஆம் வருடம் ஊர்ல இருந்து கிளம்பி வந்தேன். ஊர்ல நாடகம் போடுறதுண்டு. அதனால, எல்லோரும் நான் சினிமாவுக்குத்தான் செட்டாவேன்னு அனுப்பி வெச்சாங்க. இங்கே வந்து பாரதிராஜா சாரை சுலபமா பார்த்துடலாம்னு நினைச்சேன். ஆனா, நடக்கல. அவர் ஆபீஸுக்குப் போனாலும் பார்க்க முடியல. ராம.நாராயணன் சார் மட்டும்தான் வாசல்ல நின்னா நம்மளைப் பார்த்து வணக்கம் வைப்பார். இவர்தான் நமக்கு குருனு முடிவு பண்ணி, அவர்கிட்ட சேர்ந்துட்டேன்.

அதுக்கு முன்னாடி 'திரைவிளக்கு' பத்திரிகையில ரிப்போர்ட்டரா வேலை செஞ்சுக்கிட்டிருந்தேன். நான் முதல் முதல்ல பேட்டி எடுத்தது, வைரமுத்து சாரைத்தான். நான் கதை எழுதுறதுக்கு முன்னே எனக்குக் கவிதைகள்தான் வரும். ஒரு கவிதைத் தொகுப்பு வெளியிட்டிருக்கேன்.

வசனம் எழுதுற பழக்கம் எனக்குப் பக்க பலமாக இருந்தது. மஹாராஜன் சார்கிட்ட உதவி இயக்குநரா 'வல்லரசு' படத்துல வேலை செஞ்சேன். நான் எழுதிக்கொடுத்த பல வசனம் அந்தப் படத்துல வந்தது. அந்த வசனங்களுக்கு தியேட்டர்ல கைதட்டல் கிடைச்சது. பிறகு, 'அரசாட்சி' படத்துல வேலை செஞ்சேன். தொடர்ந்து ஒரே மாதிரியான கமர்ஷியல் படங்கள்ல வேலை செஞ்சிருந்தாலும், என் கதைகளில் எமோஷனலைப் புகுத்தி எழுதினேன். ஆனா, அந்தக் கதைகளைத் தயாரிக்க யாரும் முன்வரல.

பிறகு, நாமளும் கமர்ஷியல் ரூட்லயே போவோம்னு முடிவெடுத்து எழுதியதுதான், 'திருப்பாச்சி'. எழுதி முடிச்ச மூணு மாசத்துல இந்தப் படம் டேக் ஆஃப் ஆகிடுச்சு. விஜய்க்கு அந்தக் கதையைச் சொல்றதுக்கு முன்னாடி அஜித்கிட்ட சொல்லலாம்னு முயற்சி பண்ணிக்கிட்டிருந்தேன். ஏன்னா, ஷாலினியோட அப்பா பாபு சார் எனக்கு நண்பர். பேபி ஷாமிலியை நடிக்கவைக்கும்போது ஏற்பட்ட பழக்கம் அது. குழந்தை நட்சத்திரமா நடிக்கும்போது ஷாமிலி ரொம்பம் அடம் பிடிப்பாங்க. அவங்க அப்பா சொன்னா மட்டும்தான் கேட்பாங்க.

ajith - perarasu
ajith - perarasu

ராம.நாரயணன் சார் ஷூட்டிங் ஸ்பாட்ல ஷாமிலியைப் பார்த்துக்கிற பொறுப்பை என்கிட்ட கொடுத்திடுவார். அப்படி பாபு சார்கூட ஏற்பட்ட பழக்கம், குடும்ப நண்பராவே ஆகிட்டேன். அஜித் - ஷாலினி கல்யாணத்துக்கு சிவாஜி, ரஜினி, கமல், விஜய்னு பாபு சார்கூட போய் பத்திரிகை வெச்சது நான்தான். ஷாலினிக்குத் தாய்மாமன் மாதிரி கல்யாணத்துல எல்லா வேலைகளையும் பார்த்துக்கிட்டேன். அப்படிதான் எனக்கும், அஜித்துக்கும் பழக்கம். அதுக்குப் பிறகு அஜித்தும் அவருடைய குடும்ப விழாக்களில் தவறாம அழைச்சிடுவார்.

ஆனாலும், நான் அஜித்துக்கு கதை சொல்ல அப்ரோச் பண்றேன்னு ஷாலினிக்கும், பாபு சாருக்கும் தெரியாது. குடும்பம் வேற; தொழில் வேற இல்லையா! 'ஆஞ்சநேயா' ஷூட்டிங்  டைம்ல  'திருப்பாச்சி'னு ஒரு கதை இருக்குனு சொன்னேன். அவரும் 'ஆஞ்சநேயா'வை முடிச்சுட்டு கேட்கிறேன்னு சொல்லியிருந்தார். அதுக்குள்ள எனக்கு 'சூப்பர் குட் ஃபிலிம்ஸ்'ல விஜய்யை வெச்சிப் படம் பண்ற ஏற்பாடுகள் நடந்திடுச்சு. விஜய் ரசிகர்களுக்காக 'திருப்பாச்சி' கதையைக் கொஞ்சம் மாத்தினேன். 'நீயெந்த ஊரு' பாட்டு அவருக்காக வெச்சதுதான்.

'சிவகாசி' படத்துல 'கோடம்பாக்கம் ஏரியா' பாட்டுக்கு நயன்தாராவுக்கு முன்னாடி ஜோதிகாவைதான் ஆட வைக்கலாம்னு முடிவெடுத்திருந்தோம். அப்போதான் அவங்களுக்குக் கல்யாணம் முடிவாகியிருந்தது. அதனால, அந்தப் பாட்டுல அவங்க கமிட் ஆகல.

vijay
vijay

பிறகு, 'திருப்பதி' பண்ணும்போது, 'விஜய்க்கு அப்படி ஒரு பாட்டு வெச்சியே, எனக்கு ஏன் வைக்கல'னு அஜித் கேட்ருவாரோன்னு லைலாவை ஆட வெச்சோம். அஜித் ஜாலியான ஆள். 'திருப்பதி' படத்துல முகம் முழுக்க ரத்தம் பூசிக்கிட்டு ஒரு சீன்ல வருவார். அப்போ, என்னைக் கூப்பிட்டு 'விஜய்க்கும் மட்டும் சந்தனம்; எனக்கு ரத்தமா'னு கேட்டு ரகளை பண்ணிட்டார்." எனச் சிரிக்கிறார், பேரரசு.