சினிமா
Published:Updated:

அஜித் 50: வலிமையான தல அப்டேட்ஸ்!

அஜித்
பிரீமியம் ஸ்டோரி
News
அஜித்

படங்கள்: ஜி.வெங்கட்ராம்

சினிமாவின் அசராத போராளி அஜித். யார் தயவும் இல்லாமல் எவரும் தாங்கிப்பிடிக்காமல் வந்த அஜித்தின் வாழ்க்கையே ஒரு நம்பிக்கை வரலாறு. கோடம்பாக்கத்தின் வெற்றி ஃபார்முலா லிஸ்ட்டில் தன்னைக் கட்டாயமாக்கிக்கொண்டதுதான் அஜித்தின் உழைப்பிற்கு கிடைத்த வெகுமதி! தேர்தல் பிரசாரத்தில் ‘வலிமை’ அப்டேட் கேட்டதில் எடப்பாடியே அதிர்ந்தது சமீபத்திய சான்று. 50 வயதில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் பர்சனல் பக்கங்கள் இதோ...
அஜித் 50: வலிமையான தல அப்டேட்ஸ்!

* கேமராக்களின் காதலன். எந்தப் புதுக் கேமரா வந்தாலும் வாங்கிப் படமெடுத்து நெருங்கிய நண்பர்களுக்கு ஃப்ரேம் போட்டுத் தருவார். பிறகு தன் படத்தில் பணிபுரியும் போட்டோகிராபர்களுக்கு கேமராவை அன்பளிப்பாகக் கொடுத்துவிடுவார்.

* துல்லியமான ஞாபகசக்தி! 25 வருடங்களுக்கு முன் ஒரே ஒரு முறை சந்தித்திருந்தாலும்கூட அந்த நபரின் பெயர் சொல்லி விசாரிப்பார். ஆச்சர்யப்பட்டுப்போவார்கள் அவர்கள்.

* படப்பிடிப்புகளில் பணிபுரியும் சகலரையும் கவனித்துக்கொண்டே இருப்பார். யாருக்காவது உடல்நலமில்லை என்றால் அவர்களுக்கு மருத்துவ உதவிகள் உடனே செய்து, விடுமுறையும் வாங்கிக்கொடுத்து அனுப்புவார்.

*அமிதாப் பச்சனின் குரல் அவருக்கு மிக மிகப் பிடிக்கும். அதற்காகவே அமிதாப்பின் படங்களை விரும்பிப் பார்ப்பார்.

* இதுவரை 15 ஆபரேஷன்களுக்கு மேல் சிறிதும் பெரிதுமாக நடந்திருக்கின்றன. மெடிக்கல் மிராக்கிளுக்கு அவரே உதாரணம். உடல் அசௌகரியங்களுக்காகப் படப்பிடிப்பில் உற்சாகக் குறைவைக் காட்டவே மாட்டார்.

* தன்னிடம் வேலை பார்க்கிறவர்களின் பிள்ளைகள் படிக்க உதவி செய்வதோடு நின்று விடாமல் அவர்கள் வாங்கும் மதிப்பெண்ணையும் அவ்வப்போது விசாரிப்பார். சிறப்பு இடங்களை எட்டினால் சிறப்புப் பரிசு உண்டு.

* நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஷாலினியோடு விளையாட வீட்டிலேயே ஷட்டில் கோர்ட் அமைத்திருக்கிறார். இப்போது உடன் விளையாட மகள் அனொஷ்காவும் தயார்.

* அவருடைய நிறைவேறாத சில ஆசைகளில் ரஜினியோடு வில்லனாக நடிக்க வேண்டும் என்பதும் ஒன்று. நடந்தாலும் நடக்கலாம் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

* ஆரம்பத்தில் தெலுங்குப் படங்களில் நடித்தவர் இப்போது வேறு மொழிப்படங்களில் ஆர்வம் காட்டுவதில்லை. ஆரம்பத்தில் ஷாருக்கோடு ‘அசோகா’ படத்திலும், கடைசியாக ஸ்ரீதேவியுடன் ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்திலும் நடித்ததுதான்.

அஜித் 50: வலிமையான தல அப்டேட்ஸ்!

* பியானோ, அக்கார்டின் போன்ற இசைக்கருவிகளை வாசிக்கவும் தெரியும்.

* வயதில் மூத்தவர்களுடன் உரையாடும் போது தரையில் சப்பணமிட்டு அமர்ந்துதான் பேசுவார்.

* ஈரோடு, திருப்பூர் போன்ற ஊர்களின் தெருக்கள், இடங்கள் அத்துப்படி. டெக்ஸ்டைல் துறையில் ஈடுபட்டிருந்தபோது அடிக்கடி அந்த ஊர்களுக்குப் போய்ப் பரிச்சயம்.

* நண்பர்கள் வீட்டுக்குப் போனால் அங்கு நல்ல டிவியோ, ஏசியோ, மொபைல் போனோ இல்லை என்றால் கவனிப்பார். தேவைக்கேற்ப அவை அவர்கள் வீட்டிற்குப் போய்விடும். இப்படி சர்ப்ரைஸ் கிப்ட் கொடுப்பதில் அவருக்கு அலாதி குஷி.

* மகள் அனொஷ்கா, மகன் ஆத்விக் இருவரின் படிப்படியான வளர்ச்சியை வீடியோவாக எடுத்து வைத்திருக்கிறார்.

* திருப்பதி போனால் கீழ்த் திருப்பதியிலிருந்து மேல் திருப்பதி வரைக்கும் நடந்தே சென்று வெங்கடாசலபதிக்கு தேங்க்ஸ் மட்டும் சொல்லித் திரும்புவது வழக்கம். எந்த வேண்டுதலும் வைக்க மாட்டார்.

* ரஜினிகாந்த் கொடுத்த ‘ஹிமாலயன் மாஸ்டர்ஸ்’ புத்தகம் அவரது வாழ்க்கையில் சில மாற்றங்களை ஏற்படுத்தியது என விகடன் பேட்டியில் சொல்லியிருக்கிறார். ஆனால் அவரின் இமயமலை செல்ல வேண்டும் என்ற விருப்பம் அப்படியே நிறைவேறாமல் நிற்கிறது.

* வீடு கட்டும்போதும் தொழிலாளர்களுக்கு அன்றன்றே தன் கையாலேயே சம்பளம் கொடுத்துவிடுவார்.

* அரசியல் நிலைப்பாடு என்னவென யாருமே யூகிக்க முடியாதபடி அதைப்பற்றி நெருங்கிய வட்டத்தில்கூட உரையாட மாட்டார்.

* ‘வாலி’ படத்தில் ‘ஏப்ரல் மாதத்தில்’ பாடலுக்கு அவரது உற்சாகமான சிரிப்பு ஒன்று தேவைப்பட்டபோது அந்த ஷாட்டில் கேமராவுக்குத் தெரியாமல் ஒரு அசிஸ்டென்டை விட்டு இடுப்பில் கிச்சு கிச்சு மூட்ட வைத்து இயல்பாக வரும் சிரிப்பைப் படமாக்கியிருக்கிறார்.

*தீவிர சீரடி சாய்பாபா பக்தர்.

* ரிமோட் மூலம் இயங்கும் சிறிய விமானங்களை வரவழைத்து அதன் பாகங்களை இணைக்கும் பணியில் ஆர்வம் அதிகம். தொடர்ந்து இரவு பகல் பாராமல் பல நாள்கள் ஈடுபடுவார்.

* ரிமோட்டில் இயங்கும் சிறு விமானங்களுக்கான ஓடுதளத்தைச் சென்னைப் புறநகரில் உருவாக்கினார். தானே லாரி டிரைவர் போல பல லோடுகள் ட்ரிப் அடித்து, அங்கேயே தங்கியிருந்து எண்ணி ஏழே நாள்களில் ஒரு ரன்வே காலரியை உருவாக்கிவிட்டுத்தான் ஓய்ந்தார்.

* பிரியாணி மட்டுமல்ல, மீன் குழம்பு வைப்பதிலும் மன்னன்.

* விஜய் அம்மா ஷோபாவுக்கு அஜித் நடித்த ‘காதல் மன்னன்’, ‘அமர்க்களம்’ படங்கள் மிகவும் பிடிக்கும். விஜய்யைப் பார்க்கும்போதெல்லாம் முதலில் அவர் அம்மா பற்றித்தான் அஜித் விசாரிப்பார்.

அஜித் 50: வலிமையான தல அப்டேட்ஸ்!

* ஒருமுறை வெளிநாட்டுப் படப்பிடிப்பில் இருந்து திரும்பும்போது ஏற்பட்ட திடீர் குழப்பத்தால் கிட்டத்தட்ட ஏழு நாள்கள் அந்த வெளிநாட்டு விமான நிலையத்திலேயே யூனிட்டோடு தங்கியிருந்தார். அவர்களுக்கு உணவு வாங்கிக் கொடுத்து அவரது மொபைல் மூலம் ஊரில் இருக்கிற உறவினர்களுக்குப் பேசி மொத்த யூனிட்டுக்கும் தன் செலவில் விமானப் பயணச்சீட்டு வாங்கிக் கொடுத்து அழைத்து வந்தார். இத்தனைக்கும் அவர் நினைத்திருந்தால் முதல் நாளே இந்தியா திரும்பியிருக்க முடியும்.

* துப்பாக்கி சுடுவதில் விற்பன்னர். பிஸ்டல் லைசென்சைத் தவறாமல் சரியான நேரத்தில் கமிஷனர் ஆபீஸ் சென்று புதுப்பித்துவிடுவார்.

* அவர் டென்னிஸ் விளையாடும் டீமில் உள்ளவர்களில் விஜய் ரசிகர்களும் உண்டு. அவர்களிடம் படு ஜாலியாக உரையாடுவார்.

* ஒரு தடவை சூப்பர் சுப்பராயன் மாஸ்டரைச் சந்தித்தபோது ‘ஜெயிக்கணும் மாஸ்டர்’ என்று இவர் சொல்ல, அவர் ‘ஜெயிச்சுக்கிட்டே இருக்கணும் அஜித்’ என்று சொல்ல, அதை ஒரு மந்திரம்போல இன்று வரை மனதில் வைத்திருக்கிறார்.

* அஜித்துக்குப் பிடித்த வாசகம்: ‘வால்ல நெருப்பு இருந்தாதான் ராக்கெட் மேலே போகும், முயற்சிசெய்கிற நெருப்பு இருந்தாதான் நாம மேலே உயர முடியும்.’

* ஜோசியர் யார் என்ன சொன்னாலும் அதைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு ஜோதிட சாஸ்திரம் அவருக்குத் தெரியும்.

* அவருடன் நெருக்கமான நட்பு வட்டாரத்தில் இருக்கிற வெகு சிலரில் நடிகர் ஜெய்சங்கர் மகன் கண் மருத்துவர் டாக்டர் விஜய சங்கர் முக்கியமானவர். சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி படா தோஸ்து.

* எந்தப் படமாக இருந்தாலும் டப்பிங்கை ஒரே மூச்சில் பேசி முடிப்பது வழக்கம். அதிகபட்சம் இரண்டு நாள்தான் எடுத்துக்கொள்வார்.

* இப்போது தெலங்கானாவில் இருக்கிற ஒரு சிறு கிராமத்தில்தான் அஜித் பிறந்தார். பிறகு சென்னைக்கு வந்து பத்தாம் வகுப்பு வரை படித்தவர்.

* ‘ஆரம்பம்’ படத்திலிருந்து பொது இடங்களில் படப்பிடிப்பை வைத்துக்கொள்வதில்லை. ரசிகர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது. இப்போது ஹைதராபாத்திலேயே பெரும்பாலும் ஷூட்டிங் வைக்கிறார்.

* நண்பர்கள் வட்டாரத்தில் செல்லமாக ‘ஏ.கே’ என அழைக்கப்படுகிறார். சமயங்களில் அவர் மகளும் அப்படியே அழைக்க, புன்னகைப்பார் ஏ.கே.

அஜித் 50: வலிமையான தல அப்டேட்ஸ்!

* ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு நண்பர்களோ, குடும்பமோ வருவதை விரும்ப மாட்டார். ‘‘அது சினிமாவுக்கான இடம், நமது சொந்த விஷயங்களுக்கான இடமில்லை’’ என்பார்.

* விருந்து பரிமாறுவதில் ரொம்பவும் ஆர்வம் காட்டுவார். சமைத்ததோடு, பரிமாறுவதுதான் அன்பைக் காட்டும் செயல், அதனாலேயே அம்மாவின் இடம் ஆதியிலிருந்து முன்னிலையில் நிற்கிறது என்பார்.

* யாரைப்பற்றியும் கிசுகிசு, புறம் பேசுதல் அறவே கிடையாது. குறிப்பாக சக நடிகர்களைப் பற்றிக் குற்றம் குறை சொல்லவே மாட்டார்.

* அஜித்திற்கு அனில் குமார், அனுப் குமார் என இரண்டு சகோதரர்கள் உண்டு. அவர்கள் பொதுவெளிக்கு வந்ததே இல்லை. அப்பா சுப்பிரமணியம் மேல் மிகுந்த மரியாதை உண்டென்றாலும் அம்மா மோகினி சொன்னால் ஒரு வார்த்தைகூட மீற மாட்டார்.

* முடிவுகளைத் தடாலடியாக எடுப்பார். திடீரென கார்ப் பந்தயத்தை விட்டு வெளி வந்ததுகூட அப்படியான செயல்தான். இதில் அம்மாவின் கண்டிப்பும் உண்டு.

* ராசி, ஆன்மிகம், ஜோதிடம், நேரம், காலம் பார்ப்பதில் நம்பிக்கை உடையவர் தான். ஆனால் அதை மற்றவர்களின் மேல் திணிக்க மாட்டார்.

* ஷாலினி திரும்பவும் நடிக்க விரும்பி னாலும் அஜித் தடை போடாதவர்தான். ஆனால் ஷாலினியே நடிப்பதிலிருந்து முற்றாக ஒதுங்கிக் கொண்டார்.

* சக நடிகர்கள் மனம் கவர்ந்துவிட்டால் அவர்களை வைத்து போட்டோ செஷனே நடத்திவிடுவார். இதேமாதிரி அப்புக்குட்டி, ஸ்ருதிஹாசன், மைத்துனி ஷாமிலிக்கு படம் எடுத்துக் கொடுத்திருக்கிறார்.

* படம் தயாரிக்க அஜித்தை ஏராளமானபேர் வற்புறுத்தினாலும் அவர் அதைச் செய்யவில்லை. ஆனால் ஏ.கே இன்டர்நேஷனல் என்ற கம்பெனியை ஆரம்பித்துப் பதிவு செய்திருக்கிறார்.

* விமானம் ஓட்டுவதற்கு முறைப்படியான பயிற்சி பெற்றுள்ளார். இப்போதும் பயிற்சி மறந்துவிடாமல் ஓட்டிப் பழகுகிறார். தமிழ் நடிகர்களில் ரஞ்சனுக்கு அடுத்தபடியாக விமானம் ஓட்டத் தெரிந்த ஒரே நடிகர் அஜித்தான்.

* விதவிதமான பைக்குகளைச் சேகரித்து வைத்திருக்கிறார். திடீரென்று இப்பொழுதெல்லாம் பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுகிறார். அடுத்த தடவை சிக்னலில் வாட்டசாட்டமாக பைக்கில் இருப்பவரைக் கவனியுங்கள்... அஜித்தாக இருக்கலாம்.

* வீட்டில் நெடுங்காலமாகப் பணியாற்றியவர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்து அவர்களுக்கே வீட்டை எழுதிக் கொடுத்திருக்கிறார்.

அஜித் 50: வலிமையான தல அப்டேட்ஸ்!

* இப்போது ஓலா ஆட்டோவில் புக் செய்து வெளியே கிளம்பிச் செல்வது அடிக்கடி நடக்கிறது. போடுகிற மாஸ்க்கும், தொப்பியும் அவர் அடையாளத்தை ஓட்டுநருக்கு மறைத்து விடுகிறது.

* ரேஸிங்கைப் பார்க்கப் போவதோடு சரி… கலந்துகொள்வதில்லை. ஆனால் ஏரோ மாடலிங்கை இன்னும் கைவிடாமல் இருக்கிறார். குட்டி ரக விமானங்களைக் கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் வைத்து இயக்குகிறார்.

*முன்பு திருவண்ணாமலையில் கிரிவலம் போவார். சமீபகாலமாக ரசிகர்களின் அன்பு நெருக்கடியால் அதைச் செய்ய முடிவதில்லை.