Election bannerElection banner
Published:Updated:

மாஸ் ஹீரோ ஃபார்முலாவை உடைத்ததா அஜித்தின் `நேர்கொண்ட பார்வை’..?

அஜித்
அஜித் ( நேர்கொண்ட பார்வை )

45 வயதுகொண்ட ஒருவருக்கான கோபம், பக்குவம், மெச்சூரிட்டி என்னவென்பதை அஜித்தும் அழகாக வெளிப்படுத்தியிருந்தார். மாஸ் ஹீரோக்களின் படம் என்றால் இதெல்லாம் இருக்கும் என்கிற பொதுவிதியில், வெறும் 10 சதவிகிதம்கூட இல்லாத படம்தான், இந்த `நேர்கொண்ட பார்வை’ என உறுதியாகச் சொல்லலாம்.

அஜித்துக்கு வாழ்த்துகள் கூறி இந்தக் கட்டுரையை ஆரம்பித்தால் சரியாக இருக்கும். `நோ மீன்ஸ் நோ' எனச் சொல்லி இவர் இப்படத்தில் நடிக்க மறுத்திருந்தால், `பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக்கான `நேர்கொண்ட பார்வை' இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்குமா என்பது சந்தேகமே. முதலில், இந்தக் கதை சொல்ல வரும் விஷயத்தைப் புரிந்துகொண்டால் மட்டுமே இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க முடியும்; அதை எந்தவித தயக்கமுமின்றி வெளிப்படுத்த முடியும். அதில் சற்றும் தடுமாறாத அஜித், அந்தக் கதாபாத்திரத்தின் தன்மையை சிறிதளவும் குறைத்துக்கொள்ளாமல் நல்ல ஒரு தெளிவோடு இப்படத்தை நமக்கு வழங்கியிருக்கிறார்.

அஜித்
அஜித்

அஜித், `அமராவதி'யில் ஆரம்பித்து `உன்னைத் தேடி' படம் வரை ரொமான்ஸ் ஜானரை மட்டுமே கையாண்டு வந்தார். காதலுக்கு கால நேரமே இல்லை. காதலை கையில் எடுத்தால் ஹிட்தான் என்பதை உணர்ந்து தன்னுடைய ஆரம்பகட்ட படங்களில் நடித்து வந்தார். அதுபோன்ற படங்களில் இவர் நடித்து வந்தது பெண் ரசிகர்களை இவருக்கு உருவாக்கிக் கொடுத்தது. பால் வடியும் முகம், ஜென்டில்மேன் கண்ணாடி, ஃபார்மல் மீசையென எந்தவித ஆரவாரமுமின்றி நடித்துவந்தார். அஜித்தின் இந்தப் பிம்பத்தை உடைத்தது எஸ்.ஜே.சூர்யாவின் `வாலி'. வசனமே இல்லாமல் வெறும் பபுள்கம்மை மட்டும் மென்று வில்லத்தனத்தை வெளிப்படுத்தியிருந்தார். இதற்காக சிறந்த நடிகருக்கான ஃபிலிம் ஃபேர் விருதும் பெற்றார்.

`வாலி' கொடுத்த வெற்றிக்குப் பிறகு, தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்தின் தன்மையை சில படங்களுக்கு நடுநடுவே மாற்றியமைத்து பரிசோதித்துப் பார்த்தார். அந்த பரிசோதனையில் இவர் முயன்ற படம்தான் `அமர்க்களம்'. அவலப்பிள்ளைக்குள் இருக்கும் இருண்ட பக்கத்தை தன்னுடைய கோபத்தின் மூலம் காட்டியிருந்தார். அந்தப் படம்தான் அவரது சினிமா புத்தகத்தில் சிறப்பான பக்கம். தனக்கான `மாஸ்' என்ற வட்டத்தை மெதுவாக வரையத் தொடங்கியது அந்தப் படத்திலிருந்துதான்.

`ஒருத்தர் மேல நீங்க விஸ்வாசம் காட்றதுக்காக இன்னொருத்தரை ஏன் அசிங்கப்படுத்துறீங்க?’
அஜித்

தனக்கான சரியான ஃபார்முலாவை வரையறை செய்துகொண்ட அஜித், தன்னுடைய கரியரில் அதை மெள்ள மெள்ள பிரயோகிக்கத் தொடங்கினார். சில ரொமான்டிக் படங்களையும், நடுநடுவே ஒரு மாஸ் படத்தையும் கொடுக்கத் தொடங்கினார். இதற்குக் காரணம், இருபால் ரசிகர்களையும் தன்வசம் வைத்துக்கொள்ளும் யுக்திதான். அதன் பிறகு இவரது ஃபார்முலாவை மாற்றியமைக்க நினைத்து, நடித்த படம்தான், `பில்லா'. அந்தச் சமயத்தில் அஜித்துக்கென்று ஒரு தனி இமேஜ் உருவாகியிருந்தது. ரஜினிகாந்த்தும் பில்லாவின் ரீமேக்கில் அஜித் நடிக்கப்போகிறார் எனத் தெரிந்ததும் மறுப்பு தெரிவிக்காமல், ஓகே சொல்லிவிட்டார். மாஸோடு சேர்ந்து க்ளாஸும் உருவானது `பில்லா' படத்தின் மூலம்தான்.

அதன்பிறகு முழுக்கவே க்ளாஸ் மற்றும் மாஸ் படங்கள்தான். பில்லாவைத் தொடர்ந்து `அசல்', `மங்காத்தா', `பில்லா 2', `ஆரம்பம்', `வீரம்', `என்னை அறிந்தால்' என வரிசையாக மாஸ், க்ளாஸ் படங்களில் நடித்து தனக்கான மாஸ் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார். இதனால் பெண் ரசிகர்கள் குறைந்ததாக உணர்ந்த அஜித், சிவாவிடம் பேசி `வேதாளம்' படத்தை ஓகே செய்தார். `பாவம் சார் பொண்ணுங்க...' என்ற சென்டிமென்ட் வசனத்தையும், தங்கச்சி சென்டிமென்டையும் பெண் ரசிகர்கள் வரவேற்றனர். `விவேகம்' தோல்வியடைந்ததையடுத்து, `விஸ்வாச'த்தோடு ரசிகர்களை திரையில் சந்தித்த அஜித், அந்தப் படத்தின் மூலம் குடும்ப ரசிகர்களை லாரி லாரியாக சம்பாதித்தார்.

நேர்கொண்ட பார்வை
நேர்கொண்ட பார்வை

இது எல்லாவற்றுக்கும் மேலாக இவர் தேர்ந்தெடுத்து நடித்த `நேர்கொண்ட பார்வை'தான் இவரது சினிமா பாதையில் முக்கியமான படம். பொதுவாக, இப்படிப்பட்ட வட்டத்திலிருக்கும் பெரிய ஹீரோக்கள் சேஃபர் சைடு, அதாவது பாதுகாப்பான இடத்திலிருந்துதான் கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பார்கள். பெண்ணியம் போன்ற சென்சிட்டிவான விஷயத்தை தேர்ந்தெடுக்கும்போது வேண்டாம் என்ற யோசனைதான் இறுதியில் வந்திருக்கும். அதைச் சற்றும் பொருட்படுத்தாமல் தற்போது சமூகத்துக்கு மிகவும் தேவைப்படுகிற விஷயத்தை பேசும் படத்தில், இவர் தலைமை தாங்கி நடித்திருப்பது வரவேற்கத்தக்க விஷயமே.

`விஸ்வாசம்' விமர்சன ரீதியாக பாஸ் மார்க் மட்டுமே வாங்கியிருந்தாலும், ஃபேமிலி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பைப் பெற்றது. தியேட்டரில் தங்களது குழந்தைகள் கதறி அழும் வீடியோவை சமூகவலைதளங்களில் பகிர்ந்தனர், தகப்பன்மார்கள்.
விஸ்வாசம்
விஸ்வாசம்

ரொமான்டிக் வட்டத்திலிருந்து மாஸ் என்ற வட்டத்துக்குள் வந்தார். பிறகு ஆன்டி ஹீரோ, அதன் பிறகு க்ளாஸ், இது எல்லாவற்றுக்கும் மேலாக தனது நிஜ முகம், அதாவது சால்ட் அண்டு பெப்பரில் என ஒரு கதாநாயகனுக்கான வரையறைகளை உடைத்தார். அதுமட்டுமின்றி, அஜித் அவரது படங்களில் பேசும் வசனங்கள் திரையில் மாஸாக பார்க்கப்பட்டாலும், வெளியே வந்தவுடன் அதைக் காமெடியாக மாற்றி, கலாய்த்து மீம்ஸ் போடுவதுதான் வழக்கமாக நடக்கும். உண்மையைச் சொல்லப்போனால் ஒரு கட்டத்துக்கு மேல் அஜித்தின் டயலாக் மாடுலேஷனும் படத்துக்குப் படம் மாறத் தொடங்கியது. முக்கியமாக `விவேகம்' படத்தின் டயலாக் டெலிவரி ரசிகர்களையே சோதித்தது. இது அனைத்தையும் தகர்த்தது, `நேர்கொண்ட பார்வை'.

முதல் நாள் முதல் ஷோ, ஒரு ரசிகன் அஜித் படம் பார்க்க வருகிறார். திரையில் எவ்வித ஆரவாரமுமின்றி அஜித்தைப் பார்க்கிறார். கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் கழித்துதான் அஜித் முதல் வசனம் பேசுவதையே பார்க்கிறார். மொத்த படத்திலும் ஒரே ஒரு சண்டைக் காட்சிதான். இதுவரை அஜித்தை இப்படிப் பார்த்திருக்காதவரின் மனநிலை என்னவாக இருக்கும். இதையெல்லாம் யோசிக்காமலா அஜித் இந்த ஸ்க்ரிப்ட்டைத் தேர்ந்தெடுத்திருப்பார்? `இதுவும் படம்தான் பாருங்க தம்பிகளா' என்று சொல்லாமல் சொல்லி அனைவரையும் அமர்த்தியிருக்கிறார், அஜித்.

நேர்கொண்ட பார்வை
நேர்கொண்ட பார்வை

`பிங்க்' படத்தில் அமிதாப் பச்சனுக்கு வயது, 60. அதைவிட இப்படத்தில் அஜித்துக்கு வயது குறைவாகத்தான் காட்டியிருப்பார்கள். இதையே பூஸ்ட்டாக வைத்து வணிக யுக்திக்காக சில மாஸ் விஷயங்களையும், ரொமான்ஸ் போர்ஷனையும் படத்தில் சேர்த்திருப்பார்கள். தவிர, அஜித்தும் அதற்கான மெச்சூரிட்டியோடு நடித்திருப்பார். 60 வயது கொண்ட ஒருவருக்கு எந்தளவு பக்குவமும், மெச்சூரிட்டியும் இருக்குமோ அதை அமிதாப் பச்சனும், ஏறத்தாழ 45 வயதுகொண்ட ஒருவருக்கான கோபம், பக்குவம், மெச்சூரிட்டி என்னவென்பதை அஜித்தும் அழகாக வெளிப்படுத்தியிருந்தார்கள். மாஸ் ஹீரோக்களின் படம் என்றால் இதெல்லாம் இருக்கும் என்கிற பொதுவிதியில், வெறும் 10 சதவிகிதம்கூட இல்லாத படம்தான், இந்த `நேர்கொண்ட பார்வை’ என உறுதியாகச் சொல்லலாம். அப்படி மாஸ் ஹீரோக்களின் ரசிகர்களுக்கான விஷயங்கள் ஒரு படத்தில் குறைவு என்றாலும், கன்ட்டென்ட் வலுவாக இருந்தால் மாஸ் இல்லாமலும் பாஸ் ஆகும் என்பதை நிரூபித்திருக்கிறது, அஜித்தின் `நேர்கொண்ட பார்வை’.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு