Published:Updated:

`` `கடாரம் கொண்டான்'ல அப்பா நடிக்கிறாரா, இல்லையானு தெரியணுமா?!" - அக்‌ஷரா ஹாசன் போடும் புதிர்

Akshara Haasan and Abi Hassan
Akshara Haasan and Abi Hassan ( Balaji )

கமல் ஹாசன் மகள் அக்‌ஷரா ஹாசன், நாசர் மகன் அபி ஹசன் என இருவரும் இணைந்து கடாரம் கொண்டான் பற்றி பேசுகிறார்கள்.

ஒரு பக்கம் கமல்ஹாசன், மற்றொரு பக்கம் விக்ரம். இப்படி நடிப்பில் ஊறிப்போன இரு கலைஞர்களுக்கு நடுவில் புதிய நடிகர்கள் நடிக்க நேர்ந்தால் எப்படியிருக்கும்?! 'கடாரம் கொண்டான்' படத்தில் நடிக்கும்போது, அக்‌ஷரா ஹாசனுக்கும், அபி ஹசனுக்கும் அப்படித்தான் இருந்ததாம்.

``இவங்களுக்காவது பரவாயில்ல. ஏற்கெனவே சில படங்கள்ல நடிச்சிருக்காங்க. எனக்கு இதுதான் முதல் படம். கமல் சார் தயாரிப்பாளர், விக்ரம் சார் ஹீரோ. எப்படி இருக்கும் யோசிச்சுப் பாருங்க" என்கிறார், அபி. நடிகர் நாசரின் மகனான இவர் முதலில் இயக்குநர் அட்லியிடம் உதவியாளராக `மெர்சல்' படத்தில் பணிபுரிந்தவர். ``ஒருமுறை ஆக்டிங் வொர்க்‌ஷாப் நேரத்துல கமல் சார் எப்படி வேலை நடக்குதுன்னு பார்க்க வந்தார். அப்போ திடீர்னு நானும் நடிக்கிறேன்னு எங்ககூட சேர்ந்துக்கிட்டார். அவ்வளவுதான் எனக்கு அவ்வளவு நெர்வஸா இருந்தது." என்றார்.

`கடாரம் கொண்டான்’  - கமல் வெளியிட்ட விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!
`கடாரம் கொண்டான்’ - கமல் வெளியிட்ட விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

அக்‌ஷராவோ, ``எனக்கு அதெல்லாம் ஒரு ப்ளெஸ்ஸிங். நான் எதிர்ப்பார்க்கவே இல்லை. என்னதான் அப்பாவா இருந்தாலும், எவ்வளவு பெரிய நடிகர். அவர்கூட சேர்ந்து நடிச்சதே ஒரு தனி அனுபவம்" என நெகிழ்ந்தார்.

இவர்கள் இப்படிச் சொல்லிக்கொண்டிருக்கையில், இதுதான் வாய்ப்பு என, ``அப்போ கமலும் இந்தப் படத்துல ஒரு கேரக்டர் பண்ணுறார்னு சொல்லுங்க. அதான், `மகளிர் மட்டும்', `நள தமயந்தி'ன்னு தயாரிச்ச எல்லாப் படங்களிலும் ஒரு கேமியோ ரோல் பண்ணியிருக்காரே?" எனக் கேட்டபோது, சுதாரித்துக்கொண்ட இருவரும், ``அதை நீங்க படம் பார்த்துத் தெரிஞ்சுக்கோங்க. ஒருவேளை இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்" என்றனர்.

``ரெண்டு பேரோட அப்பாவும் பெரிய நடிகர்கள். நீங்க நடிக்க வரும்போது உங்களுக்கு என்ன அறிவுரை சொன்னாங்க?" எனக் கேட்டோம். ``எங்க அப்பாவுக்கு நான் நடிக்கிறேன்னு மட்டும்தான் தெரியும். அதுக்குமேல ரெண்டுபேரும் எதுவும் இந்தப் படத்தைப் பற்றி பேசிக்கிட்டதில்லை. அதேமாதிரிதான் அவரும். இப்போ ஏதோ படத்துல நடிக்கிறார்னு தெரியும். ஆனா, என்ன படம்னுகூட தெரியாது. சினிமாவைப் பற்றி எங்களோட டிஸ்கஷன் எல்லாமே வேறமாதிரி இருக்கும்" என அபி கூறினார்.

Abi Hassan
Abi Hassan
Balaji

ஆனால் அக்‌ஷராவோ, ``வீட்டுல இருக்கும்போது அப்பா - பொண்ணுதான். அந்த வொர்க்‌ஷாப்ல வந்ததுதான், எனக்கும் அப்பாவுக்கும் இருந்த புரொஃபஷனல் ரிலேஷன்ஷிப்."

``வீட்டுல அப்பா, மக்களுக்கு நடிகர், பெரிதும் வெளியில் தெரியாத ஒரு பக்கம் ரெண்டு பேரோட அப்பவும் இயக்குநர்கள். உங்க பார்வையில, நடிகர் கமல்/நாசர், இயக்குநர் கமல்/நாசர், அப்பா கமல்/நாசர் எப்படி?"

``என்னோட அப்பா, `தி பெஸ்ட் ஃபாதர் எவர்'னுதான் சொல்வேன். அவரோட தொழிலைத் தாண்டி ஒரு நல்ல நேர்மையான, தைரியமிக்க மனிதர். அதேமாதிரி ஒரு இயக்குநரா அவர் இருக்கும்போது, அவருக்கு நான் உதவியாளரா இருந்திருக்கேன். பெரிய `டாஸ்க் மாஸ்டர்'. அவ்வளவு வேலை வாங்கியிருக்கார். கத்தியிருக்கார். செட்ல அப்பா - பொண்ணுயெல்லாம் கிடையாது. ஒரு நடிகரா அப்பா ஒரு பெரிய ஸ்டாண்டர்டு வெச்சிருக்கார். அவரோட தயரிப்புல நடிக்கும்போது அந்த அளவுக்கு நான் நடிக்கணும்னு எனக்குத் தோணும்" என்பது அக்‌ஷராவின் பதிலாக இருந்தது.

Akshara Haasan and Abi Hassan recent photoshoot
Akshara Haasan and Abi Hassan recent photoshoot
Balaji

தொடர்ந்த அபி, ``முதல்ல அப்பா வெர்ஷன் பத்திச் சொல்லணும்னா, ரொம்ப பிஸியா இருக்கார். அவர் வயசுக்கு கொஞ்சம் ஓய்வெடுக்கலாம்னு தோணுது. திடீர்னு நைட்டு வருவார், காலையில போயிடுவார். அப்பாவைப் பார்க்கவே முடியிறதில்லை. அவர் நடிச்ச படமெல்லாம் பார்ப்பேன். எல்லோரும் சொல்வாங்க, `அப்பா செமயா பண்ணியிருக்கார்'னு. ஆனா, ஒரேயொரு படத்துக்கு மட்டும்தான் நான் பார்த்துட்டு அவருக்குக் கால் பண்ணி, `சூப்பரா நடிச்சிருக்கீங்க'னு சொன்னேன். அது, `டேவிட்' படம். ஆனா, அவருக்கு நான் எந்தப் படத்தைச் சொல்றேன்னே தெரியல. நான் அப்படி ஒரு படம் பண்ணினேனானு கேட்டார். அத்தனை படங்கள்ல நடிச்சிருந்தார். எல்லாப் படத்திலும் வேற வேற கேரக்டர், வடிவம் இருக்கும். ஆனா, ஒரேநாள்ல மூணு, நாலு படம் நடிச்சுக்கிட்டு இருப்பார். அப்படியொரு நடிகர். டைரக்டர் நாசரைப் பற்றிப் பலபேர் பேசுனதே இல்லை. அவர் அப்போ எடுத்த படங்களை இப்போ எடுத்தார்னா, மக்கள் கண்டிப்பா வரவேற்றிருப்பாங்கனு நம்புறேன். கொஞ்சம் அட்வான்ஸா யோசிச்சுட்டார். இப்போகூட யாருக்கும் தெரியாது. அவர் ஒரு ஸ்கிரிப்ட்ல வேலை பார்த்துக்கிட்டு இருக்கார். கூடிய சீக்கிரம் ஒரு நல்ல படம் தருவார்னு நம்புறேன்." எனக் கூறினார்.

``நீங்க ரெண்டு பேரும் உதவி இயக்குநர்களா இருந்திருக்கீங்க. உங்க ரெண்டு பேரோட அப்பாவும் எக்கச்சக்கமான கதாபாத்திரங்கள் பண்ணியிருக்காங்க. அதுல ஏதாவது ஒரு கதாபாத்திரத்தை எடுத்து, அந்தக் கேரக்டரோட முன்கதை, இல்ல பின்கதையை ஒரு படமா எடுக்கணும்னா, எந்தக் கேரக்டரை எடுப்பீங்க?"

``எனக்கு இதுக்கு ஒரே பதில், `அவ்வை சண்முகி'யில வர்ற பாஷா கேரக்டர்தான். அவ்வளவு சுவாரஸ்யமா இருக்கும்" என்றார், அபி.

அக்‌ஷரா ஹாசன் , அபி ஹசன் - 'கடாரம் கொண்டான்'
அக்‌ஷரா ஹாசன் , அபி ஹசன் - 'கடாரம் கொண்டான்'
Still from the movie

``எனக்கு ரெண்டு கேரக்டர். ஒன்னு, இந்தியன் தாத்தா. அதை ஷங்கர் சார் ஏற்கெனவே எடுக்கிறார். அதனால, ரெண்டாவது ஆப்ஷன் `தசாவதாரம்' வில்லன் கிறிஸ் ஃப்ளெக்சர் கேரக்டர். அவன் படத்துல கெட்டவனா இருந்தாலும், அவன் உலகத்துக்கு அவன் நல்லவன்தான். அவனுக்குனு ஒரு நோக்கம், இலக்கு, அதை நோக்கிப் போற பயணம் எல்லாம் படமா எடுக்கும்போதும் இன்னும் நல்லா இருக்கும்" என அக்‌ஷரா கூறினார்.

``இயக்குநரா சரி. ஒருவளை நடிக்கிறதா இருந்தா, உங்க அப்பாவோட எந்தக் கேரக்டரோட சேர்ந்து நடிப்பீங்க?"

இதைக் கேட்டவுடன் அடுத்த நொடியே அபி சொன்ன பதில், ``எனக்கு கண்டிப்பா `எம்டன் மகன்' கேரக்டர்தான். எங்க அண்ணன், அப்பாகிட்ட எப்படியெல்லாம் அடி வாங்கியிருக்கார்னு நான் பார்த்திருக்கேன். அப்படியே அந்தப் படம்தான்!" எனச் சிரித்துக்கொண்டே சொன்னார்.

Abi Hassan
Abi Hassan
Balaji

அக்‌ஷராவுக்குக் கொஞ்சம் எமோஷனல் பக்கம். ``அவ்வை சண்முகி கேரக்டர்கூட சேர்ந்து நடிக்கணும்னு ஆசை. எங்க பாட்டியை நான் பார்த்ததில்லை. அந்தக் கேரக்டரைப் பார்க்கும்போதெல்லாம் பாட்டி நியாபகம்தான் வரும். இறுக்கிக் கட்டிப்பிடிக்கணும்போல இருக்கும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு