Published:Updated:

`அக்‌ஷய் குமார் எனக்கு கடவுள்தான்!” - லாரன்ஸ் நெகிழ்ச்சி

லாரன்ஸ், அக்‌ஷய் குமார்
லாரன்ஸ், அக்‌ஷய் குமார்

திருநங்கைகளுக்கு வீடு கட்டித்தருவதற்காக நடிகர் அக்‌ஷய் குமார் ரூ.1.5 கோடிக்கு தருவதாக கூறியதை ராகவா லாரன்ஸ் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்

நடிகர் ராகவா லாரன்ஸ் படவேலைகளில் பிசியாக இருந்தாலும் தன்னுடைய அறக்கட்டளை சார்பாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை குழந்தைகளுக்கான கல்வி, மருத்துவம் உள்ளிட்ட சமூகப்பணியில் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறார். லாரன்ஸ் பெயரில் செயல்பட்டு வரும் இந்த அறக்கட்டளை தற்போது 15-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த நிலையில், வீடு இல்லாத திருநங்கைகளுக்கு வீடு கட்டித்தருவதற்கான முயற்சியை எடுத்துள்ளனர்.

அக்‌ஷய் குமார்
அக்‌ஷய் குமார்

நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றியடைந்த காஞ்சனா படத்தின் இந்தி ரீமேக்கில் நடிகர் அக்‌ஷய் குமார் நடித்து வருகிறார். லக்‌ஷ்மி பாம் என்ற டைட்டிலில் இந்தப்படம் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. படப்பிடிப்பு சமயத்தில் திருநங்கைகளுக்கு வீடு கட்டித் தருவது தொடர்பாக தனது முயற்சி குறித்து அக்‌ஷய் குமாரிடம் தெரிவித்துள்ளார். திருநங்கைகளுக்கு வீடு கட்டித்தருவதற்காக நடிகர் அக்‌ஷய் குமார் ரூ.1.5 கோடிக்கு செக் வழங்கியுள்ளதாக ராகவா லாரன்ஸ் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து லாரன்ஸ் தனது முகநூல் பக்கத்தில், ``நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துகொள்கிறேன். திருநங்கைகளுக்கு வீடு கட்டித்தருவதற்காக நடிகர் அக்‌ஷய் குமார் ரூ.1.5 கோடிக்கு செக் வழங்கியுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். எங்களுடையை டிரெஸ்ட் இந்த வருடம் 15-வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இதையடுத்து வீடு இல்லாத திருநங்கைகளுக்கு வீடு கட்டித்தர முடிவு செய்துள்ளோம். இந்தியாவில் முதன்முறையாக இந்த முயற்சியை எடுக்கவுள்ளோம். எங்கள் அறக்கட்டளை மூலம் நிலம் ஒதுக்கியுள்ளோம். அவர்களுக்கான கட்டடம் கட்டித்தருவதற்காக நிதி திரட்டி வருகிறோம்.

லாரன்ஸ்
லாரன்ஸ்

லக்‌ஷ்மி பாம் ஷூட்டிங்போது அக்‌ஷய் குமாரிடம் இதுகுறித்து பேசினேன். அவர் என்னிடம் எதுவும் கேட்காமல் உடனே ரூ.1.5 கோடி நிதி கொடுப்பதாக கூறினார். என்னைப் பொறுத்தவரையில் எல்லோரும் கடவுள்தான். எனக்கு அக்‌ஷய் குமாரும் கடவுள்தான். எங்களது முயற்சிக்கு உதவுவதாக கூறிய அக்‌ஷய் குமாருக்கு என்னுடைய நன்றிகள். திருநங்கைகள் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். திருநங்கைகளுக்கு வீடு கட்டித் தரும் இத்திட்டத்தை இந்தியா முழுக்க அக்‌ஷய்குமாரின் ஆதரவோடு எடுத்துச் செல்வோம். விரைவில் பூமி பூஜைக்கான தேதி அறிவிக்கப்படும் “ எனத் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு