Published:Updated:

விஜய்யின் `கத்தி' அஜித்தின் `வீரம்'; இரண்டுபட ரீ-மேக்கிலும் ஒரே ஹீரோ!

சினிமாவில் இப்படித்தான் நடிப்பேன் என்று அடம்பிடிக்காமல் சிவாஜி மாதிரி நெகட்டிவ், பாசிட்டிவ் வேடங்களில் நடிப்பவர் இந்தி நடிகர் அக்‌ஷய்குமார்.

Ajith - Vijay
Ajith - Vijay

சமீபகாலமாக தமிழ்சினிமாவில் வெற்றிபெற்ற திரைப்படங்களைப் பார்த்து, அதில் தனக்குப் பிடித்த படங்களை இந்தியில் ரீ-மேக் செய்யும் வேலையில் இறங்க ஆரம்பித்திருக்கிறார்கள், பாலிவுட் கிரியேட்டர்கள். விஜய் இரட்டை வேடங்களில் நடித்த 'கத்தி' படத்தைப் பார்த்து வியந்த அக்‌ஷய் குமார், அந்தப் படத்தின் இந்தி ரீ-மேக்கில் நடிக்க ஆசைப்பட்டு கால்ஷீட் தேதிகளை அள்ளிக் கொடுத்திருக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக வேலை பார்த்தவர், பாலிவுட் வெர்ஷனின் 'கத்தி'யை இயக்குகிறார். ரஜினியுடன் ' 2.0' படத்தில் பக்‌ஷி ராஜனாக நடித்து பிரமிக்க வைத்த, அக்‌ஷய்குமார், இப்போது 'கத்தி' இந்தி ரீ-மேக்கில் நடித்து விவசாயிகளின் பாதுகாக்கும் நாயகன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தப் போகிறார்.

Akshay Kumar
Akshay Kumar

இதையடுத்து, அஜித் படம் முழுக்க வேட்டி சட்டையோடு தோன்றி நடித்த 'வீரம்' படத்தைப் பார்த்து அந்தப்படத்தின் இந்தி ரீ-மேக்கிலும் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டிருக்கிறார், அக்‌ஷய். அஜித்தை போலவே `வீரம்' இந்தி ரீ-மேக்கிலும் வித்தியாசமாக வேட்டி, சட்டையோடு நடிக்கலாமா? என்று ஆலோசித்து வருகிறார், அக்‌ஷய்குமார்.

'வீரம்' படத்தை இயக்கிய 'சிறுத்தை' சிவா தற்போது சூர்யா படத்தை இயக்கும் வேலையில் மும்முரமாக இருப்பதால் இந்தி ரீ-மேக்கை இயக்குபவர் யார்? என்று இன்னும் முடிவாகவில்லை. தமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்குப் பிறகு விஜய், அஜித் இருவரும் இரு துருவங்களாக திகழ்கின்றனர். விஜய்யின் 'கத்தி' அஜித்தின் 'வீரம்' என்று இரண்டு ஹீரோக்கள் நடித்து வெற்றிபெற்ற படங்களின் இந்தி ரீ-மேக்கில் நடிக்கும் ஒரே ஹீரோ அக்‌ஷய்குமார்.