Published:Updated:

`எல்லைக்குச் சென்று ராணுவ வீரர்களுக்காகப் பாடிய ஏ.எல்.ராகவன்!’ -1965 நினைவலைகள்

ஏ.எல்.ராகவன்
ஏ.எல்.ராகவன்

`எல்லையில இருந்து திரும்பற வழியில டெல்லியீல ஜனாதிபதி மாளிகையில எங்களுக்கு தேனீர் விருந்து தந்தாங்க. அப்ப ராதாகிருஷ்ணன் ஜனாதிபதி. ஜனாதிபதி மாளிகையிலயும் பி.சுசீலாவும் நானும் பாடினோம்” -ஏ.எல்.ராகவன்

பழம்பெரும் திரைப்படப் பின்னணிப் பாடகரும் நடிகை எம்.என்.ராஜத்தின் கணவருமான ஏ.எல்.ராகவன் மாரடைப்பு காரணமாக நேற்று சென்னையில் காலமானார்.

எம்.என்.ராஜம், ஏ.எல்.ராகவன்
எம்.என்.ராஜம், ஏ.எல்.ராகவன்

கவிஞர் கண்ணதாசனின் சகோதரர் ஏ.எல்.சீனிவாசனின் ஏ.எல்.எஸ் புரடக்‌ஷன் தயாரித்த ’திருடாதே’, ‘கந்தன் கருணை’ ஆகிய படங்களில் ஏ.எல். ராகவன் பாடியிருக்கிறார். அந்த வகையில், ஏ.எல்.சீனிவாசனின் மருமகள் எ.எல்.எஸ், ஜெயந்தி கண்ணப்பனுக்கு ராகவன் நன்கு பரிச்சயம்.

ஜெயந்தி கண்ணப்பனிடம் பேசினேன். ‘’ஏ.எல்.ராகவனுக்குக் கிடைச்ச இசைஞானம் அவருடைய அப்பா லட்சுமண பாகவதர்கிட்ட இருந்து வந்ததுனு சொல்வாங்க.

பிற்காலத்துல பின்னணிப் பாடகரா பேர் வாங்கினவர் சினிமாவுக்குள்ள முதன்முதலா நுழைஞ்சதென்னவோ நடிகராகத்தான்.

ஜூபிடர் பிக்சர் சோமுச் செட்டியார் தன்னுடைய ‘கிருஷ்ண விஜயம்’ படத்துல குழந்தை நட்சத்திரமா இவரை அறிமுகப்படுத்தினார்.

எங்களுடைய ஏ.எல்.எஸ் புரடக்‌ஷன் தயாரிச்ச ‘திருடாதே’ படத்தில் ‘மாமா மாமா மக்கு மாமா’ பாடல் அவர் பாடினதுதான். எங்களுக்கு குடும்ப நண்பரும் கூட. என்னுடைய மாமனார் பத்திப் பேசறப்பெல்லாம், ’ஏ.எல்.எஸ் தயாரிச்ச படங்கள்ல நான் பாடினதை, அவரு என்னை சண்டை நடந்த பார்டருக்குக் கூட்டிப் போய் பாட வச்சாரே அதுதான் என் வாழ்க்கையில மறக்க முடியாதது’னு சொல்வார்’ என்ற ஜெயந்தி கண்ணப்பன், ஏ.எல்.ராகவனின் அந்த அனுபவம் குறித்தும் நம்மிடம் விவரித்தார்..

`எல்லைக்குச் சென்று ராணுவ வீரர்களுக்காகப் பாடிய ஏ.எல்.ராகவன்!’ -1965 நினைவலைகள்

1965 இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் போர் நடந்த நேரம். எல்லையில போர் புரிகிற ராணுவ வீரர்களுக்கு நம்பிக்கையும் உற்சாகமும் அளிக்கிற விதமா சினிமாக் கலைஞர்களைத் திரட்டி எல்லையில போய் கலைநிகழ்ச்சி நடத்தற ஒரு முயற்சியை அன்றைய மத்திய அரசு அனுமதியோடு மாமா முன்னெடுத்தார்.

தமிழ் சினிமாவுல இருந்து சிவாஜி, ஜெமினி, சாவித்திரி, சரோஜா தேவி, எம்.எஸ்.வி., பி.சுசிலா முதலான ஆர்ட்டிஸ்டுகளுடன் ஏ.எல்.ராகவனும் சேர்ந்து மொத்தம் 55 பேர் சண்டை நடந்த பார்டருக்குக் கிளம்பிப் போனாங்க.

ஒருவாரம் அங்க இருந்துட்டு வந்த பிறகு அந்த அனுபவத்தை ஏ.எல்.ராகவன்கிட்ட நான் கேட்டப்ப, இப்படிச் சொன்னார்..

‘’டெல்லியில இருந்து சண்டை நடக்கற எல்லைக்கு ஃபிளைட் கிளம்பறவரை ஒண்ணும் தெரியல. ஃபிளைட் கிளம்பினதும் எல்லாருக்கும் ஒருவித திக் திக் உணர்வு. பயத்தைப் போக்க ஏரோபிளேனுக்கு உள்ளேயே சின்ன ஆட்டம் பாட்டமெல்லாம் நடந்திச்சு. பனி, மலை, பள்ளத்தாக்கா இருந்த ‘அல்வாரா’ங்கிற அந்தப் பகுதியில போய் நாங்க இறங்கியதும், உயிர்பயம் எல்லாருக்கும் வந்திடுச்சு.

‘சண்டை போடறவங்களைச் சந்தோஷப்படுத்த வந்துட்டு நாம பீதியில கிடக்கலாமான்னு ஒருவழியா தைரியம் வரவழைச்சு ஆளாளுக்கு அவங்கவங்க பங்களிப்பைத் தந்து ஒருவழியா ராணுவ வீரர்கள் மத்தியில அந்தக் கலைநிகழ்ச்சியை வெற்றிகரமா நடத்தி முடிச்சோம்,

ஜனாதிபதி மாளிகை விருந்து
ஜனாதிபதி மாளிகை விருந்து

திரும்பற வழியில டெல்லியீல ஜனாதிபதி மாளிகையில எங்களுக்கு தேனீர் விருந்து தந்தாங்க. அப்ப ராதாகிருஷ்ணன் ஜனாதிபதி. ஜனாதிபதி மாளிகையிலயும் பி.சுசீலாவும் நானும் பாடினோம்’’

கடைசி வரை மாமா உருவாக்கித் தந்த இந்த வாய்ப்பை மறக்கவே இல்லை ஏ.எல்.ராகவன்’ என்கிறார் ஜெயந்தி கண்ணப்பன்.

அடுத்த கட்டுரைக்கு