Published:Updated:

அதே அரைத்த மசாலா, அனல் பறக்கும் மாஸ் காட்சிகள்; ஆனால்?! - எப்படியிருக்கிறது `அலா வைகுண்டபுரம் லோ?'

Ala Vaikunthapurramuloo

அரைத்த மாவையே அரைக்காமல் இப்படிப்பட்ட சூழ்நிலைக்கு இதுவே சாத்தியமான முடிவாக இருக்க முடியும் என ஒரு எதிர்ப்பார்க்காத, மென்மையான க்ளைமாக்ஸின் மூலம், `அலா வைகுண்டபுரம் லோ'வை இந்த ஜானர் படங்களிலிருந்து முற்றிலும் வேறுபடுத்திவிட்டார் த்ரிவிக்ரம்.

அதே அரைத்த மசாலா, அனல் பறக்கும் மாஸ் காட்சிகள்; ஆனால்?! - எப்படியிருக்கிறது `அலா வைகுண்டபுரம் லோ?'

அரைத்த மாவையே அரைக்காமல் இப்படிப்பட்ட சூழ்நிலைக்கு இதுவே சாத்தியமான முடிவாக இருக்க முடியும் என ஒரு எதிர்ப்பார்க்காத, மென்மையான க்ளைமாக்ஸின் மூலம், `அலா வைகுண்டபுரம் லோ'வை இந்த ஜானர் படங்களிலிருந்து முற்றிலும் வேறுபடுத்திவிட்டார் த்ரிவிக்ரம்.

Published:Updated:
Ala Vaikunthapurramuloo

இதிகாசங்களிலும் நாடகங்களிலும் திரைப்படங்களிலும் பல ஆண்டுகளாகப் பார்த்துப் பழகி, அடித்துத் துவைத்த கதையை மீண்டும் புதிப்பித்து சுவாரஸ்யமாகச் சொல்லும் திறன் தெலுங்கு சினிமா அளவுக்கு வேறு எந்த மொழி திரைப்படத்துறைக்கும் இல்லை என்றே சொல்லலாம். அம்மா, அப்பா, அக்கா, தங்கை என சென்டிமென்டைப் பிழிந்தெடுக்கும் குடும்பப் படங்கள் முதல், உள்ளூர் குற்றவாளிகள், சர்வதேசத் தீவிரவாதிகள் என அனைவரையும் அழிக்கும் ஆக்‌ஷன் படங்கள் வரை தெலுங்கின் எல்லா முன்னணி நடிகர்களும், இந்த எல்லா வகைப் படங்களிலும் ஒரு முறையாவது நடித்துத்திருப்பார்கள்.

அலா வைகுண்டபுரம் லோ
அலா வைகுண்டபுரம் லோ

அதிலும், பிறந்த குழந்தையை மருத்துவமனைத் தொட்டிலிலேயே பெற்றோரிடமிருந்து பிரித்து கைமாற்றும் கதைகளை ஓராயிரம் முறையாவது சொல்லியிருப்பார்கள். இந்த வகைக் கதையில் என்.டி.ஆர், சிரஞ்சீவி, நாகார்ஜுனா என எல்லோரும் நடித்து முடித்த பிறகு, இப்போது அதை அல்லு அர்ஜுன் தன் `அலா வைகுண்டபுரம் லோ' படத்தின் வழியாக, கையில் எடுத்திருக்கிறார். ஆனால், அதைத் தனக்கே உரிய ஸ்டைலிஷான, ட்ரெண்டியான பாணியில் செய்திருக்கிறார் அல்லு.

ஒரே நிறுவனத்தில் வேலை பார்க்கும் உயர் அதிகாரி ராமச்சந்திரன் மற்றும் கிளெர்க் வால்மிகிக்கு ஒரே நாள் ஒரே மருத்துவமனையில் ஆண் குழந்தைகள் பிறக்கின்றன. சில குழப்பங்களை உருவாக்கிய பின்னர், வால்மீகியின் சூழ்ச்சியால், இரு குழந்தைகளையும் மாற்றப்படுகின்றன. தன் மகன் பெரும் ராஜாவாக வாழ வேண்டும் என்ற கனவில் அவர் இப்படிச் செய்வதால் என்னவெல்லாம் விளைகின்றன என்பதை அல்லு அர்ஜுனின் மாஸ் மசாலா டெம்ப்ளேட்டில் இயக்கியிருக்கிறார் இயக்குநர் த்ரிவிக்ரம்.

அலா வைகுண்டபுரம் லோ
அலா வைகுண்டபுரம் லோ

`இறுதியில் அந்தக் குடும்பம் ஒன்றாக இணைந்து அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்' என அரைத்த மாவையே அரைக்காமல், இப்படிப்பட்ட சூழ்நிலைக்கு இதுவே சாத்தியமான முடிவாக இருக்க முடியும் என்கிற ஒரு எதிர்ப்பார்க்காத மென்மையான க்ளைமாக்ஸின் மூலம், `அலா வைகுண்டபுரம் லோ'வை முற்றிலும் வேறுபடுத்திவிட்டார் த்ரிவிக்ரம். படத்தின் தொடக்கத்தில் வரும் காட்சிகள் எளிதில் யூகிக்க முடிகிற வகையில் இருந்தாலும், தொடர்ந்து வரும் இடைவேளை, அதையடுத்து வரும் தொடர் நிகழ்வுகள், இறுதிக்காட்சிக்கு முந்தைய ட்விஸ்ட் என எல்லாமே இந்தக் கதையைப் புதிதாக்கிவிட்டன.

என்றாலும், படத்தின் தொடக்கக் காட்சிகளில் பன்ட்டு (அல்லு அர்ஜுன்), அமுல்யாவுக்கு (பூஜா ஹெக்டே) இடையே நடக்கும் குழப்பங்கள், அதில் பூஜாவைக் காட்சிபடுத்தியிருந்த விதம் எனத் தேவையற்ற திரைக் கவர்ச்சியைப் புகுத்தியிருந்தார்கள். பூஜாவின் கேரக்டரை இப்படி முதலில் ஆபாசப்படுத்திவிட்டு, அதன் பின் வரும் காட்சிகளில் பெண்கள் வேண்டாம், முடியாது என்று சொன்னால் அது முடியாதுதான் என `நோ மீன்ஸ் நோ' வசனம் பேசுவது சகித்துக்கொள்ள முடியாத முரண்.

Ala Vaikunthapurramuloo
Ala Vaikunthapurramuloo

ஒரு முக்கியமான போர்டு மீட்டிங்கில் தெலுங்கு சினிமாவின் ரெட்ரோ பாடல்களைப் போட்டு ஆடுவது, க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சிக்கும் பழைய நாட்டுபுறப் பாடலுக்கு ஆடுவது என அல்லு அர்ஜுன் செய்திருக்கும் சேட்டைகளே படத்தைத் தொடக்கம் முதல் ரசிக்க வைக்கின்றன. உண்மை தெரிந்ததும், தன் அப்பாவிடம் சுதந்திரம் பற்றி பேசும் வசனம், அந்த சேட்டைகளுக்கு நேர் எதிர் எமோஷன்.

அல்லுவின் வசனங்கள் மட்டுமின்றி, ராஜ்ஜின் ப்ரீ-க்ளைமாக்ஸ் வசனம், தபுவுக்கும் ஜெயராமுக்கும் இடையே வரும் உரையாடல் எனப் திரைக்கதை நெடுக, வசனங்கள் வழியாக இந்தக் கமர்ஷியல் சினிமாவுக்கும் ஆழம் சேர்த்திருக்கிறார் த்ரிவிக்ரம். தூரத்தில் நின்று தன் உண்மையான அம்மாவை அழுதுகொண்டே ஏங்கிப் பார்க்கும் காட்சி `தளபதி'யின்`சின்னத் தாயவள்' பாடலை நினைவுபடுத்தினாலும், இந்த அல்லு அர்ஜுனின் வெர்ஷனும் அழுத்தமாகவே இருக்கிறது.

Ala Vaikunthapurramuloo
Ala Vaikunthapurramuloo

படத்தில் பேருக்காக ஒரு வில்லன் வேண்டுமென அந்தக் கதாபாத்திரம் சேர்த்திருக்கிறார்கள். ஆனாலும், சமுத்திரக்கனி அந்தப் பாத்திரத்துக்கு உயிர்க்கொடுத்திருக்கும் விதம், அவருடைய தோற்றம், முகபாவனைகள் என எல்லாம் அந்தக் கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்கிறது. சமுத்திரக்கனி படத்தின் மெயின் வில்லனாக இருந்தாலும், வால்மீகியாக நடித்திருக்கும் முரளி ஷர்மாவின் வில்லத்தனம் அதற்கு எந்த விதத்திலும் குறைவில்லாமல் படம் முழுக்க வெளிப்படுகிறது.

அல்லுவின் சேட்டைகளும் நடனமும், அதேவேளையில் மாஸ் தோற்றமும் இந்தப் படத்தைத் தமிழில் ரீமேக் செய்தால் கண்டிப்பாக விஜய் இதில் கச்சிதமாகப் பொருந்துவார் என்றே சொல்லிச் செல்கின்றன. கடந்த ஐந்து படங்களாக ஒரு சரியான ப்ளாக்பஸ்டரை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் அல்லு அர்ஜுனுக்கு, `அலா வைகுண்டபுரம் லோ' இறுதியில் ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கிறது.