Published:Updated:

``நான் `நடிக்கத் தெரியாது'ன்னேன்... `அதுதான் வேணும்'னார் டி.ஆர்!"- அமலா ஷேரிங்ஸ்

அமலா
அமலா

என் எட்டு வயசுல சென்னையில ஹாஸ்டல் வாழ்க்கையைத் தொடங்கினேன். நல்லா படிப்பேன். படிப்பு, டான்ஸ் இரண்டுமே ஒரே இடத்தில்.

நடனம் கற்க சென்னை வந்த அமலா, பின்னர் நடிகையானார். 1980-களில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் கனவுக் கன்னியாக வலம்வந்தார். புகழின் உச்சத்தில் இருந்தபோது, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவைத் திருமணம் செய்துகொண்டு சினிமாவிலிருந்து விலகினார். இப்போது குணச்சித்திர வேடங்களில் நடித்துவருவதோடு, சமூக சேவை மற்றும் கல்லூரி நிர்வாகப் பணிகளிலும் பிஸி. என்றும் இளமையுடன் இருக்கும் நடிகை அமலா, தன் வெற்றிப் பயணம் குறித்துப் பேசுகிறார். விரிவான பேட்டிக்கு க்ளிக் செய்க.. http://bit.ly/2XnEqZs

என் எட்டு வயசுல சென்னையில ஹாஸ்டல் வாழ்க்கையைத் தொடங்கினேன். நல்லா படிப்பேன். படிப்பு, டான்ஸ் இரண்டுமே ஒரே இடத்தில். அமைதியான சூழலில் எனக்குப் பிடிச்ச மாதிரியான வாழ்க்கை. எங்க லேடீஸ் ஹாஸ்டலில் நிறைய கலாட்டாக்கள் நடக்கும். நிறைய தோழிகள் கிடைச்சாங்க. ஆர்வத்துடன் தமிழ் கத்துகிட்டேன். விடுமுறை நாள்கள்ல, தெரு நாய்களின் நலனுக்காக அதிக நேரம் செலவிடுவேன். பிராணிகள் மீதான நேசத்தில், சைவத்துக்கு மாறினேன்.

கலாக்ஷேத்ராவுல காலேஜ் படிச்சுக்கிட்டே, அந்த இன்ஸ்டிட்யூட் சார்பில் பல மாநிலங்கள்ல நடக்கும் நிகழ்ச்சிகளில் டான்ஸ் ஆடினேன். ஓரளவுக்கு வருமானம் கிடைச்சாலும், அது எனக்குப் போதலை. அப்போ என் அம்மா அயர்லாந்துல இருந்தாங்க. அப்பா இன்னொரு கல்யாணம் செய்துகிட்டார். படிப்பு உள்ளிட்ட என் எல்லாத் தேவைகளையும் நானேதான் பார்த்துக்கிட்டேன். அம்மாவின் தேவைகளையும் கவனிச்சுக்கிற பொறுப்பும் எனக்கிருந்தது.

அமலா
அமலா

இயக்குநர் டி.ராஜேந்தர் சார் என் நடனத்தைப் பார்த்திருக்கார். கூடுதல் வருமானத் தேவையை எதிர்பார்த்துக்கிட்டிருந்தபோது தான், ஒருநாள் என்னைச் சந்திச்சார் டி.ஆர் சார். அவர் படத்தில் என்னை நடிக்கக் கேட்டார். அதுவரை ஒரு தமிழ்ப் படம்கூட நான் பார்த்ததில்லை. ஐயங்கார் பாஷையிலதான் தமிழ் பேசுவேன். 'எனக்கு நடிக்கத் தெரியாது'ன்னு அவர்கிட்ட நான் சொல்ல, 'அதுதான் எனக்கு வேணும். உன்னை நடிக்கவைக்கிறது என் பொறுப்பு'ன்னு சொன்னார்.

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo

முதலில் நடிக்க மறுத்தாலும், அப்போதைய என் சூழலுக்கு நடிப்பைச் சிறந்த வாய்ப்பா நினைச்சேன். 'இஷ்டம் இருந்தா நடி. நான் உனக்கு உதவியா வர்றேன்'னு அம்மா சொன்னாங்க. அதன் பிறகுதான், 'மைதிலி என்னைக் காதலி' படத்துல நடிக்க சம்மதிச்சேன். நடிப்பு, தமிழ் உச்சரிப்பு உட்பட நிறைய விஷயங்களை டி.ஆர் சார் சொல்லிக்கொடுத்தார். அந்தப் படத்துல நடிச்ச ஸ்ரீவித்யா அக்கா, தனிப்பட்ட முறையில என்மேல் அன்புகாட்டி ஊக்கம் கொடுத்தாங்க. அந்தப் படம் ரிலீஸாகும் முன்பே நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனா, எதையும் ஏத்துக்காம டி.ஆர் சார் சொன்னபடி படம் ரிலீஸாகும்வரை காத்திருந்தேன். 'மைதிலி என்னைக் காதலி' படத்தை தியேட்டரில் பார்த்தப்போ, என் நடிப்பு எனக்கே ஆச்சர்யமா இருந்துச்சு. என்னால தொடர்ந்து நடிக்க முடியும்கிற நம்பிக்கையும் கிடைச்சுது. முதல் படமே பெரிய ஹிட்டாக, பிரபலமானேன்.

அமலா
அமலா

ஆறு வருஷத்துல ஐந்து மொழிகளில், ஐம்பது படங்கள்ல ஹீரோயினா நடிச்சேன். என் வளர்ச்சியைப்பார்த்து டி.ஆர் சார் பல நேரங்கள்ல மனதாரப் பாராட்டியது, மிகச் சிறந்த மகிழ்ச்சித் தருணங்கள். அந்த நிலையில், நாகார்ஜுனாவும் நானும் நாலு தெலுங்கு படங்கள்ல ஜோடியா நடிச்சோம். எங்க நட்பு, காதலாக மலர்ந்துச்சு. சினிமாவில் நடிக்க வந்ததுபோல, திருமண வாழ்க்கையும் என் முடிவுதான்... பையன் அகில், அமெரிக்காவில் காலேஜ் படிச்சுக்கிட்டிருந்தான். அப்போதான், 'லைஃப் இஸ் ஃபியூட்டிஃபுல்' தெலுங்குப் படத்தில் 25 வருஷத்துக்குப் பிறகு ரீ-என்ட்ரி கொடுத்தேன். அப்போதான் ஹீரோயின் நடிப்பைவிட, அம்மா கேரக்டர் சிறந்ததுன்னு எனக்குப் புரிஞ்சது.

பிறகு, மலையாளப் படமான 'சாய்ரா பானு' உட்பட 10 படங்கள்ல நடிச்சுட்டேன். வெப் சீரிஸ்ல அதிகம் நடிக்கிறேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இப்போ தமிழ்ப் படம் ஒன்றில் நடிக்கிறேன். மாமனாரைத் தொடர்ந்து, கணவர், நான், நாக சைதன்யா, சமந்தா, அகில்னு எங்க குடும்பத்துல பலரும் நடிகர்கள்தாம். கணவர், நான், அகில் ஆகியோர் ஒரு வீட்டிலும், நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவரும் தனி வீட்டிலும் வசிக்கிறோம். மெச்சூரிட்டியான அன்பு மற்றும் புரிதலுடன் இருக்கிறதால, எங்களால குடும்ப உறவையும் சினிமா தொழிலையும் சரியான பாதையில் கொண்டுபோக முடியுது.

- சினிமாவில் சுயபரிசோதனை செய்துகொண்டதன் பின்னணி, முன்னணி நடிகர்கள் - இயக்குநர்கள் படங்களில் நடித்த அனுபவம், வளர்ப்புப் பிராணிகளின் சேவகி ஆனது எப்படி? குடும்ப வாழ்க்கையும் அனுபவமும்... - அமலாவின் ஷேரிங் முழுவதையும் அவள் விகடன் இதழில் வாசிக்க > 80'ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 22: நான் கொடுத்து வைத்தவள்! - நடிகை அமலா https://www.vikatan.com/news/cinema/1980s-evergreen-heroins-actress-amala

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo

அடுத்த கட்டுரைக்கு