Published:Updated:

அமர்க்களம் #VikatanReview

விகடன் விமர்சனக்குழு

நிஜ வாழ்க்கையிலும் இணைந்த காதல் ஜோடியின் ரீல் ஸ்டோரி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ன்ட்டி ஹீரோ அலை ஒன்று தன் பக்கம் வீசிக்கொண்டிருப்பதை சாமர்த்தியமாகவே பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்து விட்டார் அஜீத். போகிற போக்கைப் பார்த்தால் அவார்டு வாங்காமல் ஓயமாட்டார் போலிருக்கிறது!

நாலு நாள் தாடியும் வியர்வையில் ஊறிய கசங்கிய சட்டையும் முரட்டுச் சங்கிலியுமாக அஜீத்துக்கு இதில் கரடுமுரடு முகம். கடமையே கண்ணாக ஷாலினியைக் கடத்திச் செல்லும்போதும், நிச்சயதார்த்த வீட்டில் புகுந்து ஒருவனைப் புரட்டி எடுக்கும்போதும் அக்மார்க் முத்திரை.

அமர்க்களம்
அமர்க்களம்

ஒரு கூலிப்படை வைத்து ரெளடித்தனம் செய்யும் அஜீத், தாதா ரகுவரனின் ஸ்பெஷல் அஸைன்மெண்ட்டின் பேரில் போலீஸ் கமிஷனர் நாசரின் மகள் ஷாலினியைக் கடத்துகிறார். இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து இருவரும் இணைகிறார்கள்!

`அஜீத் தன்னைக் காதலிக்கவில்லை. அவ்வளவும் நடிப்புதான்' என்பது தெரிந்ததும் அஜீத் இருப்பிடத்துக்குச் சென்று குமுறும் காட்சியில் இதயங்களில் இடம் பிடிக்கிறார் ஷாலினி. நிற்க, `சாய்ந்து கொள்ள எனக்கு ஒரு மடி வேண்டும்' என்று ஏங்கும் அஜீத்துக்கு நிஜ வாழ்க்கையிலும் ஷாலினியின் மடியே கிடைத்துவிடுவது யதேச்சையாக அமைந்து விட்ட ஆட்டோபயாகிராபி!

அமர்க்களம்
அமர்க்களம்

அண்ணாமலை பட க்ளைமாக்ஸ் ரீலை ஷாலினியிடமிருந்து மீட்க தியேட்டர் ஊழியர் தாமு அல்லாடுவது யக்கா... வயிற்றைப் பதம் பார்க்கிறது.

தான் அஜீத்திடம் கடத்திப்போகச் சொன்ன ஷாலினி தன் மகள்தான் என்பதை நாசர் மூலமாக உணர்ந்து துடித்துப்போகும் கட்டத்தில் ரகுவரனின் முகபாவங்கள் மாறுவது ஸ்பெஷல்!

உச்சகட்ட அடிதடி ரகளைகளுக்கு நடுவில் அந்த மென்மையான காதல் கதைக்கான அழுத்தம் காணாமல் போய்விட்டது பரிதாபம்!

`கேட்டேன்... கேட்டேன்' பாடலை அசத்தலாகப் படமாக்கி குருவை மிஞ்சிவிட்டார் சிஷ்யர் சரண்! பாடல் வரிகளில் வைரமுத்து டாப்கியரில் கிளம்ப, அதன் வேகம் குறையாமல் படமாக்கிய காமிராமேன், பாடிய எஸ்.பி.பி., இசையமைத்த பரத்வாஜ், இயக்கிய சரண் என்று கூட்டணிக்கு வெற்றிவாகை!

- விகடன் விமரிசனக் குழு

(05.09.1999 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு