Published:Updated:

விஜய்-யின் `மாஸ்டர்' படத்தை எத்தனை கோடிக்கு வாங்கியது அமேசான்... `பொன்மகள் வந்தாள்' லாபமா?

விஜய், மாஸ்டர்
விஜய், மாஸ்டர்

அமேசான் நிறுவனம், சூர்யாவின் 2டி தயாரித்திருக்கும் `பொன்மகள் வந்தாள்', `சூரரைப் போற்று' என இரண்டு படங்களையும் சேர்த்து வாங்கியிருக்கிறது. இதில் `பொன்மகள் வந்தாள்' படம் மட்டும் எத்தனை கோடிக்கு விற்பனையானது, `மாஸ்டர்' ஓ.டி.டி சாதனைகளை முறியடித்ததா?

லாக்டெளனால் பல நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், வளர்ச்சிப் பாதையில் விறுவிறுவென முன்னேறுவது ஓ.டி.டி தளங்கள்தான். அதிலும் குறிப்பாக, அமேசானுக்கு அசுர வளர்ச்சி. ஓ.டி.டி தளங்களில் இப்போது மக்கள் அதிக அளவில் படங்கள், வெப்சீரிஸ்களைப் பார்ப்பதால் இந்தியாவில் அதிக அளவில் பார்வையாளர்களைக் கொண்டிருந்த யூடியூப் கூட சரிவை சந்தித்துக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், சின்னப் படங்கள் சில ஏற்கெனவே ஓ.டி.டி-யில் நேரடியாக ரிலீஸாகியிருந்தாலும், முதல் பெரிய படமாகக் கடந்த மே 29-ம் தேதி, அமேசான் ப்ரைமில் வெளியானது ஜோதிகாவின் `பொன்மகள் வந்தாள்.' படம் ஓ.டி.டி-யில் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில், `பொன்மகள் வந்தாள்' படத்துக்கான வரவேற்பு அமேசான் நிறுவனம் எதிர்பார்த்ததைவிடவும் அதிகமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். இந்த ஒரு வாரத்தில், `பொன்மகள் வந்தாள்' படத்துக்காக மட்டுமே அமேசான் ப்ரைமை சப்ஸ்கிரைப் செய்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சங்களைத் தாண்டியிருப்பதாக சொல்கிறார்கள். ``அமேசான் சப்ஸ்கிரிப்ஷனுக்கான ஒரு மாத கட்டணம் 129 ரூபாய். குறைந்தது 5 லட்சம் பேர் சப்ஸ்கிரைப் செய்திருந்தால், அதிலேயே அமேசானுக்கு 6 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் வந்திருக்கும்'' என்கிறார் சினிமாத்துறையின் மிக முக்கிய தயாரிப்பாளர்.

ஓகே... இப்போது அமேசான் நிறுவனம் `பொன்மகள் வந்தாள்' படத்தை எத்தனை கோடிகளுக்கு வாங்கியது? `பொன்மகள் வந்தாள்' படம் மொத்தமாக 5.5 கோடி ரூபாயில் எடுத்து முடிக்கப்பட்டிருக்கிறது. அமேசான் நிறுவனம் சூர்யாவின் 2டி தயாரித்திருக்கும் `பொன்மகள் வந்தாள்', `சூரரைப் போற்று' என இரண்டு படங்களையும் சேர்த்துதான் வாங்கியிருக்கிறது. இதில் `பொன்மகள் வந்தாள்' படம் மட்டும் 4.5 - 5 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். இது தவிர, விஜய் டி.வி-க்கு சேட்டிலைட் ரைட்ஸை 1.5 கோடி ரூபாய்க்கு விற்றிருக்கிறார்கள். இந்த விற்பனையின் மூலம் மட்டுமே `பொன்மகள் வந்தாள்' கிட்டத்தட்ட 1 கோடி ரூபாய் லாபம் பார்த்திருக்கிறது. மேலும், `பொன்மகள் வந்தாள்' படத்தை தியேட்டர் ரிலீஸ் செய்திருந்தால் அதற்கான ப்ரமோஷன், பப்ளிசிட்டி, பேப்பர், ஆன்லைன் விளம்பரங்கள் எல்லாவற்றையும் 2டி நிறுவனம் செய்திருக்க வேண்டும். ஆனால், அமேசானுக்கு விற்றுவிட்டதால் அனைத்து ப்ரமோஷன் செலவுகளையும் அந்த நிறுவனமே செய்திருக்கிறது.

Jyothika, Bakyaraj
Jyothika, Bakyaraj

அமேசான் அடுத்தடுத்து தமிழில் `பெண்குயின்', இந்தியில் `குலாப் சிதாபோ', `சகுந்தலாதேவி', கன்னடத்தில் `லா', `ப்ரெஞ்ச் பிரியாணி', மலையாளத்தில் `சுஃபியும் சுஜாதாயும்' என ஏழு படங்களை வெளியிட இருக்கிறது. இவற்றில், அமிதாப் பச்சன் நடித்த `குலாப் சிதாபோ' தான் அதிக பட்ஜெட் படம். 40 கோடி ரூபாய் இதன் பட்ஜெட்டாம். இந்தப் படத்தையும் சேட்டிலைட் உரிமை, ஆன்லைன் ஸ்ட்ரீமிங் எனச் சேர்த்து, 50 கோடிக்கு விற்று தயாரிப்பு நிறுவனம் ஏற்கெனவே லாபம் பார்த்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.

நேரடி ரிலீஸ் இல்லாமல் `மாஸ்டர்,' `ஜகமே தந்திரம்' உட்பட பல படங்களை வாங்கியிருக்கிறது அமேசான். இதுவரை அமேசான் வாங்கிய தமிழ்படங்களில், விஜய் நடித்த `பிகில்' படம்தான் அதிக விலைக்கு, அதாவது 14 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். இந்தச் சாதனையை `மாஸ்டர்' பெரிய அளவில் முறியடிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 'மாஸ்டர்' படத்தை 15 கோடி ரூபாய்க்குத்தான் அமேசான் வாங்கியிருக்கிறதாம். குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் என்பதால்தான் இந்த விலைக்கு விற்பனையானதாகச் சொல்கிறார்கள். தற்போதைய சூழலில் சூர்யா, தனுஷ் ஆகியோரின் படங்கள் 5 முதல் 10 கோடி ரூபாய் வரை ஓ.டி.டி-யில் விற்பனையாகிறது. ஆனால், இனி வெளியாகும் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற உச்சநட்சத்திரங்களின் படங்கள் 25 கோடி ரூபாய் வரை விற்பனையாகும் என்கிறார்கள்.

Jyothika
Jyothika

ஓ.டி.டி தளங்களைப் பொறுத்தவரை அமேசான் ப்ரைம், நெட்ஃபிளிக்ஸ், ஹாட்ஸ்டார் ஆகிய நிறுவனங்கள்தான் தமிழ்ப் படங்களை அதிக அளவில் வாங்குகின்றன. இதில், அமேசான் மட்டுமே ஒப்பந்தம் செய்த தொகையை விரைந்து செட்டில் செய்வதாகச் சொல்கிறார்கள். அதாவது, ஒரு படத்தை வாங்க ஒப்பந்தம் போடும்போது 20 சதவிகித தொகையைத் தந்துவிடும் அமேசான், படம் தனது தளத்தில் வெளியான 90 நாட்களுக்குள் முழுத் தொகையையும் கொடுத்துவிடுகிறதாம். ஆனால், நெட்ஃபிளிக்ஸில் பணம் ஓராண்டு காலத்துக்கு சிறிது சிறிதாக பிரித்துத் தரப்படுகிறதாம். இதனால் பெரும்பாலான தயாரிப்பாளர்கள் அமேசான் ப்ரைமில் படங்களை விற்கவே ஆர்வம் காட்டுகிறார்கள்.

Vijay, Master
Vijay, Master

வெகுவிரைவில், அமேசான் நிறுவனம் தமிழ் சினிமா உலகை ஆளும் என்றே தெரிகிறது. அமேசானின் நிபந்தனைகளுக்கு ஏற்றபடிதான் இனி, பெருமளவில் தமிழில் படங்கள் தயாரிக்கப்படும் என்கிறார்கள் மூத்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர்கள்.

அடுத்த கட்டுரைக்கு