Published:Updated:

சூர்யா - ஜோதிகா தயாரிப்பு... 'இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்' என்ன சொல்ல வருகிறது என்றால்?!

இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்

ஜோதிகா, சூர்யா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் அரிசில் மூர்த்தி இயக்கத்தில், மிதுன் மாணிக்கம், ரம்யா பாண்டியன், வாணி போஜன், வடிவேல் முருகன் நடிப்பில் அமேசான் ப்ரைமில் வெளியாகியிருக்கிறது 'இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்' படத்தின் ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட் இதோ!

சூர்யா - ஜோதிகா தயாரிப்பு... 'இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்' என்ன சொல்ல வருகிறது என்றால்?!

ஜோதிகா, சூர்யா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் அரிசில் மூர்த்தி இயக்கத்தில், மிதுன் மாணிக்கம், ரம்யா பாண்டியன், வாணி போஜன், வடிவேல் முருகன் நடிப்பில் அமேசான் ப்ரைமில் வெளியாகியிருக்கிறது 'இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்' படத்தின் ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட் இதோ!

Published:Updated:
இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்
அடிப்படை வசதிகள்கூட இல்லாத பூச்சேரி கிராமத்தில் வசிக்கும் குன்னிமுத்து, ராக்காயி வீட்டிலிருக்கும் இரண்டு காளைகள் கருப்பனும், வெள்ளையனும் காணாமல் போய்விடுகின்றன. அதற்குப் பின்னால் இருக்கும் சதியைக் கண்டறிந்து அவர்களுக்கு உதவ வருகிறார் செய்தியாளர் ஒருவர். காளைகள் கிடைத்தனவா, அதனால் கிராமத்தில் உண்டாகும் மாற்றங்கள் என்னென்ன என்பதுதான் படத்தின் கதை.
இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்...
இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்...

அப்பாவி குன்னிமுத்துவாக அறிமுக நடிகர் மிதுன் மாணிக்கம். நிஜமாகவே அந்தக் கிராமத்திலிருந்து ஒருவரை நடிக்கக் கூட்டி வந்ததுபோலவே வந்து போகிறார். அதுதான் படத்தின் ப்ளஸ், அதுதான் மைனஸும் கூட. சந்தோஷமான ஃப்ளாஷ்பேக் காட்சிகளில்கூட அதே சோக முகத்துடன் அவர் தெரிவது உறுத்தல். ராக்காயியாக ரம்யா பாண்டியன். மீண்டும் அதே 'ஜோக்கர்' பிம்பத்துடன் கிராமத்துப் பெண்ணாக தன் பாத்திரத்தைச் சரியாகச் செய்திருக்கிறார். குறிப்பாக அவரின் கிராமத்து மொழியில் அத்தனை யதார்த்தம்.

இவர்கள் இருவர்தான் நாயகன், நாயகி என்றாலும் நடிப்பில் இவர்களை ஓவர்டேக் செய்திருக்கிறார் யூடியூப் புகழ் 'கோடாங்கி' வடிவேல் முருகன். காட்சிக்குக் காட்சி காமெடி, எல்லோரையும் சதாய்ப்பது, அரசியல் பகடி செய்வது எனப் படம் சற்று திசை மாறும்போதெல்லாம் அதைச் சரி செய்து ரசிக்க வைக்கிறார். குன்னிமுத்துவின் எல்லாமுமாக வரும் லட்சுமி பாட்டிக்கு அறிமுகமாம். படத்தின் பல காட்சிகளைத் தாங்கி பிடிப்பது அவரின் நகைச்சுவையும் டயலாக் டெலிவரியும்தான். "இந்த ஊர்ல நான் இல்லாம புரணியே பேச மாட்டாங்க" என்று அவர் சொல்லும் பல வசனங்கள் அப்ளாஸ் ரகம். செய்தியாளராக வாணி போஜன் பக்காவாகப் பொருந்திப் போயிருக்கிறார். கதைக்குத் தேவையான முக்கியமானதொரு பாத்திரத்துக்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.

இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்...
இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்...

படம் இரண்டு மணிநேரத்துக்கு ஒரு சில நிமிடங்கள் குறைவாகவே ஓடுகிறது, அப்படியும் பல காட்சிகள் தேவையற்றதாகவே இருக்கிறது. ஒரு சில காட்சிகளில் கடத்தியிருக்க வேண்டிய உணர்வுகளை, கதைக்கான மையச்சரடை, சம்பந்தமே இல்லாமல் ரிப்பீட்டட் காட்சிகள் வைத்து இழுத்திருக்கிறார்கள். காளை மாடுகளுக்கும் குன்னிமுத்து, ராக்காயி தம்பதிக்குமான பந்தத்தைக் காட்ட, அவ்வளவு நேரம் எடுத்துக்கொண்டது பொறுமையை சோதிக்கின்றன.

எம்.சுகுமாரின் ஒளிப்பதிவு வளர்ச்சியடையாத ஒரு தமிழக கிராமத்தை அதற்குரிய உயிர்ப்புடன் காட்சிப்படுத்தியிருக்கிறது. கிரிஷ்ஷின் பின்னணி இசை ஈர்த்த அளவவுக்குப் பாடல்கள் தடம் பதிக்கவில்லை. பெரும்பாலும் மான்டேஜ் காட்சிகள் என்பதால் அவை கதைக்கு பலம் சேர்த்திருக்கின்றன.

இரண்டாம் பாதியில் அரசியல் பேசத் தொடங்கியபின் திரைக்கதையில் வேகம் கூடுகிறது. 'அழகர்சாமியின் குதிரை', இந்தியில் 'பீப்ளி லைவ்' போன்ற படங்களின் சாயல் ஆங்காங்கே தெரிந்தாலும், ஒரு சமூகப் பகடியாகப் படம் சரியான பாதையில் விரிகிறது.

குறிப்பாக அந்த பிரஸ் மீட் காட்சியும் அதற்கு முன்பான லைவ் கவரேஜும்... அதில் கலாய்க்கப்பட்ட அரசியல் தலைவர்கள் யார் யார் என குவிஸ் போட்டியே வைத்துவிடலாம் போல! அதில் அதிகம் ஈர்த்தது யாரென நிச்சயம் 'சிந்திக்கணும்' மக்களே!
இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்...
இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்...

மின்சார வசதியே இல்லாத வீட்டுக்கு அரசியல் தலைவர்கள் மிக்ஸி, கிரைண்டர் என கிஃப்டாகக் கொடுப்பது, பள்ளிச் சிறுமி ஊரின் அவல நிலையைச் சொல்வது, தனியாளாகக் குளத்தைத் தூர்வாரும் முதியவரைக் பிறர் கண்டுகொள்ளாமல் நகர்வது என போகிற போக்கில் நிறைய இடங்களில் அரசியல் பேசியிருக்கிறார்கள். ஒரு சில இடங்களில் படத்தின் மையக்கருவை விட்டுவிட்டு அவை துருத்திக்கொண்டு தெரிந்தாலும், கடத்தவேண்டிய உணர்வுகளை நமக்குக் கடத்திவிடுகின்றன.

என்னதான் சினிமா என்றாலும், ஒரு புது யூடியூப் சேனலில் கோடிக்கணக்கில் வியூஸ் போவது, கிராமத்துப் பிரச்னைகளுக்கு நீதிமன்றம் இன்ஸ்டன்ட்டாகத் தீர்ப்பு வழங்குவது, ஒரு கடைக்கோடிக் குக்கிராமத்தில் பிரச்னை என்றவுடன் மொத்த மீடியாவும் அங்கே முகாமிடுவது, ஆளுங்கட்சி அழுத்தம் கொடுத்தவுடன் ஒருவர்கூட இல்லாமல் ஓடிவிடுவது என யதார்த்தத்தை மீறிய பல விஷயங்கள் எட்டிப் பார்க்கின்றன.

இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்...
இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்...

அதுவும் முதல் பாதியில் அத்தனை இயல்பாக, யதார்த்தமாகக் கதை சொல்லிவிட்டு இரண்டாம் பாதியில் டெம்ப்ளேட் சினிமா ரூட்டைப் பிடித்திருப்பது சற்றே சறுக்கல். இடையிடையே வரும் பாடல்கள் மேலும் சோதிக்கின்றன. ஊருக்கான பிரச்னைகள் தனிக்கதை, காளைகள் தனிக்கதை என்பது மாதிரியாகத்தான் திரைக்கதையின் போக்கு நகர்கிறது. அதனாலேயே ஒன்றுடன் ஒன்று பெரிதாக இணையாமல் ஒப்புக்கு இணைக்கப்பட்டிருப்பது போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

முதல் பாதியில் இன்னும் கொஞ்சம் கவனம் சேர்த்து, அதிலிருக்கும் யதார்த்தத்தை இரண்டாம் பாதியிலும் தூவியிருந்தால், இந்த 'ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்' மிக முக்கியமானதொரு படைப்பாகி இருக்கும்.