Published:Updated:

`உடன்பிறப்பே' +\- ரிப்போர்ட்: அண்ணன், தங்கை பாசப்போராட்டத்துக்குள் வாட்ஸ்அப் பார்வேர்டு நுழைந்தால்?!

சட்டப்படி வாழ நினைக்கும் கணவருக்கும், தர்மப்படி வாழ நினைக்கும் அண்ணனுக்கும் இடையே சிக்கித் தவிக்கும் பெண்ணின் பாசப்போராட்டமே 'உடன்பிறப்பே'!

வேங்கைவாசல் கிராமத்தில் என்ன பஞ்சாயத்து என்றாலும் ஆஜராகும் காவல்தெய்வம் வைரவன். இன்னொரு பக்கமோ நீதி, நேர்மை எல்லா பிரச்னைக்கும் காவல்துறை படிக்கட்டைத் தொடுபவர் வைரவனின் தங்கையான மாதங்கியின் கணவர். இரண்டு குடும்பங்களிலும் இதனால் ஏற்படும் இழப்பு, ஆறாவடுவாக தேங்கிவிட, மொத்தமாய் விலகிவிடுகிறார்கள். கடந்தகால தவறுகளுக்கு, நிகழ்காலத்தில் தீர்வுகள் கிடைக்குமா என ஏங்கித்தவிக்கும் மாதங்கிக்கு என்ன நேர்கிறது என்பதைச் சொல்கிறது அமேசான் ப்ரைமில் வெளியாகியிருக்கும் 'உடன்பிறப்பே'.

மாதங்கியாக ஜோதிகா. ஜோதிகாவுக்கு இது 50-வது படம். அதற்கான உழைப்பை நேர்த்தியாக நல்கியிருக்கிறார். ஹீரோயினிஸ முதல் காட்சியைத் தவிர பிற காட்சிகளில் அவரின் நடிப்பில் அத்தனை யதார்த்தம். அழுகையை அடக்கிக்கொண்டு உடைந்து நொறுங்கும் காட்சிகள், வயதுக்கேற்ற முதிர்ச்சியுடன் ஓடும்போது செய்யும் செய்கைகள் என அத்தனையும் அழகு. டப்பிங்கில் இன்னும் சற்று கவனம் கொடுத்திருக்கலாம் என்பதைத் தவிர குறையொன்றுமில்லை. வாழ்த்துகள் ஜோ!

உடன்பிறப்பே
உடன்பிறப்பே

மாதங்கியின் கணவராக சமுத்திரகனி. அவரின் படங்களில் வரும் அறிவுரை கதாபாத்திரத்தின் வேறு வெர்ஷன். ஆனால், அதை வேறுவிதமாய் காட்டியிருப்பது சற்று ஆறுதல். வைரவனாக சசிகுமார். அடித்துவிட்டு என்னடா பிரச்னை எனக் கேட்கும் நபர். அந்தக் கதாபாத்திரத்தை சிறப்பாகவே செய்திருக்கிறார். சூரியின் வசனங்கள் சிரிக்கவும் வைக்கின்றன.

`நடுவுல கொஞ்சம் ஆர்யாவைக் காணோம்' - `அரண்மனை 3' பிளஸ், மைனஸ் ரிப்போர்ட்!

'பாசமலர்', 'கிழக்குச் சீமையிலே' என மினிமம் கியாரன்ட்டி ஒன்லைனை கையில் எடுத்திருக்கிறார் இயக்குநர் இரா.சரவணன். ஆனால், படம் எடுக்கப்பட்ட விதமும், திரைக்கதையும், வசனமும் படத்தின் ஒன்லைனுக்கு பலம் சேர்க்கவில்லை. ஒரு படத்தில் சமூக கருத்துகள் அவசியம்தான்; சினிமா என்னும் காட்சி வடிவத்தில் வசனங்களின் பங்கு என்பது நிச்சயம் இருக்க வேண்டும். ஆனால், அதற்காக படத்தில் வரும் எல்லோரும் கருத்து குடோன்களாய் பேசிக்கொண்டேயிருப்பது அயர்ச்சியை உண்டுபண்ணுகிறது. சினிமா எனும் காட்சி ஊடகத்தில் வெறும் வசனங்களைக் கொண்டே நிரப்ப முயற்சிப்பது நியாமில்லையே 'உடன்பிறப்பே'.

உடன்பிறப்பே
உடன்பிறப்பே

ஒரு காட்சிக்கும், மறு காட்சிக்குமான இடைவெளியில் சீரியல் நெடி அதிகம். அதிலும் தீபா "தாய் மாமன்னா யாரு தெரியுமா" என கிளாஸ் எடுக்க ஆரம்பிக்கும்போது, "பேசிட்டு இருங்கக்கா, நாங்க ஒரு டீ சாப்பிட்டு வர்றோம்'' என்றே சொல்லத் தோன்றுகிறது. நகைச்சுவை கதாபாத்திரமான சூரியின் எமோஷனல் காட்சிகளிலும் ரைமிங் வசனம் எழுதி, அதையும் காமெடி ஆக்கியிருக்கிறார்கள். இன்ஜினியரிங் படிப்பைக் குறித்த நக்கல் எல்லாம் இருக்கட்டும்... கைநாட்டு, கையெழுத்து வைத்தே அடுத்தவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதெல்லாம் வாட்ஸ்அப்பில் மட்டுமே சாத்தியம். தமிழ் இயக்குநர்கள் சில காலத்துக்கு வாட்ஸ்அப்பை கொஞ்சம் அன்இன்ஸ்டால் செய்வது நல்லது!

Venom: Let There Be Carnage விமர்சனம்: அட படத்தைவிடுங்க பாஸ், அந்த எண்டு கிரெடிட்ஸ் மட்டுமில்லன்னா?!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

படத்தில் சில முற்போக்கு கருத்துகள் இருந்தாலும், படம் பேசும் பல விஷயங்கள் அபத்தமும் ஆபத்தும் நிறைந்ததாக இருக்கின்றன. 20 ஆண்டுகளுக்கு முன்பே செத்துப்போன வில்லன் செய்யும் முகம் சுளிக்கவைக்கும் தவற்றையெல்லாம் இந்தப் படத்தில் மீட்டெடுத்து கொண்டுவந்திருக்கிறார்கள். என்ன மாதிரியான கதாபாத்திர வார்ப்பு இது என்றே கேட்கத்தோன்றுகிறது. இல்லை, இன்னும் இதையெல்லாம் சகஜமாக எடுத்துக்கொள்ளும் சூழலில்தான் பார்வையாளர்கள் இருக்கிறார்கள் எனப் படைப்பாளிகள் நினைத்துக்கொள்கிறார்களா? அண்ணன், தங்கை பாசக்கதையில் வாட்ஸ்அப் ஃபார்வேர்டுகளைக்கூட பொறுத்துக்கொள்ளலாம். ஆனால், பிற்போக்குத்தனத்தை எப்படி ஏற்றுக்கொள்வது?!

உடன்பிறப்பே
உடன்பிறப்பே

'அண்ணே யாரண்ணே' பாடலில் யுகபாரதியின் வரிகள், இமானின் இசை, ஸ்ரேயா கோஷலின் குரல் என எல்லாமும் ஈர்க்கின்றன. சித் ஸ்ரீராமின் குரலில் வரும் 'ஒத்தப்பன காட்டேரி'யும் இமான் டெம்ப்ளேட் ஹிட். பின்னணி இசை பழைய டெம்ப்ளேட்டால் நிரம்பியிருக்கிறது.

காலம் மாறிவிட்டது, சூழல் மாறிவிட்டது, மக்களும் மாறிவிட்டார்கள். ஆனால், இதையெல்லாம் பின்னுக்குத்தள்ளிவிட்டு, பழைய ஃபார்முலாவில், பழங்காலத்து அபத்தங்களை அள்ளித்தெளித்திருப்பதில் நியாயமில்லையே 'உடன்பிறப்பே'!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு