Published:Updated:

பிரித்விராஜின் `குருதி': துணிந்து மதங்களை விமர்சிக்கிறதா, பயந்து அடிப்படைவாதம் பேசுகிறதா?

Kuruthi | குருதி
News
Kuruthi | குருதி

கோபமும், பழிவாங்கலும் கிளர்ந்து எழும் சூழலில் நாம் நியாயத்தின் பக்கம் நிற்கிறோமா அல்லது நமக்கு வேண்டியவர்களின் பக்கம் நிற்கிறோமா என்னும் கேள்வியை தத்துவார்த்தரீதியில் எழுப்புகிறது மலையாள சினிமாவான 'குருதி'!

ஓர் இரவு. இழப்புகளும் இறப்புகளும் நிகழ்ந்த ஒரு மலைக் கிராமத்தின் இப்ராஹிம் வீட்டுக்கு ஒரு சப் இன்ஸ்பெக்டரும் அவர் கைது செய்த கொலைக் குற்றவாளியும் அழையா விருந்தாளிகளாக அடைக்கலம் தேடி வருகிறார்கள் . இந்து மத அடிப்படைவாதியான அந்தக் குற்றவாளியை கொன்றுவிடத் துரத்துகிறது முஸ்லிம் அடிப்படைவாதியான லாய்க் என்பவனின் படை. இப்ராஹிம் என்ன முடிவெடுத்தார், 'குற்றவாளியே என்றாலும் தண்டனையை சட்டம்தான் தர வேண்டும்' என அந்த இந்து இளைஞனைக் காப்பாற்றினாரா, இல்லை தன் மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக லாய்க்கிற்கு ஆதரவாக நின்று அவனைக் கொலை செய்ய துணை போனாரா?
Kuruthi | குருதி
Kuruthi | குருதி
இப்ராஹிமும் அவரின் குடும்பமும் யார் பக்கம் நிற்கவேண்டும் எனும் கேள்வியை கதாபாத்திரங்களிடமும், பார்வையாளர்களிடமும் எழுப்புகிறது 'குருதி'. அடர்த்தியான வசனங்கள், ஸ்டேஜிங், ராவான ஆக்‌ஷன், த்ரில்லர் என எல்லாம் கலந்த 'குருதி', ஒரு படமாக, படைப்பாக எப்படி இருக்கிறது?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இப்ராஹிமாக ரோஷன் மேத்யூ. திருநாளுக்காக ஆசையாக வளர்த்த ஆட்டை பலியிடத் தயங்கும் மகளிடம் தெய்வகுற்றம் பற்றிப் பேசும் சாதாரண தந்தை. ஆனால், எல்லாம் சில நொடிகளில் மாறிவிடுகிறது.

முறிந்த கிளைகளை வைத்துக்கொண்டு நாள்களைக் கடத்த எத்தனிக்கும் கதாபாத்திரம். நெருக்கடியான சூழலில் எல்லோரும் தங்களின் தேவையின் பொருட்டு இடம் மாறி நிற்க, இறுதிவரை சத்தியத்தின் பக்கம் நிற்க முயலும் ஒரு கதாபாத்திரம். சிறப்பாக நடித்திருக்கிறார்.

ஒவ்வொரு காட்சியிலும் அட்ரீலினை ஏற்றி மிருகத்தனமாய் சண்டை போடும் லாய்க் என்னும் கதாபாத்திரத்தில் பிரித்விராஜ். படத்தின் 45-வது நிமிடத்தில் தான் எதிர்மறை நாயகனான பிரித்விராஜே கதைக்குள் நுழைகிறார். அவர் ஏன் எதிர்மறை என்பதற்கான காரணங்களும் விவரிக்கப்படுகின்றன. அதன் பிறகு படத்தைத் தாங்கிச் செல்வது பிரித்வி, பிரித்வி, பிரித்வி மட்டுமே!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஒரு மாஸ் ஹீரோவுக்கான சினிமாத்தன பில்ட் அப் சேஸ்களில், இடைவேளை வரை அழுத்தமாக நகரும் கதை, அதன்பின் அரசியல் ரீதியாக சற்றே தடம் புரள்கிறது. சூழ்நிலையால் எதிர்மறை சிந்தனைகள் உருவாவதற்கும், 'தனக்கு எதிராகத்தான் எல்லாம் நிகழ்கிறது' என்று ஆரம்பம் தொட்டு எதிர்மறை சிந்தனைகளோடே இருப்பதற்கும் வித்தியாசம் உண்டு. சூழ்நிலைக் கைதிகளுக்கும் அடிப்படைவாதிகளுக்கும் உள்ள வித்தியாசம்தான் அது!

அரச பயங்கரவாதம், மைனாரிட்டிகளின் மீது நடத்தப்படும் தாக்குதல் என்பதையெல்லாம் மீறி இங்கு நீதி பெறுவதற்கான இடம் நீதிமன்றம்தான். எச்சூழல் வந்தாலும், தன்னிலை தவறாது நிற்கும் இந்து காவல்துறை அதிகாரி வெர்சஸ் சூழ்நிலையில் சிக்கி உழலும் இஸ்லாமிய இப்ராஹிம் கதாபாத்திரங்களே இப்படம் இரு பக்க தர்க்கங்களையும் சரியாக முன்வைக்கவில்லை என்பதைச் சொல்கிறது.

Kuruthi | குருதி
Kuruthi | குருதி

திரைப்படத்தின் ஆன்மாவாக, எந்தச் சூழலிலும் மாறா நிலையுடனும் இருக்கும் மூஸாவாக மம்முகோயா. இந்தப் படத்தின் குழப்பங்களைக் கடந்து படத்தில் ஒன்ற வைப்பது அவரின் அசத்தலான நடிப்புதான். தத்துவார்த்த சொல்லாடல் ஆகட்டும், பழைய புராணங்களில் மார்தட்டிக்கொள்ள எதுவுமில்லை எனச் சொல்லவதாகட்டும், நிகழ்காலத்தின் நம்மால் சில விஷயங்களை சகித்துக்கொள்ள முடியாதாயினும், வேறுவழியின்றி அதை ஏற்றுக்கொள்வோம் இல்லையா?! அப்படியான வசனங்களை அதன் போக்கில் பேசிச் செல்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எஸ்.ஐ சத்யனாக சில காட்சிகளே வந்தாலும் முரளி கோபியின் அந்த அடாவடி உடல்மொழி அசத்தல்! இந்து அடிப்படைவாதியான சிறுவன், அவரை மதம் எனும் போர்வையில் குழப்ப நினைக்கையில், "உன் ஃபார்வேர்ட் மெசேஜ்லாம் வாட்ஸ்அப் குரூப்போட வெச்சுக்கோ!" என அவர் சொல்லும் இடம் நச்!

கரீம் எனும் கம்முவாக வரும் ஷைன் டாம் சாக்கோ அமைதியாக பேசியே அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறார். ஆனால், 'கூட்டம் சேர்த்து சுற்றும் சிறுபான்மையினர் தாக்குவதற்கான வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்' என்ற கருத்தை அந்தப் பாத்திரம் மூலம் முன்வைக்கிறது படம்.

Kuruthi | குருதி
Kuruthi | குருதி

சுமா எனும் சுமதி பாத்திரத்தில் ஸ்ரீந்தா சரியாகப் பொருந்தியிருக்கிறார். இயல்பான நடுக்கம், குழப்பம் என்று இருந்தபோதும், பல இடங்களில் அவர் எடுக்கும் துணிச்சலான முடிவுகள்தான் பரபரப்பான கதையின் போக்குக்கு உதவியிருக்கின்றன. இருந்தபோதும் இயல்பான பக்கத்துவீட்டுப் பெண்ணாக வரும் அவரையும் கடைசியில் இந்து மத அடிப்படைவாதியாக சித்திரித்திருப்பது, மத அரசியல் பேச வைத்திருப்பது நெருடல். அதற்கான வலுவான காரணங்களும் முன்வைக்கப்படவில்லை.

சரியாகத் திட்டமிடப்படும் எல்லா விஷயங்களும் ஏதோவொரு இடத்தில் சரியும். 'குருதி' படத்தின் நோக்கம் பற்றியும் இப்படி நாம் ஐயம் கொள்ளலாம். அதற்கான சாத்தியங்களை படமே எழுப்பிவிடுகிறது. குற்றம் சாட்டப்படும் இந்துச் சிறுவனின் குற்றங்கள் வெறுமனே வார்த்தைகள் மூலம் பார்வையாளனுக்குக் கடத்தப்படுகிறது. அதே சமயம், லாய்க் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரித்விராஜின் கதாபாத்திர வார்ப்பு ஒரு பழிவாங்குதல் என்பதைக் கடந்து எழுதப்பட்டிருக்கிறது.

பாரிஸில் நடந்த சம்பவங்களை அவரே, பார்வையாளனுக்கு சொல்லும்படி வைத்து அந்தக் கதாபாத்திரத்தை ஒரு முன் தீர்மானத்துடன் அடிப்படைவாதியாக அணுக வைக்கிறது. அந்தச் சிறுவன் சொல்லும், செய்யும் எல்லா விஷமங்களைக் கடந்தும் அவன் தப்பிக்க வேண்டும் என்கிற எண்ணத்தை இப்படம் நமக்கு உருவாக்கிவிடுகிறது. அங்கேதான் படத்தின் நடுநிலை என்ற பிம்பமும் உடைகிறதோ என்ற கேள்வி எழுகிறது. சமூகத்தில் இருக்கும் இரு குழுக்களின் மனநிலை என்பதைக் கடந்து அதீத வன்முறை கொண்ட ஒரு குழு Vs சூழ்நிலையால் உந்தப்பட்டு தவறு செய்யும் ஒரு குழு என்கிற நிலையில் கதை தொக்கி நிற்கிறது.

Kuruthi | குருதி
Kuruthi | குருதி

படத்தின் பெரும்பலம் அதன் திரைக்கதை. தொடக்கத்தில் வழக்கமான த்ரில்லர் மலையாள சினிமாவாக கதாபாத்திரங்களின் வாழ்க்கைமுறை, பின்கதைகள், வீட்டிலிருக்கும் குளவிக்கூடு என்பதுவரை நெடிய டீடெய்லிங் செய்திருக்கிறார்கள். நாம் எதிர்பார்த்ததுபோலவே அந்த ஒவ்வொரு சின்னச் சின்ன விஷயமும் பிற்பாதியில் பெரும்பங்கு வகிக்கின்றன. ஆனால், சுவாரஸ்யமான வேகமான திரைக்கதை என்பதற்கு உழைத்துவிட்டு, சித்தாந்த ரீதியாக படம் எப்படிப் புரிந்துகொள்ளப்படும் என்பதை யோசிக்காமல் விட்டிருக்கிறார்கள். ஒரு பக்கம் அதிக கணத்தை வைத்துவிட்டு, இரண்டும் சமம் என்பதற்காக தராசு முள்ளை அழுந்தப்பிடித்திருக்கிறார் கதாசிரியர். படத்தின் பலவீனம் அதுவே!

அபிநந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவு இரவு நேர த்ரில்லருக்கான செட்டப்பை கச்சிதமாகச் செய்திருக்கிறது. ஜீப் சேஸிங்கிற்கும், பவர்கட்டான வீட்டில் மம்முகோயாவின் மாஸான சீனுக்கும் சிரத்தையுடன் உழைத்திருக்கிறது. படத்தின் ஹீரோ ரோஷன் மேத்யூவா, பிரித்விராஜா, மம்முகோயாவா என்ற சந்தேகம் வேண்டுமானால் தோன்றலாம். ஆனால் நிச்சயம் அதன் இரண்டாவது ஹீரோ எவ்வித போட்டியுமின்றி இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய்தான். திரைக்கதை சோடை போகும் இடத்திலும் நம் நரம்புகளை அதிரச் செய்து டெம்போவை கூட்டியிருக்கிறார்.

Kuruthi | குருதி
Kuruthi | குருதி

அறிமுக இயக்குநர் மனு வாரியர், அனிஷ் பல்யாலின் கதை, திரைக்கதை, வசனத்துக்கு நியாயம் சேர்த்தாலும், இருவரின் உழைப்பும் அறம் என்ற பக்கம் நிற்கவில்லையோ?!

நடுநிலைவாதியாக ஒரு படம் கொடுக்கவேண்டும் என்ற பிரயத்தனம் அவர்களிடம் இருந்திருந்தாலும், படம் அதிலிருந்து விலகி ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டுமே அதிக முறை குற்றவாளிக்கூண்டில் ஏற்றியதாக மாறியிருக்கிறது.

குறிப்பாக பிரித்விராஜ் போன்ற அசத்தலான பர்ஃபாமர் நியாயம் என்ற பூச்சுடன் அடிப்படைவாதம் பேசியிருப்பது பார்வையாளர்களுக்கு நிச்சயம் குழப்பத்தை வரவழைக்கும். இதைக் கொஞ்சம் கவனித்திருக்கலாமே பிரித்வி?!