Published:Updated:

எம்.ஜி.ஆரின் அறிவுரை... விஜயகாந்த்தின் கோபம்! - நடிகை அம்பிகா ஷேரிங்ஸ்

ambika
ambika

ஒரே நாள்ல நாலு கால்ஷீட்ல நடிப்பேன். ரெண்டு நிமிஷத்துக்குள் அவசரமா சாப்பிட்டுட்டு ஷூட்டிங்குக்கு ஓடுவேன்.

தமிழ், மலையாளம் மற்றும் கன்னட சினிமாக்களில் 80-களில் கனவுக்கன்னியாக வலம்வந்தவர், அம்பிகா. அப்போதைய சூப்பர் ஸ்டார்கள் பலரும் இவரின் கால்ஷீட்டுக்குக் காத்திருந்தனர். பலதரப்பட்ட வேடங்களில் நடித்துப் புகழ்பெற்றார். இப்போதுவரை சினிமா பயணத்தைத் தொடரும் அம்பிகா, தன் வெற்றிப் பயணம் குறித்து அவள் விகடன் இதழின் 80'ஸ் எவர்கிரீன் நாயகிகள் https://www.vikatan.com/collection/1980s-evergreen-heroines தொடருக்காக விரிவாகப் பேசியிருக்கிறார். அதில் இருந்து...

"வீட்டில் மூத்த பெண்ணான எனக்கு, ரெண்டு தங்கை மற்றும் ரெண்டு தம்பி. கேரளாவில் எங்க கல்லற கிராமத்துல விவசாயம் செய்தோம். நாத்து நடுறது முதல் தென்னைமரம் ஏறி தேங்காய் பறிப்பது வரை எல்லா விவசாய வேலைகளையும் செய்வேன். அரசுப் பள்ளியில் படிச்சேன். படிப்பில் நாட்டமில்லாத எனக்கு, டான்ஸ் மற்றும் நடிப்பில்தான் அதிக ஆர்வம். ஸ்கூல் 'கட்'டடிச்சுட்டு, அடிக்கடி சினிமாவுக்குப் போவேன். https://bit.ly/2ZeK93p

ambika
ambika

திருவனந்தபுரத்துல 'சோட்டானிக்கர அம்மா' பட ஷூட்டிங் நடந்தது. அப்போ காய்ச்சல்ல கிடந்த நான், எங்கம்மாகிட்ட அடம்பிடிச்சு, என்னை அந்த ஷூட்டிங்கை வேடிக்கை பார்க்க கூட்டிட்டுப் போகச் சொன்னேன். அழுது அடம்பிடிச்சு, அந்தப் படத்துல ஒரு சின்ன சீன்ல நடிச்சேன். படத்தின் ஒளிப்பதிவாளர் தாரா சார், 'வைராக்கியமா நடிச்சுட்ட. நல்ல முக அம்சம் உனக்கு. எதிர்காலத்துல பெரிய ஹீரோயினா கலக்குவே'ன்னு பாராட்டினார். அவர் சொன்னதுபோலவே நடந்துச்சு.

எம்.ஜி.ஆரின் பெரிய ரசிகையான நான், ஒருமுறை விமானப் பயணத்துல, பாதுகாவலர்களின் கெடுபிடிகளையும் மீறி அவர் பக்கத்துல போனேன். 'சினிமாவுல இருந்து எதுக்கு சார் விலகினீங்க? உங்ககூட நடிக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன்'னு சொன்னேன். சிரிச்சவர், 'சரியான நேரத்துக்கு ஷூட்டிங் போயிடணும். பெரிய நடிகையா வரணும்'னு வாழ்த்தினார். அவர்கூட நடிக்காவிட்டாலும், அவர் குடும்பத்துடன் எனக்கு நல்ல நட்பு இருந்துச்சு. எம்.ஜி.ஆர் சார் சொன்னதுபோல சரியான நேரத்துக்கு ஷூட்டிங் போயிடுவேன். பொறுப்பான நடிகைனு பெயர் வாங்கினேன். அந்த நம்பிக்கையில்தான், 'விக்ரம்' படத்துல வேறு ஒரு நடிகைக்குப் பதிலா என்னை நடிக்க வெச்சார் கமல் சார். அதேபோலத்தான், 'ஸ்ரீராகவேந்திரர்' படத்துல 'ஆடல் கலையே' பாடலிலும் என்னை நடிக்க வெச்சார் ரஜினி சார்.

ambika
ambika

'எங்கேயோ கேட்ட குரல்', 'காக்கிசட்டை', 'நான் சிகப்பு மனிதன்', 'படிக்காதவன்', 'மனக்கணக்கு', 'மிஸ்டர் பாரத்', 'காதல் பரிசு'ன்னு எக்கச்சக்க ஹிட் படங்கள்ல நடிச்சேன். அப்போ, ஒரே நாள்ல நாலு கால்ஷீட்ல நடிப்பேன். ரெண்டு நிமிஷத்துக்குள் அவசரமா சாப்பிட்டுட்டு ஷூட்டிங்குக்கு ஓடுவேன். 'சகோதரி, பாடல் ஷூட்டிங் இருக்கு'ன்னு இராம.நாராயணன் சார் கேட்க, 'நேரமே இல்லை சார்'னு சொல்வேன். அதனால, இரவு 9 மணிக்கு மேல ஷூட்டிங் நடக்கும். என் மேல் கடுப்பில் உட்கார்ந்திருக்கும் விஜயகாந்த் சார், 'நேரமில்லைன்னு உறுதியா சொல்லவேண்டியதுதானே? உன் தூக்கத்தையும் கெடுத்து, என் தூக்கத்தையும் கெடுக்கறியே'ன்னு செல்லமா கோபப்படுவார்.

இரண்டாவது இன்னிங்ஸ்... என் பர்சனல் வாழ்க்கை!

இரண்டாவது இன்னிங்ஸ்ல அதிக வாய்ப்புகள் வரலை. ஆனாலும், எனக்குப் பிடிச்ச சினிமா, சின்னத்திரை ரோல்களில் தொடர்ந்து நடிக்கிறேன். 'அவன் இவன்' படத்துல நடிச்ச மாதிரி வித்தியாசமான ரோல்களில் நடிக்க ஆசைப்படுறேன். சினிமாதான் என் உயிர். எழுந்து நடக்கிற அளவுக்கு என் உடலில் பலம் இருக்கிறவரை நடிப்பேன். எல்லோரையும்போல உண்மையான அன்புடன்தான் என் திருமண வாழ்க்கையைத் தொடங்கினேன். ஆனா, அந்த எதிர்பார்ப்பு பொய்த்துப்போச்சு. விவாகரத்து பெற்றேன். அதனால எனக்கு வருத்தமில்லைன்னு சொல்றது பொய். அந்த வருத்தம் எனக்குள் இருந்தாலும், என் பிள்ளைகளை நல்லபடியா வளர்த்து ஆளாக்கினேன். துணிச்சலுடன் பிரச்னைகளை எதிர்த்துப் போராடி வெற்றி பெறணும். அந்தக் குணம்தான் என்னை இயக்கிட்டிருக்கு."

எம்.ஜி.ஆரின் அறிவுரை... விஜயகாந்த்தின் கோபம்! - நடிகை அம்பிகா ஷேரிங்ஸ்

> ஹீரோயின் என்ட்ரி... கனவு நாயகனுடன் ஜோடி, ரஜினி, கமலின் ஹிட் நாயகி... சிவாஜியுடன் நடிக்க பயம், சூப்பர் ஸ்டார்களின் நாயகி... அமிதாப்பின் அழைப்பு, பாரதிராஜா மீதான கோபம் என அம்பிகா நிறைய நிறைய பகிர்ந்திருக்கிறார். அதை முழுமையாக அவள் விகடன் இதழில் வாசிக்க > 80'ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 16: துணிச்சல்தான் என்னை இயக்குது! - நடிகை அம்பிகா https://cinema.vikatan.com/tamil-cinema/1980s-evergreen-heroins-actress-ambika

> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/

அடுத்த கட்டுரைக்கு