Published:Updated:

வாடிவாசல்: கையெழுத்தானது பதிப்பாளர் - இயக்குநர் ஒப்பந்தம்! தமிழ்த் திரையுலகில் முதல் முறை?!

‘வாடிவாசல்’ திரைப்படம்
News
‘வாடிவாசல்’ திரைப்படம்

காலச்சுவடு பதிப்பகம், இயக்குநர் வெற்றிமாறன், சி.சு.செல்லப்பாவின் மகன் சுப்ரமணியன் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டிருக்கின்றனர்.

நவீனத் தமிழிலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரான சி.சு.செல்லப்பா, ஜல்லிக்கட்டை அடிப்படையாக் கொண்டு எழுதிய ‘வாடிவாசல்’ நாவல், தமிழிலக்கியத்தின் சாதனைகளில் ஒன்று. நாவல், குறுநாவல், சிறுகதை எனப் பலவடிவங்களாகச் சுட்டப்படும் இந்தப் படைப்பு முதன்முதலில் 1959-ல் வெளியானது.

செல்லப்பா நடத்திய தமிழின் முன்னோடிச் சிற்றிதழான ‘எழுத்து’-வின் பதிப்பு முகமான எழுத்து பிரசுரத்தின் மூலம் முதல் பதிப்பு வெளியாகியிருந்த நிலையில், தொடர்ந்து 40 ஆண்டுகள், தனி புத்தகமாக அல்லாமல் வெவ்வேறு தொகுப்புகளில் ‘வாடிவாசல்’ இடம்பெற்றுவந்தது.

சி.சு.செல்லப்பா
சி.சு.செல்லப்பா

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்தப் பின்னணியில், இந்த நாவலின் பதிப்புரிமையைப் பெற்ற காலச்சுவடு பதிப்பகம், தனி புத்தகமாக ‘வாடிவாசல்’ நாவலின் இரண்டாம் பதிப்பை 2001-ல் வெளியிட்டது. நாவல் மிகப் பரவலான வரவேற்பைப் பெற்ற நிலையில், 2013-ல் என். கல்யாண்ராமன் மொழிபெயர்ப்பில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் பிரஸ் வெளியீடாக ஆங்கிலத்தில் வெளியானது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

நாவல்களை அடிப்படையாகக் கொண்டு திரைப்படங்கள் தமிழில் பரவலாக வெளிவரத் தொடங்கியிருக்கும் காலகட்டம் இது. இம்முயற்சியில் அதிகம் ஈடுபடும் இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன், நடிகர் சூர்யாவைப் பிரதான பாத்திரமாகக் கொண்டு ‘வாடிவாசல்’ நாவலைத் திரைப்படமாக எடுக்கவிருப்பதாக அறிவித்திருந்தார். இதன் அடுத்த கட்டமாக, நாவல் திரைப்படமாவதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது. நாவலைப் பதிப்பித்திருக்கும் காலச்சுவடு பதிப்பகம், இயக்குநர் வெற்றிமாறன், சி.சு.செல்லப்பாவின் மகன் சுப்ரமணியன் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டிருக்கின்றனர்.

‘வாடிவாசல்’ திரைப்படம்
‘வாடிவாசல்’ திரைப்படம்

“‘வாடிவாசல்’ வெளியானப்போ எனக்கு ரெண்டு வயசு... ஆனாலும் நினைவு தெரிஞ்ச காலம் தொட்டு இதைப் பத்தி அப்பாவும், அப்பா நண்பர்களும் சொல்லக் கேட்டிருக்கேன். அப்பா தன்னோட சிறுவயசுல வத்தலக்குண்டுவில் இருந்தப்போ, மிராசுதாரரான அவரோட மாமாவோட தான் எப்பவும் இருந்திருக்கார். மாமாவுக்கு ஜல்லிக்கட்டு மேல பெரிய ஈடுபாடு இருந்திருக்கு. மாமாவோட மாட்டுவண்டியில் அப்பா நிறைய சுத்தியிருக்கார். ஜல்லிக்கட்டுக்குப் போய் மேல நின்னு நிறைய புகைப்படங்கள் எடுத்திருக்கார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாடு அணையிறவங்களோட நிறைய பயணம் பண்ணிருக்கார். அவங்க ஊர்களுக்குப் போய், அவங்களோடே தங்கி நிறைய தகவல்களைச் சேகரிச்சு ‘வாடிவாச’லை அப்பா எழுதியிருக்கார். அவரேதான் இதை பதிப்பிச்சார்... ஒரு ரூபா விலை வச்சார். ‘எழுத்து’ சந்தாதாரர்களுக்கு இலவசமாக பிரதிகள் அனுப்பி வச்சார். ஆனா, அதன் பிறகு அவரோட பல படைப்புகளையும், மற்ற படைப்புகளையும் அவர் பதிப்பிச்சிருந்தாலும் ஏனோ வாடிவாசலை அவர் மீண்டும் போடவே இல்ல!” என்கிறார் சி.சு. செல்லப்பாவின் மகன் சுப்ரமணியன்.

சி.சு. செல்லப்பாவின் மகன் சுப்ரமணியன்
சி.சு. செல்லப்பாவின் மகன் சுப்ரமணியன்

செல்லப்பா எடுத்த புகைப்படங்களைப் பற்றி மேலும் பேசிய சுப்ரமணியன், “ஜல்லிக்கட்டு மேல அப்பாவுக்கு இருந்த ஈடுபாட்ட ‘வாடிவாசல்’ போலவே, ஜல்லிக்கட்ட அவர் எடுத்த புகைப்படங்களும் சாட்சி. அப்பயே அது ரொம்பப் பழைய கேமராவா இருந்திருக்கு... அத வச்சு ஏகப்பட்ட படங்கள் எடுத்திருக்கார். இதுல இன்னும் ஆச்சர்யம், எடுத்த படங்களை ஸ்டுடியோவுக்குப் போகாம, சொல்யூஷன் எல்லாம் வாங்கி, வீட்டிலேயே டார்க் ரூம் ரெடி பண்ணி அவரே எக்ஸ்போஸ் பண்ணிருக்கார். அவரோட இந்த முயற்சில நிறைய நெகடிவ் அழிஞ்சுப் போச்சு. ஆனாலும் இப்ப இருக்க படங்களப் பாக்கும்போது ரொமப் பிரமிப்பா இருக்கு” என்கிறார் பெருமை பொங்க!

காலச்சுவடு பதிப்பகத்தின் பதிப்பாளர் கண்ணன் இதுகுறித்துப் பேசும்போதும், “1959-ல் வெளியான ‘வாடிவாசல்’ நாவல் முதல் பதிப்பின் விலை ஒரு ரூபாய். ‘எழுத்து’ சிறுபத்திரிகையின் சந்தாதாரர்களுக்கு செல்லப்பா அவர்கள் இந்தப் பதிப்பை அன்பளிப்பாக அனுப்பி வைத்திருக்கிறார். அதன் பிறகு இந்நாவல் தனி நூலாகப் பிரசுரமாகவே இல்லை. அவரும் பதிப்பிக்கவில்லை; வேறு யாரும் முன்னெடுக்கவில்லை. தொண்ணூறுகளின் பிற்பகுதில் செல்லப்பாவின் சிறுகதைகளின் தொகுப்பு ஓன்று வெளியாகி அவற்றில் பெரும்பாலான புத்தகங்கள் நூலகங்களுக்கு விநியோகக்கப்பட்டன. அதில் ஒரு கதையாக இடம்பெற்றது ‘வாடிவாசல்’. பிறகு டி ஐ அரவிந்தன் முயற்சியில் வாஸந்தி ஆசிரியராக இருந்த காலத்தில் ‘இந்தியா டுடே’வின் இலக்கிய மலரில் அதை எடிட் செய்து, ஆதிமூலம் ஓவியங்களோடு பிரசுரித்தார்கள்.

‘வாடிவாசல்’
‘வாடிவாசல்’
’எழுத்து’ சிறுபத்திரிகையில் ‘வாடிவாசல்' விளம்பரம்
’எழுத்து’ சிறுபத்திரிகையில் ‘வாடிவாசல்' விளம்பரம்

1959-க்குப் பிறகு தனி புத்தகமாக, 2001-ல் இரண்டாம் பதிப்பைக் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டது. காலச்சுவடு தனி புத்தகமாக இதை வெளியிட்ட காலத்திலிருந்து மிக நல்ல வரவேற்பு தொடர்ந்து இருந்துகொண்டிருக்கிறது. இப்போது 26-வது பதிப்பில் இருக்கும் ‘வாடிவாசல்’ ஆரம்பத்தில் ஒரு பதிப்பில் 1,200 பிரதிகளே அச்சிடப்பட்டது; ஜல்லிக்கட்டுப் போராட்டங்களுக்குப் பிறகு ஒரு பதிப்பில் 2,000 பிரதிகள் அச்சிடப்படுகின்றன. இது தவிர, பள்ளி, கல்லூரி பாடத்திட்டத்துக்கும் ‘வாடிவாசல்’ நாவலைக் கொண்டுசென்றிருக்கிறோம். காலச்சுவடு பதிப்பகத்தின் முன்னெடுப்பில், மொழிபெயர்ப்பாளர் என். கல்யாண்ராமனும் நானும் சேர்ந்து பணியாற்றியதன் பயனாக ‘வாடிவாசல்’ நாவல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பிரஸ் மூலம் ஆங்கிலத்தில் வெளியானது.

காலச்சுவடு கண்ணன்
காலச்சுவடு கண்ணன்

இப்படித் தொடர்ந்து நாவலைப் பிரபலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்ததால், செல்லப்பா அவர்களின் மகன் சுப்ரமணியன், நாவலின் திரைப்பட உரிமையையும் காலச்சுவடு பதிப்பகத்துக்கே வழங்கியிருந்தார். எங்கள் புத்தகங்களை அமெரிக்காவில் பிரசுரிக்க வகை செய்யும் இலக்கிய முகவர் ப்ரியா துரைசாமியின் சட்ட ஆலோசனையுடனும் அரவிந்தனின் ஆதரவுடனும் தற்போது நாவல் திரைப்படமாவதற்கான ஒப்பந்தத்தில் செல்லப்பாவின் மகன் சுப்ரமணியன், பதிப்பாளர், இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோருடன் கையொப்பம் இட்டிருக்கிறோம். இதற்கு முன்பே எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை திரைப்படமாக்குவதற்கான ஒப்பந்தங்களில் கையொப்பம் இட்டிருந்தாலும், ஒரு பதிப்பகத்துடன் முறையாக ஒப்பந்தம் ஏற்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்பதால் தமிழ் பதிப்பு, திரை உலகில் இதை முக்கிய முன்னெடுப்பாகப் பார்க்கிறேன்” என்றார்.