Published:Updated:

வினோத், கதிர், கார்த்திக்... செல்வாவின் நாயகனாக வாழ்வது சாபத்திலும் சாபம்! #HBDSelvaraghavan

வினோத், கதிர், கார்த்திக்... ஆகியோருடன் இக்கட்டுரையில் பயணிப்போம்... செல்வராகவன் பிறந்தநாள் பகிர்வு!

கலைத்துவத்தோடு படத்தை இயக்குபவர்களுக்குப் பெயர் இயக்குநரென்றால், கவித்துவமாய்ப் படத்தைப் படைப்பவனுக்குப் பெயர் செல்வராகவன். அந்த வகையில் தன்னுடைய படங்களில் இடம்பெறும் ஒவ்வொரு காட்சியையும் கவிதையெனப் புனையும் கவிஞனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைச் சொல்லிக்கொண்டு... அவரது படங்களில் வெளிக்கொணரும் காதலும் உணர்வுகளும் எப்படியிருக்கும் என்பதை இக்கட்டுரையில் பார்க்கலாம்.

வினோத், கதிர், கார்த்திக்... ஆகியோருடன் இக்கட்டுரையில் பயணிப்போம்...

செல்வராகவன்
செல்வராகவன்

பேரன்பின் ஆதியூற்றே, காதெலுனும் வெள்ளத்தில் நீந்திச் செல்லும் காதலன், எதுவும் கடந்து போகும்... போன்ற பிம்பங்களெல்லாம் செல்வராகவனின் படங்களில் இருப்பதேயில்லை. நியாயத்தை நிலைநாட்டும் நாயகனெனும் பிம்பமும் செல்வாவின் நாயகர்களுக்கு இருக்காது. அபத்தமான காதல் கதையின் அத்தியாயமாகத்தான் செல்வாவின் பாத்திரங்கள் விரிவுபெறுகின்றன.

முதலில் வினோத். வினோத்தின் உச்சபட்ச ஆசையென்ன? யாரும் அறிந்திராத உலகில் திவ்யாவுடனான ஓர் அழகிய வாழ்க்கை. இளைப்பாற தலையைக் கோதிவிடும், தனிமையைப் பொய்யாக்கும் ஓர் சாதரணக் காதல் வாழ்க்கை. அன்றாடமற்ற, பிரக்ஞையற்ற வாழ்க்கை.

இதுவரை உலகையே கண்டிறாத வினோத்துக்கு எல்லாமுமாய் இருக்கிறாள் திவ்யா. கைகோத்து கடைசிவரை அவள் வரவேண்டுமென்பதுதான் வினோத்தின் அதிகபட்ச ஆசை. அந்த ஆசைக்கூட்டுக்குள் அழையா விருந்தாளியின் வருகையால் மூர்க்கமாகும் வினோத், பிரிவைத் துளியளவும் ஏற்றுக்கொள்ள முடியாமல் தனக்குச் சொந்தமான உலகிற்குத் திவ்யாவை அழைத்துச் செல்கிறான்.

பூட்டிவைத்திருக்கும் அத்தனை உணர்வுகளுக்கும் சிறகு முளைத்ததைப்போல் `சட்சட்'டென அடித்துப் பறக்கிறான் வினோத். மோகத்தின்போது ஏற்படும் வெம்மைக்குக் காதலென்ற ஒற்றைப் பெயர்தான் உள்ளது. ஆடையை மீறித் தெரியும் வெண்ணிறப் பிளவினைக் கண்டதும் வினோத்தின் மனம் வெதும்பித் தவிக்கிறது. `நான் திவ்யாவை லவ் பண்ண ஆரம்பிச்சேன்' எனச் சொல்லி கொட்டும் மழையில் வெறியாட்டம் ஆடுகிறான். உடலின் மூலை முடுக்குகளெங்கும் திவ்யாவின் ஸ்பரிசத்தை உணர்கிறான். அவளது உணர்வுகள் இன்னொருவனுக்குச் சொந்தமானாலும்கூட வினோத் அதைப் பொருட்படுத்தவில்லை.

ஒருகட்டத்தில் திவ்யா தனக்கில்லையெனத் தெரிந்தபின் சுக்குநுறாய் உடைகிறான். உடைந்த கண்ணாடித் துகள்களின் ஒட்டுமொத்த பிம்பமுமாய் திவ்யா மட்டுமே தெரிகிறாள். தனக்கான இடம் திவ்யாவிடம் இல்லையென்பது புரிந்தபின் பற்றிக்கொண்டிருக்கும் கரங்களை திவ்யாவிடமிருந்து நழுவச் செய்து நிரந்தரமாகத் துயில்கொள்ள விளைகிறான் வினோத். அதன் பின் கதிராய் `7-ஜி ரெயின்போ காலனி'யில் விழித்தெழுகிறான். இம்முறை திவ்யாவுக்குப் பதில் அனிதா.

செல்வராகவன்
செல்வராகவன்

காதலிக்கும் பெண்ணைக் கவித்துவமாய்க் காதலித்த காதல்காரர்களை மட்டும்தான் அதுவரை நாம் பார்த்திருப்போம். `7-ஜி ரெயின்போ காலனி'யில் பேட்மின்டன் மைதானத்தில் குதித்து விளையாடும் கதாநாயகியையோ, மோகத்தின் தளிர் நிலையில் அந்தரங்கத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கும் கதாநாயகனயோ தமிழ் சினிமா அதிகம் பார்த்ததில்லை. இவ்விரண்டையும் ஒளிவுமறைவின்றிச் சாதாரணமாகக் காட்சிப்படுத்தியவர் செல்வராகவன். கேட்பதற்கோ பார்ப்பதற்கோ வக்கிரமாக இருந்தாலும் கதிரின் மனதுக்குள் ஏற்படும் அந்தக் கிளர்ச்சியை அப்பட்டமாய்ப் படமாக்கியவர் இவர். இண்டு இடுக்குகளை மோந்து தவிக்கவிடும் இந்த உணர்வுகளை அனுபவிக்காதவனே இல்லையெனலாம். `உதவாக்கரை' என்ற பட்டத்தைச் சூட்டி, கதிரின் அப்பா அவனைப் புறக்கணித்தாலும், அனிதா கதிரை விடுவதாயில்லை.

கரம்பிடித்துக் கதிருக்குள் இருக்கும் இன்னொருவனை அவனுக்கே அடையாளம் காட்டுகிறாள் அனிதா. ஒரு ஆண் உச்சபட்சமாய் வேறு எந்தத் தண்டனையையும் அனுபவித்துவிட வேண்டாம். ஒரு முறையேனும் பெண்மையை அவனுக்குள் உணர்ந்துவிட்டால் போதும். அந்த உணர்வானது வலியாக ஊடுருவி அவனை முழுவதுமாக ஆக்கிரமித்துவிடும். அப்படியான ஒருவன்தான் கதிரும். திவ்யாவின் மீது காதல் கொண்ட வினோத், ஒரு முறைகூட அவளுடன் போகத்தைக்கொள்ளவில்லை. ஆனால், `ஜனவரி மாதம்' பாடலில் `காமமில்லா காதல் அது காதல் இல்லை' எனச் சொல்லும் அனிதா, கதிரை வேறு உலகிற்கு அழைத்துச் செல்கிறாள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இறுதியில் அனிதா இவ்வுலகிலே இல்லையென்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் கதிர், அவனுக்கென ஓர் உலகத்தை அமைத்துக்கொண்டு அனிதாவை அங்கு உயிர்த்தெழச் செய்கிறான். யாருடைய தொந்தரவுமின்றித் தன்னந்தனியாய் அனிதாவுடன் பேசித்திரிகிறான். அந்த நினைவில் தேங்கி வாழ்வதுதான் கதிரின் விருப்பம்.

செல்வராகவனின் பட நாயகனாக வாழ்வது சாபத்திலும் சாபம். வலியை விதைத்துவிட்டுச் சென்ற காதலியின் நினைவுகளைத் தாங்கிக்கொண்டு பயணிக்கும் கதிரும் தன்னையே அழித்துக்கொள்ளும் வினோத்தும்தான் செல்வாவின் முதல் இரண்டு பட கதாநாயகர்கள்.

கடைசியாக ஜீனியஸ் கார்த்திக். `மயக்கம் என்ன'வில் கார்த்திக் அனுபவித்த வலியை, ஒரு முறையாவது நாமும் நம் வாழ்வில் அனுபவித்திருப்போம். தன்னுடைய திறமை திருடப்பட்டு, அதற்கு வேறொருவருக்கு அங்கீகாரமும் கிடைக்கும் உணர்வை அனுபவித்தால் மட்டுமே புரியும். ஆனால், எந்தச் சூழலிலும் கார்த்திக், தான் ஆசைப்பட்ட வாழ்க்கையை விட்டுக்கொடுப்பதாயில்லை. வலியின் விளிம்பில் நிற்கும் கார்த்திக்கிற்குத் தெருமுனையில் பூ விற்கும் பாட்டியைப் புகைப்படம் எடுப்பதுதான் பிடித்திருக்கிறது. அதுதான் அவனுடைய இளைப்பாறல். திருடப்பட்ட அவன் புகைப்படத்துக்குக் கிடைத்த முதல் மரியாதை `ஆய்'யென்ற பாராட்டுச் சொற்கள். அந்த `ஆய்' புகைப்படம்தான் கடைசியில் விருது வரை போகும்.

மயக்கம் என்ன
மயக்கம் என்ன
சிரிச்சு விழுந்த செல்வா, ரவிகிருஷ்ணாவுக்கு அட்வைஸ்! கதிர் - அனிதா மீட்டிங் #15YearsOf7GRainbowColony

ஊர் முழுக்கப் பல கார்த்திக்கள் இருந்தாலும் யாமினியைப் போல் ஒவ்வொருவருக்கும் அவள் மட்டும்தான் இருக்க முடியும். திவ்யாவும் அனிதாவும் சேர்ந்தவள்தான் யாமினி. எப்பேற்பட்ட சூழலிலும் கார்த்திக்கின் கரங்களை யாமினி விடவேயில்லை. கார்த்திக், ஒரு கையைத் தட்டிவிட்டாலும் இன்னொரு கையை இறுகப்பற்றிக்கொண்டாள் யாமினி.

`கார்த்திக் ஜாக்கிரதை' அந்நியர்களுக்கு மட்டும்தான் யாமினிக்குக் கிடையாது. கண், காது, மூக்கு போன்ற உடம்பின் உறுப்பு போலத்தான் யாமினி கார்த்திக்கிற்கும், கார்த்திக் யாமினிக்கும். `காதல் கொண்டேன்' வினோத்துக்கும், `7-ஜி ரெயின்போ காலனி' கதிருக்கும் காதலும், வாழ்க்கையும் கைகூடாமல் போயிருக்கலாம். ஆனால், `மயக்கம் என்ன' கார்த்திக்கிற்கு அது கைகூடுயிருந்தது.

`ஏற்கெனவே இரு படங்களிலும் பார்வையாளர்களை பேயடி அடித்துவிட்டோம். பாவம் இந்தப் படத்திலாவது இளைப்பாற்றுவோம்' என்று நினைத்தாரோ என்னவோ, `மயக்கம் என்ன' படத்தின் இறுதியில் ஒருவித மென்மையான வருடலை உணர முடிந்தது. வெற்றி மேடையில் நின்றுகொண்டிருக்கும்போது, பர்ஸில் இருக்கும் தன் பொண்டாட்டியின் புகைப்படத்தை நினைவுகூரத்தான் ஒவ்வொரு ஆணும் விரும்புவான். அதைத்தான் கார்த்திக்கும் செய்தான்.

நாம் பார்க்கும் ஒவ்வொரு பாடல் காட்சிகளிலும் காதல் பாடல்களிலும் நாயகனும் நாயகியும் காதல்கொள்வதைக் கொண்டாட மாட்டோம். தன்னையும், தன்னுடைய காதலியையுமே புகுத்திப் பார்த்து இன்பம் காணுவோம். அப்படித்தான் `காதல் கொண்டேன்', `7 ஜி ரெயின்போ காலனி', `மயக்கம் என்ன' ஆகிய மூன்று படங்களும் அமைந்தன. ஆனால், அதன் உணர்வுகள் வெவ்வேறாக இருந்தது.

வினோத்தாக யாரும் சாக வேண்டாம். கதிராக யாரும் சிக்கிக்கொண்டு வாழ வேண்டாம். ஒவ்வொரு கார்த்திக்கிற்கும் ஏற்கெனவே பிறந்திருக்கும் யாமினி கட்டாயம் வருவாள். கரம்பிடிப்பால், கட்டியணைப்பால். பிறை தேடும் இரவிலே எதைத் தேடி அலைந்துகொண்டிருந்தாலும், கதை சொல்ல கட்டாயம் அவள் அழைப்பாள்.

மயக்கம் என்ன
மயக்கம் என்ன
தனுஷ்

நினைவலைகளில் நீந்திச் செல்ல உதவும் ஊடகமாகப் பல்வேறு படங்களை இயக்க மீண்டும் இவர் வர வேண்டும். அதற்கு முன், பிறந்தநாள் வாழ்த்துகள் செல்வா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு