Published:Updated:

ராமன், ராவணன், பரதன், பல்லி... அனைத்தும் சாகேத் ராம்தான்! - #20YearsOfHeyram

ஹே ராம்
ஹே ராம்

இங்கு குறிப்பிடப்படும் பல விஷயங்களை நீங்கள் ஏற்கெனவே அறிந்திருக்கலாம். சில விஷயங்களை மறந்திருக்கலாம். இருக்கட்டுமே, இன்னொருமுறை பேசி கொண்டாடுவோம். ஒரு கலைஞனுக்கு இதைவிட வேறென்ன கைம்மாறு செய்துவிட முடியும்!

சினிமா எனும் கூட்டுக்கலையின் ஒவ்வோர் அங்கமும் அதன் உச்சத்தைத் தொட்ட பெரும் படைப்பு. தமிழ் சினிமாவின் பெருமைமிகு படைப்பு. 60 ஆண்டுகளுக்கு முன், தமிழ்த் திரையுலகில் தன் பாதம் பதித்து, பின் தனக்கென தனி பாதை அமைத்து, பழைய பாதைகளில் வழிப்போக்கனாக, புதிய பாதைகளில் வழிகாட்டியாக, கலையும் கலை சார்ந்த பகுதியின் கலங்கரை விளக்கமாக இன்று விளக்கொளி வீசி வரவேற்றுக்கொண்டிருக்கும் கமல்ஹாசன் எனும் தசாவதானி, சதாவதானியாக விஸ்வரூபம் எடுத்த பிரமாண்ட படைப்பு, `ஹே ராம்'.

சாகேத் ராம்
சாகேத் ராம்

`ஹே ராம்' வெளியாகி இன்றோடு இரு தசாப்தம் ஆகின்றன. ஆகினும் அரசியல்நுட்பத்திலும் கலைநுட்பத்திலும் சமகாலத்துக்குப் பொருந்திப்போவதிலும் எதிர்காலத்துக்கும் பொருந்திப்போகும் என்பதில்தான் என்றென்றைக்குமான படைப்பாக பிரமிக்க வைக்கிறது. அதைக் கொண்டாட அதனுள் ஆயிரம் விஷயங்கள் உள்ள நிலையில், அந்த ஆயிரம் விஷயங்களையும் ஆயிரமாயிரம் முறை கொண்டாடலாம் எனும் முறையில் எழுதப்படுகிறது இந்த ஆய்வுக்கட்டுரை. இங்கு குறிப்பிடப்படும் பல விஷயங்களை நீங்கள் ஏற்கெனவே அறிந்திருக்கலாம். சில விஷயங்களை மறந்திருக்கலாம். இருக்கட்டுமே, இன்னொருமுறை பேசிக்கொண்டாடுவோம். ஒரு கலைஞனுக்கு இதைவிட வேறென்ன கைம்மாறு செய்துவிட முடியும்! அதன் திரைக்கதை, திரைமொழி மற்றும் இன்னபிற சுவாரஸ்யமான அம்சங்களை அலசத் தொடங்குவோம்.

`ஹே ராம்' படத்தில் ராமாயணத்தின் சில கூறுகள் பாத்திர வடிவமைப்பிலும் திரைக்கதையிலும் எடுத்துக் கையாளப்பட்டிருக்கின்றன. கமலின் பெயர் சாகேத் ராம். சாகேத் என்பது அயோத்தியைக் குறிக்கிறது. சாகேத் ராமின் இரண்டாவது மனைவியின் பெயர் மைதிலி. அது ராமனின் மனைவியான சீதையைக் குறிப்பிடும் பெயர். `பஞ்சதந்திரம்' படத்திலும் ராம் - மைதிலி என்பதுதான் நாயகன் - நாயகியின் பெயர். ஆனால், அதைவிட இக்கதையில் இப்பெயர்கள் குறிப்பிடும் செய்தி பெரியது. கதையின் போக்கில், ராமனான சாகேத் ராம் கண்களுக்கு, ராவணனாகத் தெரிகிறார் காந்தி. ஒருகட்டத்தில், அதே காந்தி அதே ராமின் கண்களுக்கு ராமனாகத் தெரிகிறார். அப்போது, சாகேத் ராம் யாராக மாறுகிறார்?

ராமாயணத்தின் கூறுகள்
ராமாயணத்தின் கூறுகள்

சாகேத் ராம், பரதனாக மாறுகிறார். பரதன், வால்மீகியின் ராமாயணத்தில் ராமனின் தம்பியாக வரும் பாத்திரம். ராமர், சீதை மற்றும் லட்சுமணன் 14 ஆண்டுகள் வனவாசம் புரிந்தபோது, அயோத்தியின் வெளிப்புறத்தில் நந்திகிராமம் எனுமிடத்தில் ராமனின் பாதுகைகளை வழிப்பட்டு, துறவிக் கோலத்தில் கோசலை நாட்டை ஆண்டவன் பரதன். நாது`ராம்' கோட்சேவால், காந்தி சுட்டுவீழ்த்தப்பட்ட பின்பு அவர் பாதுகைகளை, அவர்பால் கொண்ட அளவுகடந்த அன்பின் காரணமாக எடுத்துவருவார் சாகேத் ராம். அதேபோல், தனக்கு தமிழில் தெரிந்த வார்த்தைகள் என ``நேத்திக்கு வாங்கோ" என சாகேத்திடம் சொல்லிக்காட்டுவார் காந்தி. ``அது நேத்தி இல்லை, நாளை" எனத் திருத்தமும் சொல்வார்கள். அதைத் திருத்தினோம் என்றால், ``நாளை வாங்கோ" என்றாகும். கம்பனின் ராமாயணத்தில் `இன்று போய் நாளை வா' என்பது மிகவும் புகழ்பெற்ற சொற்றொடர். போரில் நிராயுதபாணியாய் நின்ற ராவணனைக் கண்டு ராமன் உதிர்த்த சொல். காந்தியின் கள்ளங்கபடமற்ற மனதின் முன் நிராயுதபாணியாக நிற்கிறார் சாகேத் என்பதை இங்கே உணர்த்துகிறார்கள். கூடவே, பாத்திர வடிவமைப்பில் பரதனாக மாறும் சாகேத் ராம், அதற்கு முன்னர் அவரே ராவணனாகவும் மாறுகிறார் என்றாகிறது.

ராமனை ராவணனிடம் அழைத்துச் செல்லும் அனுமனாக ஶ்ரீராம் அப்யன்கர் கதாபாத்திரம். மருத்துவமனைக் கட்டிலில் படுத்துக்கிடக்கும் அப்யன்கரின் மார்பின் மீது வைத்து அட்டைப்பெட்டி பிரிக்கப்படும் காட்சி இன்னும் அதைத் தெளிவுபடுத்துகிறது. அனுமன் தன் நெஞ்சைப் பிளந்து ராமனைக் காட்டும் காட்சியை ஒத்திருக்கிறது அது. இப்படிப் படம் முழுக்க ராமாயணத்தின் கூறுகள் இருந்தாலும், படமானது ராமரை வைத்து மத அரசியல் செய்யும் குழுவுக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே இருக்கிறது.

சாகேத், அபர்னா மற்றும் பியானோ
சாகேத், அபர்னா மற்றும் பியானோ

அபர்னா மற்றும் சாகேத்தின் காதல் குறியீடாக, பியானோ. அதில் இருவரும் இணைந்து மீட்டுகிற இசை. பிறகு, அபர்னா பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொலை செய்யப்படும்போது, அதே பியானோவில் கட்டிவைக்கப்படும் சாகேத். அப்போது வதிபலகையில் தலை பதிந்து அபஸ்வரமாக ஒலிக்கும் இசை. எல்லா அசம்பாவிதங்களும் அரங்கேறி வாழ்க்கையே நொறுங்கிப்போன பின், வீட்டைக் காலி செய்கையில் மாடியிலிருந்து விழுந்து நொறுங்கும் அதே பியானோ. கடைசியில், மைதிலி உடனான கூடலுக்குப் பிறகு, முன்பு தானும் அபர்னாவும் இசைத்த இசையின் தன் பகுதியை மட்டும் தனிமையில் இசைக்கும் சாகேத் எனப் பியானோவைக் கொண்டு சாகேத்-அபர்னாவின் முழுக்காதலையும் சொல்லியிருப்பார் இயக்குநர் கமல்.

முதலில் பிரம்மச்சர்யம், பிறகு சொற்பமான நாள்களே இல்லறம், அதன்பின் வனாப்ரஸ்தம் அடுத்து சந்நியாசம் என வர்ணாசிரமத்தின்படி வாழ்க்கையின் நான்கு நிலைகளையும் தொட்ட பாத்திரமாக வடிவமைக்கபட்டிருக்கும் சாகேத் கதாபாத்திரம். அபர்னா அணிவித்துவிட்ட அந்த மெட்டியைக் காணும்போதெல்லாம், மனைவியைக் காக்கமுடியாமல்போன கையாளாகத்தனம் அவர் மனதை ரணமாக்கும். மைதிலியுடன் திருமணம் முடிந்த அன்றிரவு, அக்கொடூர நினைவுகள் இன்னும் கடந்து உலுக்கியெடுக்கும். தன் கண் முன்னால் ரத்தவெள்ளத்தில் மாண்டுபோன மனைவியும் தன் கையில் கரைபடிந்திருக்கும் ரத்தங்களின் சொந்தக்காரர்களும் சாகேத்தின் முன் தோன்றுவார்கள். ரத்த வெள்ளத்தின் நடுவில் ஒரு பல்லி, அதிலிருந்து வெளியேற இயலாமல் தத்தளித்துக்கொண்டிருக்கும் உருவமும் தோன்றும். அந்தப் பல்லிதான் சாகேத் ராம்!

யானைகள்
யானைகள்

மனைவியின் மரணத்துக்கு பழிவாங்க துப்பாக்கியோடு கிளம்பும் சாகேத்தின் தோட்டாக்கள், சில அப்பாவிகளையும் பழிவாங்கிவிடும். அப்படி மூர்க்கத்தனம் மூளையை மழுங்கடிக்கச் செய்து, கட்டுப்படுத்த முடியாமல் போனதைப் பாகன் இல்லாத ஒரு யானையைக் காட்டி குறியீடாக விளக்கியிருப்பார் கமல். அடுத்த சில காட்சிகளில், அது அத்தனையும் உதறித்தள்ளிவிட்டு தமிழகம் திரும்புகையில், அதே யானையே தன் அங்குசத்தைப் பிடித்துக்கொண்டு போவதுபோல் காட்டியிருப்பார். கல்கத்தாவில் நிகழும் அந்தக்காட்சியின் பின்னணியில், `பதம் கொண்டு நடத்தும் வாழ்க்கை மாவுத்தன் அவனும் இன்றி' எனும் ஆண்டாள் பாசுரம் ஒலிக்கத் தொடங்க, கட் செய்யப்பட்டு, காட்சி தமிழகத்துக்கு மாறும். இங்கு யானை ஒன்று, சங்கிலியால் கட்டப்பட்டிருப்பதைக் குறியீடாகக் காட்டியிருப்பார்கள். அதாவது, சாகேத் ராம் மீண்டும் திருமண பந்தத்துக்குள் நுழையவிருப்பது அல்லது வட இந்தியாவுக்கும் தென்னிந்தியாவுக்கும் இடையேயான சூழ்நிலையைக் காட்சிப்படுத்துவது போன்ற நோக்கத்துக்கானதாக அது விளக்கப்படுகிறது.

வட இந்தியா, தென் இந்தியாவில் இருந்த வேறுபட்ட சூழ்நிலைகளை வேறு சிலவற்றின் மூலமாகவும் உணர்த்தியிருப்பார்கள். அது கலர் டோனிலிருந்தே தொடங்குகிறது. கல்கத்தாவில் அபர்னா வரைந்த காளி படமும் தமிழகத்தில் மைதிலி செய்த கிருஷ்ணர் எம்பிராய்டரியும் ஒரு குறியீடு. பாகிஸ்தானிலிருந்து விரட்டியடிக்கபட்டு, குடும்பத்தை இழந்து, ரயில்வே கேட்டில் அப்பளம் விற்றுக்கொண்டிருக்கும் லால்வானி, தன் கதையை சாகேத்திடம் சொல்லிவிட்டு, `உனக்கு புரியுதா ராம்' எனக் கேட்குமிடம் மிக நுட்பமாக அதை உணர்த்துகிறது. தமிழர்களுக்கு காந்தியின் மீதான பார்வை, அவரை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் செயல் என நிறைய வித்தியாசங்கள். தலையணையில் `ஸ்வீட் ட்ரீம்ஸ்' என எம்பிராய்டரி செய்திருப்பார் மைதிலி. ஆனால், இன்னொரு பக்கம் தூக்கமே வராமல் தவித்துக்கொண்டிருப்பார் சாகேத்.

அபர்னாவும் மைதிலியும்
அபர்னாவும் மைதிலியும்

``காந்தி தூங்கும்போதுகூட வெளிச்சத்தில்தான் தூங்குவார். தாத்தாவுக்கோ இருட்டில் இருக்கத்தான் பிடிக்கும்" எனப் படத்தின் தொடக்கத்திலேயே காந்திக்கும் - சாகேத் ராமுக்கும் இடையிலுள்ள முரணிலிருந்துதான் தொடங்கும். ஆனால், அதே ஃப்ரேமில் சாகேத்தின் கட்டிலுக்கு அருகிலுள்ள மேசையில், காந்தியின் மூன்று குரங்கு பொம்மைகளும் இருக்கும். சாகேத், பின்னாளில் காந்தியவாதியாக மாறினார் என்பதை அங்கேயே குறியீடாகச் சொல்லியிருப்பார்கள். சரி, திரைக்கதையின் வடிவத்தை மிகச்சுருக்கமாகப் பார்ப்போம். சாகேத்தின் வாழ்க்கையில் நடந்த துன்பங்களுக்கு ஒரே காரணம், காந்தி மட்டுமே என அப்யன்கர் மூளைச்சலவை செய்வார். அவர்கள் இருவருக்கும் இடையேயான உரையாடல்கள் அனைத்தும், அப்யன்கர் அறிவுரை சொல்லும் தொனியிலேயே இருக்கும்.

``உனக்கும் எனக்கும்தான் ஞாபகம் இங்கே வியாதி'', ``இந்த ஆட்டுமந்தை, ஆட்டுபால் குடிக்குற தாத்தா பின்னாடி போயிட்டு இருக்கு. தாத்தா பக்ரீத் கொண்டாடப் போயிட்டு இருக்கார்னு தெரியாம!", ``நாடகம் பார்க்க, விமர்சகர்களுக்கு அனுமதி கிடையாது", ``ஓநாயா இருந்துப் பார்த்தால்தான் அது நியாயம் புரியும்" போன்ற வசனங்கள் அனைத்தும் அத்தனை கூர்மையானவை. ஆனால், இது அத்தனைக்குமான எதிர்வாதத்தையும் படத்தில் தெள்ளத்தெளிவாகப் பேசியிருப்பார் கமல். ``நாடகம் பார்க்க, விமர்சகர்களுக்கு அனுமதி கிடையாது" என்பதற்கு முந்தைய உரையாடலில், அப்யன்கர் இருக்கும் ஃப்ரேமில், நாடகங்களுக்கான விக் மற்றும் மேக்-அப் கம்பெனியின் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருக்கும். அதாவது, அப்யன்கரே நாடகம்தான் போடுகிறான் என்பதைச் சொல்கிறது அது.

அப்யன்கர்
அப்யன்கர்

``காந்தி, நச்சுச் செடிக்குத் தண்ணி ஊத்தி வளர்த்துட்டார்" எனும் வசனம், போதையின் உச்சநிலையில் காட்சிப்படிமங்களாக, சைக்டெலிக் விஷுவல்களாக சாகேத்துக்குத் தெரியும். அப்போது அந்த அறையில் மாட்டப்பட்டிருக்கும் ஹிட்லர் மட்டும் சாவர்க்கர் படங்களும் ஸ்வஸ்திகா, நாஜி ஸ்வஸ்திகாவாக மாறி பின்னர் தாமரையாக மாறும் விஷுவல் எல்லாம் மாஸ்டர் பீஸ்! அப்யன்கரின் தொடர் மூளைச்சலவையால், தன்னையே இழந்திருப்பான் சாகேத். தான் முன்பு குடியிருந்த குடியிருப்புக்கு மீண்டும் செல்கையில், அங்கு புதிதாகக் குடிவந்தவரிடம் இப்படி ஓர் உரையாடல் நடக்கும்.

``பேர் என்ன சொன்னது?"

``சாகேத் ராம்..."

``கடைசியா எப்போ பார்த்தது?"

``யாரை?"

``சாகேத் ராமை?"

(நீண்ட மௌனத்துக்குப் பிறகு ) ``ஒரு வருஷம் இருக்கும்..."

அம்ஜத் மற்றும் சாகேத்
அம்ஜத் மற்றும் சாகேத்
Vikatan

இதன் எதிர்வடிவமாக, தொலைந்துபோன தன்னை சாகேத் மீண்டும் கண்டுவிட்டதாக ப்ரீ-க்ளைமாக்ஸில் ஒரு வசனம். மரண தருவாயிலுள்ள ஷாரூக் கான், காவலர்களின் விசாரணையில் இப்படிச் சொல்வார், ``அந்த மிருகத்தை இதுக்கு முன்னாடி நான் பார்த்ததே இல்லை. எனக்கு என் சகோதரன் ராமை மட்டும்தான் தெரியும்." இறுதிக்காட்சியில் நிகழும் சம்பவங்களைக் கண்ட பிறகுதான், சாகேத்தின் மனம் நீண்டநாளுக்குப் பிறகு விழித்துக்கொள்ளும். மதத்தின் பெயரால் மனிதர்கள் நிகழ்த்தும் வெறியாட்டத்தில் தன் அன்புக்குரியவர்களை பலிகொடுத்துவிட்டதை, தானும் இத்தனை நாள்கள் மிருகமாகத் திரிந்ததை எண்ணி வருத்தம் கொள்ளும். இவை எல்லாவற்றிற்குமான ஒரே தீர்வான `ஒற்றுமை'யை போதிக்கும் காந்தியை அப்போதுதான் புரிந்துகொள்ளும்.

சாகேத்
சாகேத்

மைதிலி, தனக்காக பாடிய `வைஸ்னவ ஜனதோ' பாடல் காந்தி இறந்தபோது மீண்டும் பின்னணியில் ஒலிக்கும். அப்பாடல் பாடப்பெறுவதற்கான தகுதி, மகாத்மாவுக்கே உள்ளதெனும் அர்த்தமது. `ரகுபதி ராகவ ராஜராம்...' எனும் வரிகள், ஏன் படத்தில் இஸ்லாமிய பிரார்த்தனையின் வடிவத்தையொட்டி பாடப்பெற்றது? இப்போது புரிகிறதல்லவா. உடனே, `ஹே ராம்' படத்தில் டைட்டில் கார்டைப் பாருங்கள். டைட்டில் லோகோவில் ராமனின் அடையாளமான வில்லும் அம்பும் இருக்கும். அதன் பின்னால், இரண்டு வில்கள் ஒன்றன் மேல் ஒன்று பொருத்தப்பட்டு மூக்குக்கண்ணாடிபோல இருக்கும். ஆம், காந்தியின் அதே வட்டக்கண்ணாடி!

அடுத்த கட்டுரைக்கு