Published:Updated:

தேவர்மகன் முதல் விஸ்வரூபம் வரை... கமலின் அரசியலும் அதன் மீதான விமர்சனங்களும்!

கமல்ஹாசன்
Listicle
கமல்ஹாசன்

`தேவர் மகன்' முதல் `விஸ்வரூபம்' வரை, கமல்ஹாசனின் திரைப்படங்களில் அவர் பேசிய அரசியல் பற்றியும், அதன் மீது எப்படியான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன என்பது பற்றியுமான தொகுப்பு இது.


இந்தப் பிறந்தநாளுக்கு ஒரு ஸ்பெஷாலிட்டி உண்டு. ஆம். நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்த அரசியல்வாதியாகப் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் கமல்ஹாசன். கடந்த ஆண்டு, `மக்கள் நீதி மய்யம்' என்ற கட்சியைத் தொடங்கி, தேர்தல் அரசியலில் நுழைந்த கமல்ஹாசன், அரசியலுக்குப் புதியவர் அல்ல. ஏறத்தாழ 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து, அரசியல் பேசி வருகின்றன கமல்ஹாசனின் திரைப்படங்கள். வெளிவந்த காலம் முதல் தற்போது வரை, வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்றுவரும் கமல்ஹாசனின் திரைப்படங்கள், அவரின் மீதான அரசியல் மதிப்பீடுகளுக்கு ஆதாரமாக அமைகின்றன.

தேவர்மகன் முதல் விஸ்வரூபம் வரை, கமல்ஹாசனின் திரைப்படங்களில் அவர் பேசிய அரசியல் பற்றியும், அதன்மீது எப்படியான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன என்பதைப் பற்றியுமான தொகுப்பு இது.


1
தேவர் மகன்

தேவர் மகன் (1992)

1992-ம் ஆண்டில் வெளிவந்தது `தேவர் மகன்'. தலைப்பே கதையைச் சொல்லிவிடும். நிலவுடைமையாளரின் மகன், அவரது மறைவுக்குப் பின் தனது பொறுப்பை ஏற்று கிராமத்தைப் பாதுகாப்பதுதான் படத்தின் ஒன்லைன். இந்தக் கதைக்குள், சாதி, வன்முறை, ஒரே சாதிக்குள் நிலவும் வர்க்க முரண்பாடு, கல்வி எனப் பலவற்றையும் பேசியிருந்தது `தேவர் மகன்'. வாழ்ந்துகெட்ட நிலவுடைமையாளராக சிவாஜி கணேசன், அவரது பரம்பரை விரோதியாக நாசர், சிவாஜி கணேசனின் மகனாக நகரத்தில் இருந்து கிராமத்திற்குத் திரும்பிய இளைஞன் கமல்ஹாசன், கிராமத்துப் பெண்ணாக ரேவதி, கமல்ஹாசனின் காதலியாக கௌதமி முதலானோர் நடித்திருந்தனர்.

இறுதிக்காட்சியில் நாசரைக் கொன்றுவிட்டு, `புள்ளகுட்டிங்கள படிக்க வைங்கடா!' என்று கூறியபடியே, சிறைக்குச் செல்வார் கமல்ஹாசன். சமீபத்தில் வெளியான `பிகில்' படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில், வில்லன் டேனியலின் மகன் புத்தகத்தோடு நிற்கும் காட்சியை இங்கே நினைவு கூரலாம். அதை 27 வருடம் முன்பு சொன்னவர் கமல். `தேவர்மகன்' படம் முழுவதும் 'போற்றிப் பாடடி பெண்ணே!' என சாதியையொட்டிய நிலவுடைமையைப் பெருமைப்படுத்திவிட்டு, இறுதி வசனம் ஒன்றில் கல்வியே ஆயுதம் எனக் கூறியதாக விமர்சனங்கள் எழுந்தன. இதன் பின்னணியில், தென் மாவட்டங்களில் சாதிய மோதல்களும், வன்முறைகளும் நிகழ்ந்தன. சமீபத்தில் விகடன் நடத்திய பிரஸ் மீட்டில்,`தேவர் மகன்' படத்தின் பாடலுக்காக பகிரங்கமாக மன்னிப்புக் கோரினார் கமல்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

2
குருதிப்புனல்

குருதிப்புனல் (1995)

கமல்ஹாசன், அர்ஜுன், நாசர், கௌதமி முதலானோர் நடிப்பில், பி.சி.ஸ்ரீராம் இயக்கத்தில், 1995-ம் ஆண்டு வெளிவந்தது `குருதிப்புனல்'. தீவிரவாதத் தாக்குதல்களை முறியடிக்கப் போராடும் உளவுத்துறை அதிகாரிகள் இருவரையும், அவர்களது குடும்பத்தையும் பற்றிய கதை. இந்திய தேசியம் குறித்த `ரோஜா', `உயிரே' முதலான திரைப்படங்கள் வெளியாகிக்கொண்டிருந்த 90-களில், `குருதிப்புனல்' வெளியானது. 1991-ம் ஆண்டு நடந்த பொருளாதாரச் சீர்திருத்தத்திற்குப் பிறகு, இந்தியா என்கிற ஒரே நாடு, சந்தை வணிகத்திற்கான தேவை என்ற அளவில், அந்தக் காலகட்டத் திரைப்படங்கள் இந்திய தேசிய அரசியலையும் தேசப்பற்றையும் முன்வைத்து வெளிவந்தன.

`குருதிப்புனல்' மிகச்சிறந்த ஆக்‌ஷன் திரைப்படமாக இன்றுவரை கருதப்பட்டுவருகிறது. எனினும், நக்சலைட்டுகளைப் பாலியல் வன்கொடுமையாளர்களாகச் சித்தரித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.


3
இந்தியன்

இந்தியன் (1996)

ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் அப்பா - மகன் என இரட்டை வேடத்தில், சுஜாதா வசனத்தில் வெளியானது `இந்தியன்'. இதுவும் இந்திய தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி வெளியான படம் என்ற போதிலும், சங்கர் பாணியில் கமர்ஷியல் திரைப்படமாக வெளிவந்திருந்தது. தேச விடுதலைக்காகப் போராடும் இளைஞன், வயோதிகத்தின்போது தவறை சுட்டிக்காட்டும் முதியவர், ஆர்.டி.ஓ அலுவலகத்தில் புரோக்கராகப் பணியாற்றும் மகன் என 3 கெட்டப், இரண்டு வேடங்கள் என்று மிரட்டியிருந்தார் கமல்ஹாசன்.

சுஜாதா எழுத்தில், ஊழலுக்கு எதிராக கமல்ஹாசன் பேசும் வசனங்கள் அனைத்தும் இன்றுவரை பேசப்படுகின்றன. இறுதிக் காட்சியில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ரெஃபரன்ஸ் வைத்து, சேனாபதி உயிரோடு இருப்பதாக முடியும் `இந்தியன்'. மீண்டும் `சேனாபதி' வந்துகொண்டிருக்கிறார். `இந்தியன் 2' தற்போது உருவாகிக்கொண்டிருக்கிறது.


4
ஹே ராம்

ஹே ராம் (2000)

கமல்ஹாசன் இயக்கத்தில் வெளியான படங்களில் மிகவும் பாராட்டப்பட்டதும், அதிகம் புரிந்துகொள்ளப்படாததுமான திரைப்படம், `ஹே ராம்'. இந்தியப் பிரிவினையின் பின்னணியில் சாகேத் ராம் என்ற தனிமனிதன் வாழ்வில் நிகழும் நிகழ்வுகளும், காந்தி படுகொலையும் `ஹே ராம்' படத்தில் கமல் பேசியவை. காந்தி மீது வெறுப்பு கொண்டிருக்கும் இளைஞன், தனது இறுதிக் காலத்தை காந்தியின் மீது பற்றுக் கொண்டதாகக் காட்டும் `ஹே ராம்', காந்தி படுகொலைக்குப் பிறகும் மதவாத மோதல்கள் இந்தியாவில் நீடிப்பதைப் பேசியது.

எனினும், காந்தியைக் கொன்ற கோட்சேவின் தரப்பு நியாயமாகவே `ஹே ராம்' கருதப்பட்டது. மேலும், பிரிவினையின் போதான மோதல்களில், இந்து - முஸ்லிம் என இரு தரப்புகளுமே பாதிக்கப்பட்டபோது, ஒரு தரப்பின் கதையை, நியாயத்தை மட்டுமே இந்தப் படம் பேசியதாக விமர்சனங்கள் எழுந்தன. பாபர் மசூதி இடிப்பு பற்றி, இந்தியா முழுவதும் கலவரங்கள் நிகழ்ந்த போது, தமிழகம் அமைதியாகவே இருந்தது. `ஹே ராம்' தமிழகத்தையும் மத அடிப்படையிலான கலவரங்கள் நிகழும் மாநிலங்களுள் ஒன்றாகக் காட்டியது விமர்சிக்கப்பட்டது.


5
அன்பே சிவம்

அன்பே சிவம் (2003)

`கம்யூனிஸ்ட்' கட்சி ஊழியர் நல்லசிவம் கதாபாத்திரத்தில் கமல்ஹாசனும், `கார்ப்பரேட்' தொழிலாளி அன்பரசு கதாபாத்திரத்தில் மாதவனும் நடித்த படம், `அன்பே சிவம்'. சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான `அன்பே சிவம்', இந்த 2 மனிதர்களின் ஒடிசா முதல் சென்னை வரையிலான பயணத்தையும், அதனால் இருவருக்கும் இடையிலான உறவையும் பேசியது. இன்றும் கொண்டாடப்படும் இந்தத் திரைப்படத்தில், கமல்ஹாசனின் நடிப்பு காலம் கடந்து போற்றப்படுகிறது.

`ஏழைகளைப் பாருங்கள்; அவர்களின் வாழ்க்கையில் நிகழும் கொடுமைகளுக்கு அன்போடு கண்ணீர் சிந்துங்கள்' என நவநாகரிக இளைஞன் மாதவனுக்கு கமல் எடுத்த வகுப்புகள், கம்யூனிசமே இல்லை என்று விமர்சனங்கள் எழுந்தன. `தனி மனிதனின் மனம் மாறினால் போதும்; உலகம் முழுவதும் அன்பு ஆறாகப் பெருக்கெடுத்து ஓடும்' என்ற ரீதியில் `அரசியல்' பேசிய `அன்பே சிவம்', கமல்ஹாசனின் கலைப்படைப்புகளுள் முக்கியமானது.


6
விருமாண்டி

விருமாண்டி (2004)

கமல் இந்தப் படத்திற்கு, `சண்டியர்' எனத் தலைப்பு வைத்தவுடனே சர்ச்சை தொடங்கியது. புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி `சண்டியர்' என்ற தலைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தார். மீண்டும் ஒரு `தேவர்மகன்' உருவாகி, சாதிய மோதல்களுக்குக் கொம்புசீவி விடுமோ எனத் தென் மாவட்டங்களில் அச்சம் பரவியது. மதுரையில் படப்பிடிப்புகளுக்குத் தடை விதிக்கப்பட, சென்னையில் மதுரை செட் போட்டு, `விருமாண்டி'யை உருவாக்கினார் கமல்.

கிருஷ்ணசாமி பயந்ததுபோல சில காட்சிகள் இருந்தபோதிலும், `விருமாண்டி' படத்தின் மையக்கரு, மரண தண்டனைக்கு எதிராக இருந்தது வரவேற்கப்பட்டது. ஒரே சாதியைச் சேர்ந்த இருவேறு மனிதர்களின் பகையை முன்வைத்து, மரண தண்டனை மீதான விமர்சனத்தைப் பதிவுசெய்தது `விருமாண்டி'. நடிப்பு, இயக்கம், திரைக்கதை, படத்தொகுப்பு என முழுக்க முழுக்க கமல்ஹாசனின் `ஒன் மேன் ஷோ'வாக இருந்த `விருமாண்டி' மதுரை குறித்த திரைப்படங்களில் `க்ளாசிக்' அந்தஸ்து பெற்றது.


7
தசாவதாரம்

தசாவதாரம் (2008)

பத்து வேடங்கள் தரித்து, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் `தசாவதாரம்' பூண்டார் கமல்ஹாசன். சிதம்பரத்தில் வாழும் கிருஷ்ணவேணி பாட்டி முதல் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் வரை, கதையின் வலைப்பின்னலுக்கு ஏற்றபடி 10 கதாபாத்திரங்களோடு, `கேயாஸ் தியரி' அடிப்படையில் வெளியானது `தசாவதாரம்'. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த சைவ - வைணவ மோதல்களையும் `தசாவதாரம்' பேசியது. அதுவே சர்ச்சையும் ஆனது.

சைவ - வைணவப் பிரிவுகள் மோதுவதுபோல் சித்திரிக்கப்பட்டதாலும், கடவுள் சிலையைக் கடலில் வீசுவது போல் காட்டியதாலும் இந்து அமைப்புகள் நீதிமன்றத்தை அணுகின. எனினும் அந்த வழக்கில், படத்திற்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம். தலித் வேடமிட்ட கமல்ஹாசனை ஏன் கறுப்பாக, விகாரமாகக் காட்ட வேண்டும், `கடவுள்' குறித்த கமல்ஹாசனின் `இல்லைனு சொல்லல, இருந்தா நல்லாருக்கும்’ வசனம், ஜார்ஜ் புஷ்ஷுக்கு அளிக்கப்பட்ட பில்டப் ஏன்? போன்ற விவாதங்கள் படம் வெளியானபோதே எழுந்தன.


8
உன்னைப்போல் ஒருவன்

உன்னைப்போல் ஒருவன் (2009)

இந்தியில் நசுருதின் ஷா நடிப்பில் வெளிவந்த `எ வெட்னெஸ்டே' படம் ரீமேக் செய்யப்பட்டு, `உன்னைப்போல் ஒருவன்' உருவாக்கப்பட்டது. கமல்ஹாசன், மோகன்லால் ஆகியோர் நடித்த இந்தப் படத்தை இயக்கியவர், சக்ரி டோலட்டி. காவல்துறை உயரதிகாரி மோகன்லாலுக்கு அடையாளம் தெரியாத நபரான கமல்ஹாசனிடமிருந்து போன் வருகிறது. அதில், நகரம் முழுவதும் குண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாகவும், சிறையில் உள்ள தீவிரவாதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்படுகிறது. இறுதியில், `வழக்கு, நீதிமன்றம், விசாரணை எனத் தீவிரவாதிகளுக்கு எதையும் வழங்காமல், சுட்டுக் கொன்றுவிட வேண்டும்' என முடிந்தது, 'உன்னைப்போல் ஒருவன்'.

இந்தியா முழுவதும் பல்வேறு இஸ்லாமிய இளைஞர்கள் குண்டுவெடிப்புக் குற்றங்களிலும், தீவிரவாதிகள் எனச் சந்தேகிக்கப்பட்டதாலும் பல ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று, இறுதியில் நீதிமன்றங்களால் நிரபராதிகள் என விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தீவிரவாதி எனச் சந்தேகம் எழுந்தாலே, சுட்டுக் கொல்ல வேண்டும் என `உன்னைப் போல் ஒருவன்' பேசியது விமர்சனங்களுக்கு உள்ளானது. `காமன் மேன்' வேடத்தில் வரும் கமல்ஹாசன், இந்தியாவின் பெரும்பான்மை உழைக்கும் மக்களில் எந்த காமன் மேனைப் பிரதிபலித்தார் என்பதும் பதில் கிடைக்காத கேள்வி.


9
விஸ்வரூபம்

விஸ்வரூபம் (2013) & விஸ்வரூபம் 2 (2018)

பெரும் சர்ச்சைகளோடு வெளியானது விஸ்வரூபம் முதல் பாகம். இரண்டாம் பாகம் வெளியான சத்தமே கேட்கவில்லை. ஆப்கானிஸ்தான் - அமெரிக்கா - இந்தியா என 3 நாடுகளில் உளவாளியாக, சர்வதேச தீவிரவாதத்தை ஆன்ட்ரியா, பூஜா குமார், சேகர் கபூர் ஆகியோரோடு சேர்ந்து கமல்ஹாசன் முறியடிப்பதுதான் கதை. இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாகச் சித்திரிக்கிறது `விஸ்வரூபம்' என சர்ச்சை எழுந்தது.

இந்தியச் சூழலில், சாமான்ய முஸ்லிம்கள் தீவிரவாதிகளாகப் பார்க்கப்படும்போது, ஆப்கன் தீவிரவாதிகளைப் படமாக்குவது ஏன் எனக் கேள்வி எழுந்தது. மேலும், முஸ்லிம்களின் புனித நூலான குரான் வசனங்களின் பின்னணியில் தீவிரவாதிகள் தூக்குத்தண்டனை நிறைவேற்றுவது, தமிழ்ச் சூழலில் ஆபத்தான போக்கு என்றன இஸ்லாமிய அமைப்புகள். `தசாவதாரம்' படத்தில் ஜார்ஜ் புஷ்ஷுக்கு கமல் அளித்த ஆதரவு ஏன் என்பதற்கான விளக்கமும் இந்தப் படத்தில் தெரிந்தது. இஸ்லாமியத் தீவிரவாதம் குறித்த அமெரிக்காவின் கொள்கை விளக்கத் தீர்மானமாக முடிந்த விஸ்வரூபம் முதல் பாகம், இரண்டாம் பாகத்தில் இந்தியாவைக் காப்பாற்றுவதாகத் தொடர்ந்தது.

இடதுசாரி அரசியலையும் வலதுசாரி அரசியலையும் படங்களில் பேசிவந்த கமல், மக்கள் நீதியே முக்கியம் என்று மய்யமாக கட்சி ஆரம்பித்து, நேரடி அரசியலில் களமிறங்கிவிட்டார். மக்களின் மனம் கவர்ந்த நாயகனாக திரையை ஆண்ட கமல், மக்களுக்கான அரசியலைப் பேசி வெற்றிகரமாக வலம் வரட்டும்.

பிறந்தநாள் வாழ்த்துகள் கமல்!