Published:Updated:

`நவரசா'வில் ஒரு `ரசம்' கூடவா பெண்களுக்காக இல்லை மணிரத்னம்?

கிட்டார் கம்பி மேலே நின்று

ஒன்பது ரசங்களை விளக்கும் இந்தப் படங்கள் முழுக்க முழுக்க ஆண்கள் நிறைந்த ஆண்களுக்கான சினிமாக்களாகவே இருப்பதும் பெண்களுக்கான வெளி குறுக்கப்பட்டதாகவும் முற்றிலும் மறுக்கப்பட்டிருப்பதும் கலைக்கும் அறவுணர்வுக்கும் இழைக்கப்பட்ட அநீதி.

`நவரசா'வில் ஒரு `ரசம்' கூடவா பெண்களுக்காக இல்லை மணிரத்னம்?

ஒன்பது ரசங்களை விளக்கும் இந்தப் படங்கள் முழுக்க முழுக்க ஆண்கள் நிறைந்த ஆண்களுக்கான சினிமாக்களாகவே இருப்பதும் பெண்களுக்கான வெளி குறுக்கப்பட்டதாகவும் முற்றிலும் மறுக்கப்பட்டிருப்பதும் கலைக்கும் அறவுணர்வுக்கும் இழைக்கப்பட்ட அநீதி.

Published:Updated:
கிட்டார் கம்பி மேலே நின்று

தமிழ் சினிமா முழுவதுமாக மாறவில்லை என்றாலும் அதன் முகம் கொஞ்சம் மாறியிருக்கிறது. கதைசொல்லும் முறையிலும் உள்ளடகத்திலும் நிறைய மாற்றங்கள். க்ளைமாக்ஸில் போலீஸ் கைதுசெய்வது, மரத்தைச் சுற்றும் டூயட் காட்சிகள் போன்ற க்ளிஷேக்கள் முற்றிலுமாகவே தமிழ் சினிமாவைவிட்டு அகன்றுவிட்டன. ஹீரோ - வில்லன் என்ற இரு எல்லைகளுக்குள் சுற்றிய கதைகள் எல்லைகளைத் தாண்டி பன்முகப் பரிமாணங்களைப் பேசுகின்றன.

சமீபத்திய தமிழ் சினிமாக்களின் முக்கிய மாற்றங்கள் நேரடி அரசியல் படங்கள் மற்றும் பெண்களை மையப்படுத்தும் படங்கள். நேரடி அரசியல் சினிமாக்களும் இறுதியில் நாயக சினிமாக்களாகவே இருந்தாலும் அதில் பெண் பாத்திரங்கள் இயல்பாகவும் கண்ணியமாகவும் சித்திரிக்கப்படுகின்றனர். ஜோதிகா, நயன்தாரா, அமலாபால், ஐஸ்வர்யா ராஜேஷ், டாப்ஸி என்று ஏராளமான நடிகைகள் பெண்களை மையப்படுத்திய சினிமாக்களில் நடிக்கின்றனர். இப்படியான தனித்துவங்கள் இல்லாத சாதாரணமான சினிமாக்களில்கூட தாலி சென்டிமென்ட், `பொம்பளை பொம்பளையாத்தான் இருக்கணும்' போன்ற ஆணாதிக்க பிற்போக்கு வசனங்கள் போன்றவை கிட்டத்தட்ட ஒழிந்துவிட்டன. மாறிவரும் தமிழ் சினிமாவின் மாற்றங்களை `நவரசா' கணக்கிலெடுத்திருக்கிறதா?

ஜெயேந்திரா - மணிரத்னம்
ஜெயேந்திரா - மணிரத்னம்

தமிழ் சினிமாவின் நவீன முகமாக மணிரத்னம் கருதப்படுகிறார். கதைசொல்லலில் புதிய பாணி, அழகியல், உயர்தர தொழில்நுட்பம், நடுத்தரவர்க்க - உயர்நடுத்தரவர்க்க மதிப்பீடுகள் ஆகியவை அவர் படங்களின் தனித்துவங்களாக மதிப்பிடப்படுகின்றன. மணிரத்னத்தின் தயாரிப்பு, மணிரத்னத்தின் தாக்கமுள்ள கௌதம் மேனன் முதல் கார்த்திக் சுப்புராஜ் வரையிலான இயக்குநர்களின் இயக்கம் என `நவரசா'வுக்கு என்று மிகுந்த எதிர்பார்ப்பிருந்தது. ஆனால் `நவரசா' வெளியான பிறகு அந்தப் படங்கள் பார்வையாளர்களைப் பெருத்த ஏமாற்றத்துக்குள்ளாக்கின. எதிர்மறை விமர்சனங்களே பெரும்பாலும். இவற்றைத்தாண்டி ஒன்பது விதமான மனித உணர்வுகளைப் பிரதிபலித்த `நவரசா'வில் பெண்களுக்கான இடம் என்னவென்று பார்ப்போம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முதலில் 9 இயக்குநர்களில் ஒருவர்கூட பெண் இல்லை. மணிரத்னத்தின் உதவியாளர் சுதா கொங்கரா, ஹலிதா ஷாமிம் என்று பெண் இயக்குநர்கள் வருகை சற்றே அதிகரித்திருக்கும் காலத்திலும் `நவரசா' முற்றிலும் ஆண் இயக்குநர்களால் இயக்கப்பட்ட படங்களே.

முதல் படமான `எதிரி', மணிரத்னத்தின் கதையில் பிஜாய் நம்பியார் இயக்கிய படம். தீனா (விஜய்சேதுபதி) என்னும் இளைஞன் ஒருவரைக் (பிரகாஷ்ராஜ்) கொலைசெய்து தலைமறைவாக இருக்கிறான். அவனது மனச்சாட்சி அல்லது அறவுணர்வே கொலையுண்டவரின் உருவத்தில் வந்து ``நீ இதுவரை யாரையெல்லாம் தாக்க முடியவில்லையோ அந்தக் கோபத்தை ஒருவரிடம் காட்டிக் கொலை செய்திருக்கிறாய். அந்த உடலையும் உன்னோடு எடுத்துவந்துவிட்டாய்" என்கிறது. கொலையுண்டவரின் மனைவி சாவித்திரி (ரேவதி)யிடம் மன்னிப்பு கோர முயலும் தீனாவிடம், ``அந்தக் கொலையைத் தடுக்க முயலாததன் மூலம் எனக்கும் அந்தக் கொலையில் பங்கு இருக்கிறது. உன்னை மன்னிக்கும் தகுதி எனக்கு இல்லை" என்கிறார் சாவித்திரி.

குற்றம், கோபம், கருணை ஆகியவற்றுக்கு இடையிலான உறவு குறித்த தத்துவார்த்த உரையாடலை முன்வைக்கிறது `எதிரி'. கொலை செய்தவர் - கொலையானவர் என்கிற இரு ஆண்களுக்கு இடையிலான உறவு-முரண் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஏன் அந்தக் கொலை நிகழ்ந்தது என்பதும் விளக்கப்படுகிறது.

எதிரி
எதிரி

ஆனால் சாவித்திரி ஏன் தன் கணவனுடன் பேச மறுக்கிறார், கணவர் எந்தளவுக்கு ஆதிக்கவாதியாக இருந்தார் என்பது படத்தில் சொல்லப்படுவதில்லை. பெண் உணர்வு குறித்த அலட்சிய மனோபாவத்தின் விளைவு இது. இன்னொருபுறம் மன்னிப்பு கோருவதன் மூலம் தீனா குற்றவுணர்வில் இருந்து விடுதலையடைகிறார். ஆனால் சாவித்திரியோ குற்றவுணர்வில் இருந்து விடுபடாத சாபத்துக்கு ஆளாகிறாள். தீனா இறக்கிவைத்த தன் கணவரின் பிணத்தை, தான் சுமக்க ஆரம்பிக்கிறாள். இறுதியில் இந்தக் கதையில் சபிக்கப்பட்டவளாக இருப்பது `சாவித்திரி' என்ற பெண்தான்.

சாதியாதிக்க மனநிலை, நிறவெறி, உடல்கேலி போன்ற பிற்போக்கு எண்ணங்களின் மலக்கிடங்குதான் பிரியதர்சன் இயக்கியுள்ள `சம்மர் ஆஃப் 92' படம். பருத்த உடலும் கறுத்த நிறமும் கொண்ட ஒரு சிறுவனை வைத்து நகைச்சுவை என்றபெயரில் நடக்கும் மாபெரும் வன்முறையே இந்தப் படம். ஆண்களே பெரிதும் நிறைந்த இந்தப் படத்தில் ஒரே ஒரு முதன்மை பெண் பாத்திரம் லெட்சுமி டீச்சர் (ரம்யா நம்பீசன்). செவ்வாய்தோஷத்தினால் தடைபடும் அவரது திருமணமும் இங்கே நகைச்சுவைப் பொருளாகிவிடுவது துயரம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடவுள், விதி, கர்மா போன்றவற்றுக்கு அறிவியல் பாவனை கொடுத்து உருவாக்கப்பட்டுள்ள படம், கார்த்திக் நரேன் இயக்கியுள்ள `புராஜெக்ட் அக்னி'. விஷ்ணு, கிருஷ்ணா என்னும் இரண்டு ஆண்களின் (அர்விந்த் சுவாமி - பிரசன்னா) உரையாடலாக நீளும் படத்தில் மின்னலைப் போல் வந்துமறையும் பெண், விஷ்ணுவின் மனைவி லெட்சுமி (பூர்ணா). நனவுலகமாக இருந்தாலும் கதைப்படி அதைக் கட்டுப்படுத்தி ஆதிக்கம் செலுத்தும் கனவுலகமாக இருந்தாலும் அது ஆண்களின் உலகமே, அங்கே பெண்களின் இருப்புக்கு இடமில்லை என்கிறது `புராஜெக்ட் அக்னி'. உண்மையில் நம் ஆழ்மனம் வரை உறைந்திருக்கும் ஆணாதிக்கத்தின் வெளிப்பாடுதான் இது.

தி.ஜானகிராமனின் சிறுகதையை மையமாக வைத்து வசந்த் சாய் இயக்கியிருக்கும் படம் `பாயசம்'. இதுவும் ஓர் ஆண், தனது உறவினரான இன்னொரு ஆணிடம் கொள்ளும் பொறாமை, அசூயை ஆகியவற்றையே முழுக்கப் பேசுகிறது. மற்றபடி படத்தில் வரும் இளம்விதவை பாத்திரம் பற்றி பேச்சே இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, கதை முழுக்க ஒரு குழந்தையின் திருமணத்தைச் சுற்றிதான் நகர்கிறது. அப்பாவி பெண் குழந்தையை அலங்கரித்து ஆசைகாட்டி கல்யாணம் நடத்துகிறார்கள். இதை யாருமே குற்றவுணர்வாகக்கூட யோசிக்காமல் படம் நகர்கிறது.

பிராஜக்ட் அக்னி
பிராஜக்ட் அக்னி

அர்விந்த்சுவாமி இயக்கியிருக்கும் `ரௌத்ரம்' படத்தில் இரு பெண்கள் முதன்மைப்பாத்திரங்களாக இருந்தாலும் அவை ஆறுதல் அளிக்கக்கூடிய விதத்தில் இல்லை. தன் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக சோரம் போகும் பெண், அதனால் ஆத்திரமடையும் மகன் அதற்குக் காரணமான ஆணைக் கொலை செய்துவிடுகிறான். மகளோ மரணத்தின் விளிம்பில் இருக்கும் தன் தாயிடம் பேச மறுக்கிறாள். 40 ஆண்டுகளுக்கு முந்தைய அரதப்பழசான கதையைக் கொண்ட இந்தப் படம், பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய மனநிலையைச் சுமக்கிறது. தன் குடும்பத்துக்காகத்தான் தன் அம்மா இப்படியொரு முடிவை எடுக்க நேர்ந்தது என்பதை உணர்ந்தபோதும், ``என்னைத் தேவடியா பையன் ஆக்கிட்டான்" என்று கொலைக்குப் பிறகு அழுகிறான் மகன். அவன் கோபம் என்னவோ தான் கொலைசெய்த ஆணின்மீதுதான். ஆனால் அதை வெளிப்படுத்தும் வசைச்சொல்லோ தன் தாயாகிய பெண்ணை இழிவுபடுத்துகிறது. ஒரு பெண் சோரம் போவதன் மூலம் குடும்பத்தின் மானம் போகிறது என்று சொல்லும் ரௌத்ரம், `பெண்களின் கற்புதான் குடும்ப மானம்' என்ற நிலப்பிரபுத்துவ மதிப்பீட்டையே பேசுகிறது. மகன், மகள் இருவருமே தன் தாயின் முடிவால் வருந்தி கோபமுற்றாலும் ஆண் மட்டுமே கொலைசெய்து இழந்த மானத்தை சமன் செய்கிறான். மகளோ காவல்துறை அதிகாரியாகித் தன் கோபத்தை யார் யாரையோ அடித்து தீர்த்துக்கொள்கிறாள்.

மொத்தப்படங்களில் ஒரு பெண் பாத்திரத்துக்கான வெளி கொஞ்சம் அதிகமுள்ள ஒரே படம், ரதீந்திரன் ஆர்.பிரசாத் இயக்கியுள்ள `இன்மை'. கலைநேர்த்தியிலும் மற்ற படங்களைவிட ஓரளவுக்குத் தேறும் படமும் இதுவே. `வகீதா' என்ற இஸ்லாமியப் பெண் பாத்திரத்தை (பார்வதி திருவோத்து) மையமாகக் கொண்டே மொத்தக்கதை. ஆனால் கெடுவாய்ப்பு என்னவென்றால் முற்றிலும் எதிர்மறையான பாத்திரம். `நவரசா'வில் சித்திரிக்கப்பட்ட ஆளுமையான ஒரு பெண்பாத்திரமும் தன் வயதான கணவரைக் கொல்வதற்காகக் குட்டிச்சாத்தானை ஏவும் பாத்திரம். இத்தனைக்கும் இந்தச் சதியில் வகீதாவின் காதலன் அன்வருக்கும் (பாவெல் நவகீதன்) பங்கு இருந்தாலும் மொத்தப்பழியும் வகீதாவின் மீதே விழ, இறுதியில் கழுத்தறுபட்டுச் சாகிறாள் வகீதா. `எதிரி' சாவித்திரியைப் போல் தீமையின் கசப்பு நஞ்சை விழுங்கும் தொண்டை, வகீதா என்ற இன்னொரு பெண்ணுடையதே.

இன்மை
இன்மை

காஷ்மீர் பிரச்னை, அயோத்தி பிரச்னை, வடகிழக்கு மாநிலங்களின் பிரச்னை, ஈழப்பிரச்னை ஆகியவை குறித்து எந்த ஆழமான புரிதல்களும் இல்லாமல் அதுகுறித்து படங்கள் இயக்கியவர் மணிரத்னம். அழகியல், தொழில்நுட்பம், சென்டிமென்ட் மூலம் அவற்றைச் சரிக்கட்டிவிடலாம் என்ற அசட்டுத்துணிச்சல் அவருக்கு உண்டு. அதேபோன்ற அசட்டுத்துணிச்சலுடன் நக்சல்பாரி ஒருவரையும் காவல்துறையையும் மையப்படுத்தி `துணிந்தபின்' என்ற படத்தை இயக்கியிருக்கிறார் சர்ஜுன். நக்சல்பாரி இயக்கத்தைப் பற்றியோ காவல்துறை பற்றியோ எந்தப் புரிதலும் இல்லாத அரைவேக்காட்டுப்படத்தில் ஒரே ஒரு பெண்பாத்திரம். அதிரடிப்படை வீரர் வெற்றி (அதர்வா)யின் மனைவி (அஞ்சலி). தன் கணவனுக்கு என்ன நடந்தது என்று தெரியாமல், திரும்பி வருவான் என்று காத்திருப்பதைத் தவிர வேறு எதுவுமில்லாத மனைவி. நளாயினி, சீதை, சத்யவான் சாவித்திரி போன்ற `காவிய' நாயகிகளின் வரிசையில்... துயரம்!

ஒட்டுமொத்தப்படங்களில் படம் என்றே சொல்லமுடியாத ஒரு காட்சிக்கோலம் என்றால் அது கௌதம்மேனனின் `கிடார் கம்பி மேலே நின்று'. போலியான வசனங்கள், செயற்கையான உடல்மொழி, கௌதமின் முந்தைய படங்களில் இருந்த அதே காட்சிகள் என்று பார்வையாளர்களுக்கு கொடுங்கனவாக இருந்த படம். மற்ற படங்கள் அரசியல்ரீதியில் தவறிழைத்திருக்கலாம்; அரைவேக்காட்டு முயற்சிகளாக இருந்திருக்கலாம். ஆனால் குறைந்தபட்சம் `கதை' என்று தாங்கள் நம்பும் வஸ்தைப் படமாக்க முயன்று தோற்றிருக்கிறார்கள். கௌதமோ தன் படங்களையே ரீமேக் செய்து அதையும் ஒரு படம் என்று நம்பவைக்க முயல்வது மாபெரும் மோசடி. கௌதம் மேனன் படங்களில் வருவதைப்போலவே காபிஷாப்களிலும் நட்சத்திர விடுதிகளிலும் மட்டும் அடியெடுத்துவைக்கும் தூசிபடாத கால்கள், கசங்காத நவநாகரிக உடைகள், கவித்துவ பாவனையில் அசட்டு உளறல்மொழி பேசும் நாயகி. ஒருவரியில்கூட எழுதமுடியாத கதைதான் என்றாலும் நாயகன் கமல் (சூர்யா) மட்டும்தான் தன் காதல் கதையை விவரிக்கிறான். ஏன் காதல் வந்தது, ஏன் பிரிந்தோம் என்று பார்வையாளர்களிடம் சொல்வதற்கான வாய்ப்புகூட நேத்ரா (பிரக்யா)வுக்கு இல்லை. நாயகனின் வார்த்தைகளைத் தாண்டி எந்த முகமும் அற்ற பெண், கிடார் கம்பியின்மீது ஏறி தலைகீழாக விழுந்து தற்கொலை செய்துகொள்கிறாள். நாமோ 40 நிமிடங்களுக்குமேல் நரகத்தின்மீது நிற்கிறோம்.

கார்த்திக் சுப்புராஜின் `அமைதி'தான் உச்சம். நவரசத்தில் `அமைதி' என்பது, உணர்ச்சி தத்தளிப்புகள் அற்ற நிலை. ஆனால் புரிதலே இல்லாமல் அதை சமாதானம் - அமைதி என்னும் பொருளில் குழப்பிப் படமெடுத்திருக்கும் கார்த்திக் சுப்புராஜ் பெண்களின் இருப்பையே அழித்துவிடுகிறார்.

'கிட்டார் கம்பி மேலே நின்று' - கெளதம் மேனன்
'கிட்டார் கம்பி மேலே நின்று' - கெளதம் மேனன்

மற்ற படங்களிலாவது பெண்கள் இருந்தும் இல்லாமலிருக்கிறார்கள். கார்த்திக் சுப்புராஜ் படத்தில் பெண்களே இல்லை. படத்தில் வரும் நாய் கூட ஆண் நாய், வெள்ளையன். படத்தின் கதைக்களம் ஈழப்போர்க்களம். புலிகள் இயக்கம் பெண்களையும் போராளியாக்கியது. ஆனால் கார்த்திக் சுப்புராஜோ அவர்களை அப்புறப்படுத்தி முழுக்க ஆண்கள் படத்தை எடுத்திருக்கிறார்.
ஒன்பது ரசங்களை விளக்கும் இந்தப் படங்கள் முழுக்க முழுக்க ஆண்கள் நிறைந்த ஆண்களுக்கான சினிமாக்களாகவே இருப்பதும் பெண்களுக்கான வெளி குறுக்கப்பட்டதாகவும் முற்றிலும் மறுக்கப்பட்டிருப்பதும் கலைக்கும் அறவுணர்வுக்கும் இழைக்கப்பட்ட அநீதி. நவரசங்களை ஆண்களைவிடவும் சிறப்பாக நடன மேடைகளில் வெளிப்படுத்துபவர்கள் பெண்கள்தான். ஆனால் இதுவோ ஆண்களின் நவரசாவாகவே இருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism