Published:Updated:

ராஜன், சந்திரா, அன்புவை விடுங்க.. `வடசென்னை' ரிலீஸ் தேதி தற்செயலா?! - #1YearOfVadaChennai

வடசென்னை
வடசென்னை

தனுஷ் - வெற்றி மாறன் கூட்டணியின் கனவுத் திரைப்படமான 'வடசென்னை' வெளியாகி ஓராண்டு ஆகிறது. சென்னைவாழ் மீனவ மக்கள் மீது நிகழும் அரசியலை, இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் பேசத் துணியாதவற்றை வெளிப்படையாகப் பேசியது, 'வடசென்னை'. அதுவே சர்ச்சையும் ஆனது. 'வடசென்னை' பேசிய அரசியல் என்ன?!

தற்போது 'அசுரன்' படத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது, தமிழ் சினிமா உலகம். சிவசாமி - சிதம்பரம் ஆகியோர் அனைவராலும் வியந்து பேசப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தனுஷ் - வெற்றி மாறன் கூட்டணியின் 'அசுரன்' இந்த ஆண்டின் பேசுபொருளாக இருக்கையில், கடந்த ஆண்டு இதே கூட்டணியின் கனவுத் திரைப்படமான 'வடசென்னை' பேசுபொருளாக இருந்தது. சிவசாமி, சிதம்பரம் ஆகியோருக்குப் பதிலாக வேறு இருவரின் பெயர்கள் 'வடசென்னை' பார்த்தவர்களால் உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அவர்கள், ராஜன், அன்பு!

தன் கூட்டாளிகளால் வெட்டப்பட்டு, தன் ஊர் மக்களுக்குத் தான் ஆசையாய் கட்டிக்கொடுத்த 'சிங்காரவேலர் நற்பணி மன்ற'த்தில் கிடத்தப்பட்டிருக்கிறது, ராஜனின் உடல். 'எப்படியம்மா மறக்க முடியும் இதயம் குமுறுதே! எங்கள் அருமை அண்ணன், மாவீரன் மறைந்து போனதை!' என்று ராஜனுக்கான சாவு கானா பாடப்பட்டுக் கொண்டிருக்கிறது. ராஜனின் மனைவி சந்திராவுக்குத் தகவல் சொல்லப்படுகிறது.

சந்திரா
சந்திரா

கணவனின் உயிரற்ற சடலத்திற்கு, அவளுக்குப் பிடித்த கண்ணாடியை அணிவிக்கிறாள், சந்திரா. அவள் கண்களில் இருந்து ஒரு துளி கண்ணீர் சிந்தவில்லை. ஊர் அழும்போது, சாவுக்கான சடங்குகள் நிகழ்ந்துகொண்டிருக்கும்போதும், அந்தப் பெண் தன் கணவனின் மரணத்தைப் பழிவாங்க சூளுரைக்கிறாள். அந்தச் சூளுரைதான், 'வடசென்னை'.

'வடசென்னை' படத்தின் கதையை அந்தப் படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரங்கள் வழியாகவும் சொல்லமுடியும். ஆனால், 'சந்திரா' கதாபாத்திரம்தான் அனைவரையும் இணைக்கும் மையப்புள்ளி. ஆண்ட்ரியாவின் திரைப்பயணத்தில் சந்திரா கதாபாத்திரம் ஒரு மைல்கல். அமீருக்கும் ராஜன் கதாபாத்திரம் அப்படியானதே!

சந்திராவின் 'எம்.ஜி.ஆர்' ராஜன். ஊர் மக்களுக்காக நிற்பவன்; ஊருக்காகத் தன் வீரத்தை வெளிப்படுத்துபவன். ராஜன், கறுப்புக் கண்ணாடி அணியும்போதெல்லாம் சந்திரா அவனை ரசிக்கிறாள். சந்திராவுக்கு மட்டுமல்ல; நாகூரார் தோட்டம் என்றழைக்கப்படும் அந்த ஊருக்கே ராஜன்தான் 'எம்.ஜி.ஆர்'. 'ஹூக்' அடித்துப் படகிலிருந்து இறங்கி ஊருக்குள் வரும் ராஜன், தன்னிடம் பைனாகுலர் கேட்கும் ஹமீத் என்ற சிறுவனிடம் அதனைக் கொடுப்பதாகட்டும், எம்.ஜி.ஆர் மறைவுச் செய்தியைக் கேட்டு, 'கடைசியா தலைவரை ஒரு தடவைபோய் பார்த்துட்டு வந்துடறேன்டா!' என்பதாகட்டும், ராஜன் பக்காவான 'எம்.ஜி.ஆர்' ரசிகன்.

ராஜன் வகையறா
ராஜன் வகையறா

ராஜன் எம்.ஜி.ஆர் ரசிகன்; முத்து எம்.ஜி.ஆர் நடத்தும் கட்சியின் அரசியல்வாதி. எம்.ஜி.ஆர் நடத்தும் கட்சியைச் சேர்ந்த முத்து, எம்.ஜி.ஆர் ரசிகனான ராஜனைத் தன் தேவைகளுக்காகப் பயன்படுத்திக்கொள்கிறான். கட்சி, அரசியல் என்பதற்கு அப்பாற்பட்டு, தன் ஊர் என்று வரும்போது, ராஜன் முத்துவுக்குக் கட்டுப்பட மறுப்பதோடு, எதிர்த்தும் நிற்கிறான். ராஜனின் கூட்டாளிகளைத் தன் வசம் இழுக்கும் முத்து, அவர்களை வைத்து ராஜனை முடித்துக் கட்டுகிறான். ராஜனின் கொலைக்குப் பின் நிகழும் சம்பவங்களும், அன்பு இதனுள் நுழைவதும் 'வடசென்னை' முதல் பாகத்தின் கதை.

'வடசென்னை' மாபியா, கேங்ஸ்டர் பாணியிலான கதை. கேங்ஸ்டர் கதைகளில் வன்முறை அதீதமாக வெளிப்படுத்தப்படும். ஒரு மரணத்தின் மீதான பழிவாங்கல், கேங்ஸ்டர் கதைகளின் முதுகெலும்பாகக் கட்டப்பட்டிருக்கும்.

கேங்ஸ்டர் கதைகளை வன்முறை, ரத்தம், பழிவாங்கல், கொலை என்ற அளவில் மட்டும் சுருக்கிவிட முடியாது. ஒரு ரெளடியின் கதைக்கும், கேங்ஸ்டர் கதைக்கும் பெரும் வித்தியாசம் உண்டு.
வடசென்னை
வடசென்னை

தான் வாழும் நிலத்தின் மீது, அந்தந்தக் காலகட்டங்களில் நிகழும் அரசியலையும், அதன் விளைவுகளையும் ஒவ்வொரு மக்களும் சந்திக்கின்றனர். கேங்ஸ்டர்கள் மக்களின் ஆதரவையோ, பயத்தையோ மூலதனமாகக் கொண்டு, சட்ட ஒழுங்குப் பிரச்னைகளில் பெரிதாக ஈடுபடுபவர்கள். அரசு என்ற கட்டமைப்பு, நிலத்தையும், அதன் மீதான மனிதர்களையும், வளங்களையும் நிர்வகிப்பது. அரசு, கட்சி சார்பில்லாதது; கட்சிகள் இல்லையென்றாலும், அரசு என்ற கட்டமைப்புக்குத் தனியாக இயங்கும் தன்மை உண்டு.

அரசுக்கு என்று சில நலன்கள் அடிப்படையாக இருக்கும். அந்த நலன்கள், தனியொரு சமூகத்துக்கோ, சில தனி மனிதர்களுக்கோ மட்டும் இயங்குவது, அந்த நிலத்தில் வாழும் மற்ற மனிதர்களுக்கும், வளங்களுக்கும் எதிராக முடியும். இந்தப் பின்னணியில் இருந்து, கேங்ஸ்டர்களை அணுகலாம்.
வடசென்னை
வடசென்னை
Vikatan

மக்களின் ஆதரவையோ, பயத்தையோ வைத்து உருவாகும் கேங்ஸ்டர்கள், தங்கள் நிலத்தின் பாதுகாவலர்களாகத் தங்களை முன்னிறுத்திக் கொள்கிறார்கள். அரசு அதிகாரிகளான காவல்துறைக்குக் கட்டுப்படாமல் இயங்கும் கேங்ஸ்டர்கள், கொலை, கடத்தல் முதலானவற்றில் தங்களை வளர்த்துக்கொள்ள ஈடுபடுவர்.

'வடசென்னை'யில் ராஜன் மக்கள் ஆதரவோடு உருவான கேங்ஸ்டர். ராஜனுக்குப் பிறகு, குணா, செந்தில், 'ஜாவா' பழனி, வேலு ஆகியோர் ராஜன் கொலையைக் காட்டி, மக்களை பயத்தில் வைத்து வாழும் கேங்ஸ்டர்கள். ராஜனின் தம்பி மீதும் ஊர் மக்களுக்கு மரியாதை தொடர்கிறது. தம்பி, ராஜன் வழியில் ஊர் முன்னேற்றத்தை விரும்புகிறான்.

1980-களில் சாலை விரிவாக்கத்திற்காக, அன்றைய அரசுக்கு, மீனவர்களின் நிலம் தேவைப்படுகிறது. 1986-ஆம் ஆண்டு போப் ஆண்டவர் சென்னைக்கு வருவதைக் காரணமாகக் காட்டி, அதைக் கேட்கிறது அரசு. அரசின் அங்கமான ஆளுங்கட்சியின் உறுப்பினர் முத்து, மீனவர்களின் ஆதரவுபெற்ற கேங்ஸ்டர் ராஜனிடம் நிலத்தைக் கேட்கிறான். ராஜன் மறுக்கிறான்; கொல்லப்படுகிறான்.

முத்து
முத்து

1991-ஆம் ஆண்டு இந்தியாவின் பொருளாதாரக் கொள்கை மாற்றப்படுகிறது. சென்னையில் வடநாட்டு சேட்டுகளுக்காக, வெளிநாட்டுக் கப்பல்களில் 'ஹூக்' அடிப்பது, தேவையில்லாமல் போகிறது. ராஜனின் கூட்டாளிகள், மக்களின் பயத்தைப் பயன்படுத்தி வளர்ந்துகொண்டிருக்கின்றனர். குணா, வேலு ஆகியோர் அரசு அளிக்கும் ஒப்பந்தங்களால் தங்கள் நிலத்தின் வளங்களைச் சுரண்டவும், செந்தில் தேர்தல் அரசியல் வழியாகத் தன் நிலத்தின் வளங்களைச் சுரண்டவும் முடிவெடுக்கின்றனர்.

அன்புவின் அத்தியாயம் இதற்குச் சில நாள்களுக்கு முன்பே தொடங்குகிறது. எளிய வாழ்க்கை வாழும் மீனவ, உழைக்கும் மக்களால் வாங்கமுடியாத நவீனப் பொருள்கள், அம்மக்களின் பகுதிக்குள் விற்கப்படுகிறது. ராஜீவ் காந்தி கொலையைக் காரணமாகக் காட்டி, அவற்றை ஊர் மக்கள் எடுத்துச் செல்கின்றனர். இதன் நடுவே அன்புவின் காதல் கதை தொடங்குகிறது. அதுவே பிற்பாதியில் அவனது வாழ்க்கையை மாற்றுகிறது.

எளிய மக்களைத் திருடுபவர்களாக 'வடசென்னை' சித்திரிக்கிறது என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டபோது, எளிய மக்கள் வாங்க முடியாத பொருள்களை அவர்கள் பகுதிக்குள் விற்பனை செய்யும், அவர்களைக் கடனாளிகளாகவும் மாற்ற விரும்பும், உலக சந்தைப் பொருளாதார அரசியல் எங்கும் பேசப்படவில்லை.
வடசென்னை
வடசென்னை

சிறையில் அசைன்மென்டோடு அனுப்பப்படும் அன்புவின் வழியாக, தமிழகச் சிறைகளின் சித்திரத்தை வரைகிறது 'வடசென்னை'. சிறைக்குள் நிகழும் கடத்தல், சிறையில் பணப் பரிவர்த்தனைக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் பீடி, சட்ட ஒழுங்குப் பிரச்னை ஏற்படாதவாறு, அரசால் பிரித்து வைக்கப்படும் குழுக்கள் முதலானவை, தமிழ் சினிமா தொடாதவை.

ராஜனைப்போல, அன்புவும் ஊர் மக்களுக்காகத் தன்னைச் சுரண்டும், தன் மக்களின் பயத்தைச் சுரண்டும் கேங்ஸ்டர்களையும், அரசையும் எதிர்க்கத் துணிகிறான். அன்பு, ராஜன் கையால் சுண்டாட்டம் கற்றுக்கொண்டவன். அன்பு, ஹமீது போன்ற 80-களின் குழந்தைகளுக்கு, 'ராஜன்தான் எம்.ஜி.ஆர், ரஜினி எல்லாமே!' என்கிறது, வெற்றிமாறனின் வாய்ஸ் ஓவர்.

"நல்லா படிக்கிறவன், படி. படிப்பு வராதவன், போர்டு ஆடு, பாக்ஸிங் பண்ணு, ஃபுட்பாலு, பாடி பில்டிங் கத்துக்கோ... இதெல்லாம் பண்ணினா, ஸ்போர்ட்ஸ் கோட்டாவுல போஸ்டிங் கிடைக்கும். போஸ்டிங் வாங்கி, வெளியூர் போங்க. துட்டு சம்பாரிச்சிட்டு, புதுசு புதுசா கத்துட்டு, திரும்ப ஊருக்கு வந்து, நல்லா improvement பண்ணுங்க. நம்ம ஊர improvement பண்ண வேற யாரும் வரமாட்டான்டா. நம்மதான் பண்ணணும்! அதுக்குத்தான் இந்த மன்றமே ஆரம்பிச்சிக்கிறோம்."
ராஜன், வடசென்னை.
அன்பு
அன்பு

ராஜன் தொடங்கிய மன்றமும், அவன் தொடங்கிய போராட்டமும், எப்படியோ அன்புவை அடைந்துவிடுவதோடு முடிகிறது, 'வடசென்னை'. இதைப்போன்றே, எளிய மக்களுக்குக் கல்வியின் முக்கியத்துவத்தை 'அசுரன்' பேசியுள்ளது. மீனவர்கள் சித்திரிப்பு, கப்பல்களின் கடத்தல் முதலானவை சர்ச்சைகளை ஏற்படுத்தியபோது, இயக்குநர் வெற்றி மாறன் அதற்கு மன்னிப்பு கோரினார்.

கேங்ஸ்டர்கள், ரெளடிகள் ஆகியோர் தோன்றுவதற்கான சமூக, அரசியல், பொருளாதாரக் காரணிகளைப் பின்னணியில் வைத்து சொல்லப்பட்டிருக்கிறது, 'வடசென்னை' கதை. தமிழ் சினிமாவில், சென்னையின் பூர்வகுடிகள் தொடர்ந்து ரெளடிகளாகச் சித்திரிக்கப்பட்டு வந்திருக்கின்றனர். 'வடசென்னை' அந்தச் சுழற்சியில் சிக்கிக்கொண்டது.

அன்பு
அன்பு
வெறிபிடித்தாடிய வினோத்; அசுர வேட்டை நிகழ்த்திய சிவசாமி... தமிழ் சினிமாவின் தங்க மகன் தனுஷ்!

எளிய மக்களின் நிலம், அதன் மீது ஆளுமை செலுத்தும் அரசு, அரசின் அங்கமான தேர்தல் கட்சிகள், அரசு அதிகாரிகளான காவல்துறையினர், வெளிநாட்டுக் கப்பல்கள் நிறுத்த ஹார்பர் தேவை என்ற அரசு நலன், அத்தகைய அரசு நலன்களுக்குக் கட்டுப்படாத கேங்ஸ்டர், பிற்காலத்தில் அரசின் அங்கமாக மாறி நிலத்தை அரசு நலன்களுக்குக் கொடுக்க விரும்பும் இறந்துபோன கேங்ஸ்டரின் கூட்டாளிகள், எதிர்க்கும் அடுத்த தலைமுறை இளைஞன்... என 'வடசென்னை' நிலத்தின் மீதான அரசியலைத் தெளிவாகப் பேசுகிறது இந்தப் படம்.

'வடசென்னை' வெளியான அக்டோபர் 17 அன்றுதான், 1972-ஆம் ஆண்டு, 'அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' என்ற கட்சியை எம்.ஜி.ஆர் தொடங்கினார். அ.தி.மு.க-வையும், எம்.ஜி.ஆர் ஆட்சியில் மீனவர் நிலையும் வெளிப்படையாகச் சாடும் இந்தப் படமும், இதேநாளில் வெளியாகியிருப்பது தற்செயலானதா, திட்டமிட்டதா என்பது மட்டும் தெரியவில்லை.

அடுத்த கட்டுரைக்கு