Published:Updated:

பாய்ந்தோடும் வெள்ளமும் பீய்ச்சியடிக்கும் கழிவுநீரும்தான் `பாராசைட்'! #ParasiteMovie

பாராசைட்

முதற்பாதியைப் பார்க்கையில் கிட்டத்தட்ட நம்முடைய 'மின்சாரக் கண்ணா' கதைதான். ஆனால், பின்னர் தடம் மாறி வேகமெடுக்கும் திரைக்கதை ஒருவித பரபரப்புடன் டார்க் ஹியூமராக விரிகிறது.`பாராசைட்' படம் ஒரு பார்வை!

பாய்ந்தோடும் வெள்ளமும் பீய்ச்சியடிக்கும் கழிவுநீரும்தான் `பாராசைட்'! #ParasiteMovie

முதற்பாதியைப் பார்க்கையில் கிட்டத்தட்ட நம்முடைய 'மின்சாரக் கண்ணா' கதைதான். ஆனால், பின்னர் தடம் மாறி வேகமெடுக்கும் திரைக்கதை ஒருவித பரபரப்புடன் டார்க் ஹியூமராக விரிகிறது.`பாராசைட்' படம் ஒரு பார்வை!

Published:Updated:
பாராசைட்

அடிமட்ட வர்க்கத்து குடும்பம் ஒன்று, உயர்தர வர்க்கத்துக் குடும்பத்துடன் ஒட்டுண்ணியாய் ஊர்ந்து, நடுத்தர வர்க்கமாக மாற நினைக்கும் கதையே `பாராசைட்'.

எவ்வித வருமானமுமின்றி வறுமையின் பிடியில் வாழும் கிம் குடும்பம், வழிப்போக்கர்கள் சிறுநீர் கழித்து விளையாடும் இடத்தின் அருகே இருக்கும் ஒரு பேஸ்மென்டில் வாழ்ந்து வருகிறது. வேலைக்குச் சென்றால்தான் ஒரு வேளை சாப்பாடே என்ற நிலை இவர்களை வதைக்க, ஏமாற்றியாவது ஒரு வேலைக்குப் போக வேண்டுமென்ற மனநிலைக்கு மொத்தக் குடும்பமும் வந்துவிடுகிறது. மறுமுனையில், கிம் குடும்பம் வாழ்வதைப் போன்றதொரு பேஸ்மென்டில், உயர்தர கார்களை நிறுத்தி வைத்து, அதை அழகு பார்க்கிறது பார்க் எனும் குடும்பம்.

பாராசைட்
பாராசைட்

இப்படியான ஒரு உயர்மட்டக் குடும்பத்தையும், அடிமட்டக் குடும்பத்தையும் இணைக்கிறது `வேலை வாய்ப்பு' . போலி ஆவணங்களைத் தயார் செய்து, நண்பர் ஒருவரின் உதவியோடு, பார்க் குடும்பத்துக்குள் ஒரு டியூஷன் வாத்தியாராக நுழைகிறார் கிம் குடும்பத்தின் மகன். அவரைத் தொடர்ந்து வெவ்வேறு அரசியல் செய்து கிம் குடும்பத்தின் ஒவ்வோர் உறுப்பினரும் பார்க் குடும்பத்தில் ஒவ்வொரு வேலைக்காக நுழைந்துவிடுகிறார்கள். இறுதியில், ஒருவிதத் தாழ்வு மனப்பான்மை கிம் குடும்பத் தலைவரின் கழுத்தை நெரிக்க, வன்முறையைக் கையிலெடுக்கிறார் அவர். விளைவாக கிம் குடும்பமும், பார்க் குடும்பமும் பலவற்றை இழக்கிறது. முதற்பாதியைப் பார்க்கையில் கிட்டத்தட்ட நம்முடைய 'மின்சாரக் கண்ணா' கதைதான். ஆனால், பின்னர் தடம் மாறி வேகமெடுக்கும் திரைக்கதை ஒருவித பரபரப்புடன் டார்க் ஹியூமராக விரிகிறது.

கொரியன் பட இயக்குநர்களில் மிக முக்கியமானவர் போங் ஜோன் ஹோ. பொதுவாக இவருடைய படங்களில் அடித்தட்டு மக்களின் ஓலமானது ஒலித்துகொண்டேயிருக்கும். அப்படியான ஒரு ஓலம்தான் `பாராசைட்' டிலும் ஒலித்திருக்கிறது. கிளைமாக்ஸின்போது கிம் கி-வூவின் கால்களில் அடித்துச் செல்லும் வெள்ளமே கதையின் கருவை உணர்த்துகிறது. பார்க், தனது மனைவியுடன் சோஃபாவில் அமர்ந்து கொட்டும் மழையையும், தன் மகன் டென்ட் போட்டு உறங்கிக்கொண்டிருக்கும் அழகையும் ஒரு கண்ணாடிக்குப் பின்னிருந்து ரசித்துக்கொண்டிருக்கும் அதே வேலையில்தான், தங்களது இருப்பிடம் `இருக்கா இல்லையா' என்ற பதற்றத்தில் பாய்ந்தோடுகிறது கிம் குடும்பம்.

பாராசைட்
பாராசைட்

வெள்ளத்தில் மூழ்கிக்கொண்டிருக்கும் தனது வீட்டுக்குள் நீச்சலடித்துச் செல்லும் கிம் குடும்பம், தங்களுக்குச் நெருக்கமான உடைமைகளைப் பாதுகாக்க முற்படுகின்றனர். அதிலும், வெள்ளத்தின் அழுத்தத்தால் பீய்ச்சியடிக்கும் கழிவுநீரை அடைத்தபடி அமர்ந்து, கிம் கி-ஜ்யாங் பிடிக்கும் சிகரெட்டிலிருந்து வெளிவரும் புகை, நம் மனதை மூச்சுத் திணர வைக்கிறது. இப்படிக் கிடைக்கும் ஃப்ரேம்களில் எல்லாம் கதை சொல்லிவிடுகிறார் இயக்குநர். கிடைக்கிற கேப்பில் வட கொரியாவின் வாய்க்கால் தகராறுகள், அதிபர் கிம்மின் அணு ஆயுதக் கொள்கை ஆகியவற்றையும் பகடிச் செய்கிறது படம்.

`பிளான் பண்ணாதானே அது தோல்வியில முடியுமா, வெற்றியில முடியுமானு கவலைப்படணும்... என்கிட்டதான் எந்த பிளானும் இல்லையே' என்று கிம் கி-டேய்க் சொல்வதெல்லாம் நிதர்சனத்தின் உச்சம். கிம் குடும்பத்தின் `சொர்க்கம் மதுவிலே' சமயத்தில் நிகழும் உரையாடல் இது. `She's nice and rich!', `She's nice, Because She's rich...' என மேல்த்தட்டு மக்களின் மீதிருக்கும் பார்வையே கிம் குடும்பத்திற்கு இப்படியாகத்தான் இருக்கிறது. அங்கிருந்தே கிம் கி-டேய்க்கின் மனநிலையானது ஒருவித விரக்தியடைகிறது.

ஒரு மெல்லிய கோட்டுக்குள்தான் இப்படத்தின் கதை மொத்தமும் ஒளிந்திருக்கிறது. பார்க்கும்போது வெறும் கோடாகத் தெரிந்தாலும் அந்தக் கோட்டுக்கு அடியில் பல லேயர்களை வைத்திருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் நுகர்வதை வைத்துக்கூட கதை சொல்லியிருக்கிறார் இயக்குநர். எந்தவித ஆர்ப்பரிப்புமின்றி அமைதியாய் ஆரம்பிக்கிறது படம். அடிமட்டத்தில் வாழ்ந்தாலும், ஒருவேளை சாப்பாட்டைக் குடும்பத்தோடு சாப்பிடும்போது போலியற்ற சிரிப்பே ஒவ்வொருவரிடமும் உதிக்கிறது.

குடிகாரனோடு செல்லமாய்ச் சண்டையிடுவது, கணவன் மனைவிக்குள்ளான ஊடல், பக்கத்து வீட்டு வைஃபையை தெரியாமல் பயன்படுத்துவது, தம் அடிப்பது போன்ற மென்மையான இளைப்பாறல் எல்லாம் அந்தச் சிட்டுக் குருவிக் கூடு போன்றிருக்கும் வீட்டுக்குள்தான் நிகழ்கிறது. எப்போது தான் பார்க்காத மேல்த்தட்டு மக்களின் வாழ்க்கை முறைக்குள் கிம் கி-வூ நுழைகிறானோ, அப்போது ஆட்கொள்கிறது அவனது அளவில்லா ஆசை. `ஒரு முறையானால் என்ன, பல முறையானால் என்ன... ஏமாற்றுவது என்றாகிவிட்டது' என மொத்தக் குடும்பத்தையும் இதை உணர வைக்கிறான். வறுமையென்ற ஒரே காரணத்தினால் அவர்களும் இதில் படர்ந்துவிடுகிறார்கள்.

பாராசைட்
பாராசைட்

படிப்படியாய்ப் பல்வேறு பரிமாணங்களை அடையும் அந்த ஆசையானது, இந்த வீட்டுக்குள் நாமே வந்துவிட வேண்டுமென ஒரு விபரீத முடிவை எடுக்க வைக்கிறது. நியாயமான முறையில் சம்பாதித்து வந்துவிட வேண்டுமென்பதில்லை... போலி ஆவணங்களைத் தயார் செய்ததுபோல், குறுக்கு வழியிலாவது இதை அடைந்துவிட வேண்டுமென்பதே அந்த விபரீத முடிவு. பின் இரு குடும்ப உறுப்பினர்களுக்கும் பொதுவான ஒரு பேரிழப்பு நிகழ, தெளிந்து தனக்கான பாதையில் செல்வதோடு முடிகிறது கதை.

நம்மை நாமே ஒரு முறை திரும்பிப் பார்க்க `பாரசைட்'டைக் கட்டாயம் பார்க்கலாம்!