Published:Updated:

"அண்ணன் - தம்பிகள் இருக்கும்வரை, 'மாயாண்டி குடும்பத்தார்' வாழும்!" - #10YearsOfMaayandiKudumbathar

ப.தினேஷ்குமார்

தமிழ் சினிமாவில் முதல் முறையாக பத்து இயக்குநர்கள் நடித்த இல்லை இல்லை... பாத்திரங்களாகவே வாழ்ந்த படம், `மாயாண்டி குடும்பத்தார்'. இப்படம் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன.

மாயாண்டி குடும்பத்தார்
மாயாண்டி குடும்பத்தார்

தமிழக கிராமங்களில் மாயமாகி வரும் கூட்டுக்குடும்பங்களைப் பற்றியும், அவை தழைத்தோங்க வேண்டிய அவசியத்தைப் பற்றியும் அண்ணன் - தம்பிகளின் பாசத்தினூடே கண்ணீரும், கம்பலையுமாகப் பதிவு செய்த திரைப்படம், `மாயாண்டி குடும்பத்தார்'. இப்படம் வெளியாகி 10 வருடங்கள் ஆகின்றன. `மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகிலுள்ள S.மேட்டுப்பட்டியில் வசிக்கும் மாயாண்டி குடும்பத்தாரின்' சிறப்பம்சங்களைப் பற்றிப் பார்ப்போம்.

இரண்டு பங்காளிகளின் குடும்பத்தில் நீடித்துவரும் சொத்துத் தகராறு என்ற மெல்லிய இழைதான், படத்தின் மொத்தக் கதை. அந்த எளிய கதையில், குடும்ப உறவுகளுக்கிடையே கிடக்கும் தீராப் பகையை, குரோதத்தை, அன்பை... என மொத்தத்தையும் சேர்த்துப் படம் நெடுக ரத்தமும் சதையுமாகப் பதிவு செய்தது, `மாயாண்டி குடும்பத்தார்'.

`மாப்ள, நான் இன்னும் பிரியாணி சாப்டதேயில்லைய்யா.. அன்னைக்கு கிளப்புக் கடையில கேக்குறேன். அறுபது ரூபாயிங்கிறான். இம்புட்டு பிரியாணி அது, அம்பது ரூபாயாமே. என்னைக்காவது ஒருநாள் குடும்பத்தோட பிரியாணி சாப்பிடாமலயா விட்ருவோம்!'

`மகனே கூட அம்பது ரூபா வெச்சிக்கடா'

`இந்தா கூட கொடுக்குறியே அம்பது ரூபா, அதுக்குப் பிரியாணி சாப்பிடலாம்ல'

`ஏய்! என் புள்ள பரமனைவிட பிரியாணி பெருசாடா'

- ஆம். கிழவன் மாயாண்டிக்கு மகன் பரமனைவிட பிரியாணி பெருசா என்ன?! நான்கு மகன்கள் இருந்தாலும், பிறக்கும்போதே தாயை இழந்த தனது கடைசி மகன் பரமனின் மீது தனிப் பிரியம் வைப்பதிருக்கும் தகப்பன் மாயாண்டியாக, மணிவண்ணன். மகன் கல்லூரியில் அடிதடியில் ஈடுபட, கல்லூரி முதல்வர் முன்பு தன் மகனைப் போட்டு அடிக்கும் அந்த ஒரு காட்சி போதும். ஒரு சராசரி கிராமத்துத் தகப்பனாக நம்மைக் கலங்கடித்திருப்பார், மணிவண்ணன். இயக்குநராக `அமைதிப்படை'யில் பெரும் உயரம் தொட்டிருந்தாலும், நடிகனாக `மாயாண்டி' கதாபாத்திரம் மணிவண்ணனுக்கு ஒரு மைல்கல்.

மாயாண்டி குடும்பத்தார்
மாயாண்டி குடும்பத்தார்

`நீ செத்துப்போயிட்டா, இந்தச் செருப்பு ரெண்டும் எனக்குதானப்பா' - இயக்குநராக சோபிக்க முடியாமல்போன சிங்கம்புலியின் இரண்டாவது இன்னிங்ஸ், இந்தப் படத்திலிருந்துதான் ஆரம்பமானது. திருவிழாவில் அண்ணன்கள் அடித்துக்கொள்ளும்போது, ஜஸ் சாப்பிட்டுக்கொண்டே செய்யும் அட்ராசிட்டி, குழந்தை எப்படிப் பிறக்கும் என்று கேட்பது... எனப் படம் நெடுக நகைச்சுவைப் பட்டாசுகளை சரம்சரமாகக் கொளுத்திச் சிரிக்க வைத்தவர், படத்தின் இறுதியில் தனது தந்தையிடம், `பேசுப்பா. நல்லவன்பா. நம்ம சித்தப்பா மாதிரி' எனச் சொல்லும்போது நெகிழவும் வைத்தார், சிங்கம்புலி.

மாயாண்டி குடும்பத்தார்
மாயாண்டி குடும்பத்தார்

`மாயாண்டி குடும்பத்தார்' படத்தில் மணிவண்ணன் இறந்ததும், அவரது மூத்த மகன்களின் மனைவிகள் கொழுந்தன் தருண்கோபியை அவமானப்படுத்தி விலக்குவது அப்படியே கிராமத்து யதார்த்தம். தம்பியின் தனி சமையலை ருசி பார்க்கும் பாசக்கார அண்ணன் பொன்வண்ணன், `அப்படியே ஆத்தா வெச்ச மீன்குழம்பு மாதிரியே இருக்குடா' என்று பாசத்தை வெளிப்படுத்தும் தருணம், அவ்வளவு இயல்பாகப் படம் பிடிக்கப்பட்டிருக்கும்.

தம்பி தருண்கோபி மீது அண்ணன்கள் மாறி மாறி பாசத்தைப் பொழியும் காட்சிகளைப் பார்க்கும்போது, இவர்களைப்போல் தனக்கும் ஓர் அண்ணன் இல்லையே என்று படம் பார்ப்பவர்களை ஏங்க வைத்திருப்பார்கள், பொன்வண்ணன் அண்ட் கோ அண்ணன்கள். திருமணத்திற்குப் பின் அண்ணன்கள் தன் தம்பி, தங்கைகளுக்குச் செய்யவேண்டிய கடமைகளைக்கூட அண்ணிமார்களுக்குப் பயந்து செய்வதை, `இந்தக் காலத்துல கள்ளக் காதலைக்கூட நாலு பேருக்குத் தெரிஞ்சு செஞ்சிடுறாங்க. கூடப் பொறந்த பொறப்புக்கு உதவுறதுக்கு ஒருத்தனுக்கும் தெரியாம உதவ வேண்டியிருக்கு' எனச் சீமான் சொல்லும் வசனத்தின் மூலம் வலிமையாகக் கடத்தினார், இராசு மதுரவன்.

மாயாண்டி குடும்பத்தார்
மாயாண்டி குடும்பத்தார்

படம் பார்த்த பெரும்பாலானவர்களுக்கு மிகவும் பிடித்த காட்சி இது. காது குத்து பத்திரிகையில் பரமன் பெயர் போடாமல் அவமானப்படுத்துகிறார், பரமனின் அக்கா வீட்டுக்காரர். அதையும் மீறி காது குத்துக்குப் பரமன் செல்லும்போது, `முக்கா துட்டுக்கு பிரயோஜனம் இல்லாத சல்லிப்பய.. திங்கிறதுக்கு வந்துட்டான்' என்று அவர் சொல்லிவிட, அக்கா புருஷனின் மூக்கை உடைக்கும்படியாக படிப்புக்காகச் சேர்த்து வைத்திருந்த ஐம்பதாயிரம் ரூபாயைத் தாய்மாமன் மொய்யாகச் செய்துவிட்டுத் திரும்புகிறான், பரமன்.

இதற்கு அடுத்த காட்சி படமாக்கப்போவதற்கு முன்பு, அக்காவாக நடிக்கும் தீபாவிடம் சென்ற இராசுமதுரவன், அவரிடம் எந்த வசனமும் சொல்லாமல், `நீங்க கிராமத்துப் பொண்ணுதானே, இந்த சீன்ல உங்க பையனுக்குக் காது குத்தும்போது சொந்தத் தம்பி சாப்பிடாம போறான். அப்போ நீங்க என்ன பண்ணுவீங்களோ, அதைச் செய்ங்க’ எனச் சொல்லிவிட, தீபா மண்ணில் விழுந்து புரண்டு பரமன் பஸ் ஏறிச் சென்றதும், `நான் என்னடா பாவம் பண்ணேன். என்னப் பெத்த ராசா.

மாயாண்டி குடும்பத்தார்
மாயாண்டி குடும்பத்தார்

நடைபொணம் மாதிரிப் போறானே என் தம்பி.. இதுவரைக்கும் ஒரு வாய் சோறுகூட போட முடியாத வக்கத்த சிறுக்கியாயிட்டனே..' என்று நிஜமாகவே கண்ணீர் விட்டு அழுக... ஒரே டேக்கில் அந்தக் காட்சி ஓகே ஆனது. இதற்கு முன்பு 'மெட்டி ஒலி' சீரியல், 'வெடிகுண்டு முருகேசன்' படங்களில் நடித்திருந்தாலும், இந்தப் படம்தான் தீபாவுக்குப் பெயர் வாங்கிக் கொடுத்தது. 

பாலபரணியின் ஒளிப்பதிவில் படம் முழுக்கக் காட்சியமைப்புகள் அவ்வளவு இயல்பாக இருந்தன. கிராமத்து உணர்வைப் படம் முழுக்கப் பின்னணி இசையாகத் தூவியிருந்தார், இசையமைப்பாளர் சபேஷ் - முரளி. `பேசாம பேசாம இருந்து' பாடலை சீமான்தான் எழுதியிருந்தார். குறிப்பாக, `முத்துக்கு முத்தாக' பாடல் ஒவ்வொரு முறையும் பின்னணியில் ஒலிக்கும்போது, பார்வையாளர்கள் நெகிழ்ந்து கரைந்தார்கள்.

மாயாண்டி குடுமபத்தார்
மாயாண்டி குடுமபத்தார்

படத்தின் பெரிய பலமே தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கிராமத்தினரும் இந்தப் படத்தில் வரும் கதாபாத்திரங்களோடு தங்களை தாராளமாகப் பொருத்திப் பார்த்துக்கொள்ள முடிவதுதான். நீண்ட நாள்கள் கழித்து சொந்த பந்தங்களோடு திருவிழாவுக்குப் போன உணர்வைக் கொடுத்த படம் இது.

`மாயாண்டி குடும்பத்தார்' படம் பற்றி சீமான் ஒருமுறை பேசும்போது, ``பல மணி நேரம் மேடையிலே இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் பேசிட்டு இறங்கும்போது, ஓரத்தில் நிற்கிற பெண்கள், ஆண்கள், குழந்தைகள் எல்லோரும் `சார், மாயாண்டி குடும்பத்தார் படத்துல சூப்பரா நடிச்சிருந்தீங்கனு சொல்றாங்க. இவ்ளோ நேரம் பேசுனேன். என் பேச்சுகளையும் தாண்டி அந்தப் படம் மக்கள் மனதில் அந்தளவுக்கு ஆழப் பதிந்திருக்கிறது." என்றார்.

அளவுக்கு அதிகமான சோகம், இடைவேளைக்குப் பிறகு வரும் தொய்வான காட்சிகள், ஒரு குடும்பத்தினர் விட்டுக்கொடுப்பதும், இன்னொரு குடும்பம் பகை வளர்ப்பதுமான பழைய சினிமா ஃபார்முலா... எனப் படத்தில் குறைகளும் உண்டு. ஆனாலும், கிராமத்து மனிதர்களின் உணர்ச்சிகளைத் திரையில் கொண்டுவரும் முயற்சியில் எளிதாக ஜெயித்திருந்தார், இராசு மதுரவன். அதனால்தான், இந்தப் படம் நம்மை உணர்வுபூர்வமாகப் பாதித்தது.

கூட்டுக் குடும்பத்தில் பிறந்த அனைவருக்குமே இந்தப் படம் ஒரு கிளாஸிக்தான். சிறப்பு என்னவென்றால், சில காட்சிகளில் நாம் அழுவோம் என்று தெரிந்தே அழுவதுதான். அண்ணன் - தம்பி பாசம் உலகத்தில் இருக்கிறவரைக்கும் `மாயாண்டி குடும்பத்தார்' படம் நிச்சயம் வாழும். படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆனதையொட்டி, படத்தோடு சேர்த்து பாசிகளும், வக்கிரங்களும் தங்கியிருக்கும் மனதிலிருந்து ஈரத்தையும், கண்ணீரையும் மீட்டெடுத்த அற்புதக் கலைஞன் இராசு மதுரவனை நினைவு கூர்வோம்.

இராசு மதுரவன்
இராசு மதுரவன்

மாயாண்டி குடும்பத்தாருக்கு வாழ்த்துகள்!

ப.தினேஷ்குமார்