Published:Updated:

தமிழ் சினிமாவின் அபத்தங்களை சினிமாவிற்குள் இருந்தே சினிமாவாக்கிய பார்த்திபன்..! #5YearsOfKTVI

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்'
'கதை திரைக்கதை வசனம் இயக்கம்'

'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' வெளியாகி ஐந்து வருடங்களானதையொட்டி, படத்தின் சிறப்பம்சங்களைக் காணலாம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பொதுவாகவே, ஒரு படத்தைப் பார்க்க தூண்டுவதில் இருந்து படம் நன்றாகவே இல்லை எனப் படம் பார்த்த ரசிகன் சொல்வது வரை, எந்த ஒரு சினிமாவுக்கும் கதைதான் ஆதாரப்புள்ளி. இன்னும் சொல்லப்போனால் பெரும்பாலான மக்கள் திரையரங்கிற்கு செல்வதே படத்தில் இருக்கும் கதைக்காகத்தான். இப்படி சகலத்திற்கும் அச்சாணி, கதை வஸ்துதான் என்றிருக்கும் நிலையில், கதையே இல்லாமல் ஓர் உதவி இயக்குநரின் கதையைச் சொல்லிய திரைப்படம், 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்'.

மனநலம் பாதிக்கப்பட்டோரை இழிவுபடுத்துகிறதா நேர்கொண்ட பார்வை?!

இந்தத் திரைப்படம் அதுவரை புழக்கத்தில் இருந்த தமிழ் சினிமாவின் விதிகளைப் பற்றிக் கவலைப்படாமல், அந்த விதிகளை எள்ளி நகையாடியது. இன்றோடு அந்தப் படம் வெளியாகி ஐந்து வருடங்களானதையொட்டி, படத்தின் சிறப்பம்சங்களைக் காணலாம்.

இந்தப் படத்துடைய கதை என்னன்னா..?

"பாஸ்...அதான் 'A Film Without a story'னு பார்த்திபன் டைட்டில் கூட டேக் லைன்னே போட்டாரே அப்புறம் என்ன கதை’’ன்னுதானே யோசிக்கிறிங்க? சொல்றேன். கேளுங்க. நம்முடைய வாழ்க்கை எந்தக் கதையின் அடிப்படையிலும் இயங்குவது கிடையாது. பொழுது விடிந்ததும், அடுத்து என்ன நடக்க போகிறதுன்னும் நமக்கு தெரியாது. அடுத்தடுத்த நிமிடங்களுடைய சுவாரஸ்யம்தான் நாம் வாழும் இந்த வாழ்க்கை. அப்படி ஒரு நிகழ்ச்சிகளின் தொகுப்பாக, ஓர் உதவி இயக்குநர் எப்படி தன்னுடைய முதல் படத்தை இயக்க கஷ்டப்படுறார் என்பதைத்தான் படம் முழுக்க சுவாரஸ்யமான காட்சிகளாக நகர்த்தி இருந்தார் இராதாகிருஷ்ணன் பார்த்திபன்.

 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்'
'கதை திரைக்கதை வசனம் இயக்கம்'

அதற்கு முந்தைய தனது படங்களில், 'கையை காலா நினைச்சா, காலை என்னவா நினைப்ப' என எடக்குமடக்கான வசனங்கள் பேசி நடித்து வந்த பார்த்திபன், இந்தப் படத்தின் முழு அமைப்பையும் அந்த வசனம் போலவே குத்தலும் எள்ளலுமாக வடிவமைத்தார். கூடவே, இந்தப் படத்தின் சவாலான கருவிற்கு மிகத்திறமையான திரைக்கதையை அமைத்திருந்தார். அந்தத் திரைக்கதைக்கான களம் மிகவும் சிக்கலானது. அதை எப்படி இலகுவாக்கினார் என்றால், படம் முழுக்க படத்தை பார்க்கும் பார்வையாளனை ஒரு கதாபாத்திரமாக இருக்க வைத்தார். இப்போது, படத்தில் அவனின் பிரதிநிதிகள்தான் அவ்வப்போது வந்து பேசிவிட்டுச் செல்கிறார்கள். இப்படி முதலில் இருந்து கடைசி வரை மொத்தப் படத்தையும் பார்வையாளனுக்கும் இயக்குநருக்கும் இடை‌யிலான ஒரு விளையாட்டுக் களமாக மாற்றியதில்தான் அடங்கியிருக்கிறது பார்த்திபனின் திரைக்கதை மேஜிக்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

'சீனு'வாக வருகிற தம்பி ராமையா, தான் வருகின்ற எல்லாக் காட்சிகளையும் நான்-ஸ்டாப்பாக கலகலப்பாக்கி கொண்டே இருந்தார். இந்தப் படத்தில் வரும் அனைத்துக் கதாபாத்திரங்களையும் தராசின் ஒரு பக்கத்தட்டில் வைத்துவிட்டு, இன்னொரு பக்கம் தம்பி ராமையாவை மட்டும் ஏற்றினால் கூட, தட்டு அவர் பக்கம்தான் சாயும். அப்படியொரு நிறைவான நடிப்பை தந்திருந்தார் தம்பி ராமையா.

 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்'
'கதை திரைக்கதை வசனம் இயக்கம்'

சொல்லப்போனால், படம் பார்த்துக்கொண்டிருந்த பார்வையாளர்களுக்கு, தம்பி ராமையா அடுத்து வாயைத் திறந்தாலே "ஹீரோவோட குடும்பத்துக்குள்ள அடுத்து என்ன மாதிரியான ஏழரையைக் கூட்ட போறாரோ..." என்று அவரின் 'சீனு' கதாபாத்திரம் மீது ஒரு வித ஆத்திரம் கிளம்பியது என்பது மறுக்க முடியாத உண்மை. அது கதாபாத்திரத்தை படைத்த பார்த்திபனுக்கும், அதை ஏற்று நடித்த தம்பி ராமையாவிற்கும் கிடைத்த வெற்றியாகவே எண்ணத் தோன்றுகிறது.

'இப்படைப்பிற்கு பெயரும் கருத்தும் தந்த படைப்பாளிகள், கலைஞர்கள், மற்றும் மாண்புமிகு அரசியல் பிரமுகர்கள் அனைவருக்கும் நன்றி' என்னும் வாசகத்தை போட்டு டைட்டில் கார்டிலேயே நக்கலடித்ததும், எழுத்தும், இயக்கமும் என்னும் கார்டுக்கு பதிலாக இந்தப் படத்தின் தலைப்பாய்… இராதாகிருஷ்ணன் பார்த்திபன் எனத் தொடங்கியதும், பார்த்திபனின் அக்மார்க் டரியல்கள். அதுவும், படத்தில் 'உள்ளுணர்வு’ என்று ஒரு விஷயத்தை வைத்து, அடுத்து வரப்போகும் திருப்பம் இதுதான் என்று சொல்லி கதையை நகர்த்த ஓர் அசாத்திய துணிச்சல் வேண்டும். அதையும், பார்த்திபன் லாகவமாக கையாண்டிருந்தார்.

 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்'
'கதை திரைக்கதை வசனம் இயக்கம்'

மிகவும் சீரியஸாகச் சிந்திக்க வைப்பதை விட, சட்டெனச் சிரிக்க வைத்து, பிறகு சிந்திக்க வைப்பது பார்த்திபனுக்கு கை வந்த கலை. ஏன், அவர் பாணியில் கால்மேல் வந்த கலை என்று கூட சொல்லலாம். 'இந்தா நீ கேட்ட உளுந்த வடை... கீழ உழுந்த வடை’, 'கையை காலா நினைச்சி கேக்கறேன்.. முதல்ல கால்லருந்து கையை எடு..', என இப்படியாக, படம் முழுக்க வசனங்களில் பார்த்திபன் ஒரு வான வேடிக்கையே நடத்தியிருந்தார்.

ஒரு படம் எப்படி இருக்க வேண்டும் என இந்தப் படத்தில் பலரிடமும் கருத்துக் கேட்டது, ஆரோக்கியமான முயற்சி. மக்களின் பல வகையான எதிர்பார்ப்புகளை அந்தக் காட்சிகளின் மூலம் வெளிப்படுத்திய பார்த்திபன், கோலிவுட்டில் தொடர்ந்து நல்ல கலைஞர்கள் உதாசினப்படுத்தப்பட்டு வரும் நிலையையும், கதை விவாதத்திற்கு இடமில்லாமல் குடும்பத்தை கவனிக்க முடியாமல் உதவி இயக்குநர்கள் வாய்ப்புக்காகப் போராடுவதையும் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் இடங்களிலெல்லாம் போகிற போக்கில் அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்திருந்தார்.

 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்'
'கதை திரைக்கதை வசனம் இயக்கம்'

மேலும், 'திருட்டுக்கதை, டாஸ்மாக் அதுதான் இப்போ தமிழ் சினிமா' என்றதோடு நில்லாமல் கதையைத் திருடி அல்லது டிவிடி பார்த்து கதை பண்ணும் இயக்குநர்களையும் தனக்கே உரிய பாணியில் கேலி செய்து, தற்போதைய தமிழ் சினிமாவின் அபத்தங்களையும் சினிமாவிற்குள் இருந்தே ஒரு சினிமாவாக இந்தப் படம் கடுமையாக தாக்கியது.

'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்தின் ஒரு காட்சியில் தம்பி ராமையா, 'எனக்கு இவ்வளவு திறமை இருக்குடா. ஆனா, சினிமாவுல ஜெயிக்கிறதுக்கு லக்கு வேணுமாமே. லக்குக்கு நான் எங்க போவேன்' எனச் சொல்வார். இந்தக் காட்சியில் வெறும் வாய் மட்டும்தான் தம்பி ராமையாவுடையது. அந்த வார்த்தையும் வலியும் பார்த்திபனுடையது. கிட்டத்தட்ட, அந்த நேரத்தில் பார்த்திபனும் அதே நிலையில்தான் இருந்தார். 'குடைக்குள் மழை' போன்று நிறைய படங்கள், நிறைய முயற்சிகள் செய்திருந்தாலும், தான் நினைத்த வெற்றி கிட்டாதபோது, லக்குக்கு பார்த்திபன் மட்டும் எங்கே செல்வார்.

 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்'
'கதை திரைக்கதை வசனம் இயக்கம்'

அந்த நேரத்தில், லக்கை நம்பாமல் தான் வைத்திருந்த கதைகளை நம்ப ஆரம்பித்தார் பார்த்திபன். படத்தின் அறிமுகக் காட்சியில், 'இன்னொரு மனிதன் இல்லாமல் இந்த உலகத்தில் வாழ முடியாது' என்பதை சொல்லும் விஷால் சம்பந்தப்பட்ட காட்சி ஒரு கதை. டாப்ஸி வரும் அந்தக் குட்டி போர்ஷன் மட்டும் ஒரு கதை. அதேபோல, அந்தக் கணவன்-மனைவிக்குள் ரொமான்ஸ் மட்டுமே ஒரு தனிப்படம். எப்படி, ஓர் இயக்குநர் தன்னுடைய கடைசிப்படத்தை எடுக்கிறார் என்றால் தன்னிடம் இருக்கும் மீதக்கதைகளை எப்படியெல்லாம் ஒரு படத்தில் பயன்படுத்துவாரோ, அதேமாதிரி தன்னிடமிருந்த இருபது கதைகளை இந்த ஒரு படத்திற்காக மட்டுமே பயன்படுத்தினார் இயக்குநர் பார்த்திபன். மேலும், நூற்றாண்டுக்கால தமிழ் சினிமாவில் அதுவரை கதை விவாதம் பற்றிய காட்சிகள் படங்களில் வந்தது கிடையாது. ஒரு படத்திற்கான கதை ஒரு பத்துக்குப் பத்து அறையில் எப்படி தயாராகிறது என்பதை முதன்முறையாக தொட்டு, தெளிவாகப் பதிவு செய்தது இந்தத் திரைப்படம்தான்.

'தமிழ் சினிமாவுல, 'நம்ம வீட்டு தெய்வம்' படத்தில் வர்ற மாதிரி ஒரு பெப்பான இன்டர்வெல் பிரேக் இதுவரைக்கும் வந்ததே இல்லை', 'தேவர் ஃபிலிம்ஸ்ல மட்டனும் சிக்கனுமா போடுவாங்க', 'தேவரு ஒரே கதையை வச்சிக்கிட்டு ஒம்போது படம் எடுப்பாரு. அந்த ஒம்போது படத்துக்கும் ஒரே மியூசிக்தான். டடான்டன்.. டடான்டன்.. ஆடு ஓடுனாலும் அதேதான். பாம்பு ஓடுனாலும் அதேதான்' என ஏ.வி. மெய்யப்ப செட்டியாரையே தெரியாத இன்றைய தலைமுறையினருக்கு இப்படிப் பழைய கிளாஸிக் படங்களை மேற்கோள் காட்டியும், எவர்கிரீன் சினிமா கதைகளை சொல்லியும் நூற்றாண்டுக்கால தமிழ் சினிமாவுக்கு காலஎந்திரத்தில் போய் வந்த உணர்வை தந்தார் இயக்குநர் பார்த்திபன்.

 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்'
'கதை திரைக்கதை வசனம் இயக்கம்'

படம் வெளியாகி 25 வருஷம் கழிச்சு 'யாருய்யா அந்த டைரக்டருன்னு' கேக்குற பார்த்தியா அதுதான் ருத்ரய்யா என 'அவள் அப்படித்தான்' பட இயக்குநர் ருத்ரய்யாவை சிலாகித்தும், அம்மாவுக்கும் பொண்ணுக்கும் ஒரே சீன்ல லவ் வர்ற வைக்குற அபூர்வ ராகம் அவரு என பாலசந்தரை நினைவுகூர்ந்தும் தன் முன்னோடிகளின் சிறப்புகளை சரியான இடத்தில் பதிவு செய்தார் பார்த்திபன். அதே நேரத்தில் 'தாலின்னா என்னன்னு சின்ன குழந்தைக்குக் கூட தெரியும். ஆனா, ’சின்னத்தம்பி’ படத்துல பிரபுவுக்கு தெரியாதே' என்று சொல்லி 'நம்ப முடியாததை நம்ப வைக்கறவன்தான்டா பெரிய டைரக்டரு' எனத் தன்னோடு ஒரே காலகட்டத்தில் சினிமாவுக்கு வந்த சக இயக்குநர் பி.வாசுவையும் புகழ்ந்தார். கூடவே, 'எந்த ஊர்லயாவது ஈ பழி வாங்குமா? ஆனால், பழி வாங்கும்'னு 'நான் ஈ' படத்தின் இயக்குநர் ராஜமெளலி நம்ப வைத்ததையும், உலகில் தற்போது இல்லாத மிருகத்தை இருப்பதாக நம்ப வைத்து ஸ்பீல்பர்க் ஜூராசிக் பார்க் படத்தை எடுத்ததையும் சொல்லி, தனது துறையில் இருக்கும் சக இயக்குநர்களின் திறமைக்கு உதாரணங்களாகச் சொல்லி மிகவும் ரசிக்கும்படி படமாக்கியிருந்தார் பார்த்திபன்.

இந்தப் படத்தில் அனைத்துத் தரப்பு மக்களாலும் வெகுவாகப் பாராட்டப்பட்ட ஒரு விஷயம், தமிழ் - தக்ஷா சம்பந்தப்பட்ட ரொமான்ஸ் காட்சிகள். ரொமான்ஸுக்கு பிரசித்தி பெற்ற இயக்குநர் பாரதிராஜாவே படத்தைப் பார்த்து விட்டு, 'இந்தப் படத்துல ரொமான்ஸ் போட்டு பிச்சித்தள்ளிட்டய்யா. அவங்களை பார்க்கும்போது எனக்கே ரொம்ப பொறாமையா இருந்துச்சுயா' எனப் பார்த்திபனை மனதாரப் பாராட்டினார். மேலும், பாக்யராஜிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிவிட்டு பின்பு இயக்குநரானவர் பார்த்திபன்.

 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்'
'கதை திரைக்கதை வசனம் இயக்கம்'

இந்தத் திரைப்படத்தை பார்த்துவிட்டு, இயக்குநர் பாக்யராஜ் தனது சிஷ்யன் பார்த்திபனுக்கு ஒரு கடிதம் எழுதினார். 'பாசமுள்ள சிஷ்யன் பார்த்திபனுக்கு பாக்யராஜ் எழுதுவது' எனத் தொடங்கும் அந்தக் கடிதத்தில், 'லேட்டஸ்டிலும் லேட்டஸ்ட்டான உன் படத்தை பார்த்து நான் பொறாமைப்பட்டேன் என்பது நிதர்சனமான உண்மை' என மனதார படத்தை பாராட்டி எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தை கங்காருவுடன் ஒப்பிட்ட பார்த்திபன், 'ஆயுட்காலம் முழுக்க மனதிலேயே இந்தக் கடிதத்தை சுமப்பேன்' எனச் சொல்லி நெகிழ்ந்தார்.

இந்தப் படத்தை எந்தளவிற்குப் புதுமையாக விளம்பரப்படுத்த முடியுமோ, அந்தளவிற்குப் புதுமையாக படத்தை விளம்பரப்படுத்தினார் பார்த்திபன். 'கதையே இல்லாமல் ஒரு படம்', என ஆரம்பித்து, அதற்கு சிகரம் வைத்தது போல், படத்தின் முதல் நாள் விளம்பரத்தில் 'கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் படத்தோடு இணைந்து வெளியான அஞ்சான் படத்தின் டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் இந்தப் படத்திற்கு வாங்க' என விளம்பரம் செய்திருந்தார்.

மாஸ் ஹீரோ ஃபார்முலாவை உடைத்ததா அஜித்தின் `நேர்கொண்ட பார்வை’..?

பார்த்திபன், தான் அறிமுகமான காலந்தொட்டே நீண்ட காலமாக தமிழ் சினிமாவில் ஏதாவது ஒன்றை புதிதாகச் செய்ய வேண்டும் என்று முயன்று வந்திருக்கிறார். பல சமயங்களில் அந்த முயற்சிகள் ஏதோ ஒரு காரணத்தால் முழுமையடையாமல் போயிருக்கின்றன. இந்த நிலையில்தான், தான் அதற்கு முன்பு செய்த பிழைகளையெல்லாம் திருத்திக்கொண்டு, இவ்வளவு சிக்கலான ஒரு கதையை இவ்வளவு தெளிவாக பார்த்திபன் சொன்னார். ஆனால், இந்தப் படத்தை ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் இப்படி ஒரு படத்தை எடுப்பதற்குத்தான் பார்த்திபன் இவ்வளவு காலம் போராடியிருக்கிறாரோ என்பதும் மனதில் தோன்றாமலில்லை. கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்திற்கு பிறகு, கோடிட்ட இடங்களை நிரப்ப கொஞ்சம் தவறியிருந்தாலும், இனி அணியும் 'ஒத்த செருப்பு' அவருக்கு மீண்டும் கை கொடுக்க வாழ்த்துகள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு