Published:Updated:

`இது கையில ரிமோட் கெடைச்சா  அம்புடுதேன்!' - பாட்டி, பேரன்களை பிணைத்துப்போட்ட ஜீ பூம்பா! #53YearsOfPattanathilBhoodham

'பட்டணத்தில் பூதம்'
'பட்டணத்தில் பூதம்'

`பட்டணத்தில் பூதம்' வெளியாகி 53 வருடங்கள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அந்தப் படத்தைப் பற்றி ஒரு ரீவைண்ட்!

"இப்ப எல்லாம் என்ன பாட்டு வருது? ஒண்ணுகூட நல்லா இல்ல. அந்தக் காலத்து பாட்டெல்லாம் எப்புடி இருக்கும் தெரியுமா? உங்க தாத்தனுக்கு இந்தப் பாட்டுத்தேன் ரொம்பப் புடிக்கும்" என்று நம் வீட்டில் இருக்கும் பாட்டி சொல்லும் அந்தப் பாடல் 90'ஸ் கிட்ஸாகிய நமக்கும் 2கே கிட்ஸாகிய நம் சகோக்களுக்கும் நிச்சயம் பரிட்சயமாகி இருக்காது. `இந்தப் பாட்டு முடியுற வரை கொஞ்ச நேரம் சும்மா இருக்கியா?' எனப் பாட்டிகள் செல்லமாகக் கடிந்துகொள்ளும் பேரன்களில் நானும் ஒருவன்.

``ஒரு துப்பாக்கி கையில் எடுக்காதே, எந்தத் தோட்டாவும் என்ன துளைக்காதே!" - கமல் சொல்லி அடித்த `அபூர்வ சகோதரர்கள்'

ரிமோட்டில் சேனலை மாற்றிக்கொண்டே வரும்போது ஏதாவது ப்ளாக் அண்ட் வொயிட் கலர் தெரிந்தால் `அது என்னனு வை பார்க்கலாம்' என்பார். அப்படி அந்த ப்ளாக் அண்ட் வொயிட் படங்கள் ஒளிபரப்பாகும் சேனல்களை வைத்த ஓரிரு நிமிடங்களில் அந்தப் படத்தின் மொத்தக் கதையையும்... அதை டூரிங் டாக்கீஸில் பார்த்திருந்தால் அந்த அனுபவத்தையயும் சேர்த்து சொல்ல ஆரம்பித்துவிடுவார். ஆம். மற்ற பாட்டிகளைப்போல் என் பாட்டியும் அந்தக் காலத்து சினிமாவின் தீவிர ரசிகை. அப்படியொரு நாள் ரிமோட்டை வைத்து டிவியில் `வாம்மா மின்னல்' என்பதுபோல் சேனல்களை மின்னல் வேகத்தில் மாற்றிக்கொண்டிருந்தேன். `எதுக்கு அந்த டிவி பொட்டியை இப்படி பாடா படுத்துக்கிட்டிருக்க?' எனப் பாட்டி சொன்னதும் டிவியின் மேல் இறக்கப்பட்டு சேனல் பட்டனில் இருந்து கை எடுத்தேன். அப்போது திரையில், ஒரு ஜாடிக்குள் இருந்து புகை வரும் காட்சி. `என்னடா இது?' என்று சேனலை மாற்றாமல் ஒரு நிமிடம் அதை வெறித்துப் பார்த்தேன். நான் அப்படிப் பார்ப்பதை கவனித்த பாட்டி, வழக்கம் போல படத்தின் பெயர், நடிகர்கள் யார், என்ன கதை என ஆரம்பித்தார். ஆனால், என் காதில் ஒலித்தது என்னவோ `படம் முழுக்க ஒரு பூதம் வரும்' என்பது மட்டும்தான். அப்படியே உட்கார்ந்தவன்... படம் முழுக்க பார்த்துவிட்டுதான் எழுந்தேன். அப்போதிலிருந்து இப்போது வரை அந்தப் படம் டிவியில் போட்டால் சேனலை மாற்ற மனம் வராது. அப்படி `பட்டணத்தில் பூதம்' படமும் அதில் வரும் `ஜீ பூம் பா'வும் என் ஆல் டைம் ஃபேவரைட்!

'பட்டணத்தில் பூதம்'
'பட்டணத்தில் பூதம்'

1964-ல் வெளியான `Brass Bottle' என்கிற அமெரிக்க படத்தின் தழுவல்தான் `பட்டணத்தில் பூதம்'. ஜெய்ஷங்கர், நாகேஷ், கே.ஆர்.விஜயா, வி.கே.ராமசாமி, வி.எஸ்.ராகவன், பாலாஜி எனப் படத்தில் இருக்கும் அனைவரும் காலத்தால் அழிக்க முடியாத கலைமாந்தர்கள்! இத்தனை நடிகர்கள் இருந்தாலும் ஜீ பூம்பா எனும் பூதமாக வரும் ஜாவர் சீதாராமன்தான் படத்தின் ஹீரோ. இப்படத்தின் கதையாசிரியரும் இவரே. எம்.வி.ராமன் என்பவரின் இயக்கத்தில் 1967-ல் வெளியாகி அந்தக் காலத்து ப்ளாக்பஸ்டர் ஆனது அப்படம். படத்தின் டைட்டில் கார்டும் அதன் பின்னணியில் ஒலிக்கும் இசைக்குமே நான் ரசிகனாகிவிட்டேன். ரயிலில் எதார்த்தமாக சந்திக்கும் நாயகியை இம்ப்ரஸ் செய்ய கிட்டாரை தூக்கும் ஹீரோக்களைப் பார்த்து ரசித்த நமக்கு, இதன் ஓப்பனிங் சீன் கொஞ்சம் காமெடியாகத்தான் இருந்தது. ஆனால், அவை அந்தக் காலத்தில் அப்ளாஸ் வாங்கிய ரொமான்ஸ் காட்சிகளாம்.

பம்பாயில் நடந்த கூடைப் பந்து விளையாட்டில் வெற்றிகண்டு திரும்பும் ஹீரோ பாஸ்கர் (ஜெய்சங்கர்), பூனாவில் நடந்த பாட்டுப்போட்டியில் பரிசு வென்று திரும்பும் ஹீரோயின் லதா (கே.ஆர்.விஜயா). இருவரும் ரயிலில் ஒரே கம்பார்ட்மென்டில் பயணிக்கிறார்கள். அவர்களை நெருக்கமாக்குகிறது ஓர் கரப்பான்பூச்சி. அக்காலத்தில் மட்டுமல்ல, எக்காலத்துக்கும் கரப்பான்பூச்சி ஓர் அருவருப்பான காதல் தூதுவன்தான்.

இன்னொரு பக்கம் படகில் பக்கெட் வைத்து குளித்துக்கொண்டிருக்கும் செகண்ட் ஹீரோ சீசர் சீனுவின் இன்ட்ரோ (நாகேஷ்). அவரின் காதலி பெயர் சரோ (ரமா பிரபா). இவர்களின் காதலுக்கு சரோவின் மாமா `பிஸ்டல்' பாண்டிதான் (ஆர்.எஸ்.மனோகர்) வில்லன். லதாவின் அப்பா தங்கவேலு (வி.கே.ராமசாமி) ஏலத்தில் எடுத்து வந்த ஜாடி அலுவலகத்துக்கு வந்த பிறகுதான், தொழிலில் நஷ்டமாகிறது. அந்த ஜாடியை என்ன பண்ணலாம் என யோசித்துக்கொண்டிருந்த சமயத்தில் முத்தமிழ் மன்றத்தில் இருந்து கவிதைப் போட்டிக்கான நன்கொடை கேட்டு வர, முதல் பரிசுக்கு இந்த ஜாடியைக் கொடுப்பதாக வாக்கு கொடுக்கிறார் தங்கவேலு.

'பட்டணத்தில் பூதம்'
'பட்டணத்தில் பூதம்'

அந்த ஜாடி 3,000 வருடங்கள் பழைமையானது. அந்தப் போட்டியில் வென்று ஜாடியை வீட்டிற்கு எடுத்து வருகின்றனர் பாஸ்கரும் சீனுவும். லதா அப்பாவின் 60-வது பிறந்தநாளுக்கு இந்த ஜாடியை அன்பளிப்பாகக் கொடுக்க நினைக்கின்றனர். ஆனால், அவரோ இவர்களை அவமானப்படுத்தி திருப்பி அனுப்பிவிடுகிறார். வீட்டிற்கு வந்தவுடன் இந்த ஜாடியில் என்னதான் இருக்கிறது என்று பார்க்கும் ஆசையில் மிகவும் கஷ்டப்பட்டு அதைத் திறக்கின்றனர். உள்ளே இருந்து பல நிற புகைகளுடன் ஜீ பூம்பா (ஜாவர் சீதாராமன்) எனும் பூதத்தின் என்ட்ரி... 3,000 வருடங்களக ஜாடிக்குள் அடைந்து கிடந்த தனக்கு விடுதலை கொடுத்ததற்காக இந்த இருவர்களை எஜமானர்களாக ஏற்கும் ஜீ பூம்பா, அவர்களுக்கு எப்படி உதவி செய்கிறார், அவரால் இவர்கள் சந்திக்கும் பிரச்னைகள், அதன்பின் இருவரின் வாழ்க்கை என்ன ஆனது என்பதை ஃபேன்டஸியும் காமெடியும் கலந்து சுவாரஸ்யமாகச் சொல்லியடித்திருக்கும் படம்.

தங்கவேலுவின் பிஸினஸ் பார்ட்னரான சபாபதியின் (வி.எஸ்.ராகவன்) மகன் மணி (பாலாஜி) வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்ததையடுத்து அவருக்கும் லதாவுக்கும் திருமணம் செய்து வைக்கத் திட்டமிடுகிறார்கள். பணத்தின் மேல் ஆசைபிடித்த தங்கவேலுவும் சபாபதியும் வெளியில் நண்பர்களாகக் காட்டிக்கொண்டாலும் மனரீதியாக, `உன்னைவிட நான்தான் பெரியவன்' என்ற மிதப்பில் இருக்கின்றனர். `ரப்பர் புரொடக்‌ஷன்ஸ்' என்ற சினிமா கம்பெனி நடத்துவதாகச் சொல்லி அண்டர்கவர் ஆபரேஷனில் கள்ளக்கடத்தல் செய்யும் கூட்டம் மணியுடையது. அந்தக் கூட்டத்தின் நம்பர் 2 ஃபாரின் ரிட்டர்னே மணிதான். நம்பர் 3 `பிஸ்டல்' பாண்டி, சரோவின் மாமா. 'நம்பர் 1 யார்?' என்பதை சஸ்பென்ஸாகவே வைத்திருப்பார்கள். `தமிழ்ப் படம்' படத்தில் 'D' என்ற வில்லன் யார் என்பதை சஸ்பென்ஸாகவே வைத்திருப்பார்கள் அல்லவா? அதற்கு இந்தப் படம்தான் சீனியர்போல. தவிர, ஷூ ஹீல்ஸில் வைரத்தைக் கடத்துவார்கள். `அயன்' படத்தில் சூர்யா ஹீல்ஸில் வைரம் கடத்தும் சீனுக்கு கைதட்டி விசிலடித்தவர்களுக்கு, `இதை அப்பவே பண்ணிட்டீங்களா' என்ற மைண்ட் வாய்ஸ் கேட்கும். கே.ஆர்.விஜயாவுடனான காதல் காட்சிகளில் சாக்லேட் பாயாக கலக்கும் ஜெய்சங்கர், சண்டைக் காட்சிகளில் அவருக்கு உரிய முகபாவனையிலும் உடல் மொழியிலும் அசத்தியிருப்பார்.

'பட்டணத்தில் பூதம்'
'பட்டணத்தில் பூதம்'

ஹோம்லியான பெண்ணாக வரும் ஹீரோயின் கே.ஆர்.விஜயாவுக்கு நீச்சல் குளத்தில் ஒரு பாடல் உள்ளது. நாகேஷின் எதார்த்த நடிப்பு, உடல்மொழி, கவுன்டர்கள் ஆகியவை மிகப்பெரிய ப்ளஸ். `பிஸ்டல்' பாண்டியுடன் இவர் செய்யும் சண்டை, ஜீ பூம்பாவிடம் திருப்பதி லட்டு கொண்டு வரச் சொல்லி கேட்பது, டான்ஸ் ஆகியவற்றைப் பார்க்கும்போது நம்மை அறியாமலே உதட்டில் புன்முறுவல் வரும். வி.கே.ராமசாமி - நாகேஷ் வரும் காட்சிகள் அனைத்தும் கண்களுக்கு விருந்து. போட்டிபோட்டுக்கொண்டு இருவரும் நடிப்பில் அசத்தியிருப்பார்கள். பாலாஜியின் தோள்பட்டை குலுக்கும் மேனரிஸமும், ஃபாரின் ரிட்டர்ன் என்பதால் Wonderful, Beautiful, Splendid, Welldone, Fantastic என அவர் பயன்படுத்தும் வார்த்தைகளும் அந்தக் கேரக்டர் மீது நிஜமாகவே கடுப்பு வர வைக்கிறது. அப்படித் தனக்கான கேரக்டரை கச்சிதமாகச் செய்திருப்பார் பாலாஜி.

புத்தகத்தில் அச்சிடப்பட்டிருந்த கார், நிஜத்தில் பொம்மைக் காராக மாறி, பின் போர்டிக்கோவில் பெரிதாகி நிற்கும் காட்சி, கூடைப்பந்து போட்டியில் பாஸ்கரும் சீனுவும் ஷூட் செய்யும் காட்சி, ஹெலிகாப்டருக்கு நிகராகப் பறக்கும் காரில் ஜெய்சங்கர் செல்வது உள்ளிட்ட கிராபிக்ஸ் காட்சிகளைப் பர்க்கும்போது அந்தக் காலத்திலேயே எவ்வளவு அட்வான்ஸாக இருந்திருக்கிறார்கள் என்ற ஆச்சர்யத்தை ஏற்படுத்தும். இதுபோன்ற தந்திர காட்சிகளிலும் ஒளிப்பதிவிலும் பிண்ணியிருப்பார் ரவிகாந்த் நிகாய்ச். செய்தித்தாளில் இருக்கும் `திருவிளையாடல்', `எங்க வீட்டுப் பிள்ளை' படங்களின் போஸ்டரில் ஜீ பூம்பா அந்தப் படங்களைப் பார்த்துக்கொண்டிருப்பார். அதைக் கண்டு ஷாக்கான சீனு, "ஏம்பா ஜீ பூம்பா... நீ ரொம்ப அக்கிரமம் பண்றப்பா. இப்படி யாரும் தியேட்டருக்குப் போகாம, பணம் கொடுத்து டிக்கெட் வாங்காம, பேப்பர்ல வர்ற விளம்பரத்துல ஓசியிலேயே படத்தைப் பார்த்துட்டா, படம் எடுக்கிறவனோட கதி என்னாவுறது?" என்று அப்பவே பைரஸி பற்றிய வசனமெல்லாம் இருக்கும்.

'பட்டணத்தில் பூதம்'
'பட்டணத்தில் பூதம்'

`என்ன வேடிக்கையான மனிதர்கள்? செத்து உலர்ந்துபோன ஒரு தோல் பந்து. அதைக் கூடையிலே தள்ள உயிருள்ள மனிதன் தன் உடலை வறுத்தி உயிரைவிட்டு ஓடுகிறான். இவ்வளவு சிரமம் எதற்காக? எல்லாம் இந்த சிறிய வெள்ளிக்கோப்பைக்காக... 20-ம் நூற்றாண்டின் மனிதர்களின் திட்டங்கள், ஆசைகள் எல்லாமே இப்படிதான்', `இப்போ இருக்கிற தலைமுறை காதலுக்காக ரொம்ப நேரத்தை வீணடிக்கிறீங்க', `கோடீஸ்வரர்களுடனான சிநேகிதம்தான் நம் பிஸினஸிக்கான கேப்பிடல்' போன்ற வசனங்கள் கவனம் பெறுகின்றன. தானே எழுதி நடித்ததால் ஜீ பூம்பா கேரக்டரில் ஜாவர் சீதாராமன் பயங்கரமாக ஸ்கோர் செய்திருப்பார். `எங்களோடவே இருங்க ஜீ பூம்பா. எங்களைவிட்டு போகாதீங்க' என்று பாஸ்கரும் சீனுவும் சொல்லும்போது, `இந்தப் பட்டணத்தில் என்னுடைய உதவி நிறைய பேருக்கு தேவையா இருக்கு' என்று சொல்லி ஜீ பூம்பா கிளம்புவார். இதை எங்கேயோ கேட்டதுபோல் இருக்கிறதா? `சாட்டை' க்ளைமாக்ஸில் சமுத்திரக்கனி பேசும் வசனம்தான். தயாளன் சாரை வழியனுப்பி வைத்ததைப்போல ஜீ பூம்பாவையும் வழியனுப்பி வைப்பார்கள்.

"மாதவன், ஷாலினிகிட்ட லவ் சொல்ற அந்த ட்ரெய்ன் சீன்...!"- ஸ்வர்ணமால்யா ஷேரிங்ஸ் #20YearsofAlaipayuthey
மொழிகளுக்கு அப்பாற்பட்டது சினிமா. அதுவும் ஃபேன்டஸி ஜானருக்கு மொழி, காலம் என எந்த எல்லைகளும் கிடையாது. ஜாலியான பழைய படம் ஒன்றைப் பார்க்க விரும்பினால், நிச்சயம் இந்தப் `பட்டணத்தில் பூதத்'தைத் தேய்க்கலாம்; ஃபன் கியாரன்டி! ஜீ... பூம்...பா..!
அடுத்த கட்டுரைக்கு