Election bannerElection banner
Published:Updated:

நடிகர் விவேக்... அரசாங்க ஊழியர் ஜனங்களின் கலைஞனாக மாறியது எப்படி? #RIPVivek

நடிகர் விவேக்
நடிகர் விவேக்

மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, நடிகர் விவேக் இன்று காலை காலமாகிவிட்ட செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது.

தமிழ் சினிமாவில் உள்ள நகைச்சுவை நடிகர்களின் வரலாற்றில் 'விவேக்' என்ற பெயருக்கு அத்தனை வலிமை இருக்கிறது. பொதுவாகவே, காமெடி நடிகர்களை மக்களை எளிதில் கவர்ந்துவிடுவார்கள். அதில் விவேக் கொஞ்சம் ஸ்பெஷல். மக்களுக்கு தேவையான சீர்திருத்த கருத்துக்களை தன்னுடய படங்களில் பேசியவர். அந்த விஷயம்தான் விவேக்கை ஜனங்களின் கலைஞன், சின்னக்கலைவாணர் ஆகிய பெயர்களை வாங்கிக்கொடுத்தது. மக்களுக்கான பல விஷயங்களை திரையில் தன்னுடைய நகைச்சுவை உணர்வோடு சேர்த்து பேசிய நடிகர் விவேக் இனி நம்மோடு இல்லை என்ற செய்தி அனைவரையும் ஆழ்ந்த துயரத்தில் தள்ளியிருக்கிறது.

கோவில்பட்டியில் பிறந்தவர், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் எம்.காம் படிப்பை முடித்தார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் வெற்றி பெற்று அரசாங்க ஊழியராக தலைமை செயலகத்தில் பணியாற்றினார். ஆனால், நடிப்பின் மேல் அதீத ஆர்வம் இருந்ததால், அரசு பணியில் இருந்தாலும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் மெட்ராஸ் ஹியூமர் கிளப்பில் இணைந்து பணியாற்றினார். இயக்குநர் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான 'மனதில் உறுதி வேண்டும்' திரைப்படத்தில் சுஹாசினியின் தம்பியாக திரையில் அறிமுகமானார்.

நடிகர் விவேக்
நடிகர் விவேக்

இந்தப் படத்தில் அவர் நடித்த முதல் ஷாட் என்ன என்பதை சமீபமாக ஆனந்த விகடன் இதழுக்காக பேசியிருந்தார். அதில், "என்னுடைய முதல் படம், பாலச்சந்தர் சார் இயக்கத்துல 'மனதில் உறுதி வேண்டும்'. அந்தப் படத்துல நான் நடிச்ச முதல் நாளை பத்தி பேசுறது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. தி.நகர் ரங்கநாதன் தெரு பக்கத்துல ராமேஸ்வரம் தெருனு ஒண்ணு இருக்கு. அங்க காமக்கோடி வீடுனு ஒரு தனி வீட்டுலதான் ஷூட்டிங். இப்போ அந்த இடம் அப்பார்ட்மென்டா மாறிடுச்சு. அந்த வீட்டு மாடில இருந்து தடதடனு இறங்கி வந்து 'அக்கா வர்றாங்க அக்கா வர்றாங்க'ன்னு சொல்லணும். அப்புறம், சுஹாசினி உள்ள வருவாங்க. எப்படியிருக்கனு எல்லாம் கேட்பாங்க. அதுக்கெல்லாம் பதில் சொல்றதுதான் நான் நடிச்ச முதல் ஷாட். எங்களுடைய டயலாக் எல்லாம் பேசி முடிச்சவுடன் நான் கேமராவைப் பார்த்து 'ஓகேவா சார்?'னு கேட்டுட்டேன். கே.பி சார் டென்ஷனாகி 'அட அறிவுக்கெட்டவனே'னு திட்டிட்டு அப்புறம் கட் சொன்னார். சுஹாசினி என்கிட்ட, 'நம்ம டயலாக் முடிஞ்சாலும் டைரக்டர் 'கட்'னு சொல்லுற வரைக்கும் நம்ம அந்தக் கேரக்டர்லயே இருக்கணும்'னு சொல்லிட்டு இருந்தாங்க. அப்போ டைரக்டர் வேகமா என்கிட்ட வந்தார். மறுபடியும் ஏதோ திட்டப்போறார்னு நினைச்சேன். ஆனா, அவர் என் காலை பார்த்துட்டு, 'என்னடா பண்ணி வெச்சிருக்க?'னு கேட்டார். வேகமா படிக்கட்டுல இருந்து இறங்கி வரும்போது கால் நகம் பெயர்ந்து ரத்தம் வந்திருந்தது. பாலச்சந்தர் சார் எவ்வளவு பெரிய ஜாம்பவான். ரஜினி, கமல்னு ரெண்டு உச்ச நட்சத்திரங்களை உருவாக்குனவர் இப்போ நம்மளை இயக்குறார்னு சந்தோஷம் கலந்த பதற்றத்துல வேகவேகமா இறங்கி வந்ததுல அப்படியாகிடுச்சு. உடனே, மேக்கப் டீமை கூப்பிட்டு மீசைக்கு ஒட்டுற பசையை கொஞ்சம் அந்தக் காயத்துல போட்டுவிட்டாங்க. அப்புறம்தான் ரத்தம் நின்னுச்சு. 'முதல் படத்துல அதுவும் முதல் ஷாட்லேயே ரத்தம் சிந்தி நடிக்கிறான்டா இவன்'னு சொல்லி சிரிச்சார் கே.பி சார். என்னுடைய முதல் ஷாட்ல திட்டும் வாங்கிட்டேன், பாராட்டும் வாங்கிட்டேன். அப்படி ஸ்டார்ட்டான இந்த வண்டி இத்தனை வருஷமா ஓடிக்கிட்டு இருக்கு. மோதிரக் கையால குட்டு வாங்கியிருக்கோம்ல..!" என்றார் மகிழ்ச்சியாக.

பாலச்சந்தர் கண்டெடுத்த முத்துக்களில் மிக முக்கியமானவர் விவேக். அடுத்தடுத்து அவருடைய இயக்கத்தில் நடித்துக்கொண்டிருந்தவருக்கு, பின் ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்தன. சின்ன படம், பெரிய படம் என்று பார்க்காமல் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் மிகச் சரியாக பயன்படுத்தி நகைச்சுவை நடிகராக உச்சத்திற்கு சென்றார். 1987-ம் ஆண்டு அறிமுகமாகியிருந்தாலும் 2000-களின் தொடக்கத்தில் இருந்து விவேக் இல்லாத படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம் என தொடங்கி இப்போதைய இளம் நாயகர்ளான ஹிப்ஹாப் ஆதி, ஹரிஷ் கல்யாண் வரை தொடர்ந்து உற்சாகமாக பயணித்து வந்தார். விஜய், அஜித்துடன் தொடர்ந்து எக்கச்சக்கமான படங்களில் பணியாற்றினார்.

நடிகர் விவேக்
நடிகர் விவேக்

படங்களின் பெயர்கள் மக்களின் நினைவில் இல்லாமல் போனாலும் இவருடைய நகைச்சுவை காட்சியை சொன்னால் உடனுக்குடன் நினைவுக்கு வருமளவிற்கு இவரது நடிப்பும் நகைச்சுவை உணர்வும் தனித்துவம் கொண்டது. வடிவேலு ஒரு பக்கம் உச்சத்தில் சென்று கொண்டிருக்க, மறு பக்கம் தனக்கான பாணியில் பரபரப்பாக இயங்கி வந்தவர், விவேக். கருத்துக்களுடன் கூடிய நகைச்சுவை காட்சிகளை எழுதி நடிப்பதுதான் விவேக்கின் ஸ்டைல்.

எம்.ராதா, என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோரைத் தொடர்ந்து, சீர்திருத்த கருத்துக்களை தன்னுடைய வசனங்களில் பேசிவந்தார். 2019-ம் ஆண்டு விஜய்யுடன் 'பிகில்', அஜித்துடன் 'விஸ்வாசம்' ஆகிய படங்களில் நடித்தார். நீண்ட நாள்களுக்கு பிறகு, விஜய், அஜித் ஆகியோருடன் இணைந்து நடித்திருந்தார். காமெடி கேரக்டர்களில் தூள் கிளப்பிவந்த விவேக், சமீபமாக குணச்சத்திர கதாபாத்திரங்களில் பயங்கரமாக ஸ்கோர் செய்தார்.

'தாராள பிரபு' படம் இந்தியில் வெளியாகி ஹிட்டான 'விக்கி டோனார்' படத்தின் ரீமேக் என்றாலும் டாக்டர் கண்ணதாசன் என்ற கேரக்டரில் இவருடைய பங்கு அபாரமானது. அந்தப் படத்தை மிக அழகாக தாங்கிச் சென்றது விவேக்தான். இவர் லீட் ரோலில் நடித்த 'வெள்ளை பூக்கள்' திரைப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

30 வருட சினிமா பயணத்தில் இன்னும் கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கவேயில்லை. 'இந்தியன் 2' படத்தில்தான் முதன்முதலாக கமலுடன் இணைந்தார். குணசத்திர கதாபாத்திரங்களில் நடிக்க நிறைய படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இளம் இயக்குநர்கள், இளம் நாயகர்கள் என இந்த காலத்துக்கு இளைஞர்களோடு பயணிப்பது விவேக்கிற்கு மிகவும் பிடிக்கும். மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமிற்கு மிகவும் நெருக்கமானவர். 'கிரீன் கலாம்' என்ற பெயரில் தொடர்ந்து, லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு வந்தார். அவருடைய இலக்கு தமிழ்நாட்டில் ஒரு கோடி மரக்கன்றுகளை நட வேண்டும் என்பதுதான்.

நடிகர் விவேக்
நடிகர் விவேக்

இயற்கை மீது எவ்வளவு நேசமும் அக்கறையும் உள்ளதோ அதே அளவிற்கு, இசை மீது அதீத காதல் கொண்டவர். இளையராஜாவின் தீவிர ரசிகர். சமீபமாக, அவருடைய புது ரெக்கார்டிங் ஸ்டூடியோவுக்கு சென்று, இளையராஜாவின் பாடல்களை இவர் பியானோவில் வாசித்த வீடியோவைக் காட்டி வாழ்த்து பெற்று வந்தார். எல்லா காமெடி நடிகர்களிடம் நட்பு பாராட்டி வரும் விவேக், நல்ல நடிகர் மட்டுமல்ல நல்ல மனிதர் என்பதுதான் திரைத்துறையில் இருக்கும் பலரின் கருத்தாகவும் இருக்கிறது. இதுவரை, ஆறு முறை தமிழ்நாடு மாநில விருதுகளை பெற்றுள்ளார். 2009-ம் ஆண்டு இந்திய அரசு பத்மஶ்ரீ விருதினை கொடுத்து கெளரவித்தது.

விவேகானந்தன் என்ற பெயரை சினிமாவுக்காக விவேக் என்று மாற்றினார். ஆனால், இவ்வளவு குறுகிய காலத்தில் அந்தப் பெயர் வரலாறாக மாறும் என யாரும் நினைக்கவில்லை. நேற்றைய முன்தினம் வரை அதே சிரித்த முகத்தோடு இருந்தவர், இனி நம்மோடு இல்லை என்று நினைக்க நெஞ்சம் மறுக்கிறது. விவேக் இனி ஜனங்களோடு இல்லாமல் போனாலும் எப்போதும் அவர் ஜனங்களின் கலைஞன்தான். அவருடைய நகைச்சுவை காட்சிகளும் அதில் இருக்கும் கருத்துகளும் என்றும் அழிவில்லை.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு