Published:Updated:

சிக்கல் எங்கே? தேவயானி பேசுகிறார் #AppExclusive

An Exclusive Interview - Devayani

சினிமாக்காரங்க குடும்பம் கண்ணாடி மாளிகை மாதிரி. அதுல சின்னக் கீறல்கூட விழாமப் பார்த்துக்கணும். 2003ல் அளித்த தேவயானியின் பேட்டி இதோ உங்களுக்காக...

Published:Updated:

சிக்கல் எங்கே? தேவயானி பேசுகிறார் #AppExclusive

சினிமாக்காரங்க குடும்பம் கண்ணாடி மாளிகை மாதிரி. அதுல சின்னக் கீறல்கூட விழாமப் பார்த்துக்கணும். 2003ல் அளித்த தேவயானியின் பேட்டி இதோ உங்களுக்காக...

An Exclusive Interview - Devayani

மல் - சரிகா, பார்த்திபன் - சீதா, ரகுவரன் - ரோகிணி என நட்சத்திரக் குடும்பங்களுக்குள் குழப்பங்கள்!

வாழ்க்கை முழுக்கக் கைகோத்து நடக்க ஆசைப்பட்டுக் கரம் பிடித்த வர்கள், இப்போது தனித்தனியே பிரிந்து வாழ்கிறார்கள்.

நட்சத்திரக் குடும்பங்கள் இப்படிச் சிதறுவது ஏன்? சிக்கல் எங்கே?

சமீபத்தில் திடீர்க் காதல் திருமணம் செய்துகொண்ட தேவயானி - ராஜ்குமாரன் கதையைக் கேளுங்கள்.

தன் கணவர் ராஜ்குமாரனுக்காக, தானே ஒரு படம் தயாரித்தார் தேவயானி. 'காதலுடன்' என்ற அந்தப் படம் ரிலீஸாகி மரண அடி வாங்கியது. லட்சக் கணக்கில் நஷ்டம்.... உடனே அடுத்த வதந்தி கிளம்பிவிட்டது.

An Exclusive Interview - Devayani
An Exclusive Interview - Devayani

எங்களோட 'காதலுடன்' படம் சரியாப் போகலை என்பது உண்மைதான். எக்ஸாம் டைம், கிரிக்கெட் சீஸன்னு படத்தை ரிலீஸ் பண்ணின நேரமே தப்பு. நஷ்டம்..... கஷ்டம் எல்லாமே உண்மை. எடுத்த படம் சரியா ஓடலைன்னா, டைரக்டரும் தயாரிப்பாளரும் சண்டை போடறது சகஜமா இருக்கலாம். ஆனா, நாங்க கணவனும் மனைவியுமா ஆயிட்டோமே.... ' பளீரெனச் சிரித்தபடியே தேவயானி காய்கறிகள் நறுக்கிக் கொண்டிருக்க, பாசமாக அவரைப் பார்த்துக்கொண்டிருந்தார் ராஜ்குமாரன்.

“ ஷூட்டிங் இல்லைனா வீட்ல என்னோட சமையல்தான். நான் கிச்சனுக்குள் வந்தாலே இவர் கலவரமாயிடுவார். ஏன்னா, நான் சமைக்கிறதை சாப்பிடறது பெரிய ரிஸ்க் இல்லையா? இன்னிக்கு சாம்பாரும் பொரியலும் பண்ணப் போறேன். டேஸ்ட் பார்க்கறீங்களா? " என்று தேவயானி சிரித்தார்.

"நான் பரபரப்பா நடிச்சிட்டிருந்துட்டுத் திடீர்னு கல்யாணம் பண்ணினபோது, அடடா.... இப்படி வாழ்க்கையைக் கெடுத்துட்டியேம்மா ' சில பேர் சொன்னாங்க. ஆனா, நடிச்சுப் பணம் சம்பாதிச்சுட்டே இருந்தா போதுமா? மனசுனு ஒண்ணு இருக்கே.

'உலகத்திலேயே நீதான் எனக்கு முக்கியம்'னு வீடு, உறவு, சினிமானு எல்லாத்தையும் உதறிட்டு, நம்பிக்கை யோட வந்தது நான் தானே?

நாங்க சந்தோஷமா இருந்தாலும் 'எப்படா தப்பு நடக்கும்? ' னு நம்மளைச் சுத்தி நாலு பேர் எப்பவும் நின்னுக் கிட்டே இருக்காங்க. அடுத்தவங்க கஷ்டத்தில் குளிர்காய நினைக்கும் கூட்டம் இங்கே நிறைய இருக்கு. யதார்த்தமா ஒரு நாள் இவர் வெளியில போய் ஓட்டல்ல சாப்பிட்டார்னா, 'பாருடா.. நாம பேசினது சரியாப் போச்சு. ரெண்டு பேருக்கும் புட்டுக்கிச்சு, பாத்தியா? தேவயானியோட சண்டை போட்டுட்டு, ராஜ்குமாரன் வெளியில வந்து சாப்பிடறாரு'னு சொல்லிடுவாங்க. அதுதான் சினிமா.

சினிமாவிலேயே கல்யாணம் பண்ணி, பிரச்னை வந்து இப்பப் பிரியறாங்கனு நியூஸ் வருதே... அது, அவங்க பர்சனல் விஷயம். எனக்கு என்ன தோணுதுன்னா, ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கறதுல எங்கேயோ ஓட்டை விழுந்திருக்கும். இந்த ஏப்ரல் ஒன்பதாம் தேதி வந்தா, எங்களுக்கு ரெண்டாவது கல்யாண நாள். ஒண்ணு தெரியுமா? நாங்க இதுவரைக்கும் பரஸ்பரம் பரிசுனு எதையுமே பரிமாறிக்கிட்டது கிடையாது. தினம் தினம் புதுசா காதலிக்கிறோம். அன்பா நாலு வார்த்தை, பாசமா ஒரு முத்தம் இருந்தா, அதுதான் பரிசு.

An Exclusive Interview - Devayani
An Exclusive Interview - Devayani

நல்ல நாள்னா, காளிகாம்பாள் கோயில் போய் அர்ச்சனை பண்ணிட்டு வருவோம். அவ்வளவு தான். கல்யாண நாள் அன்னிக்குத் தடபுடலா பரிசு கொடுத்துப் பாசம் காட்டிட்டு, மற்ற நாளெல்லாம் சண்டை போட்டுக்கிற எத்தனையோ தம்பதிகளை எனக்குத் தெரியும்.

கணவன் - மனைவிக்குள்ள நீ பெருசா.. நான் பெருசானு ஈகோ வரக்கூடாது. முக்கியமா சந்தேகம் வரவே கூடாது. அதுவும், சினிமாவில இருக்கிற குடும்பத்தில் இது ரெண்டும் கூடவே கூடாது! இன்னிக்கு நான் எங்கே இருப்பேன்னு அவரும், அவர் எங்கே இருப்பார்னு நானும் ஃபாலோ பண்ணக் கூடாது. அதுவும் இந்த சினிமா தொழில்ல எத்தனை வாய் இருக்கு? எல்லாத்தையும் காதுல வாங்கிட்டு, ' அப்படியா? ' னு யோசிச்சா அவ்வளவுதான்.... அடுத்த நிமிஷம் குடும்பம் நடத்த முடியாது. வாசல்ல செருப்பைக் கழட்டும்போதே, சினிமாவையும் விட்டுட்டுத்தான் உள்ளே வரணும். நீ புருஷன், நான் பெண்டாட்டி... அவ்ளோதான்!‘

ஏதோ நாங்க திடீர்னு ஓடிப்போய்க் கல்யாணம் பண்ணிட்டோம்னு தோணுமே தவிர, முடிவெடுக் கிறதுக்கு முன்னாலேயே நாங்க எல்லாத்தையும் பேசியாச்சு. முழுசா புரிஞ்சுக்கிட்டோம். சினிமான்னா இப்படி இருக்கும்னு ரெண்டு பேருக்கும் தெரியும். அதான் ரொம்ப முக்கியம். எத்தனையோ விஷயங்களை விட்டுட்டு நான் வந்தது எதுக்காக? இவரோட காதலுக்காகத் தானே... அந்த அன்புக்காகத்தானே.... அது எப்படித் தப்பாப் போகும்?

ரெண்டு பேருக்கும் சினிமாதான் தொழில். அதுல உள்ள பிரச்னைகள் ரெண்டு பேருக்கும் புரியும். ஒரு நாள் ஷூட்டிங் முடிஞ்சு லேட்டா நான் வீட்டுக்கு வந்தா, முதல்ல ' என்னம்மா ரொம்ப டயர்டா இருக்கியா? ஏதாவது சாப்பிடறியா? ' னு தான் இவர் கேட்பார். இவர் ஏதாவது டென்ஷன்ல இருந்தா, ' எங்கேயாவது வெளியில போயிட்டு வரலாமா? ' னு நான் கேட்பேன். ஒரு மணி நேரம் ரெண்டு பேரும் சும்மா கார்ல ஒரு ரவுண்டு போயிட்டு வந்தாலே போதும்... எல்லாப் பிரச்னைகளையும் மறந்து மனசு லேசாயிடும். சின்னச் சின்னதா சண்டைகள் வரும். எதையும் அடுத்த நாள் வரைகூட வளர விடமாட்டோம். சட்டுனு யாராவது ஒருத்தர் இளகிடுவோம். ரொம்ப சந்தோஷமான தருணங்களில் நான் அவரை அன்னூனா கூப்பிடுவேன் அன்னூனா அன்பானவர்னு அர்த்தம்.

சிக்கல் எங்கே? தேவயானி பேசுகிறார் #AppExclusive

அவர் என்னைச் ' செல்லம்'னு கூப்பிடுவார். இந்தப் புரிதலும் விட்டுக் கொடுத்தலும் எப்பவும் இருந்தா போதும்! சார்.. நாங்க ரெண்டு பேரும் தனியா இருக்கோம். எங்களுக்கு எந்த ஆதரவும் இல்லை. நாங்களேதான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம், படம் எடுத்தோம், வீடு கட்டறோம். அடுத்து, இன்னொரு படமும் தயாரிக்கப் போறோம். அதுக்கும் இவர்தான் டைரக்டர்.

தொடர்ந்து நாம ஒரே மாதிரி இருப்போம்னு சொல்ல முடியாது. இந்த வாழ்க்கையைக் கொடுத்ததே கடவுள்தான். அவர் கொடுக்கறதை வாங்கிட்டுப் போயிட்டே இருக்க வேண்டியது தான். அது போதும் எனக்கு! " என்ற தேவயானி சற்று நிமிர்ந்து உட்கார்ந்து, " இப்ப வந்து பார்த்துட்டீங்கள்ல......நாங்க சந்தோஷமாதான் இருக்கோம்னு எழுதுங்க.

வீட்டுக்கு வீடு வாசல்படிதான். சினிமாக்காரங்க குடும்பம் கண்ணாடி மாளிகை மாதிரி. அதுல சின்னக் கீறல்கூட விழாமப் பார்த்துக்கணும். இல்லேன்னா சில்லுசில்லா சிதறிடும். அதுல ரெண்டு பேரோட பொறுப்பும் இருக்கு! இங்கே சினிமா தம்பதிகள் பிரச்னை வந்து பிரியறதை நினைச்சாலே ரொம்ப வருத்தமா இருக்கு. தினமும் சாமி கும்பிடும்போது அவங்க எல்லாம் திரும்பவும் சந்தோஷமா சேர்ந்து வாழணும்னு கடவுள் கிட்டே நாங்க வேண்டிக்க றோம்.... ' ' என்றார், தேவயானி உணர்ச்சிவசப்பட்டு!

(13.04.2003 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)