Published:Updated:

புயலுக்கு பின்னே... - சுகன்யா #AppExclusive

An Exclusive Interview Sukanya

"கல்யாணம்ங்கிறது சின்ன வட்டம்.. அதுல சிக்குவதை விடவும்....''

Published:Updated:

புயலுக்கு பின்னே... - சுகன்யா #AppExclusive

"கல்யாணம்ங்கிறது சின்ன வட்டம்.. அதுல சிக்குவதை விடவும்....''

An Exclusive Interview Sukanya

‘என் வாழ்க்கையின் ஒவ்வொரு ஃப்ரேமையும் நேசிக்கிறேன் என்றெழுதப்பட்ட ஓவியர் சுகன்யா, ‘சின்ன கவுண்ட'ருக்காக பின்கொசுவம் சேலைகட்டிய சுகன்யா, டீச்சர் சுகன்யா. புகைப்படங்கள் புடைசூழ்ந்த வரவேற்பறை முழுக்க விருதுகள். சாதனை படைத்த திரைப்படங்களின் கேடயங்கள். பார்த்துக்கொண்டிருக்கையில், "ஹாய்" என்றபடி உள்ளே வருகிறார் சுகன்யா. பெடல்புஷ்ஷர் பாண்ட், வெளிர்நீல சட்டையில் இப்போது சின்னத்திரை சுகன்யா. 

“ம். டி.வி-க்கு வந்துட்டிங்க” என்றதும் புன்னகைக்கிறார். “பாலசந்தர் சார் திடீர்னு ஒரு நாள் போன் பண்ணினார். ஒரு கதை பண்ணி இருக்கிறேன். இந்தக் கதைல வர்ற சரோஜாவை நீ மட்டும்தான் பண்ண முடியும்'னார். ரொம்ப சந்தோஷமா ஒகே சொன்னேன். இப்போ எங்க போனாலும் சரோஜா, சரோஜானுதான் கூப்பிடறாங்க. பரதநாட்டியத்துக்காக டென்மார்க், ஜெர்மனி, லண்டன்னு போறப்பக்கூட ‘வாங்க வாங்க வாங்க சாப்பிட்டீங்களா? சாப்பிட்டீங்களா? சாப்பிட்டீங்களா?’னு . என் டி.வி. காரெக்டர் மாதிரியே பேசறாங்க. ரொம்ப சந்தோஷமாயிருக்கு டிவி. ரொம்ப பவர்ஃபுல் மீடியா. சினிமாவை காது. செலவழிச்சு போய்ப் பார்க்கணும். டி.வி. ஹால்லயே உட்கார்ந்திருக்கு. என் அம்மாவே சில நேரம் சீரியல் கதாபாத்திரங்களோட ஐக்கியமாகிப் பேசுவங்க” என்கிறார் சிரித்தபடி.

An Exclusive Interview Sukanya
An Exclusive Interview Sukanya

“நிறைய நடன நிகழ்ச்சிகள் கொடுக்கிறீர்களா?” என்றதும் உற்சாகமாகிறார்

“ஆமாம். என் அக்கா கீதா ஸ்ரீதர் லண்டன்ல இருக்கிறாங்க. அவங்க அங்கே நடன வகுப்புகள் எடுத்துட்டு. நிகழ்ச்சிகளும் நிறையத் தர்றாங்க. அவங்களோட சேர்ந்து நானும் பண்றேன். சமீபத்துல டால்ஸ்டாயோட  ‘அன்னகரீனா’ங்கிற கதையைப் பரதத்துல பண்ணினோம். அங்கே அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆண்ட்ரூ பேக்கர்ங்கிற மேற்கத்திய இசையமைப்பாளரின் இசைக்கு நான் பரதநாட்டியம் ஆடினேன். அதைப் பார்த்துட்டு நிறையப் பேர் ‘என் பிள்ளையும் இந்த நடனம் கத்துக்கணும்’னு சொன்னாங்க.சமீப காலமாக மனசுக்கு அதிகமான நிறைவைத்தரக்கூடிய ஒரு விஷயம் செய்துட்டு இருக்கிறேன்” என்றபடி சில பேப்பர்களை நம்மிடம் நீட்டுகிறார். “இது லண்டன்ல உருவாகப் போகிற பாலாஜி கோயில். அப்படியே நம்ம திருப்பதி கோயில் மாதிரியே இருக்கும் இது யுகே-லயே இதுதான் பெரிய கோயிலா வரப்போகுது. முருகன், பிள்ளையார்னு எல்லோருக்கும் தனிச் சந்நிதிகள், பரதநாட்டியம், யோக, கர்னாடக சங்கீதம்னு எல்லாம் கத்துக்க தனித்தனி ஹால்கள்னு பிரமாண்டமா உருவாகிட்டிருக்கு. அந்த கோயில் நிதிக்காக நானும் அக்காவும் லண்டன்ல ஒரு  ப்ரொக்ராம் கொடுத்தோம். பயங்கர கூட்டம். அப்புறம்... குஜராத் பூகம்ப நிதிக்காக மஸ்கட் அபுதாபி, குவைத் தோஹா, பஹ்ரைன்னு ஐந்து இடங்கள்ல நாட்டியமாடி பன்னிரண்டு லட்ச ரூபாய் வசூலித்துக் கொடுத்தோம். ஒவ்வொரு அக்டோபரிலும் கேரளாவுல நடக்கிற 'சூர்யாங்கிற பிரமாண்ட கலைவிழாவுல ரெண்டு வருஷமா நடனமாடறேன். இப்போ இன்னொரு டி.வி. சீரியலும் பண்றேன். மொத்தத்துல நான் பி ஸி” என்று சிரிக்கிறார். 

"சினிமாவுல ரொம்ப உயரத்துல இருந்தீங்க. திடீர்னு மீடியாவுல உங்களைப் பத்தி பலவிதமான செய்திகள்... மீடியா மேல கோபம் இருக்கா?” என்றதும் சில விநாடிகள் தரையை வெறிக்கிறார்.

மலையாளத்துல ‘கானாகீனா’னு ஒரு படம் பண்ணினேன். அதுக்கு தேசிய விருது கிடைச்சது. அதைப்பத்தி ஒருத்தர்கூட பாராட்டி பேசலை. படங்கள்ல நடிக்க நான் தயாரா இருந்தேன். ஆனா, யாரும் என் நல்ல வெளிச் சத்தை க் காட்டலை, பரதம்தான் என்னைத் திரும்பவும் உயிர்ப்பிச்சது. 

An Exclusive Interview Sukanya
An Exclusive Interview Sukanya

ஒருவேளை நான் சினிமாவுலயோ பிஸியா இருந்திருந்தா நடன நிகழ்ச்சிகள் பண்ண முடியாமப் போயிருந்திருக்கும்.இந்த நிம்மதி கிடைச்சிருக்காது. இப்போ நான் என்ன செய்றேன்னு சொல்றேனே... ‘நிறைய நடனமாடுறேன். முன்னைவிட அதிகமா சமூக சேவைகள் செய்றேன். மலையாளத்துல ஒரு ஆர்ட் ஃபிலிம் பண்ணப் போறேன். அப்புறம் டி.வி. எனக்கு ரொம்பவும் பிடிச்சுப் போச்சு தொடர்ந்து சீரியல்கள் பண்றேன். இந்தப் பரதம்தான்  இப்போ எனக்கு எல்லாமும். எதைச் செய்தாலும் அதில் ஒரு நேர்த்தியைப் பரதம்தான் கத்துக் கொடுத்தது.ராத்திரி எவ்ளோ ‘லேட்’டா படுத்தாலும் அதிகாலையில் எழுந்திருக்க, கூவற குயிலோடவும் குட்மார்னிங் சொல்ற பூக்களோடவும் பேச, ஒரு வேஸ்ட்பேப்பரைக் கூடக் சகக்காம, அழகா மடிச்சுக் குப்பைத் தொட்டியில் போடனு என்னை வளர்த்தது பரதம். எப்பவுமே எனக்குப் பெரிய ஆசைகள் இருந்ததில்லை. புடவை, நகை, பங்களா இருந்தாத்தான் திருப்திப்படுவேன்கிற சராசரிப் பெண் கிடையாது நான். இப்போதைக்கு நிறைய கத்துக்கிறேன். ஒவ்வொரு நாளும் ஓர் அனுபவம்” என்கிறார்.

“கல்யாணம் எப்போ?” என்றதும் நிமிர்ந்து பார்க்கிறார்.

“வாழ்க்கைல பெண்களுக்குக் கல்யாணத்தை விடவும் நிறைய விஷயங்கள் இருக்கு. கல்யாணம்ங்கிறது ஒரு சின்ன வட்டம். அதுல சிக்குவதை விடவும் உருப்படியா நிறைய விஷயங்கள் செய்கிறேன்.”“உங்கள் விருப்பங்களுக்குத் தடைசொல்லாத ஒருவர் கிடைத்தால் திருமணம் செய்துக்குவீங்களா?”

“ஏன் மறுபடியும் கல்யாணம் பத்திப் பேசறீங்க? வேற பேசலாம்.

நிறைய புத்தகங்கள் படிக்கிறேன். நம்மோட எண்ணங்கள் பாஸிடிவ்வா இருந்தா எல்லா விஷயத்தையும் நல்லதாகவே நினைப்போம். நான் அப்படித் தான் இருக்கிறேன்.சினிமாவும் டி.வி-யும் தராத மனநிறையை நான் பண்ற ஒரு நடன நிகழ்ச்சி தருது. என்னதான் சினிமாவுல நடிச்சாலும் ஒரு மேடையில் பல்லாயிரக்கணக்கான மக்கள்முன் ஆடிப் பெறுகிற கை தட்டல்களுக்கு முன்னால்.. அது ஒண்ணுமே இல்லை. சின்னப்பிள்ளைகள்லாம் ஓடிவந்து உங்களை மாதிரி ஆடணும்’னு சொல்றப்போ மனசு பொங்கும். ரொம்ப நிறைவாகிடும்.பணமும் புகழும் தராத நிம்மதியை பரதம் தருது. இதுக்கு மேல என்ன வேணும்?” என்கிறார் கண்களை உயர்த்தி..

- தயாமலர்

படங்கள் - கே.ராஜசேகரன்

(26.08.2001 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)