சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

"தமிழ் சினிமாவில் நிச்சயம் நடிக்க மாட்டேன்!”

வினித் சீனிவாசன்
பிரீமியம் ஸ்டோரி
News
வினித் சீனிவாசன்

`` `ஜேக்கப்பிண்டே ஸ்வர்க்க ராஜ்யம்’ படம் டைரக்ட் பண்ணப் பிறகு, நிறைய படங்களில் நடிச்சிட்டேன்.

தனால படம் இயக்குவதற்கு நேரம் கிடைக்கலை. இப்போ கொஞ்சம் நடிப்புக்கு பிரேக் விட்டுட்டு, ஒரு படம் இயக்கலாம்னு இருக்கேன். ஸ்கிரிப்ட் வொர்க் முடிஞ்சிருச்சு. இன்னும் ரெண்டு மாசத்துல யாரெல்லாம் நடிக்கப்போறாங்கன்னு முடிவாகிடும். சீக்கிரமே இயக்குநர் வினித் கம்பேக் கொடுத்துடுவார்’’ - தெளிவான தமிழில் அழகாகப் பேசுகிறார், மலையாள இயக்குநர் மற்றும் நடிகர் வினித் சீனிவாசன்.

“துல்கர், நிவின்னு இந்தத் தலைமுறை நடிகர்களும் சினிமாத் தயாரிப்பில் இறங்கிட்டாங்க. நீங்களும் தயாரிப்பாளர், இயக்குநர், பாடகர், நடிகர்னு பல விஷயங்கள் பண்றீங்க. இது உங்களுக்கு மகிழ்ச்சியா, அழுத்தமா?’’

“பிரஷராத்தான் இருக்கு. இருந்தாலும், எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறதால, அவங்களோட உதவியும் எனக்கு அதிகமாவே இருக்கு. என்னோட தயாரிப்பு நிறுவனத்துல முக்கியமான பொறுப்புல என் நண்பர்கள்தான் இருக்காங்க. எவ்வளவு வேலைகளை இழுத்துப் போட்டுப் பண்ணினாலும், கடைசியில் படம் நல்லா வந்துட்டா, அதுவே பெரிய மகிழ்ச்சியா இருக்கும். ஒரு நாள் பாடகரா, அடுத்த நாள் நடிகரா, தயாரிப்பாளரா ட்ராவல் பண்றது நல்ல அனுபவமா இருக்கு.’’

“தமிழ் சினிமாவில் மல்ட்டி ஸ்டார் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். ஆனால், மல்டி ஸ்டார்ஸை இணைக்கிறது இங்க ஒரு பிரச்னையா இருக்கு. ஆனால், மலையாள சினிமாவில் எப்படி உடனே சாத்தியமாகுது?’’

“இது மலையாள சினிமாவில் ரொம்பவே சகஜமா நடக்குது. ’வைரஸ்’ படத்துல பல பெரிய நடிகர்கள், சின்னச் சின்ன ரோல்களில் நடிச்சிருக்காங்க. நானும் ‘தண்ணீர் மத்தன் தினங்கள்’ படத்துல ஒரு சின்ன ரோல் பண்ணியிருந்தேன். நிவின் பாலிக்காக `லவ் ஆக்‌ஷன் டிராமா’ படத்துல பல பேர் கேமியோ பண்ணியிருந்தோம். தமிழ்நாட்டில் இருந்து மலையாள சினிமாவைப் பார்க்கிற உங்களுக்கு, இதெல்லாம் ஆச்சர்யமா இருந்தால், கேரளாவில் இருந்து தமிழ்சினிமாவைப் பார்க்கிற எங்களுக்குப் பல ஆச்சர்யங்கள் இருக்கு. இங்க இருக்கிற பல இயக்குநர்கள் வெற்றிமாறன், மிஷ்கின் படங்களைப் பார்த்து ஆச்சர்யப்படுறோம். ‘வடசென்னை’ பார்த்துட்டு வெற்றிமாறன் சாருக்கு போன் பண்ணி, பல ஷாட்டுகள் எப்படி எடுத்தார்னு கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டேன். ‘மாயா’ படம் பார்த்துட்டு அஷ்வின் சரவணனுக்கு போன் பண்ணி, ’பட்ஜெட் எவ்வளவு வந்துச்சு, படம் முடிக்க எத்தனை நாள் ஆச்சு’ன்னு பல தகவல்கள் கேட்டேன். நான் சென்னையிலதான் காலேஜ் படிச்சேன். அப்போ இருந்து இப்போ வரைக்கும் சென்னையிலதான் இருக்கேன். படம் பண்றதுக்காக மட்டும் கேரளா போயிட்டு வரேன். அப்படி நான் காலேஜ் படிச்ச சமயத்தில் பார்த்த `7ஜி ரெயின்போ காலனி’ படத்தை, இன்னும் என்னால மறக்க முடியாது. `சரோஜா’ படம் பார்த்துட்டு, மவுன்ட் ரோட்டில் நடந்துவந்த போதுதான், நாமளும் ஒரு படம் பண்ணலாம்கிற எண்ணம் என் மனசுக்குள்ள வந்துச்சு. இப்படி என்னோட வாழ்க்கையில பல மறக்கமுடியாத சம்பவங்கள், தமிழ் சினிமாவால நடந்திருக்கு.’’

 "தமிழ் சினிமாவில் நிச்சயம் நடிக்க மாட்டேன்!”

“உங்கள் அப்பா சீனிவாசன், நீங்க, உங்க தம்பி தயன்னு எல்லாருமே நடிகராவும் இயக்குநராவும் களம் இறங்கிட்டீங்க. ஒரே குடும்பத்தில் மூணு இயக்குநர்கள் இருப்பது எப்படி இருக்கு?”

“அப்பா ரெண்டு படங்கள் இயக்கியிருக்கார். தம்பி இப்போதான் இயக்குநரா ஒரு படம் பண்ணியிருக்கான். நாங்க எப்போதும் நடிக்கிறது, இயக்குறது, தயாரிக்கிறதுன்னு எதையும் தனித்தனியா பிரிச்சுப் பார்க்குறது கிடையாது. நடிச்சாலும், படம் இயக்குனாலும், தயாரிச்சாலும், மொத்தமாப் பார்க்கும்போது சினிமாவில் இருக்கோம். அவ்வளவுதான்.’’

“ தமிழ் சினிமாக்களில் பாடகராகப் பங்கேற்கிறீங்க. ஆனால், நடிகராகவோ, இயக்குநராகவோ உங்களைப் பார்க்க முடியலையே. எப்போ தமிழில் படம் பண்ணுவீங்க?’’

“தமிழில் ஒரு படம் நிச்சயம் இயக்குவேன். ஆனா, சத்தியமா நடிக்க மாட்டேன். ஏன்னா, நான் மலையாளத்தில் பல படங்கள் நடிச்சிருந்தாலும், சென்னையில நான் வெளியில் சுத்தும்போது, பல பேருக்கு என்னை அடையாளம் தெரியாது. நான் சுதந்திரமா வெளியில் நடமாடுவேன். ஆனால், கேரளாவில் என்னால், சகஜமா வெளியில போயிட்டு வர முடியாது. தமிழில் நடிக்க ஆரம்பிச்சுட்டா, அந்த ப்ரைவசி இங்கேயும் இருக்காது. எந்த விஷயமா இருந்தாலும், இன்னொருத்தரைச் சார்ந்தே இருக்கணும். அதனால், தமிழில் நடிக்க மாட்டேன்.’’

“நிவின் பாலியை மலையாளத்திற்கு அறிமுகப்படுத்தியதே நீங்கள்தான். அவரை வெச்சு மூணு படங்களும் இயக்கியிருக்கீங்க. உங்கள் காம்போவில் அடுத்த படம் எப்போது வரும்?’’

“ஃபிரெண்ட்ஷிப், லவ், ஃபேமிலின்னு மூணு ஜானர்ல, மூணு படங்கள் பண்ணியாச்சு. மூணுமே நல்ல ஹிட்டானதால, அடுத்து பண்ணப்போற படத்துக்கு எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கும். அதனால, அதுக்கு ஏத்தமாதிரி ஒரு கதை கிடைச்சா, நிச்சயம் பண்ணுவோம்.’’

“OTT-க்குப் படங்கள் பண்ணும் ஐடியா இருக்கா?’’

“OTT பிளாட்பாரத்துல வெளியாகுற ஆந்தாலஜி படங்களும் வெப் சீரிஸும் நல்லா ரீச்சானாலும், தியேட்டரில் ரிலீஸாகுற படங்கள் அளவுக்குப் பேசப்படுறதில்லை. அதனால், ரெண்டு, மூணு வருஷத்துக்கு அப்புறம் அதில் படம் பண்ணலாம்னு யோசிக்கிறேன்.’’