Published:Updated:

`` `வாங்க உட்காருங்க' லாஜிக் சொன்னேன்; `ரா ரா ராமையா' பாட்டு உருவாச்சு!’’ - இசையமைப்பாளர் தேவா

Music Director Deva
Music Director Deva ( Vikatan )

தமிழ் சினிமாவின் பயணத்தில் தவிர்க்க முடியாத ஒரு நபர், இசையமைப்பாளர் தேவா. இவர் சினிமாவுக்கு வந்து 30 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு, அவருடன் ஓர் உரையாடல்.

``தேவா என்றாலே சட்டென நினைவுக்கு வரும் விஷயங்களில் `அண்ணாமலை', `பாட்ஷா' படங்களும் அடங்கும். அந்தப் படங்களில் பணியாற்றிய அனுபவத்தைச் சொல்லுங்களேன்?"

Annamalai movie still
Annamalai movie still

``என் வாழ்க்கையில மறக்கவே முடியாத படம், `அண்ணாமலை’. பாலசந்தர் சார் என்னை அழைச்சு, `என் தயாரிப்புல ஒரு படம் நீ பண்ணணும். இதை நீ ரொம்ப நல்லாப் பண்ணுவனு எனக்கு நம்பிக்கை இருக்கு. ஒரு ஸ்டைலில் இல்லாம பல ஸ்டைல்ல இந்த ஆல்பத்தைப் பண்ணு’ன்னு சொல்லி, `அண்ணாமலை’ வாய்ப்பைக் கொடுத்தார். ஒரு இன்ட்ரோ சாங், ஒரு மெலடி சாங், ரெண்டு ஃபோக் சாங், ஒரு வெஸ்டர்ன் சாங்னு இந்த ஆல்பத்தை ரொம்பவே மிக்ஸ் பண்ணித்தான் மியூசிக் போட்டேன். இந்தப் படத்தோட 6 பாடல்களில் அஞ்சு பாடல்களை எந்த அவசரமும் இல்லாமல் பொறுமையா பார்த்து, பார்த்து பண்ணினேன். ஆனால், ஒரு பாட்டுக்கு மட்டும் என்னை பம்பரமா ஓடவெச்சார், பாலசந்தர் சார். ஒருநாள் ராத்திரி எனக்கு போன் பண்ணி, `ரஜினியும் குஷ்புவும் நாளை மறுநாள் கால்ஷீட் கொடுத்திருக்காங்க. எனக்கு நாளைக்கு சாயங்காலம் ஒரு பாட்டு வேணும்’னு கேட்டார். `சார்... இது ரஜினி சார் படம். அப்படி அவசரமா பாட்டு போட்டு, அது சரியில்லாம போச்சுனா நல்லா இருக்காது’ன்னு சொன்னேன். `உன்னால முடியும்டா. இப்போவே ஆர்கெஸ்ட்ராவுக்குச் சொல்லிடு. காலையில சந்திப்போம்’னு சொன்னார். எனக்கு எப்படிப்பட்ட டியூன் வரப்போகுதுனே தெரியாம, எல்லா வாத்தியங்களையும் கொண்டுவரச் சொல்லிட்டேன்.

காலையில பாலசந்தர் சார், டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா, வைரமுத்து, நான், இசைக் கலைஞர்கள் எல்லோரும் ஆஜர் ஆகிட்டோம். நான் ஒவ்வொரு டியூனா போட்டுக்கிட்டே இருந்தேன். டக்குனு ஒரு டியூன் ரொம்ப நல்லா வந்துச்சு. உடனே வைரமுத்து அதுக்கு வரிகள் எழுதினார். அதுதான், `ரெக்கக்கட்டி பறக்குதடி அண்ணாமலை சைக்கிள்’ பாட்டு. 12 மணிக்குள்ள மொத்தப் பாட்டுக்கான வரிகளும் ரெடி. எஸ்.பி.பி-யையும், சித்ராவையும் வரவெச்சு பாட்டையும் ரெக்கார்டு பண்ணியாச்சு. ஆர்கெஸ்ட்ராவை வாசிக்க வெச்சு 3 மணிக்கே மொத்தப் பாட்டையும் முடிச்சுக் கொடுத்துட்டேன். பாலசந்தர் சாருக்கு செம ஹேப்பி. அவசரமா பண்ணினாலும், இந்தப் பாட்டு செம ஹிட். பாடல்கள் மட்டுமல்லாமல், இந்தப் படத்துக்காக நான் பண்ணின பின்னணி இசையும் நல்லா ரீச் ஆச்சு. 

Baashha movie still
Baashha movie still
'ரஜினியின் 'பாட்ஷா' மேடைப்பேச்சுக்கு என்னிடம் ஜெ. காட்டிய கோபம்!" - ஆர்.எம்.வீ பகிர்வுகள்

இதேமாதிரிதான், `பாட்ஷா’ படமும் என் கரியரில் ரொம்ப முக்கியமானது. மாணிக்கம், பாட்ஷானு ரெண்டு கெட்-அப்களில் ரஜினி சார் வருவார். அதில், மாணிக்கம் கேரக்டருக்குதான் அதிக பாடல்கள் இருக்கும். பாட்ஷா கேரக்டருக்கு ரெண்டு பாடல்தான், அதில் ஒண்ணு தீம் சாங். `ரா ரா ராமையா’ பாட்டுதான் அவருக்கான ஒரே பாட்டு. இந்தப் பாட்டைப் பண்ணும்போது, `ஜாலியான கமர்ஷியல் பாட்டா இது இருக்கக் கூடாது. கொஞ்சம் தத்துவம் இருக்கிற மாதிரி எழுதுங்க’னு வைரமுத்துகிட்ட இயக்குநர் சொன்னார். அவரும், `எட்டு எட்டா மனுஷன் வாழ்வை பிரிச்சுக்கோ’னு முதல் வரியிலேயே மேட்டரைச் சொல்லி, பாட்டை எழுதிட்டார். நான் அவர்கிட்ட, ``என்ன சார் இதுல ஒரு `வாங்க உட்காருங்க’ இல்லை"ன்னு சொன்னேன். `அதென்னங்க, வாங்க உட்காருங்க’னு கேட்டார். `ஆசை’ படம் பண்ணும்போது டைரக்டர் வஸந்த் சார்தான் எனக்கு, `வாங்க உட்காருங்க’ விஷயத்தை அறிமுகப்படுத்தினார். `யாராவது நம்ம வீட்டுக்கு வந்தா, `சொல்லுங்க... என்ன விஷயத்துக்காக வந்தீங்க’ன்னு உடனே கேட்க மாட்டோம்ல. `வாங்க, உட்காருங்க, என்ன சாப்பிடுறீங்க’ன்னு கேட்டுட்டுதானே, `என்ன விஷயமா வந்தீங்க’னு கேட்போம். அதேமாதிரிதான் ஒரு பாட்டு ஆரம்பிக்கும்போது, உடனே மெயின் விஷயத்தைச் சொல்லிடாம, `வாங்க உட்காருங்க’ போடணும்னு சொன்னார். அதை நான் வைரமுத்துகிட்ட சொன்னதுக்கு அப்பறம், `ரா... ரா ரா... ராமையா, எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா’னு எழுதினார். "

“பாட்டு எல்லாம் பானிபூரி!”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் உங்களுக்குத் `தேனிசைத் தென்றல் தேவா'ன்னு பட்டம் கொடுத்த தருணத்தைப் பற்றி?"

Music Director Deva With MSV
Music Director Deva With MSV
Vikatan
``முதல்வர் கமல்ஹாசனின் முதல் நாள்'' -  விகடன் பிரஸ்மீட்டில் நடந்தது என்ன?! #VikatanPressMeet #Kamal

``நான் யாரிடமும் உதவியாளரா வேலை பார்க்காம சினிமாவில் இசையமைப்பாளர் ஆனேன். ஆனா, சின்ன வயசில் இருந்தே எம்.எஸ்.வி ஐயாவின் பாடல்களைத்தான் கேட்டும், பாடியும் வளர்ந்தேன். இன்னைக்கும் நான் வாக்கிங் போகும்போதெல்லாம் அவரோட பாட்டைக் கேட்டுக்கிட்டுதான் போவேன். அந்தளவுக்கு நான் நேசிக்கிற ஒருத்தர்கிட்ட இருந்து எனக்கு `தேனிசைத் தென்றல்’னு பட்டம் கிடைச்ச தருணத்தை என்னால் மறக்கவே முடியாது. நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே எனக்கு இந்தப் பட்டத்தைக் கொடுத்தார். நான் தூர்தர்ஷன் சேனலில் செட் போடும் ஆர்ட் டிபார்ட்மென்டில் வேலை பார்த்தேன். சின்ன வயதில் இருந்தே எனக்கு இசைமேல் ஆர்வம் இருந்ததால், தன்ராஜ் மாஸ்டர்கிட்ட இசை கத்துக்கிட்டேன். அதை வைத்து 150-க்கும்மேல பக்திப் பாடல் ஆல்பம் போட்டேன். தூர்தர்ஷனில் வேலை பார்த்த எம்.எஸ்.பெருமாள் சார்தான் என்னை பக்தி ஆல்பம் போடச்சொல்லி ஊக்குவித்தார்.

நான் போட்ட பக்தி ஆல்பங்களைப் பாராட்டி, திருவேற்காடு கோயிலில் எனக்குப் பாராட்டு விழா வெச்சாங்க. அந்தப் பாராட்டு விழாவில் எம்.எஸ்.வி ஐயாவை வைத்து எனக்கு `தேனிசைத் தென்றல்’ பட்டத்தைக் கொடுக்க வெச்சாங்க. அந்தப் பட்டத்தைக் கொடுக்கும்போது எம்.எஸ்.வி ஐயா, `தேவாவுக்குப் பட்டம் கொடுக்காதீங்க, யாராவது படம் கொடுங்க. அவன் நல்லா மியூசிக் பண்ணுவான்’னு சொன்னார். ஏன்னா, அதுவரை எனக்கு 13 படங்களுக்கு இசையமைக்க வாய்ப்பு வந்து, அந்தப் படங்களெல்லாம் அடுத்தடுத்து ட்ராப் ஆகிட்டிருந்து. ஒரு கட்டத்தில் `தேவா ஒரு படத்தில் கமிட்டானா, அந்தப் படம் ட்ராப் ஆகிடும்’னு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. அதனாலேயே யாரும் எனக்கு வாய்ப்பு கொடுக்கல. என்னை வெச்சுப் படம் எடுக்க வந்தவங்க, பணம் இல்லாம படத்தை ட்ராப் பண்ணிக்கிட்டா, அதுக்கு நானா காரணம். ஆனால், எம்.எஸ்.வி ஐயா அந்த மேடையில் சொன்னதுக்கு அப்பறம் ஒரு வாரத்திலேயே எனக்கு ஒரு படம் வந்துச்சு. அந்தப் படம் வெற்றிகரமா ரிலீஸும் ஆச்சு.’’

Vikatan

முதல் பட வாய்ப்பு கிடைத்தது முதல் கமல், அஜித், விஜய் படங்களில் வேலை பார்த்தது வரை இசையமைப்பாளர் தேவா பேசிய பல விஷயங்கள், நாளை வெளியாகும் ஆனந்தவிகடன் இதழில் இடம்பெற்றிருக்கின்றன. மிஸ் பண்ணிடாதீங்க!

அடுத்த கட்டுரைக்கு