Published:Updated:

“பாட்டு எல்லாம் பானிபூரி!”

எஸ்.ஏ.ராஜ்குமார்
பிரீமியம் ஸ்டோரி
எஸ்.ஏ.ராஜ்குமார்

இளையராஜா உச்சத்தில் இருந்தபோதும், தேவா கொடிகட்டிப் பறந்தபோதும், ஏ.ஆர்.ரஹ்மான் அசாத்தி யங்கள் நிகழ்த்தியபோதும்...

“பாட்டு எல்லாம் பானிபூரி!”

இளையராஜா உச்சத்தில் இருந்தபோதும், தேவா கொடிகட்டிப் பறந்தபோதும், ஏ.ஆர்.ரஹ்மான் அசாத்தி யங்கள் நிகழ்த்தியபோதும்...

Published:Updated:
எஸ்.ஏ.ராஜ்குமார்
பிரீமியம் ஸ்டோரி
எஸ்.ஏ.ராஜ்குமார்

மிழ் சினிமா இசையுலகின் எல்லாக் காலகட்டங்களிலும் தனக்கெனத் தனி அடையாளத்தோடு தடம் பதித்தவர் எஸ்.ஏ.ராஜ்குமார். ‘இப்போது என்ன செய்கிறார்’ என்கிற கேள்வியோடு சந்தித்தபோது, பல சர்ப்ரைஸ்களைக் கொடுத்தார் எஸ்.ஏ.ராஜ்குமார்.

‘`எனக்கு நானே ஒரு சின்ன பிரேக் விட்டிருந்தேன். இந்த நேரத்துல என் பொண்ணை டாக்டராக்கி, ஒரு டாக்டர் மாப்பிளைக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டேன். பையனும் டிகிரி முடிச்சுட்டான். இந்த கேப்ல நானும் ஒரு வரலாற்று நாவல் எழுதி முடிச்சிட்டேன். அடுத்து படம் இயக்கப்போறேன். இதற்கான வேலைகள் சீக்கிரமே தொடங்கப்போகுது” என பிரேக்குக்கான காரண காரியங்கள் சொன்னார் ‘லா லா லா லாலா’ இசையமைப்பாளர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“விக்ரமன் சாருக்கும் எனக்கும் இருந்த புரிதலைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. அவர் ‘புது வசந்தம்’ படத்தோட கதையைச் சொல்லும்போது அது எனக்கான படம்னு தோணுச்சு. அப்போ அது ஒரு நியூ வேவ் படம். அந்தப் படத்துல நான் இருந்தேன்கிறதே ஒரு பெருமைதான். ஆர்.பி.செளத்ரி, விக்ரமன்னு எல்லாருக்குமே அதுதான் முதல் படம். நான் மட்டும் கொஞ்சம் சீனியர். முதல்ல இளையராஜாவோட டேட்டுக்குத்தான் காத்துட்டிருந்தாங்க. அதுக்குப் பிறகு நான் அந்தப் படத்துக்குள்ள வந்தேன். ‘பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா’, ‘இது முதல் முதலா வரும் பாட்டு’ன்னு, ஒரு மியூசிக்கல் படத்துக்குத் தேவையான எல்லா வகையான பாடல்களும் அந்தப் படத்துல இருக்கும்.

“பாட்டு எல்லாம் பானிபூரி!”

அதுக்குப் பிறகு ஒரு படம் அவர்கூட சேர்ந்து வேலைபார்த்தேன். ஆனால், ஒரு சின்ன கருத்து வேறுபாடு எங்களைப் பிரிச்சிடுச்சு. அடுத்து அவர் சில படங்களில் மற்ற இசையமைப்பாளர்கள் கூட சேர்ந்து பணியாற்றினார். எனக்கும் ஒரு சின்ன பிரேக் ஆச்சு. ஆனா ‘பூவே உனக்காக’ படத்துக்காக நாங்க ரெண்டு பேரும் திரும்ப சந்திச்சோம். சூப்பர் குட் பிலிம்ஸ் ஆபீஸுக்கு என்னை வரச் சொன்னாங்க. அந்த ஆபீஸ் வாசல்லயே வெச்சு விக்ரமன் எனக்கு அந்தப் படத்தோட கதையைச் சொன்னார். உடனே சரின்னு சொல்லிட்டேன். அப்படியே உள்ள போய் ஆர்.பி.செளத்ரி சார்கிட்ட ‘இந்தப் படம் மாசக்கணக்கில் ஓடும்’ன்னு சொன்னேன். நான் சொன்ன அதே நாள் கணக்குக்கு ஓடுச்சு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அடுத்து விக்ரமன் புதுசா முயற்சி செஞ்சி எடுத்த படம்தான் ‘சூர்ய வம்சம்’. பெரிய நட்சத்திரங்கள், பெரிய பட்ஜட், ஆக்‌ஷன், காமெடி, குடும்ப சென்ட்டிமென்ட்டுன்னு எல்லாம் கலந்த ஒரு கலவையா முழுக்க முழுக்க நேட்டிவிட்டியோட இருந்த படம். அந்தப் படமும் சில்வர் ஜூப்ளிதான். நானும் விக்ரமனும் 11 படம் சேர்ந்து பண்ணியிருக்கோம். அதுல 9 படம் சில்வர் ஜூப்ளி. அதிகமான சில்வர் ஜூபிளி கொடுத்த ஆள் நான். ஆனா நிறைய பேர் அதைச் சொல்லமாட்டாங்க. நான் புகழ் வெளிச்சத்துல இருந்து தள்ளியே இருந்தேன். அதுதான் என்னுடைய இயல்பு” என ஒரு நீண்ட ஃப்ளாஷ்பேக்கைச் சொல்லி முடித்தார்!

“எஸ்.ஏ.ராஜ்குமார் என்றவுடனே ‘லாலாலா’தான் நினைவுக்கு வருது. சிலபேருக்குப் பிடிச்சிருக்கு. சிலபேர் கிண்டல் பண்ணியிருக்கா ங்களே?” என்றதும் மீண்டும் உற்சாகமானார்.

“அது என்னோட மானசிக குரு ராஜா சார் தொடங்கிவெச்சது. இசைக்கருவிகள் என்பதையும் தாண்டி, மனிதர்களோட குரலைப் பயன்படுத்திப் பின்னணி இசை பண்ணமுடியும்னு சொல்லிக்கொடுத்தவர் அவர்தானே. என்னோட படங்கள்ல இருக்குற கோரஸ் செக்‌ஷனே ரொம்பப் பெருசா இருக்கும். அதே மாதிரி ஆர்க்கெஸ்ட்ரா. கிட்டத்தட்ட 120 இசைக்கலைஞர்கள் சேர்ந்து உருவாக்குறது. என்னோட முதல் படத்துல இருந்தே இதை நான் பண்ணியிருக்கேன்” என்றார்.

“நானும் ராஜா சாரோட சகோதரர் பாஸ்கரும் நண்பர்கள். என்னோட சில பாடல்களை அவ்வப்போது ராஜா சாருக்கு பாஸ்கர் போட்டுக்காட்டியிருக்கிறார். ஒரு முறை ஒரு பாடலைக் கேட்டுட்டு என்னைப் பாராட்டித் தீர்த்தார் இளையராஜான்னு பாஸ்கர் வந்து சொன்னார். இதைவிட வேறென்ன வேணும்” என்ற எஸ்.ஏ.ராஜ்குமார்தான் ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் விருது வாங்கியபோது இளையராஜா, எம்.எஸ்.வி என எல்லோரையும் இணைத்துப் பாராட்டு விழா நடத்தியவர்.

“ராஜா சார், எம்.எஸ்.வி சார், ஹாரிஸ் ஜெயராஜ்னு அவங்க அத்தனை பேரும் அந்த நிகழ்வுக்கு வந்ததுக்கு நான் ஒவ்வொருவரிடமும் வைத்திருந்த அன்புதான் காரணம். ராஜா சார் எனக்கு அவ்ளோ இடம் கொடுத்திருந்தார். அதே மாதிரி ரஹ்மான், மணிஷர்மா எல்லாரும் என் ஆர்க்கெஸ்ட்ராவில் முக்கியமான இசைக்கலைஞர்கள். மணிரத்னம் ‘ரோஜா’ படத்துக்கு முன்னாடி என்கிட்ட வந்து இந்தப் படத்துல ஒரு புதுப் பையனை மியூசிக் டைரக்டராக்கியிருக்கோம்னு சொன்னார். அப்போ நான் அவர்கிட்ட, ‘புதுப் பையன்லாம் இல்ல. அவருக்கு ஏற்கெனவே எக்கச்சக்க அனுபவம் இருக்கு’ன்னு சொன்னேன். ஏன்னா, ரஹ்மான் இசையமைச்சிருந்த ஜிங்கிள்களே அவ்ளோ இருக்கும். அந்தக் காலத்துல இருந்தே எனக்கு அவரை நல்லாத் தெரியும். அதனால் அப்படி ஒரு மேடையில எல்லாரையும் ஏத்துறது எளிமையா இருந்தது” என்றவரிடம் ‘`உங்களின் இசையில் ஒரு மெலோ டிராமா இருக்கும் எனச் சொல்வார்களே” என்றேன்.

“ஒவ்வொரு வீட்டிலும் நடக்கும் விஷயங்கள்தான் காட்சிகளாக இருக்கும். அந்தக் காட்சிகளுக்கான உணர்வுகள் என்ன என்பதைப் புரிஞ்சுக்கிட்டுத்தான் இசை அமைச்சிருக்கேன். கதைக்கும், இசைக்கும் சரியான மிக்ஸிங் இருந்ததால்தான் அந்தப் படங்களும் பாடல்களும் இப்போதுவரை நிலைத்து நிற்குது. இப்பவும் சினிமாவுல அந்த மெலோ டிராமா இருக்குதானே. ‘பூவே உனக்காக’ க்ளைமாக்ஸ்ல ‘காதல் ஒரு முறை பூக்குற பூ’ன்னு சொல்லிட்டு விஜய் போய்டுவார். அதேமாதிரி போன வருஷம் வந்த ‘96’ படத்தை நான் ரசிச்சேன். எல்லாரும் ரசிச்சோம். அது மெலோ டிராமா இல்லையா. இப்போது வர்ற பாடல்கள்ல வர சில வார்த்தைகளைக் கேட்டாலே கோபம்தான் வருது. ‘பூவே உனக்காக’ படத்துலயும் ‘ஓ ப்யாரி பானி பூரி’ன்னு ஒரு பாட்டு இருந்தது. ஆனா அதே படத்துல ‘சொல்லாமலே,’ ‘ஆனந்தம் ஆனந்தம் பாடும்’னு ரெண்டு பாட்டு இருந்தது. ஆனா இப்போ வரும் பாட்டு எல்லாமே பானி பூரியாதான் இருக்கு” என்று கோபப்பட்டார் எஸ்.ஏ.ராஜ்குமார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism