Published:Updated:

சிரஞ்சீவியைப் பேட்டி எடுத்த விகடன் நிருபரிடம், அவர் கேட்ட அந்தக் கேள்வி! #ChiranjeeviInVikatan

`சினிமா, குடும்பம், பர்சனல், அரசியல் என 50 கேள்விகள் கேட்டிருப்பேன். ஒரு கேள்விக்குக்கூட அவர் பாஸ் சொல்லவில்லை. இந்தக் கேள்வி வேண்டாம் என்று சொல்லவில்லை. போனை எடுத்துப்பார்க்கவில்லை. நேரம் என்ன என கடிகாரத்தைப் பார்க்கவில்லை.’

Chiranjeevi
Chiranjeevi

'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி... இந்தப் பெயர் நான் ஆறாம் வகுப்புப் படிக்கும்போது அறிமுகம். ஒருமுறை என் அப்பா என்னைத் திருப்பதி கோயிலுக்கு அழைத்துச்சென்றிருந்தார். அங்கே திடீரென ஒரு பரபரப்பு. ''ஹே சிரஞ்சீவி... சிரஞ்சீவி'' எனக்கூட்டம் கூட ஆரம்பித்தது. சிலர் ''அது சிரஞ்சீவி இல்ல... சிரஞ்சீவி மாதிரி வேற யாரோ'' என்றார்கள். அப்போதுதான் சிரஞ்சீவி யார் என என் அப்பாவிடம் முதல்முறையாகக் கேட்டேன். பிறகு 'திருமலை' படத்தில் ''ஆந்திரா வரைக்கும் வந்துட்டோம். அப்படியே சிரஞ்சீவியைப் பார்த்துட்டு வந்துடுறேன்''னு விஜய் சொன்னதும் அந்தப் பெயர் மீண்டும் ஞாபகத்துக்கு வந்தது.

ஸ்மார்ட்போன் அதிகரித்த காலகட்டம். கூகுளில் சிரஞ்சீவி எனத் தேடினால், அவரது முகம் வந்தது. கே-டிவியில் 'ராணுவவீரன்', 'மாப்பிள்ளை' உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் அவரைப் பார்த்ததும் இன்னும் பரிச்சயமாகிட்டார். இவர் நடித்த தெலுங்குப் படங்களைப் பார்க்க ஆரம்பித்தேன். தமிழ்நாட்டில் ரஜினியைப்போல ஆந்திராவில் மாஸ் ஹீரோ சிரஞ்சீவி என்பது புரிந்தது.

பல வருடங்கள் கழித்து மீண்டும் சினிமாவுக்குள் வந்தார் சிரஞ்சீவி. விஜய் நடித்த 'கத்தி' படத்தின் ரீ-மேக். 'கைதி நம்பர் : 150' எனப் பெயிரிடப்பட்டிருந்த இந்தப்படத்தை சிரஞ்சீவிக்காகப் பார்த்தேன். சிரஞ்சீவியின் டான்ஸ் வேற லெவலில் இருந்தது. இந்த இடைவெளியில் நான் விகடனிலும் சினிமா நிருபராகப் பணிக்குச் சேர்ந்துவிட்டேன்.

Chiranjeevi
Chiranjeevi

இரண்டு வருடம் கழித்து இவர் நடிக்கும் 'சைரா நரசிம்ம ரெட்டி' படத்தின் அறிவிப்பு வந்ததுமே, இந்த முறை சிரஞ்சீவியைப் பேட்டி எடுத்துவிடவேண்டும் என்கிற ஆசை மனதுக்குள் மின்னல் அடித்தது. சிரஞ்சீவியைப் பிடிக்கணும்னா எந்த ரூட்ல போகணும்னு பல திட்டமிடல்கள். தொடர்ந்து மூன்று மாதங்களாக ஃபாலோ செய்து சிரஞ்சீவி அப்பாய்ன்ட்மென்ட்டை வாங்கிவிட்டேன்.

``நாளைக்கு காலைல ஐதராபாத்ல 11 மணிக்கு மீட்டிங்'' இன்று மாலை 3 மணிக்குச் சொன்னார்கள். அடித்துப்பிடித்து பஸ் டிக்கெட், ஹோட்டல் ரூம் எல்லாம் போட்டு, போட்டோகிராஃபர் பாலாஜியை ஃபிக்ஸ் செய்து, இடையில் சிரஞ்சீவியிடம் கேட்பதற்காக வைத்திருந்த கேள்விகளை எல்லாம் தொகுத்து...(இப்பவே மூச்சு வாங்குதே) ஒருவழியாக கோயம்பேட்டிலிருந்து பஸ் பிடித்துவிட்டேன்.

11 மணிக்கு மீட்டிங் என்பதுதான் தெரியும்... எங்கே மீட்டிங் என்பது சஸ்பென்ஸாக இருந்தது. 'பஸ்ல இருந்து இறங்கினதும் இவருக்கு போன் பண்ணுங்க' என ஒரு மெசேஜ் நம்பரோடு வாட்ஸ்அப்பில் வந்து விழுந்தது. போன் அடித்தேன்.

''சிரஞ்சீவி சார் வீடு, ஜூப்ளி ஹில்ஸ்லதான் மீட் பண்றோம். இப்ப நீங்க இருக்கிற இடத்துக்கு ஒரு இனோவா வரும்'' என்றது எதிர்க்குரல். இனோவா வந்தது. என் கேரியர்ல ஒரு சூப்பர் ஸ்டாரைப் பேட்டி எடுக்கப்போகிறோம் என்கிற பதற்றம், அவர் வீட்டை நெருங்க நெருங்க அதிகரித்துக்கொண்டே போனது. இவரிடம் கேட்கலாமா, வேண்டாமா எனப் பல முறை யோசித்து கார் டிரைவரிடம் ''சிரஞ்சீவி சார் எப்படி.... நல்லா பேசுவாரா'' எனக் கேட்டேன். ''சாரு ஜாலி டைப்பு சார்... நோ ஃபீல்லு சார்' என உற்சாகப்படுத்தினார் இனோவாவின் இயக்குநர்.

Chiranjeevi
Chiranjeevi

'' 'சார்... இதிதான் சாரு இல்லு'னு டிரைவர் சொன்னதும் மறுபடியும் பயம் வர ஆரம்பித்தது. வீட்டுக்குள் நுழைந்தவுடன் கருஞ்சிறுத்தைப் போல மிரட்டியது படகுபோல இருந்த கறுப்பு நிற ரோல்ஸ்ராய்ஸ். கார் நம்பர் 6789. சரியாக 10.50க்கு அவர் வீட்டுக்குள் நுழைந்துவிட்டோம். நாங்கள் வந்துவிட்டோம் என்று சொல்லப்பட்டதுமே, காத்திருக்கவைக்காமல் ஒரு ரூமுக்குள் இருந்து இரண்டு கதவுகளையும் ஸ்டைலாகத் திறந்தபடி உள்ளே நுழைந்தார் மெகா ஸ்டார்.

'வணக்கம்.. எப்படி இருக்கீங்க?'' தமிழில் வந்துவிழுந்தன வார்த்தைகள். '' 'ஆனந்த விகடன்' பத்திரிகையை எனக்கு ரொம்ப நல்லா தெரியும். உங்க ஆபீஸ் எப்படி போயிக்கிட்டு இருக்கு, நீங்க எத்தனை வருஷமா விகடன்ல இருக்கீங்க'' என அன்போடு விசாரித்தார் சிரஞ்சீவி. கொஞ்ச நேரம் சிரஞ்சீவியிடம்தான் பேசிக்கொண்டியிருக்கிறோமா என எனக்கு ஒரே ஷாக். அதை உணர்ந்துகொண்டவர் என்னை அவரது 'கூல்' அணுகுமுறையால் சாந்தப்படுத்தினார். எனக்குள்ள இருந்த பதற்றம் குறைந்துவிட்டது என்று சொல்வதைவிட குறைத்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் பேசினோம்.

Chiranjeevi
Chiranjeevi

சினிமா, குடும்பம், பர்சனல், அரசியல் என ஐம்பது கேள்விகள் கேட்டிருப்பேன். ஆனா, அவர் அதில் ஒரு கேள்விக்குக்கூட பாஸ் சொல்லவில்லை. இந்தக் கேள்வி வேண்டாம் என்று சொல்லவில்லை. போனை எடுத்துப்பார்க்கவில்லை. நேரம் என்ன என வால் கிளாக்கைப் பார்க்கவில்லை. அறைக்குள் நுழைந்து 'இன்னும் 5 நிமிடம்தான் இருக்கு' என யாரும் சொல்லவில்லை. இத்தனைக்கும் அன்றுமாலைதான் 'சைரா நரசிம்ம ரெட்டி'யின் டிரெய்ல்லர் ரிலீஸ். அவ்வளவு பரபரப்புக்கு இடையிலும் விகடனின் கேள்விகளுக்கு மிகப்பொறுமையாக, முழுமையாக பதில் சொல்லிக்கொண்டிருந்தார் சிரஞ்சீவி.

அஜித்தின் முதல் படம் பற்றிச் சொன்னவர், திடீரென அஜித் இப்போது எப்படி இருக்கிறார் என விசாரித்தார். ''எம்.ஐ.டில ஏரோநாட்டிக்கல் படிக்கிற மாணவர்களுக்கு அட்வைஸரா இருக்கார். போட்டோகிராபி, ரைஃபிள் ஷூட்டிங்னு பல இன்ட்ரஸ்ட் அவருக்கு'' என நான் சொன்னதும் ''அப்படியா... சினிமா தாண்டி இவ்ளோ விஷயங்கள் பண்றாரா?'' என ஆச்சர்யப்பட்டார். பேட்டி முடிந்தது. நிறைய கேள்விகள் கேட்டுட்டேன்னு சிரஞ்சீவி எதுவும் சொல்லப்போறாரோ என நினைத்தேன். ''கேள்விகள் எல்லாமே நல்லாயிருந்துச்சு. எவ்வளவு நாள் தயார் பண்ணீங்க?'' என்றார் சிரஞ்சீவி. ''மெகா ஸ்டாரை பேட்டி எடுக்க ப்ரிப்பேர் பண்ணாம எப்படி சார்?' என்றதும் கைதட்டி சிரித்தார்.

Chiranjeevi
Chiranjeevi

சரியாக நான்கு நிமிடங்கள் போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு, ''எனக்கு உங்களை ரொம்பப் பிடிச்சிருக்கு. வாங்க போட்டோ எடுத்துக்கலாம்'' எனக் கூப்பிட்டு தோளில் கையைப்போட்டுக்கொண்டார். ''மதியம்தான் ஆகுது... அடுத்து என்ன பிளான்?'' எனக் கேள்வி கேட்ட சிரஞ்சீவியிடம், ''ராமோஜிராவ் போகணும்'' என்றதும், உதவியாளரை அழைத்து ராமோஜிராவ் ஸ்டூடியோவுக்குள் நுழைய அனுமதி, போட்டோ எடுக்க அனுமதி என எல்லா ஃபார்மாலிட்டிஸையும் முடித்துக்கொடுக்கச் சொன்னார்.

''ஐதராபாத் வந்துட்டு பிரியாணி சாப்பிடாமப் போகக்கூடாது என்றவர், அறைக்குள் சுடச்சுட பிரியாணியை வரவழைத்தார். சென்னைக்குப் போனதும் போன் பண்ணுங்க. பத்திரமா போங்க... முடிஞ்சா சென்னைல மீட் பண்ணுவோம்'' என்றவரிடம் 'சைரா நரசிம்ம ரெட்டி' படத்துக்கு வாழ்த்துகள் சொல்லிவிட்டுக் கிளம்பினோம்.

Chiranjeevi
Chiranjeevi

41 வருட சினிமா வாழ்க்கை, ஒன்பது வருட அரசியல் வாழ்க்கை, 'சைரா நரசிம்ம ரெட்டி' பட அனுபவம், விஜய் சேதுபதியுடன் நடித்தது, கமல்- ரஜினி அரசியல் வருகை, மோடி அரசின் செயல்பாடுகள், விஜய்- அஜித் அனுபவம் எனப் பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பேசியிருக்கிறார் சிரஞ்சீவி. வியாழக்கிழமை வரும் ஆனந்த விகடன் இதழின் கவர்ஸ்டோரி இதுதான்.

Vikatan