அத்தியாயம் 1
Published:Updated:

வி.ஐ.பி சாய்ஸ் - சிவாஜி கணேசனுடன் இரண்டு மணி நேரம்!

Sivajiganesan and family0
பிரீமியம் ஸ்டோரி
News
Sivajiganesan and family0

சிவாஜி 1962-ல் கொடுத்த எக்ஸ்க்ளூசிவ் பேட்டி இது...!

லகில் வேறு எந்த மொழி நடிகரும் சாதித்திராத சாதனைகளும் சாகஸங்களும் புரிந்து சரித்திரம் படைத்துச் சாகாப் புகழ்பெற்ற நடிகரின் 81-வது பிறந்தநாள்!

காலத்தால் அழியாத காவியமான 'பாசமலர்' படத்திற்கு வசனம் எழுதிப் புகழ்பெற்று, அதனைத் தொடர்ந்து சிவாஜி நடித்த 28 படங்களுக்கு வசனம் எழுதி, வேறு எந்த ஒரு கதை வசனகர்த்தாவும் இதுவரையில் செய்யாத சாதனை படைத்து, 43 ஆண்டுகள் அவரோடு பாசத்துடன் பழகி வாழ்ந்த எனக்கு, அவரது 81-வது பிறந்த நாளில் சிவாஜி குடும்பத்தினர், சிவாஜி பிலிம்ஸ் மற்றும் சிவாஜி அறக்கட்டளையின் சார்பில் 'சிவாஜி விருது' வழங்கி கௌரவிக்கிறார்கள். இது எனக்குக் கிடைக்கும் பெருமை மட்டும் அல்ல; பெரும்பேறு!

An Two Hour With Sivajiganesan
An Two Hour With Sivajiganesan

சிவாஜிகணேசன் தமது கருத்துக்களையும், அனுபவங்களையும் கூறிய பேட்டிக் கட்டுரை அன்றைய நாளில் 'ஆனந்தவிகடன்' இதழில் 'சிவாஜிகணேசனுடன் இரண்டு மணி நேரம்' என்னும் தலைப்பில் வெளி வந்த நினைவு எனக்கு இருக்கிறது. அதைத் தேடிக் கண்டுபிடித்து, இந்த இனிய நாளில் வெளியிட்டால், இன்றைய இளைய தலைமுறை சினிமா ரசிகர்களுக்குப் பெரிதும் பயனுள்ளதாக அமையும் என்று கருதுகிறேன்.

'கலைவித்தகர்' ஆரூர்தாஸ்

ஒரு ஞாயிற்றுக் கிழமை, காலை எட்டு மணி. 'அன்னை இல்ல'த்தின் முன்புற ஹாலில் நாங்கள் சோபாவில் உட்கார்ந்து கொண்டிருந்தோம். கதவு திறக்கும் சப்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தோம். முறுக்கிய மீசையுடனும், சிரித்த முகத்துடனும் ஒருவர் வந்து 'வணக்கம்' தெரிவித்துவிட்டு, ''குளிச்சுக்கிட்டிருக்கார். உட்காருங்க, வந்துடுவார்'' என்றார். ''இவர்தான் சிவாஜியின் அண்ணன், தங்கவேலு'' என்று என் நண்பர் சொன்னார்.மணி சரியாக எட்டரை. ''ஸாரி, ஸாரி... ரொம்ப ஸாரி... உங்களைக் காக்க வெச்சிட்டேன். உட்காருங்க'' என்றபடி வந்தார் சிம்மக் குரலோன். அவர் நெற்றியில் அரை அங்குல அகலம், இரண்டரை அங்குல நீளத்திற்கு ஒரு விபூதிக் கீற்று.

''நீங்க எட்டு மணிக்கு வருவீங்கன்னு ஏழு மணிக்கே என்னை எழுப்பும்படி என் மனைவி கிட்டே சொல்லியிருந்தேன். அவங்க எட்டு மணிக்கு தான் என்னை எழுப்பினாங்க. ராத்திரி படுக்கிறபோது லேட்டாயிடுச்சு. அதனாலே கொஞ்சம் தூங்கட்டும்னு இருந்துட்டாங்க போலிருக்கு. ஐயாம் வெரி ஸாரி!'' என்றார் மீண்டும்.

அப்போது கோயில் குருக்கள் ஒருவர் உள்ளேயிருந்து வந்து, ஹாலுக்குள் நுழைந்து, ஓர் ஓரமாக வாசலுக்குப் போனார்.''இவர்தான் தெருவிலே இருக்கிற நம்ம பிள்ளையார் கோயிலில் பூஜை செய்யும் குருக்கள்!'' என்றபடியே வாசல் பக்கம் திரும்பிப் பார்க்கிறார் சிவாஜி. 'கேட்'டில் ரசிகப் பெருமக்கள் கூட்டம் கூடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து ரசிக்கிறார்.

அப்போது, குட்டையான ஆசாமி ஒருவர் சிரித்துக் கொண்டே கையில் பொட்டலத்துடன் ஹாலுக்குள் நுழைகிறார்.''வாங்க, வாங்க! பார்த்து நாளாச்சு! எப்போ வந்தீங்க? (எங்கள் பக்கம் திரும்பி) இவர் நம்ம ஓல்டு ஃபிரெண்டு, குப்தா. திருப்பதியிலே காண்டீன் நடத்தறாரு. கோயில் பிரசாதம் கொண்டு வந்திருக்காரு. (பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஒரு பையனைப் பார்த்து) இந்தப் பிரசாதத்தை அம்மா கிட்டே கொண்டு கொடு. (வந்தவரைப் பார்த்து) என்ன சமாசாரம்? எப்படி இருக்கீங்க? வீட்ல எல்லோரும் சௌக்கியமா?''

An Two Hour With Sivajiganesan
An Two Hour With Sivajiganesan

''நீங்க திருப்பதி கோயிலுக்குக் கொடுத்த யானைக்குட்டி ரொம்ப நல்லாயிருக்கு...'' ''ஐ ஸீ! வெரி குட், வெரி குட்!'' ''அஞ்சாந் தேதி என் பெண்ணுக்குக் கல்யாணம்! மெட்ராஸ்லேதான். யு மஸ்ட் கம் வித்தவுட் ஃபெயில். ''காரியதரிசி போல் பக்கத்தில் இருக்கும் குரு மூர்த்தியைப் பார்க்கிறார் சிவாஜி.''ஒண்ணாந் தேதியிலேருந்து எட்டு நாள் பம்பாய்ல இருக்கோம்.'' ''ஐயாம் வெரி ஸாரி குப்தா! பம்பாய்ல ஏழெட்டு நாடகங்கள். எட்டு நாள் கேம்ப்...'' ''ஒரே ஒரு நாள் வந்து விட்டுப் போக முடியாதா?''''இம்பாஸிபிள்! என் பிரதர்ஸை கண்டிப்பா வரச் சொல்கிறேன்... ''போன் மணி அடிக்கிறது. குருமூர்த்தி பேசி விட்டு வருகிறார். ''பத்து மணிக்கு ரிகர்சலாம்'' என்கிறார்.'' இன்னிக்கு சாயங்காலம் ஜஹாங்கீர் நாடகம். அதுக்கு ரிகர்சல். நான் போய் என் வசனங்களைக் கொஞ்சம் பாடம் செய்யணும். இந்த நாடகம் போட்டு ரொம்ப நாளாச்சு. ஒரு நாடகத்துக்கும் இன்னொரு நாடகத்துக்குமிடையே எத்தனையோ சினிமா டயலாக் பேச வேண்டியிருக்கு. அதனாலே இதைக் கொஞ்சம் 'பிரஷ்ஷப்' செய்துக்கிட்டா போதும். சக்தி கிருஷ்ணசாமி இதுலே வசனத்தை கொஞ்சம் 'பொயட்ரியா' எழுதி இருக்காரு. அதனாலே கொஞ்சம் கஷ்டம்...''

நான் மூலையிலிருந்த புலியைச் சற்று நேரம் உற்றுப் பார்த்துவிட்டு சிவாஜியிடம், ''இந்தப் புலி...?''''ஆமாம். நான் ஐதராபாத்தில் சுட்டது... அதோ அந்த 'பான்த்தர்' கூட நான் அடிச்சதுதான். ரெண்டு வருஷமா நான் வேட்டைக்கெல்லாம் போறது இல்லே. ஷூட்டிங் இல்லாட்டி வீட்டுலேதான் இருப்பேன். நான் 'ஹோம் பேர்டு'' என்றவர், 'கோல்டு பிளேக்' சிகரெட் எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டார்.

''உங்கள் வீட்டில் ஒரு சிறு தியேட்டர் இருக்கிறதாமே...''

''ஆமாங்க, வீட்டுலே இருக்கிறவங்க பார்க்கிறதுக்காகத்தான் அதைக் கட்டினேன். வாங்களேன் பார்க்கலாம்'' என்று எழுந்து நடக்க ஆரம்பித்தார் சிவாஜி.''ஆனா, அதை இப்போ பிரிச்சுட்டேன். ஏர் கண்டிஷனையெல்லாம் பிச்சுப் போட்டுட்டேன். புரொஜக்டரைக் கூட அப்புறப் படுத்திட்டேன். ஏன்னா, நம்ம பசங்க படிக்காம எந்நேரமும் சினிமா பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. 'சரி, தியேட்டர் இருந்தா இவங்க குட்டிச் சுவராயிடு வாங்க'ன்னு தியேட்டரையும் கலைச்சுட்டு, அவங்களையும் பெங்களூருக்கு மூட்டை கட்டி அனுப்பிச்சுட்டேன். அங்கே நம்ம சிஸ்டர் இருக்காங்க. அவங்க ஹஸ்பெண்டு ரொம்பக் கண்டிப்புக்காரர். அவர் கிட்டே பசங்க கொஞ்சம் பயந்து படிப்பாங்க. இங்கே இருந்தா நான் அவங்களை கவனிக்க முடியறதில்லை. வரவங்களும் போறவங்களுமா... பசங்க படிப்பதற்கு ஏற்ற இடமா இந்த வீடு..?''

An Two Hour With Sivajiganesan
An Two Hour With Sivajiganesan

இதற்குள் நாங்கள் குழந்தைகள் குளித்துக்கொண்டு இருந்த நீர்த் தொட்டிக்கு அருகில் வந்து சேர்ந்தோம்.''எல்லோரையும் விட பெரியவளா இருக்கிறவதான் என் முதல் பெண் சாந்தி. அடுத்த இரண்டு பேரும் ஆம்பளைப் பசங்க. பெரியவன் பெயர் தளபதி ராம்குமார். சின்னவன் பெயர் மகா பிரபு. அவங்கதான் பெங்களூரில் இருக்காங்க. அதோ, தண்ணிக்கு அடியிலே நிக்குதே அதுதான் என் கடைசிச் செல்வம், தேன் மொழி. மற்ற இரண்டு பேரும் என் சகோதரர் குழந்தைங்க. நாங்களெல்லாம் ஒரே குடும்பமா இருக்கோம். அதான் எனக்குப் பிடிக்கும். அமெரிக்காவிலே வயசானவங்களெல்லாம் தனியா இருந்து கஷ்டப்படறதை நான் நேரிலே பார்த்தேன். பாவமாயிருந்தது..!''

திரும்பி வீட்டுக்குள் நுழைந்து முன் ஹாலுக்கு வரும் வழியில் சிவாஜி கையைக் கட்டிக் கொண்டு, ஒரு கோயிலின் கர்ப்பக் கிரகத்தை நெருங்குவது போல் பய பக்தியுடன் ஓர் அறைக்குள் நுழைந்தார். அது பூஜை அறை என்று நினைத்தோம். ஆனால், உள்ளே காலடி எடுத்து வைத்ததும், அங்கு நடிகர் திலகத்தை ஈன்றெடுத்த தாய் திருமதி ராஜாமணி அம்மையார் கட்டிலில் அமர்ந்திருப்பதைக் கண்டோம். அருகில், தந்தையார் சின்னையா மன்றாயர். இணையற்ற கலைஞர் ஒருவரை திரையுலகிற்கு அளித்த அப் பெரியோர்களை வணங்கினோம். பிறகு, சிவாஜி தம் மனைவியை அன்புடன் எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். கண்ணில் சாந்தமும் உதட்டில் புன்முறுவலும், நெற்றியில் பெரிய குங்குமமும் துலங்கிய அவரைப் பார்த்தபோது, 'கை கொடுத்த தெய்வ'த்தில் விஜயாவிடம் சிவாஜி, தமிழ்ப் பெண்கள் எப்படியிருக்க வேண்டும் என்று சொல்கிறாரே... தம் மனைவியை மனத்தில் வைத்துக் கொண்டுதான் அப்படிச் சொன்னாரோ என்று நினைக்கத் தோன்றியது.

போட்டோ எடுக்கும்போது சிவாஜி, புகைப்படக்காரரிடம் ''ஒயர் அறுந்திருக்கு, பாருங்க'' என்று சுட்டிக் காட்டினார். போட்டோகிராபர் உட்பட அங்கிருந்த யாருமே அதைக் கவனிக்கத் தவறியபோது, சிவாஜி மட்டும் அதைக் கவனித்ததில் வியப்பொன்றுமில்லை.எதையுமே கூர்ந்து கவனிக்கும் சக்தி படைத்தவன்தான் சிறந்த ஓவியனாகவோ, எழுத்தாளனாகவோ, நடிகனாகவோ ஆக முடியும் என்று கூறினார் சிவாஜி. தொடர்ந்து, நடிப்புத் திறமையைப் பற்றியும் பேசினார். ''திறமை இருந்தால் ஒருத்தனையும் ஒருவரும் அமுக்கமுடியாது. பிரதர் எம்.ஜி.ஆர். மாதிரி கத்திச் சண்டை போடறேன்னு ஒருத்தர் ரெண்டு பேர் கிளம்பினாங்க... முடிஞ்சுதா? அவரா மத்தவங்க திறமைக்குக் குறுக்கே நின்னாரு?'' என்று குறிப்பிட்டார்.

குருமூர்த்தி வந்து ரிகர்சலுக்கு நேரமாகிவிட்டது என்று ஞாபகப்படுத்த, எல்லோரிடமும் விடை பெற்றுக்கொண்டு போர்டிகோவுக்கு வருகிறார் சிவாஜி. கார் வந்து நிற்கிறது. 'கேட்'டில் நின்ற ரசிகர்கள் கூட்டம் கை தட்டுகிறது. சிவாஜி அவர்களுக்கு வணக்கம் செய்கிறார். பின்னர் பளபளக்கும் செருப்பில் அவருடைய கால்கள் 'நைஸா'க நுழைய, காரில் ஏறி ஒத்திகைக்குக் கிளம்புகிறார்.

- விகடன் டீம்

(27.12.1964 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் இருந்து...)