Published:Updated:

14 வருடங்களுக்குப் பிறகு இணையும் அஜித்-ஏ.ஆர்.ரஹ்மான்; அஜித் 60-ன் இசை எப்படி இருக்கும்?

Ajith reunites with AR Rahman for his 60th flick
Ajith reunites with AR Rahman for his 60th flick

'தீனா' முதல் 'நேர்கொண்ட பார்வை' வரை ஸ்லோமோஷன், மிரட்டலான தோற்றம், அதிரடிக் காட்சிகள், எல்லாவற்றுக்கும் மேலாக கார் அல்லது பைக் சேஸிங் என அஜித்துக்கே உரிய திரைக்கதைக்குக் கச்சிதமான இசையைப் பொருத்தியதில் யுவனுக்கு நிகர் யுவன் மட்டும்தான்.

நடிகர்களுக்கும் இசையமைப்பாளர்களுக்குமான இணைப்பு உலகின் மற்ற மொழி சினிமாக்களில் எப்படி என்று தெரியவில்லை, ஆனால், தமிழில் முற்றிலும் வேறு விதம். எம்.ஜி.ஆருக்கும் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும் இடையிலிருந்த ஒரு கருத்து ஒற்றுமை அவரைத் திரையில் புரட்சியாளராகக் வெளிப்படுத்திக்கொள்ள வழிவகை செய்து, பின்னர் முதலமைச்சராகவே மாற்றியது. அதே போன்ற ஒரு கருத்து ஒற்றுமை கமல்ஹாசனுக்கும் இளையராஜாவுக்கும் இடையே இருந்தது. அதை இன்று வரையிலும் காணமுடிகிறது. அதன் பிறகு சிம்பு-யுவன் ஷங்கர் ராஜா, தனுஷ்-அனிருத் எனப் பல நடிகர்கள், தங்களது இயல்பில் இயங்கும், தங்களது வேகத்தில் பணிபுரியும் இசையமைப்பாளர்களைக் கண்டுகொண்டு அவர்களுடன் அதிகமான படங்களில் இணைந்து பயணித்தும் வருகின்றனர்.

Kamal with Ilayaraaja at Cinema Vikatan Awards
Kamal with Ilayaraaja at Cinema Vikatan Awards

ஆனால், விஜய், அஜித், ரஜினி போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு இப்படியொரு பிணைப்பு இல்லாமலேயே போனது. ரஜினி தன் மாஸ் இசையை தேவாவிடம் கண்டெடுத்தார் என்றே சொல்லலாம்; பிறகு ரஹ்மான் அதைத் தொடர்ந்தார். விஜய்யைப் பொறுத்தவரை இசை எப்படியிருந்தாலும், திரையில் தன்னுடைய அசைவுகளை, காட்சிக்குள் தான் ஏற்படுத்தும் கவர்ச்சியை வைத்து ஏ.ஆர்.ரஹ்மான், விஜய் ஆண்டனி, வித்யாசாகர், மணிசர்மா எனப் பல இசையமைப்பாளர்களுடன் இணைந்தார். அந்த வரிசையில் அஜித்துக்கான இசையமைப்பாளர் என ஒருவரைக் காட்ட வேண்டுமென்றால் அதில் எல்லோரது முதல் பதிலும் யுவன்ஷங்கர் ராஜாவாகத்தான் இருக்கும்.

'தீனா' முதல் 'நேர்கொண்ட பார்வை' வரை ஸ்லோமோஷன், மிரட்டலான தோற்றம், அதிரடிக் காட்சிகள், எல்லாவற்றுக்கும் மேலாக கார் அல்லது பைக் சேஸிங் என அஜித்துக்கே உரிய திரைக்கதைக்குக் கச்சிதமான இசையைப் பொருத்தியதில் யுவனுக்கு நிகர் யுவன் மட்டும்தான். இடையில் வந்த இமான், அனிருத் போன்ற இசையமைப்பாளர்கள் 'விஸ்வாசம்', 'விவேகம்' போன்ற படங்களில் இணைந்திருந்தாலும், 'மங்காத்தா', 'பில்லா', 'ஆரம்பம்' போன்ற படங்களில் யுவன் தொட்ட உயரத்தில் இன்னமும் அவர்தான் கொடி நாட்டி வைத்திருக்கிறார்.

A still from Billa
A still from Billa

இப்போது அஜித்-ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி 14 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையவிருக்கிறது. ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகவிருக்கும் அஜித்தின் 60-வது படத்துக்கு ரஹ்மான் இசையமைக்கிறார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், இதற்கு முன் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றிய படங்களில் இசையின் வடிவங்களையெல்லாம் வைத்து பார்த்தால், அடுத்து வரவிருக்கும் அஜித் 60-ல் இசை எப்படியிருக்கும் என்பதைக் கணிக்க முடியுமா என முயன்றேன்.

இதுவரை ரஹ்மான் இசையில், 'பவித்ரா' 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்', 'வரலாறு' என மூன்றே மூன்று படங்களில்தான் நடித்துள்ளார் அஜித். சாக்லேட் பாய் நாயகனாக இருந்து, மாஸ் நாயகனாக மாறிய அஜித்தின் சினிமா பயணத்தை பில்லாவுக்கு முன், பில்லாவுக்குப் பின் எனப் பிரித்தால், இந்த மூன்று படங்களுமே பி.மு.தான். அதிலும் 'பவித்ரா', 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படங்களில் அஜித் முற்றிலும் ஒரு காதல் மன்னனாகத்தான் இருந்தார். 'செவ்வானம்', 'சந்தனத் தென்றலை', 'ஸ்மை யை யாஹி', 'காற்றில் ஓர் வார்த்தை', 'இன்னிசை அளபெடையே' என இதுவரை இந்தக் கூட்டணியில் வந்த பாடல்களும்கூட பெரும்பாலும் காதல் ரகம்தான்.

Kandukondain Kandukondain
Kandukondain Kandukondain

'தீனா' தொடங்கி 'பில்லா'வரை அஜித் ஒரு மாற்றத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருந்தார். அதற்கிடையில் வந்த 'சிட்டிசன்', 'வில்லன்', 'அட்டகாசம்', 'பரமசிவன்', 'ரெட்', 'ஜனா', 'திருப்பதி', 'ஜீ', 'வரலாறு' எனப் பல படங்களில் கொஞ்சம் கொஞ்சமாக மாஸ் ஏற்றி ஏற்றி, இறுதியில் 'பில்லா'வில் முற்றிலும் வேறொரு அஜித்தாக மாறினார். இந்தக் காலகட்டத்தில் அவர் ரஹ்மானுடன் இணைந்த படம்தான் 'வரலாறு'. அதிலும்கூட மாஸ் என்பது அஜித்தின் நடிப்பு மூலமாகத்தான் இருந்ததே தவிர, இசை என்பது பாடல்களுடன் அடங்கிப்போனது. பில்லாவில்தான் அஜித்துக்காக ஒரு தீம் இசையை மாஸாக அறிமுகப்படுத்தினார் யுவன். அதன் நீட்சிதான் அந்தக் கூட்டணியில் பின்னர் வந்த அத்தனை படங்களிலும் தொடர்ந்தது.

அதன் பிறகு அஜித் எந்தப் படம் நடித்தாலும் முதலில் அவர் ரசிகர்கள் அதன் ஆல்பத்தில் தேடுவது படத்தின் தீம் இசையைத்தான் என்ற நிலையும் உருவானது. தேவி ஶ்ரீ பிரசாத் இசையில் வெளியான 'வீரம்' படத்தின் 'ரத கஜ துரக பதாதிகள்' அதில் ஒரு மாறுபட்ட தீமாகவும் இருந்தது. அதன் பின் ஹாரிஸ் ஜெயராஜின் 'என்னை அறிந்தால்' இசை, அனிருத் இசையமைத்த 'விவேகம்', 'வேதாளம்' மற்றும் இமான் இசையமைத்த 'விஸ்வாசம்' என வரிசையாக மாஸ் தீம்கள்தாம்.

Ajith with Yuvan Shankar Raja
Ajith with Yuvan Shankar Raja

அதேபோல, ரஹ்மானின் இசைப் பயணமும் வேறு மாதிரியான ஒரு கலவையாக இருந்திருக்கிறது. தன் தொடக்க காலத்தில் 'முத்து', 'முதல்வன்' என அவ்வப்போது ஒரு மாஸ் தீமை இசையமைத்திருந்தாலும், அவர் ஒரு முழுமையான மாஸ் இசையமைப்பாளராக மாறியது 'ஆயுத எழுத்து' படத்துக்குப் பிறகு என்றே சொல்லலாம். அந்தப் படத்தில் தொடங்கி, 'சில்லுனு ஒரு காதல்' (ஹே மச்சான்), 'குரு', 'சிவாஜி', 'ஜோதா அக்பர்', 'கஜினி '(இந்தி), 'ராவணன்', 'ராக்ஸ்டார்', 'எந்திரன்', 'மரியான்', 'கோச்சடையான்', 'லிங்கா', 'மெர்சல்', 'சர்கார்', '2.0' எனத் தொடர்ச்சியாக 'வெறித்தனம்' காட்டிவந்துள்ளார்.

இப்படிப் பிரித்துப் பார்த்தால் 'வரலாறு'க்குப் பிறகு இருவரின் திரைப் பயணமும் வெவ்வேறு கோணங்களில் இருந்திருக்கின்றன. ஒருவர் ஆஸ்கர் விருது பெற்றுவிட்டார், மற்றொருவர் லட்சக்கணக்கில் ரசிகர்களைக் குவித்துவிட்டார். இப்போது அவர்களின் பயணங்கள் இப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில்தான் ஒரே புள்ளியில் வந்து மீண்டும் சந்திக்கின்றன.

Varalaru
Varalaru

அஜீத் ரசிகர்களுக்கான தீபாவளி ‘ட்ரிபிள் ஷாட்!'-ஆக வெளிவந்த படம் 'வரலாறு'. அப்போ விகடன் ரிவ்யூல 43 மார்க் கொடுத்திருந்தாங்க. ரஹ்மானைப் பற்றி சொல்லும்போது " ‘இன்னிசை அளபெடை’ பாட்டில் மட்டும் ஏ.ஆர்.ரஹ்மான் எட்டிப் பார்க்கிறார்"னு கமென்ட்!

வேற ஒரு சீனுக்கு 'அநியாயம்'னே குட்டு வச்சிட்டாங்க! Guess that scene!

Read Ajith's Varalaaru Movie Review in APPAPPO -> http://bit.ly/VaralaaruReview

Mersal
Mersal

அஜித்துக்கு யுவன் போட்ட தீம்கள் ஒரு வகை மாஸ் என்றால், அதே காலகட்டத்தில் ரஜினிக்கும் விஜய்க்கும் ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட இசைத் துணுக்குகள் வேறு ரகம். 'பில்லா'வில் அஜித் ஸ்லோமோஷனில் நடக்கும்போது அந்தப் படத்தின் தீமும் அவருடனேயே நடப்பது போன்ற உணர்வு வரும். அதேபோல 'மெர்சல்' விஜய்க்கு ஒரு டைனமிக்கான தீமை ரஹ்மான் பின்னணியில் கோத்திருப்பார். ஃப்ளாஷ்பேக்கில் வரும் வெற்றிமாறனைக் காட்டி திரையில் விஜய் மாஸை நிரப்பும்போதெல்லாம், இந்த தீமும் திரையரங்கை நிரப்பும்.

அப்படியென்றால், ஸ்லோமோஷனில் மாஸாக அஜித் நடந்துவரும்போது டைனமிக்கான ரஹ்மான் இசை பின்தொடர்ந்தால் ஒரு வகை இசைக் காம்போ உருவாகும் அல்லவா அதை நாம் இப்போது எதிர்ப்பார்க்கலாம். அப்படி இல்லையென்றால், ரஹ்மானின் ஸ்லோமோஷன் மாஸ் தீமான 'எந்திரன்' படத்தின் 'அரிமா அரிமா' பாடலின் முன்னிசை இருக்கிறதல்லவா. அதே போன்ற ஒரு தீமையும் நாம் அஜித் 60-ல் எதிர்ப்பார்க்கலாம்.

Endhiran
Endhiran

இதைவிட அஜித் படங்களில் மற்றொரு முக்கிய அம்சம் என்றால் கார் அல்லது பைக் சேஸ். அதிலும், தற்போது வரவிருக்கும் படம் ஒரு ரேஸரைப் பற்றிய கதை எனக் கூறப்படுகிறது. அப்படியென்றால், இதற்கான தீமின் டெம்போ அதிவேகமாக இருக்க வேண்டும். அதே வேளையில் கொஞ்சம் டெக்னோ வடிவில் இயந்திரத்தனமான இசையாக இருக்க வேண்டிய அவசியமும் உள்ளது. அப்படி ஓர் இசை வடிவத்தை 'அச்சம் என்பது மடமையடா' படத்தில் இடம்பெறும் 'சோக்காலி' பாடலின் தன்மையில் காண முடியும்.

ஒரு நடிகரும் இசையமைப்பாளரும் 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைவது அத்தனை முக்கியமான ஒரு நிகழ்வா என்றால் இல்லைதான். ஆனால், அது அஜித், ரஹ்மான் என அடித்தட்டிலிருந்து தானாக முளைத்து வந்து தொடமுடியாத உச்சத்திலிருக்கும் இருவர் என்றால் கண்டிப்பாக ஒரு முக்கிய நிகழ்வுதான்.

Varalaru
Varalaru

இந்தப் படத்தில் கண்டிப்பாக இருவரும் இணையப்போகிறார்களா என்பது அதிகாரபூர்வமாக நமக்குத் தெரியாது. ஆனால், அப்படி இணைந்தால், கடந்த 14 ஆண்டுகளில் இருவரும் கடந்து வந்த பாதை, அதில் நிகழ்த்திய சாதனைகள் மற்றும் எதிர்கொண்ட வலிகளின் ஒற்றைப் புள்ளியாக இது இருக்கும் என்பதிலும் சந்தேகமில்லை, அதில் உருவாகும் இசை இருவரின் சினிமா பயணத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் என்பதிலும் சந்தேகமில்லை. இவை இரண்டுக்கும் மேலாக, 'வரலாறு' படத்தில் கடைசியாக இணைந்தவர்கள், மீண்டும் ஒரு வரலாறு படைப்பார்களா என்பதைக் காத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு