Published:Updated:

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2019

தனுஷ்
பிரீமியம் ஸ்டோரி
தனுஷ்

திறமைக்கு மரியாதை

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2019

திறமைக்கு மரியாதை

Published:Updated:
தனுஷ்
பிரீமியம் ஸ்டோரி
தனுஷ்

எஸ்.எஸ்.வாசன் விருது - பாரதிராஜா

1977. பெரும்பான்மையான இந்தியா, கிராமங்களில் வாழ்ந்தது. ஆனால் தமிழ் சினிமா மட்டும் ஸ்டூடியோ செட்களில் வாழ்ந்துகொண்டிருந்தது. அதைக் கைபிடித்துக் கிராமத்துத் தெருக்களுக்கு அழைத்துச்சென்ற பாரதிராஜா - தமிழ் சினிமாவின் தடத்தை மாற்றியமைத்த, கலையின் திசைகாட்டி. சப்பாணி, மயிலு, பரட்டை என்னும் கிராமத்து மனிதர்களின் நேசம், புறக்கணிப்பு, வன்மம், இயல்பான பகடி, சடங்குகள், பண்பாட்டுக்கூறுகளைப் பதிவு செய்த ‘16 வயதினிலே’ வந்தபிறகு தமிழ் சினிமா, மாமன் மகள் மஞ்சத்தண்ணி ஊற்றியதைப்போலப் புதுப்பொலிவு பெற்றது. இன்றுவரை மற்றவர்கள் எட்டாத, ஆனந்த விகடனின் மதிப்பெண் உயரம் அடைந்த படம் அது.

பாரதிராஜா
பாரதிராஜா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

`16 வயதினிலே’யில் நகரத்திலிருந்து வந்த பட்டணத்து டாக்டர் கிராமத்து வாழ்வில் ஏற்படுத்திய தாக்கத்தைச் சொன்னால், நகரத்திலிருந்து வந்த ரயில், கிராமத்துச் சாதிநெருக்கடியிலிருந்து தப்பிய காதலர்களை ஏற்றிச்சென்ற நவீனத்தை முன்வைத்தது ‘கிழக்கே போகும் ரயில்.’ காதலை முன்வைத்து சிலுவையையும் பூணூலையும் சேர்த்து அறுத்தெறிந்த ‘அலைகள் ஓய்வதில்லை’, பேருக்குப் பின்னால் வாலெனத் தொங்கும் சாதிப்பட்டத்தின்மீது வினா வெடிகுண்டு வீசிய ‘வேதம் புதிது’, 80களின் வேலையில்லாத் திண்டாட்டத்தின் வெம்மையால் அல்லலுற்ற இளைஞர்களின் பாரம் சொன்ன ‘நிழல்கள்’, மரபை மீறிய புதுக்கவிதையான இருவர் உறவின் மன உணர்வுகளைச் சொன்ன ‘முதல் மரியாதை’, கற்காத முரட்டு இளைஞனுக்கும் கற்பிக்கும் ஆசிரியைக்கும் இடையிலான காதலைக் கடலலைகளின் ஈரத்துடன் சொன்ன ‘கடலோரக்கவிதைகள்’, பெண்சிசுக்கொலைக்கு எதிராக ஆணாதிக்கத்தின் கன்னத்தில் விழுந்த அறை ‘கருத்தம்மா’, முதிர்பருவ நேசம் சொன்ன ‘அந்திமந்தாரை’ என அரசியலும் செவ்வியலும் இணைந்த, பாரதிராஜா படங்களின் பட்டியல் பெரிது. இன்னொரு புறம் ‘சிவப்பு ரோஜாக்கள்’, ‘டிக்டிக்டிக்’, ‘ஒரு கைதியின் டைரி’ என நகர வாழ்க்கையை மையமாகக் கொண்ட த்ரில்லர் படங்களும், இவர் படைப்பின் பரிமாணங்களின் ஆழமும் அகலமும் அதிகம் என்பதை உணர்த்தின. விழியில் விழுந்து, இதயம் நுழைந்து, உயிரில் கலந்த உறவால் தமிழ் சினிமாவின் தசைகளில் புதுரத்தம் பாய்ச்சியவருக்கு ஆனந்தவிகடன், இந்த ஆண்டின் எஸ்.எஸ்.வாசன் விருது தந்து, இமயத்தின் தலையில் இன்னொரு கிரீடம் சூட்டுகிறது.

சிறந்த படம் - பேரன்பு

மூளைமுடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட பதின்பருவத்துச் சிறுமியின் உடல்-உள்ள மாற்றங்களையும், அதை எதிர்கொள்ள முடியாமல் போராடும் தகப்பனின் துயர்மிகு அன்றாடத்தையும் காட்சிப்படுத்தியது `பேரன்பு.’ சராசரி மனிதர்களின் கவனத்துக்கு வராத இத்தகைய சிறப்புக்குழந்தைகளின் வாழ்க்கையைப் பதிவுசெய்த வகையில் பாராட்டத்தக்க பணியைச் செய்தது. வெறுமனே பார்வையாளர்களின் இரக்கம் கோரும் படைப்பாக இல்லாமல், பாலியல் சிக்கல்கள் உள்ளிட்ட, பிரச்னையின் பரிமாணங்களைச் சித்திரித்த விதத்தில் தனித்துவமானது இந்தப் படம்.

பேரன்பு
பேரன்பு

நகர நெருக்கடிகளில் தப்பி தினசரி அவஸ்தைகளை விடுத்து மலைப்பறவைகளாய்க் கூடமைத்து சிறகொடிந்த மகளோடு வாழ முற்படும் தந்தையின் பரிதவிப்பு படமெங்கும் நம்மைப் பதற்றம்கொள்ளச் செய்தது. தாலாட்டும் இசையும் குளிர்விக்கும் காட்சிகளும் இயற்கையையும் ஒரு பாத்திரமாக்கி நம்மை அமுதவனின் உலகிற்குள் உலவச்செய்தார் இயக்குநர் ராம். நம்பிக்கைக்கும் துரோகத்துக்குமான இடைவெளியை அன்பால் கடந்த அழகிய படைப்பு இது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சிறந்த இயக்குநர் வெற்றி மாறன் - அசுரன்

‘செருப்பணிந்து நடக்காதே என்றவனின் தோலை உரித்தே செருப்பாய் நட...’ எனும் கவிதையின் கனலை, பூமணியின் `வெக்கை’யில் சேர்த்து `அசுரன்’ படத்தில் அனல் பாய்ச்சினார் வெற்றிமாறன். அண்ணனின் துர்மரணம் கண்ட தம்பியின் கேள்விகளாக நகர்ந்த `வெக்கை’யை, தந்தையின் கதையாக மாற்றி சாதியத்துக்கு எதிரான கலைச்சமர் நிகழ்த்தினார்.

வெற்றி மாறன்
வெற்றி மாறன்

தொடர்ச்சியாக நாவல்களைப் படங்களாக மாற்றுவதுடன், மூலப் படைப்பின் ஆன்மா குறையாமல் அதை அரசியல் சினிமாவாக மாற்றும் சூத்திரம் உணர்ந்தவர். வெறும் பழிக்குப் பழி வாங்கும் `பாட்ஷா’ கதையாக முடிக்காமல், “அதிகாரத்துக்குப் போ. ஆனா அவங்க நமக்குப் பண்ணுனதை நீ யாருக்கும் பண்ணாதே” எனப் பகைமறப்பு அறம் பேசியதில் இருக்கிறது அரசியல் தெளிவு. ஒரு நல்ல கலை என்பது அதிகாரம் உறைந்த சமகாலத்தின் இருப்பைக் குலைப்பது; பார்வையாளர்களை சுயவிசாரணைக்கு உட்படுத்தி நீதியின் கேள்விகளை முன்வைப்பது. அவற்றைச் செய்த அரசியல் சினிமா ‘அசுரன்.’ பஞ்சமி நிலப்பிரச்னையைப் பெரும் பார்வையாளர் பரப்பில் கொண்டுசென்றது, கறுப்பு-சிவப்பு-நீலம் எனப் போராட்ட வண்ணங்களின் கலவையைக் கலையாக்கியது என, சமூகப்பொறுப்பும் கலைமேதைமையும் சரிவிகிதத்தில் கொண்ட படைப்பாளி வெற்றி மாறன்.

சிறந்த நடிகர் தனுஷ் - அசுரன்

டக்கு தொடங்கி மேற்கு வரை திசைகளைக் கடந்து திறமை காட்டும் கலைஞன் தனுஷ். இந்தமுறை நடிப்பு அசுரனாய் அசத்தினார்; மயக்கினார்; அதிரவைத்தார். பல்லைப் பிரித்துக் கட்டியது, குரலில் கனம் கூட்டியது, உடல்மொழியை முற்றிலும் மாற்றியது என, இரண்டரை மணிநேரப் பயணத்திற்காக மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் கூடு விட்டுக் கூடுபாய்ந்த அசாத்திய வலிமை தனுஷுக்கு மட்டுமே சாத்தியம். மகனுக்காகத் திரையில் சிவசாமி தாழ்ந்து போகும்போதெல்லாம் கலைத்தளத்தில் ஒவ்வோர் அங்குலமாய் உயர்ந்தார் தனுஷ்.

தனுஷ்
தனுஷ்

கூனல் விழுந்த உடலோடு சிவசாமி தளர்வாய் நடக்க நடக்க, நிமிர்ந்தது தமிழ்சினிமா. சிதைந்த உடலோடு சிவசாமி நடத்திய பாசப்போராட்டத்தில் பிரவாகமாய் உணர்ச்சிகள் ஊற்றெடுக்க, சில்லுச்சில்லாய் உடைந்தன இதயங்கள். திண்ணையில் ஆற்றாமையில் அவர் எழுப்பிய ஓலம், நாள்கள் கழிந்தபின்னும் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது. யுகங்கள் கடந்தும் காட்டின் நடுவே ஓங்கி நிற்கும் முதுமரம்போல தமிழ்சினிமாவில் என்றும் நிலைத்திருப்பார் சிவசாமி. தனுஷ், இந்தத் தலைமுறையின் பெருமை; நடிப்புக்கான நடமாடும் பாடப்புத்தகம்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிறந்த நடிகை டாப்ஸி பன்னு -  கேம் ஓவர்

டாப்ஸிக்கு இது வேறு ஆடுகளம். தமிழில் கிட்டத்தட்ட ரீ என்ட்ரி. இந்தி, தெலுங்கு என நடிப்பில் ராட்சஸி முகம் காட்டிவிட்டு, தமிழ்க்கரையில் மையம் கொண்டு கேம் ஓவரில் டாப்ஸி காட்டியது அசுரப் பாய்ச்சல். கண்ணாடிக்குடுவைக்குள் சிக்குண்ட பறவையாய்ப் பதற்றத்துடன், தன் ஒவ்வொரு அடியையும் பதைபதைப்புடன் எடுத்து வைக்கவேண்டிய கதாபாத்திரம். மன அழுத்தத்துடன் இருக்கும் கதாபாத்திரத்தில் நாம் டாப்ஸியை உள்வாங்கிக்கொள்ளும் முன்னரே, கால்கள் உடைக்கப்பட்டு வீல் சேரில் அடுத்த பரிணாமத்துக்குள் நம்மை இழுத்துச் செல்கிறார்.

டாப்ஸி
டாப்ஸி

ஒரு பெண்ணின் வாழ்வில் நடந்த வன்முறைக்கு அந்தப் பெண்ணையே காரணமாய்ச் சொல்லி பலியாக்கும் சூழலில் ஒரு கதாபாத்திரம். விளையாட்டின் படிநிலைகள், இருட்டு தரும் பயம், விடுதலையின் மீதான தணியாத வேட்கை என டாப்ஸி வெற்றியை நோக்கி நகரும்போதும் அவ்வப்போது தோற்கும் போதும், நம்பிக்கை வார்த்தைகள் அளித்தார்கள் படம் பார்க்கும் ரசிகர்கள். இறுதிக்காட்சியில் சாளர வெளிச்சத்தில் எல்லாம் கடந்து மந்தகாசம் வீசும் டாப்ஸியின் நடிப்பு அசாத்தியமானது. கேம் ஸ்டார்ட்ஸ் டாப்ஸி!

சிறந்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பேரன்பு, சூப்பர் டீலக்ஸ்

`பேரன்பு’, `சூப்பர் டீலக்ஸ்’ என இசையின் இரு துருவங்களையும் தொட்டன யுவனின் இருகரங்கள். அவர் பியானோவின் வெண்வதிகள் வெண்பரியாய் பிடரி சிலுப்ப, கரும்வதிகள் கரும்பூனையாய்க் குறும்பு செய்தது. வதிபலகையில் பாய்ந்தோடிய இசைப்பெரும் நதி, `பேரன்பி’ல் இயற்கையின் முகங்களுக்கு ஒப்பனை செய்தது. `சூப்பர் டீலக்ஸி’ல் இயக்குநரின் உலகுக்கு ஆக்ஸிஜன் நிரப்பியது.

யுவன்
யுவன்

`வான்தூறல்’ பாடலுக்கு கிடாரில் மேகம் திரட்டி, தபேலாவில் இடியோசை ஒலித்தார். `அன்பே அன்பின்’ பாடலுக்கு எங்கிருந்தோ பொன்துகள் பொழிந்தார். `செத்துப்போச்சு மனசு’ பாடலில் ஏனோ செத்துப்போகவே வைத்தார். அமுதவனும் பாப்பாவும் வசித்து வந்த மரவீட்டைச் சுற்றி, யுவன் மீட்டிய இசைக்கு யூகலிப்டஸ் மரத்தின் நறுமணம். குளிரின் இதம். பசும்புல்லின் நிறம். இப்படி, `பேரன்பி’ல் யுவனின் இசை, செவியைத் தீண்டி, தாண்டி, ஐம்புலனையும் உணரச் செய்தது. அதற்கு அப்படியே நேரெதிர் குறும்பு, `சூப்பர் டீலக்ஸ்.’ தியாகராஜன் குமாரராஜாவின் புனைவுலகுக்கு வண்ணம் தீட்டியது யுவனின் இசைதான். `ஐஸ் வைட் ஷட்’ தீமையும், `ஸ்டார் வார்ஸ்’ தீமையும் திருவையாற்றுக்கு இழுத்துவந்தது, `என்னடி மீனாட்சி’க்குப் புதுவடிவம் தந்தது என பாப் கல்ச்சுரல் குறிப்பிடல்களில் குதூகலம் கூட்டியிருந்தார். இரு படங்களையும் தன் இசையால் சூப்பர் டீலக்ஸ் தரத்திற்கு மாற்றிய பேரன்பின் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு சூப்பர் டூப்பர் வாழ்த்துகள்!

சிறந்த வில்லன் ஸ்டன் சிவா -  சாம்பியன்

வில்லன் என்பவன் கொடூரனாக இருக்க வேண்டியதில்லை. அமைதியின் சொரூபமாய் நமக்கு எல்லாமளித்து, நம்முடனேயே நம் கழுத்தை அறுக்கும் நபராக இருக்கலாம் என வெள்ளை நிறத்துக்குப் பின்னிருக்கும் அழுக்கு அரசியல்வாதிகளைக் கண்முன் கொண்டு வந்தார் ஸ்டன் சிவா.

ஸ்டன் சிவா
ஸ்டன் சிவா

இறந்த ஒருவரின் புகைப்படத்துக்கு அருகில் இன்னொரு புகைப்படத்தை வைக்க யோசனை சொல்லும் காட்சியில் அத்தனை குரூரத்தையும் மில்லிமீட்டர் பிசகாமல் வெகு இயல்பாய் நடித்து அசத்தினார். இதுவரை திரைக்குப் பின்னால் அதிரடி காட்டியவர் இந்தமுறை திரையில் எடுத்தது விஸ்வரூப வில்லத்தனம்.

சிறந்த வில்லி சாய் தன்ஷிகா - இருட்டு

கதையின் நாயகியாய், கதை நகர்த்தும் ஊன்றுகோலாய் கெத்து காட்டிய தன்ஷிகாவுக்கு இந்த முறை வில்லி வேடம். வசனங்கள் கிடையாது, பார்க்கும் பார்வையிலும் நடையிலும் பயத்தைப் பார்வையாளர்களுக்குள் விதைக்க வேண்டும். இருட்டில், அந்த இருள் சூழ்ந்த ஆடையில் அதைச் செவ்வனே செய்தார் சாய் தன்ஷிகா.

சாய் தன்ஷிகா
சாய் தன்ஷிகா

கறுப்புடை, காது வளையங்கள், உடலெங்கும் டாட்டூக்கள் என `இருட்டு’வில் சாய் தன்ஷிகா காட்டியது வேற லெவல் மேனரிஸம். கதை மாந்தர்களுடன் நம்மையும் மிரட்சியில் அமர வைத்ததுதான் சாய் தன்ஷிகாவின் வெற்றி.

சிறந்த குணச்சித்திர நடிகர் ஜார்ஜ் மரியான் கைதி

ரவின் ரேகைகளைக் கிழித்தபடி ஓடிய கூட்டத்தின் நடுவே தனிவெளிச்சம் பெற்று நிமிர்ந்து நின்றார் ஜார்ஜ். முதல் காட்சியில் பையைத் தூக்கிக்கொண்டு சாதாரணமாய் வந்திறங்கியவரைச் சுற்றி விரிந்தது கைதியின் குற்றப்பத்திரிகை.

ஜார்ஜ் மரியான்
ஜார்ஜ் மரியான்

ஒன்றும் புரியாமல் குழம்பித் தவித்து, பின்னர் நிலைமையுணர்ந்து விடலைகளின் பாதுகாப்பிற்குப் பொறுப்பேற்று, பம்மி பயந்து, இறுதியாக ‘இழக்க ஒன்றுமில்லை’ எனக் கட்டுப்பாடு கையை மீறிப்போன கணத்தில் ஆங்காரமாய் எதிர்வினையாற்றி... ஒளியை உள்வாங்கி பூதாகரமாய் எழும் நிழலைப்போல உணர்ச்சிகளின் வரைபடத்தில் பிரமாண்ட உயரம் தொட்டார். காமெடியனாய் அவரைப் பார்த்துச் சிரித்த நெஞ்சங்களைக் கலங்கடித்து, நெகிழச் செய்து கதவிற்குப் பின்னால் ஒற்றையாளாய் நிற்கும் இறுதிக்காட்சியில் சிலிர்த்து ஆர்ப்பரிக்கவைத்து... குணசித்திர வேடத்திற்கென புது வரைபடம் தீட்டினார் ஜார்ஜ் மரியான்.

சிறந்த குணச்சித்திர நடிகை ரம்யா கிருஷ்ணன் சூப்பர் டீலக்ஸ்

சில நிமிடங்களுக்கு முன் தன்னை வசைபாடிய மகனின் துயரநிலை, இன்னொருபுறம் மருத்துவமனையிலும் பிரசங்கம் செய்யும் கணவர்.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2019

“உங்களுக்கு ஒரு பிரச்னைனா நான் கட்டாயம் உதவி பண்ணியிருப்பேன்” என மருத்துவரிடம் மன்றாடும் அக்காட்சி ரம்யா கிருஷ்ணனின் அனுபவ நடிப்புக்கு ஓர் உதாரணம். சிங்கிள் ஷாட்டில் ரம்யா கிருஷ்ணன் அக்காட்சியில் நடத்தியது மிடில் கிளாஸ் பெண்களின் ராஜமாதா வெர்ஷன். தன்மீது சுமத்தப்பட்ட அத்தனை அழுக்குகளுக்கும் இறுதியில் அவர்தரும் விளக்கத்தை நம்புவது எளிய காரியமல்ல. சட்டென சாமி படத்தின் பெயரைச் சொல்லும்போது, அம்மனாய் முகமாற்றம் செய்வதெல்லாம் அவருக்கே உண்டான மாயக்கலை. அதை ஏற்றுக்கொள்ள வைத்ததில் இருக்கிறது ரம்யா கிருஷ்ணனின் வெற்றி.

சிறந்த நகைச்சுவை நடிகர் செ.ஆனந்தராஜ் ஜாக்பாட்

‘பாட்ஷா’வைக் கம்பத்தில் கட்டிவைத்து உரித்து மிரட்டிய அதிரடி வில்லன், இப்போது ‘காமெடி வில்லன்’ வட்டாரத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பி முழுநீள நகைச்சுவை நடிகராய் சிரிப்பில் ஆழ்த்துகிறார். அதிலும் ‘ஜாக்பாட்’ படத்தில் இவர் ஆடியது காமெடி கதகளி.

ஆனந்தராஜ்
ஆனந்தராஜ்

உள்ளூர் அரசியல்வாதி மானஸ்தனாக ‘ஃபுல் ஹேண்ட் போட்டே பழகிட்டேன்’ என வசனங்களால் கிச்சுகிச்சு மூட்டினார். மறுபுறம் இன்ஸ்பெக்டர் மானஸ்தியைத் திரையில் பார்த்தவுடனேயே குலுங்கத் தொடங்கினார்கள் பார்வையாளர்கள். ‘என் அளவுக்கு அழகில்லல்ல?’ என மானஸ்தி சிணுங்கும்போதெல்லாம் வெடிச்சிரிப்பு கிளம்பியது. பாசக்கார அக்கா - தம்பியைப் பார்த்துப் பழகிப்போன நமக்கு இந்த ஜோடி வைத்தது புரையேற வைக்கும் புதுவிருந்து. இரட்டை வேடத்தில் சொல்லியடித்த ஆனந்தராஜுக்குக் கிடைக்கிறது இந்த ஆண்டின் மகத்தான ‘ஜாக்பாட்.’

சிறந்த நகைச்சுவை நடிகை ஊர்வசி தில்லுக்கு துட்டு- 2

ர்வசியின் உதறல் உடல்மொழி தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயம். இந்த ஆண்டும் தனது டிரேடுமார்க் பாவனையில் சிரிப்புவேட்டை நடத்தினார் ஊர்வசி. பேய்க்கு அஞ்சும் பித்தலாட்ட சாமியார் சக்ரமாதேவியாய் அவர் அலறும்போதெல்லாம் நம் நியூரான்கள் சிரிப்பிற்கு சிக்னல் கொடுத்தன.

ஊர்வசி
ஊர்வசி

திகிலூட்டும் பின்னணி இசைக்கும் இருள் சூழ்ந்த கேமராக் கோணத்திற்கும் நடுவே அவரின் நடுங்கும் குரல் அந்தப் பெரிய மாளிகை முழுக்க ஒளிந்து, ஓடி, எதிரொலித்துக் கலகலப்பூட்டியது. சக்ரமாதேவியை ஆவிகள் சங்குச்சக்கரம் போலச் சுற்றிவிட்டு வேடிக்கை பார்க்க, பேய் என்றும் பாராமல் கைதட்டி உற்சாகப் படுத்தினார்கள் ரசிகர்கள். இரண்டு தசாப்தங்களாய்த் தன் அனுபவமும் முதிர்ச்சியும் கொண்டு காமெடி ஏரியாவில் தனக்கென ஸ்பெஷல் இடம் உருவாக்கிக் கோலோச்சிவருகிறார் இந்தச் சிரிப்பு மோகினி.

சிறந்த அறிமுக இயக்குநர் செழியன் டுலெட்

ணிக நிர்பந்தங்களின் வரையறை தாண்டிய சினிமா, `டுலெட்’. சென்னைப் பெருநகரத்தில் வாழும் ஒரு சிறுகுடும்பம். திடீரென வேறு வீட்டிற்கு இடம்பெயர வேண்டிய சூழல். வாடகைக்கு வீடு தேடி அலையும் அக்குடும்பம் சந்திக்கும் அவலங்களை, உண்மைக்கு அருகில் நின்று காட்சிப்படுத்தினார் இயக்குநர் செழியன்.

செழியன்
செழியன்

யதார்த்தத்தின் பலத்தில் எழுந்து நின்ற `டுலெட்’, பல உலகத் திரைப்பட விழாக்களை அலங்கரித்தது. மிகையில்லாத நடிப்பு, கச்சிதமான ஒளிப்பதிவு எனக் கதை சொல்லலில் வித்தியாசம் காட்டியது. முக்கியமாக, சூழலின் சப்தங்களையே பின்னணி இசையாக்கியது பெருங்கலை. க்ரேயான்கள் கிறுக்கப்பட்ட சுவர்களில், ஸ்டிக்கர் பொட்டு ஒட்டியிருக்கும் கதவுகளில், புகைப்படங்கள் தொங்கும் ஆணிகளுக்குப் பின்னால் மறைந்துள்ள நுண்ணரசியலைக் காட்சிமொழியில் கவனப்படுத்திய செழியன், சென்ற ஆண்டின் சிறந்த அறிமுக இயக்குநர்.

சிறந்த அறிமுக நடிகர் த்ருவ் விக்ரம் ஆதித்ய வர்மா

யாக்கையில் பரவிக்கிடந்த காதலோ ஒருநொடியில் தன்னைப் பிரிய, பிரிவினால் உண்டான நஞ்சுக்குத் தன்னையே உண்ணக் கொடுக்கும் ஆதித்ய வர்மா, தேவதாஸின் நவயுக வடிவம்!

த்ருவ் விக்ரம்
த்ருவ் விக்ரம்

ஆண்திமிர், வயதுக்கேற்ற முதிர்ச்சி, சுட்டெரிக்கும் நினைவுகள், அதீத அலட்சியம் எனப் பரிமாணங்கள் பல கொண்ட பாத்திரத்தை, `இது ரீமேக்தானே’ என்ற எண்ணம் தோன்றாதவாறு அச்சு அசல் சாத்தியப்படுத்திக் காட்டினார் த்ருவ். அசலின் வீச்சு பெரிது, பெரும் நடிகனின் மகன் எனும் சுமையும் பெரிது. அத்தனை சவால்களையும் அநாயாசமாய் ஊதித்தள்ளினார். அடர்தாடியையும் தாண்டி அவர் பாவனைகள் நிலைத்தன; கறுப்பு கூலரையும் தாண்டி த்ருவ் கண்கள் பேசின. சாக்லேட் பாய் முகத்தைக் கொண்டு ரஃப் அண்ட் டஃப் ராக்கெட் விட்டு அனைவரையும் அண்ணாந்து பார்க்கச் செய்தார் இந்த ஸ்வீட் ராஸ்கல்!

சிறந்த அறிமுக நடிகை லிஜோமோள் ஜோஸ் சிவப்பு மஞ்சள் பச்சை

பாந்தமான தோற்றத்தாலும் இயல்பான நடிப்பினாலும் இந்த ஆண்டு எல்லாரையும் திரும்பிப் பார்க்கவைத்தார் லிஜோமோள் ஜோஸ். பாசம் கொட்டிய அக்காவாக, அன்பில் நெகிழ்ந்து மருகும் மனைவியாக அறிமுகப் படத்திலேயே இரண்டு பரிமாணங்கள்.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2019

இரண்டிலும் முதிர்ச்சியோடு பயணித்து வெற்றிகண்டார் லிஜோமோள். டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டான ‘சிவப்பு மஞ்சள் பச்சை’யில் இரண்டு நாயகர்களுக்கும் இணையாக, இணைக்கும் பாலமாக, படத்தின் ஈர்ப்புவிசையாக இவர் சுற்றிச் சுழன்றதைப் பார்த்துத் தங்களின் ஏகோபித்த ஆதரவை அள்ளி வழங்கினார்கள் ரசிகர்கள். யூகிக்க முடியாத வானிலைபோல சகல உணர்ச்சிகளையும் முகத்தில் சட்சட்டென தேக்கி, மாற்றி, பிரதிபலித்து நமக்கும் கடத்திய லிஜோமோள், நம்பிக்கை நல்வரவு.

சிறந்த குழந்தை நட்சத்திரம்நாக விஷால் கே.டி (எ) கருப்புதுரை

“ஸ்வீக்கர கீக்கற முழுங்கிட்டயாய்யா, சாமியே காதப் பொத்திக்குச்சு’’ என்று தன் முதல் வசனத்திலேயே பார்வையாளர்களைக் கவலை மறந்து சிரிக்க வைத்தான் சிறுவன் நாகவிஷால்.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2019

மேல்வாயில் ஓட்டைப் பல்லுடன் கோலிவுட்டுக்கு அறிமுகமாகிய இந்தச் சிறுவன், அந்தப் பிடரி நரைத்த கிழவருடன் உரையாடிய ஒவ்வொரு காட்சியும் அப்ளாஸ் ரகம். எமோஷனல் காட்சியில் கரைய வைத்து, கலகலப்புக் காட்சியில் மனதை இலகுவாக்கி, நம் எல்லோருக்குள்ளும் இருக்கும் சிறுவனை வெளிக்கொணர வைத்த பெரியவன் இந்த அழகிய சிறுவன். நாம் இழந்த, நாம் தேடி அலையும் வட்டார மொழிக் கலைஞனாய் ஜொலிக்கவிருக்கும் இச்சிறுவனுக்கு ஆயிரம் முத்தங்கள்.

சிறந்த ஒளிப்பதிவு PS வினோத், நீரவ் ஷா சூப்பர் டீலக்ஸ்

ன்னலுக்கு அப்பால் ஒளிரும் திரையில் தோன்றும் டைட்டிலிலிருந்து தொடங்கியது இந்தக் கூட்டணியின் ஒளி விளையாட்டு. மஞ்சள், சிவப்பு, நீலம், பச்சை என வினோத் - நீரவ் ஷா தோற்றுவித்தது வானவில் காட்சிமொழி.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2019

மரணம் விளைவிக்கும் பதைபதைப்பை, குட்டிக் குட்டிச் சிறுகதைகளாய் வேம்புவின் அடுக்குமாடிக் குடியிருப்பின் இண்டு இடுக்குகள் வழியே கடத்தினார்கள். ஜோதி தொலைத்த உறவை ராசுக்குட்டியின் வெள்ளந்திக் கண்கள் வழியே ஹைக்கூ கவிதையாய் வரைந்தார்கள். துளியும் விரசமில்லாமல், சரி தவற்றுக்கு அப்பாற்பட்ட வெளியில் லீலாவை நிறுத்தித் தராசை சமனாக்கினார்கள். அற்புதத்தின் அற்பங்களில் வெளிச்சம் பாய்ச்சி நிதர்சனத்தை உணர்த்தினார்கள். ‘இது நான், இது நீ’ என விடலைகளின் இளமையில் நண்பர்கள் குழாமை இணைத்தார்கள். ஒளியால் கதை சொன்ன கலைஞர்கள்!

சிறந்த படத்தொகுப்பு ரிச்சர்ட் கெவின் கேம் ஓவர்

100 நிமிடங்கள், ஒரு சவாலான திரைக்கதை. ஒரே ஒரு வீடுதான் கதைக்களம். இரண்டு பாத்திரங்கள்தான் பிரதானம். இத்தனை சவால்கள் இருந்தும், இருக்கை நுனியில் அமரவைத்து பயமுறுத்தியது, படம் நெடுக மண்டிக்கிடக்கும் அந்த இருட்டு மட்டுமல்ல; ஒரு முதன்மைக் கதாபாத்திரம் போலச் செயல்பட்ட படத்தொகுப்பும்தான்.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2019

முன்னும்பின்னுமாய் நகரும் கதை, மான்டேஜில் சொல்லப்படும் ஃபிளாஷ்பேக் என அலைபாயும் திரைக்கதையைக் கட்டிப்போட்டுக் கோவையாக்கியது ரிச்சர்ட் கெவினின் படத்தொகுப்பு. ஒரே காட்சி, ஒரே ஷாட் இரண்டு மூன்று முறை வரும்போதும் பார்ப்பவர்களுக்கு எந்த உறுத்தலும் இல்லாமல் கடத்தியது ரிச்சர்ட்டின் வெற்றி. த்ரில்லை மட்டுமே முதன்மைப்படுத்தி வெட்டப்பட்ட காட்சிகள், சிறந்த படத்தொகுப்புக்கான பாலபாடம்.

சிறந்த கதை அதியன் ஆதிரை இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு

திகாரத்தின் அத்தனை வடிவங்களுக்கும் ஒற்றைக் குண்டை உவமையாக்கிக் கதை சொல்லியிருந்தார் இயக்குநர் அதியன் ஆதிரை. “உலகில் ஒரு வேளைச் சோற்றுக்கு வழியில்லாமல் கோடானுகோடி மக்கள் பட்டினியில் கிடக்க, கோடிகோடியாய்ச் செலவு செய்து ஆயுதங்கள் வாங்குவது எதற்கு?”

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2019

எனும் அழுத்தமான அரசியல் கேள்வியை எழுப்பிய, உலகத்துக்கான தமிழ்க்குரலே கதைக்களத்தின் ஆதாரம். அதை இரும்புக்கடைத் தொழிலாளர்கள், லாரி ஓட்டுநர்கள், கிராமத்து மனிதர்கள் என எளிய மனிதர்களைக் கதைமாந்தர்களாக்கி்ப் படைப்பாக மாறியது ‘குண்டு.’ `உங்கள் ஆயுதங்களை, அதிகாரங்களைத் தூக்கி எறிந்துவிட்டு, சக மனிதர்களிடம் அன்பு காட்டுங்கள்’ எனும் எழுத்துகளைத் தாங்கியிருக்கும் அந்த ஒற்றைக் காகிதத்தில் மட்டும் பல நூறு காகிதக் கொக்குகள் செய்யலாம். தமிழ் சினிமாவில் புதிய கதைக்களத்தை அறிமுகப்படுத்தி, போருக்கும் ஆயுதத்துக்கும் எதிராகப் பேசிய கதை, இந்த ஆண்டின் சிறந்த கதை!

சிறந்த திரைக்கதை தியாகராஜன் குமாரராஜா, நலன் குமாரசாமி, நீலன் K சேகர், மிஷ்கின் சூப்பர் டீலக்ஸ்

வெவ்வேறு திசைகளில் ஒன்றுக்கொன்று தொடாமல் மின்னல் வேகத்தில் பயணிக்கும் கதைகள்; அக்கதைகளை ஒற்றைப் புள்ளியில் இணைத்து சுவாரஸ்யத்தை இழைத்து ‘அற்புதம்... அட்டகாசம்’ சொல்ல வைத்தது சூப்பர் டீலக்ஸின் திரைக்கதை.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2019

இதற்குக் காரணமானவர்கள் நால்வர். விடலைச் சிறுவர்களின் விளையாட்டுத்தனங்களையும் பாலியல் வேட்கைகளையும் அடிப்படையாகக் கொண்ட திரைக்கதை - நலன் குமாரசாமி, மதத்தின் அறியாமைப் பிடிக்குள் தன்னை ஒப்புவித்த அற்புதத்தின் திரைக்கதை - மிஷ்கின், திருமணத்துக்கு அப்பாலான பாலியல் மீறல், அது கொண்டுவரும் சிக்கல் குறித்த திரைக்கதை - நீலன் கே. சேகர், ஷில்பா என்னும் திருநங்கையின் வலியும் நெகிழ்வுமான வாழ்க்கையை முன்வைத்த திரைக்கதை - தியாகராஜன் குமாரராஜா. எப்படி இந்த வெவ்வேறு கதைகள் ஒன்றிணைந்தன என ஆச்சர்யப்பட்டுக்கொண்டிருக்கையில், அதில் ஏலியன்களை நுழைத்து, படத்தின் கதாபாத்திரங்களை உடைந்த தொலைக்காட்சியில் இணைத்து சூப்பர் டீலக்ஸின் முழு அர்த்தத்தைத் திரைக்காவியமாக்கி அசத்தினர் இதன் திரைக்கதை ஆசிரியர்கள்.

சிறந்த வசனம் சபரிவாசன் சண்முகம் கே.டி (எ) கருப்புதுரை

முதியவரிடம் இருக்கும் குழந்தைத்தனம், சிறுவனின் முதிர்ச்சி என்னும் இரு துருவங்களை இணைக்கும் வசனங்களில் மாயம் நிகழ்த்திக்காட்டினார் சபரிவாசன் சண்முகம்.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2019

“நமக்குப் பிடிச்சவங்க கூட இருக்கறது மட்டும் அன்பு இல்ல. அவங்க நல்லதுக்காக அவங்கள விட்டு விலகியிருக்கறதும் அன்புதான்” எனும் வசனத்திற்குள்தான் எத்தனை உறவுச்சிக்கல்களின் தீர்வு இருக்கிறது! “எனக்கு நாந்தான் டிவி, நாந்தான் ரிமோட்” என்னும் ஒற்றைவரி வசனத்தில் மனிதர்கள் தன்னைத்தானே தீர்மானிக்கும் தாரக மந்திரத்தை வடித்துத் தந்த வசனகர்த்தா.்மானிக்கும் தாரக மந்திரத்தை வடித்துத் தந்த வசனகர்த்தா.

சிறந்த வசன ம்ஹலிதா ஷமீம் சில்லுக்கருப்பட்டி

நான்கு வெவ்வேறு கதைகளின் மாந்தர்கள் பேசும் வசனங்களே அவர்களின் உறவுநிலைகளையும் உணர்வு நிலைகளையும் பார்வையாளர்களுக்குக் கடத்தின. சேரிச்சிறுவர்கள், இரண்டு இளைஞர்கள், முதிர்பருவ நண்பர்கள், பிரிவின் விளிம்பில் வாழும் தம்பதி ஆகியோரின் வாழ்க்கையை அப்படியே சித்திரித்தன ஹலிதா ஷமீமின் வசனங்கள்.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2019

‘`எவ்ளோ பெரிய கையா இருந்தாலும் அக்குள் இருக்கும்ல’’, “இஞ்சி டீ வித் ஆடெட் டிக்னிட்டி’’, “எதுக்கு கொலுசு வாங்கித் தந்தோம்னுகூடக் கண்டுபிடிச்சிட்டா’’ என்று, வசனங்கள் மூலம் கருப்பட்டியின் சுவையைக் கூட்டினார் ஹலிதா ஷமீம்.ப்பட்டியின் சுவையைக் கூட்டினார் ஹலிதா ஷமீம்.

சிறந்த கலை இயக்கம் ஜாக்கி அசுரன்

ஜாக்கி பிடித்த பென்சிலின் கூர்முனையிலிருந்து உருவானது தெக்கூரும், வடக்கூரும். வீடுகள், கடைகள், பள்ளி, கோயில்கள், கம்பெனிகள், நீதிமன்றம் என அத்தனையும் அவர் உருவாக்கிய உழைப்பு. சுவர் விளம்பரங்களில் 60கள் மற்றும் 80களின் வித்தியாசங்கள் காட்டினார்.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2019

சம்சாரி சிவசாமியின் வீட்டிலுள்ள ரேடியோ பெட்டி தொடங்கி, முருகனின் உடையைக் கொளுத்தும் தீப்பெட்டி வரை நுணுக்கமாய் உழைத்திருந்தது ஜாக்கி & டீம். கதைக்கான அத்தனை இடங்களையும், அத்தனை பொருள்களையும் புதிதாய் உருவாக்க வேண்டியிருந்தது. கிடைத்த பழையவற்றை, புதுமையாக்க வேண்டியிருந்தது. அதை மிகச்சிறப்பாகச் செய்து அசுரனுக்கு அசுர பலம் சேர்த்தார் ஜாக்கி!

சிறந்த ஒப்பனை நெல்லை V. சண்முகம், K. வேல்முருகன், பானு, நஹூஷ் N பைஸ், அமல்தேவ் J.Rஅசுரன்

ன்றுவரை இளமை முகம் மாறாத தனுஷை, திருமண வயதாகும் இளைஞனுக்கு அப்பாவாக மாற்றுவது அசகாய சவால். சவாலை எதிர்கொண்டு சாதித்துக்காட்டியது படத்தின் ஒப்பனை அணி.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2019

மஞ்சு வாரியர், பசுபதி மற்றும் சுப்ரமணிய சிவாவின் இளவயதுத் தோற்றம், நரேன், பிரகாஷ்ராஜ் மற்றும் தனுஷ் கதாபாத்திரங்களின் மீசை மழித்தலுக்கும் முறுக்கலுக்கும் பின்னாலுள்ள அரசியல், முகத்தில் இரு தசாப்தங்கள் கிறுக்கிய சுருக்கங்கள் என அத்தனையிலும் அவ்வளவு நுட்பம். 60கள் மற்றும் 80களில் வாழ்ந்த மனிதர்களை, ஒப்பனையினால் உயிர் கொடுத்தவர்கள் நெல்லை V.சண்முகம், K.வேல்முருகன், பானு, நஹூஸ் N.பைஸ் மற்றும் அமல்தேவ் J.R.

சிறந்த சண்டைப் பயிற்சி அன்பறிவ், கைதி

ணர்வுபூர்வமான ஆக்‌ஷன் படத்துக்கு ஸ்டன்ட் காட்சிகளின் மூலம் திரையில் குருதி தெறிக்க அதிர வைத்து சுவாரஸ்யத்தைக் கூட்ட முடியும் என `கைதி’யில் நிரூபித்துக்காட்டினர் இரட்டையர்களான அன்பறிவ். ஒரு காட்சிக்கும், அடுத்த காட்சிக்கும் இடையே ஆக்ரோஷத்தின் லெவல் கூடிக்கொண்டே இருந்தன.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2019

லாரிக்கு முன் ஒரு மாட்டு வண்டிச் சக்கரம், அதன் முன்னும் பின்னும் அதை நொறுக்கக் காத்திருக்கும் இரண்டு கூட்டங்கள்; இந்த இரண்டு கூட்டத்தையும் ஒருவாறு சமாளித்து மலையேறினால், மலைக்க வைக்க வருகிறது மற்றுமொரு கூட்டம். கண்ணாடி பாட்டில், அரிவாள் என ஆரம்பித்த படம் போகப்போக மம்மட்டி, ரிவால்வர் என ஆயுதங்களில் அடுத்த கட்டம் நோக்கிப் பறக்க இறுதியில் `வின்னர் வின்னர் சிக்கன் டின்னர்’ என M134 மினிகன்னைத் திரை நோக்கிச் சுட வைத்து அனல் கூட்டினார்கள் ஆக்‌ஷன் மன்னர்கள் அன்பறிவ்.

சிறந்த நடன இயக்கம் ஷோபி, லலிதா ஷோபி ``வெறித்தனம்'', பிகில்

சும்மாவே ஆடுவார் விஜய். அவரை வெறித்தனமாய் ஆடவைத்தால்..? ஆடவைத்தவர்கள் ஷோபி-லலிதா ஷோபி இணை. ‘ஐயய்யோ யாராண்ட..?’ என்று ஆறிலிருந்து அறுபது வரை அத்தனை பேரையும் ஆடவைத்தார்கள்.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2019

அரங்கிலும் வீட்டிலும் அதை நண்பர், நண்பிகள் பிரதி எடுத்தார்கள். நான்கு நிமிடப் பாடலை, நான்கு நாள் திருவிழாப்போல் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமாய் நிகழ்த்திக்காட்டியதில் ஷோபி இணையரின் பங்கு அளப்பரியது. நளினத்திற்கு நளினம், வேகத்திற்கு வேகம் எனப் பாடல் முழுக்கவே நடனம், வெரி வெரி வெறித்தனம்! மேனா மினுக்கான மேளத்துக்கு, கானா கணக்காக ஆட்டம் அமைத்த ஷோபி-லலிதா ஷோபி இணையர், சென்ற ஆண்டின் சிறந்த நடன இயக்குநர்கள்.

சிறந்த ஆடை வடிவமைப்பு உத்ரா மேனன் எனை நோக்கி பாயும் தோட்டா

ச்சில் வார்த்த பக்கத்துவீட்டுப் பையனாக தனுஷ், ஏக்கப் பெருமூச்சு விடச் செய்யும் அழகியாக மேகா ஆகாஷ் - மஞ்சள் ஒளியில் மினுங்கிய இவர்களோடு ‘எனை நோக்கி பாயும் தோட்டா’வில் எண்ணற்றவர்களைப் பொருந்திப் போகச் செய்தவை உணர்வுகள் மட்டுமல்ல, உடைகளும்தான்!

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2019

மெல்லிசான கோடுகளும் விதவிதமான கட்டங்களும் காஸ்ட்யூம்களில் படர்ந்து ஈர்த்தன. உள்ளே ஊறும் குறுகுறுப்பைக் குறிக்க வெளிர் நிறங்கள், எழிலை எடுத்துக்காட்டும் வெள்ளை, துயரின் அடர்த்தி கூறும் கறுப்பு எனப் படத்தில் ஆடைகள் சொன்ன கதைகள் ஏராளம். வில்லன்களுக்கென தமிழ்சினிமா வரைந்துவைத்திருக்கும் உடைக்கோட்பாட்டையும் உடைத்தெறிந்தார் உத்ரா மேனன்.

சிறந்த பாடலாசிரியர் யுகபாரதி ``வெள்ளாட்டுக் கண்ணழகி'', மெஹந்தி சர்க்கஸ் ``எள்ளுவய'', அசுரன்

பெருநகரத்துப் பரபரப்புகளுக்கிடையே சிக்கிக் கொண்டிருந்த காதலை மீண்டும் கிராமத்துக் குழாய் ஒலிபெருக்கிகளில் தவழவிட்டன யுகபாரதியின் பாடல் வரிகள். ‘காட்டுமல்லிச் செட்டழகி’, ‘ரோசாக்குடம்’, ‘கோயில் ரதம்’ என எளிய வார்த்தைகளின் வழியே குதூகல மான உரையாடலைப் பட்டிதொட்டி யெங்கும் நிகழ்த்தினார் இந்தப் பாடல் பாரதி.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2019

கடந்து போகும் ஓரிரு நொடிகளில் சட்டெனத் தெறித்துச் சிலிர்க்கச் செய்யும் பன்னீர்த்தூறல் போல எல்லாரையும் கொள்ளை கொண்டது ‘வெள்ளாட்டுக் கண்ணழகி.’ முன்னது தூறல் என்றால் ‘எள்ளுவய’ மெதுவாகத் தலை தொட்டிறங்கி பின்னர் நெஞ்சுக்கூட்டில் கனமேற்றி இறுதியாய் கரை உடைத்துக் கண்ணீராய்ப் பாயும் பெருமழை. பிரிவின் துயர்தாங்கி நம் நினைவடுக்குகளில் உறைந்து போனவர்களை மனக் கண்ணில் இழுத்துவந்து இருத்தியது!

சிறந்த பின்னணிப் பாடகர் சித் ஸ்ரீராம் ``மறுவார்த்தை பேசாதே'' எனை நோக்கி பாயும் தோட்டா

ண்டு முழுக்கவே சித் ஸ்ரீராமின் போதைக்குரலில் கட்டுண்டு கிடந்தார்கள் தமிழர்கள். குளிருக்கு இதமாய் சுருண்டுகிடக்கும் அதிகாலைப் போர்வை நொடிகளில், மேகங்கள் விலக்கி நிலா மெதுவாய்த் தலைதூக்கும் ரம்மியமான அந்திமாலை நேரங்களில், காதலின் ஆழம் தேடும் இரவுப்பொழுதுகளில் என எங்கும் எதிலும் வியாபித்திருந்தார் அவர்.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2019

‘மறுவார்த்தை’ - மூன்றாண்டுகளுக்கு முன் சில விநாடிகள் மட்டுமே நீளும் ஒலிக்குறிப்பாய் வெளிவந்தபோதே பல்லாயிரம் இதயங்களைக் கொள்ளை கொண்டதோடு மட்டுமல்லாமல் காதோடு தொடர்ந்து கிசுகிசுத்துத் திரையரங்கு வாசல்வரை அவர்களைக் கொண்டுவந்துவிட்ட திறமை - சித்தின் குரல் வலிமை!

சிறந்த பின்னணிப் பாடகி சைந்தவி ``எள்ளுவய’' அசுரன்

னயனைப் பறிகொடுத்த தாயின் அழுகுரலாய் நம்மைக் கரைத்தது சைந்தவியின் குரல். நாசியைத் துளைக்கும் மகனின் வாசத்தையும், கண்களில் கசியும் தாயின் பாசத்தையும் நம் செவிவழி செலுத்தி இதயங்களை மேலும் கனமாக்கினார். மொத்தக் கதையின் அடிநாதமான முருகனின் இழப்புக்கு, இன்னும் அழுத்தம் சேர்த்தது சைந்தவியின் மெல்லிய குரல்தான்.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2019

`காத்தோட உன் வாசம், காடெல்லாம் உன் பாசம்’ என்ற வரிகளில், பல தாய்மார்களுக்குக் கண்ணீர் சுரந்தது. தன் மகன் இந்த உலகத்தில் எங்கோ ஒரு மூலையில் உயிரோடு இருக்கிறான் எனப் பாடப்பட்ட இந்தப் பாடல், ஒருவித நம்பிக்கை கலந்த ஒப்பாரி. அதை மிகச்சரியாகத் தன் குரல்களில் கடத்தினார் சைந்தவி.

 சிறந்த படக்குழு கோமாளி வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்

16 ஆண்டுகளுக்குப் பிறகு, கோமாவில் இருந்து மீண்டெழும் இளைஞனின் கதையில் சிரிப்பும் சிந்தனையும் கொட்டிக் கொடுத்தது `கோமாளி.’ பாக்ஸ் ஆபீஸில் பிசினஸ் கேம் ஆடி, அதிரவைத்த இந்த 90’ஸ் கிட்ஸ் படத்தைத் தயாரித்து வழங்கியதோ 60’ஸ் கிட் ஐசரி கணேஷ்.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2019

பிரதீப் ரங்கநாதன், பொதிகை டு யூடியூப் திரைக்கதை அமைக்க, ஒலியும் ஒளியும் ஏரியாவைப் பார்த்துக்கொண்டார்கள் ஹிப்ஹாப் தமிழாவும் ரிச்சர்ட் எம்.நாதனும், ப்ரதீப் இ.ராகவ்வும். கோமாளியை நடிப்பில் தாங்கிய சக்திமான் ஜெயம் ரவிக்கு மீண்டும் மீண்டும் சிரிப்பு மூட்டிய யோகிபாபு, ஷா ரா, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே என எல்லோரும் துணை நின்றார்கள். அனுபவமிக்க கே.எஸ்.ரவிகுமாருடன் அகஸ்டினும் ராமரும் சேர்ந்து கலகலக்க வைத்தார்கள். இப்படி, எல்லாத் துறையிலும் புதுமுகங்களும், பெரும் கைகளும் இணைந்து கொடுத்த உழைப்பிலேயே `கோமாளி’ எல்லோரையும் கொண்டாட்டமாய்ச் சிரிக்கவைத்தான்.

சிறந்த தயாரிப்பு கே.டி (எ) கருப்புதுரை சரிகமா இந்தியா

திகட்டாத மகிழ்ச்சியையும், அழியாத சோகங்களையும் கடந்து தன் வாழ்வின் முடிவுரையை எழுதிக்கொண்டிருக்கும் ஒருவருக்கு, இன்னும் நெகிழவும், மகிழவும், முடிவுரையை ஆச்சர்யக்குறியுடன் எழுதிமுடிக்கவும் பெரும் பட்டியலே இருக்கின்றன எனும் தத்துவத்தைச் சொன்னது `கே.டி. என்கிற கருப்புதுரை!’ தன் குடும்பத்தை விட்டு விலகிவந்த ஒரு முதியவர், தன் குடும்பத்தையே கண்டிராத ஒரு சிறுவன்.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2019

இருவரின் பயணம் வழி, வாழ்க்கையின் ஆச்சர்யங்களை அவிழ்த்தது இப்படம். புகழில் மின்னும் நட்சத்திரப் பட்டாளம் இல்லை, மனங்களில் பெயர் பதிந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் இல்லை, பாக்ஸ் ஆபீஸைப் புரட்டிப்போட்ட இயக்குநரும் இல்லை. இருந்தது, `தரமான படம் தருகிறோம்’ எனும் அழுத்தமான நம்பிக்கை மட்டுமே. அத்தகைய நம்பிக்கையின் நாயகர்கள், படத்தின் தயாரிப்பாளர்கள் விக்ரம் மேஹ்ரா மற்றும் சித்தார்த் ஆனந்த் குமாருக்கு மட்டன் பிரியாணியுடன் விருது பார்சல்!ார்த் ஆனந்த் குமாருக்கு மட்டன் பிரியாணியுடன் விருது பார்சல்!

அதிக கவனம் ஈர்த்த படம் பிகில் ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட்

2019 ஜனவரி தொடங்கி டிசம்பர் வரை தொடர்ந்த ரிலீஸ் ஆரவாரத்துக்கு நடுவே எக்ஸ்ட்ரா டெசிபலில் ஒலித்த சத்தம் பிகிலுடையது. விஜய் - அட்லி, விஜய் - ரகுமான் கூட்டணியின் ஹாட்ரிக் படத்தின் அறிவிப்பு வந்த நாள் முதலே ஆன்லைன் முதல் ஆஃப்லைன் வரை எங்கும் பிகில்தான். டைட்டிலுக்கே விஜய் ரசிகர்கள் திரி கொளுத்த, இரண்டு விஜய்யா, மூன்று விஜய்யா என ஃபர்ஸ்ட் லுக்கை வைத்து ஆராய்ச்சிகள் ஆரம்பமாகின. Most liked, Most viewed என யூடியூபில் சொல்லப்படும் அத்தனை ரெக்கார்டுகளும் பிகில் வசம்.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2019

‘2019-ல் இந்தியா முழுக்க அதிகம் பேசப்பட்ட படம் பிகில்’ என்றது ட்விட்டர். எக்ஸ்ட்ரா எனர்ஜியுடன், இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் 35 நிமிட நான் ஸ்டாப் பேச்சு டி.ஆர்.பி ரெக்கார்டு. தீபாவளியன்று வெளியான இந்தியப் படங்கள் அனைத்தையும்விட பிகிலின் முதல் நாள் வசூலே அதிகம். வெளிநாடுகளிலும் பிகிலின் வசூல் இதுவரை யாரும் தொட முடியாத உயரம். ‘பாக்ஸ் ஆபீஸ் பாட்ஷா’ விஜய் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்த பிகில், தமிழ்நாட்டில் மட்டும் 147 கோடி அள்ளி தமிழ் சினிமாவின் வசூல் எல்லைகளைப் புதிதாய் மாற்றி எழுதியது. சிங்கிள் தளபதி + சிங்கப்பெண்கள் கூட்டணி இந்த ஆண்டின் செம சென்சேஷன்.

சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம் விஸ்வாசம் சத்ய ஜோதி பிலிம்ஸ்

கண்ணீரும் கலகலப்பும் கலந்த குடும்பக்கதை, அதில் ஒரு மாஸ்ஹீரோ... அது ‘விஸ்வாசம்.’ தூக்குத்துரை - நிரஞ்சனா தம்பதியின் கதையைக் கேட்க கூட்டம் கூட்டமாய்த் திரையரங்குகளில் கூடின குடும்பங்கள். வந்தவர்களுக்கு பொங்கல்பரிசாய் தந்தை - மகள் பாச அத்தியாயங்கள் திரையில் விரிய, வயது வித்தியாசமில்லாமல் கரைந்துபோயின மனங்கள்.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2019

‘ஆராரிராரோ’ என இமான் தன் பங்கிற்குத் தாலாட்ட, தந்தைமார்களின் தேசியகீதமானது ‘கண்ணான கண்ணே.’ இன்னொரு பக்கம் கசங்காத வேட்டி, முறுக்கிய மீசையோடு தன் அங்காளிபங்காளிகளுக்கு ஆக்‌ஷன் விருந்தும் வைக்கத் தவறவில்லை அஜித். பச்சைப்பசேல் வயல்கள், மின்னும் விளக்குகள், வீடு முழுக்கச் சொந்தங்கள் எனக் கண்ணை நிறைத்தன காட்சிகள். ஊர்த்திருவிழாவோடு கதையைத் தொடங்கி நிஜத்திலும் தமிழகம் முழுக்கத் திருவிழாக் கொண்டாட்டத்தைப் பற்றவைத்தார்கள் இயக்குநர் சிவாவும் அவரின் கூட்டாளிகளும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism