Published:Updated:

``விஜய் சார்... `மாஸ்டர்’க்கு வந்தேன்... ஆனா, நான் ஏன் `மெர்சல்’-க்கு வரலைன்னு தெரியுமா?’’ - பாவனா

விஜய்
விஜய்

‘’துப்பாக்கி’க்குப் பிறகு ‘மெர்சல்’ இசைவெளியீட்டு விழாவை ஹோஸ்ட் பண்ணச் சொல்லிக் கூப்பிட்டாங்க. ரெண்டாவது முறையா விஜய் சார் படம்! ஆனா என்னால சந்தோஷப்பட முடியலை. ஏன்னா, அந்த வாய்ப்பை ஏத்துக்கற சூழல்ல நான் அப்போ இல்லை.''

ஆங்கரிங் தொடங்கிய நாள்தொட்டு, விஜய் டிவியின் அடையாளமாகவே இருந்து வந்தவர் பாவனா. முதன்முறையாக ‘மாஸ்டர்’ ஆடியோ வெளியீட்டு விழா மூலம் அவரது முகம் சன் டிவியில்!

``விஜய் சார்... `மாஸ்டர்’க்கு வந்தேன்...  ஆனா, நான் ஏன் `மெர்சல்’-க்கு வரலைன்னு தெரியுமா?’’ - பாவனா

''எனக்கே இது பெரிய ஆச்சர்யம்தான்'’ என்றவர், ''இசை வெளியீட்டு விழாவின் அந்த மேடையில ஏறும் வரைக்கும் ஒருவிதப் பதற்றம் இருந்துட்டே இருந்தது'’ என்கிறார்.

''சீனியர் தொகுப்பாளினிக்கு ஏன் பதற்றம்?'' என்ற கேள்வியுடன் பாவனாவிடம் பேசினேன்.

மாஸ்டர் விழாவில்
மாஸ்டர் விழாவில்

‘’ரஜினி, கமல், விஜய், அஜித் படங்களோட நிகழ்ச்சிகளையோ அல்லது அவங்க கலந்துக்கற நிகழ்ச்சிகளையோ தொகுத்து வழங்கறதுன்னா, எந்த ஆங்கருக்குமே பெரிய மொமென்ட் இல்லையா? விஜய் சார் படத்தின் ஆடியோ வெளியீட்டை நான் தொகுத்து வழங்குறது இது ரெண்டாவது முறை. முதல் தடவையா ‘துப்பாக்கி’ நிகழ்ச்சியைத் தனியாளாவே தொகுத்து வழங்கினேன்.

மனுஷன் அப்போ செமயா ட்ரிம் ஆகி வந்திருந்தார். அந்த ‘ஹாய்’, அந்தச் சிரிப்பு’ன்னு அந்த நாளோட நினைவெல்லாம் இன்னும் மனசுல அப்படியே இருக்கு'' என்றவர் 'மாஸ்டர்’ கதைக்குள் வந்தார்.

‘’துப்பாக்கி’க்குப் பிறகு ‘மெர்சல்’ இசை வெளியீட்டு விழா ஹோஸ்ட் பண்ணச் சொல்லிக் கூப்பிட்டாங்க. ரெண்டாவது முறையா விஜய் சார் படம். ஆனால், என்னால அன்னைக்கு சந்தோஷப்பட முடியலை. ஏன்னா, அந்த வாய்ப்பை ஏத்துக்கற சூழல்ல நான் அப்போ இல்லை. அந்த நாள்ல எங்க வீட்டுல நான் வளர்த்த என்னுடைய செல்ல நாய்க்குட்டிக்கு உடல்நிலை மோசமா இருந்தது. என்னால அதைவிட்டு எங்கேயும் நகர முடியாத அளவுக்கு சோகத்துல இருந்தேன்.

நெருக்கமான சில நண்பர்கள், 'இந்தக் காரணத்தாலதான் நீங்க பண்ணலைன்னு விஜய் காதுக்குப் போனா என்ன நினைப்பார்? டென்ஷன் ஆக மாட்டாரா’ன்னு என்னைத் திட்டினாங்க. விஜய் சார்க்கு அந்த நியூஸ் போச்சானு தெரியாது. ஆனா என் நாய்க்குட்டி அன்னைக்கு என்னை விட்டுட்டு கடவுள்கிட்ட போயிடுச்சு. அதனாலதான் சார் நான் 'மெர்சல்'க்கு வரல.

ஆனா, மெர்சல் விழாவை டிவில பார்க்கும்போது ரொம்பவே மிஸ் பண்ணிட்டோம்னு வருத்தமாவே இருந்தது. இன்னொரு சான்ஸ் எப்ப வருமோன்னு நினைச்சிட்டிருந்த சமயத்துலதான் ‘மாஸ்டர்’ மேடை.

நழுவவிட்ட ஒரு வாய்ப்புக்குப் பிறகு கிடைச்சதுங்கிறதால, ரொம்பவே ஆவலா எதிர்பார்த்திட்டிருந்தேன். ஆனா சில நாள்களுக்கு முன்னாடி விஜய் சார் தொடர்புபடுத்தி மீடியாக்களில் வந்த செய்திகளையும், கரோனா வைரஸையும் கனெக்ட் செய்து சிலர் கிளப்பி விட்ட கதைகள், ஒருவிதமான பீதியைக் கிளப்பின. நிகழ்ச்சி நல்லபடியா நடக்குமானு திக் திக்னே இருந்தது.

``விஜய் சார்... `மாஸ்டர்’க்கு வந்தேன்...  ஆனா, நான் ஏன் `மெர்சல்’-க்கு வரலைன்னு தெரியுமா?’’ - பாவனா

'இசை விழாவில் விஜய் அரசியல் பேசலாம். அதனால் அந்த நிகழ்ச்சியையே நடத்த விடாமப் பண்றதுக்கு பிளான் பண்ணியிருக்காங்களாம். கடைசி நேரத்துல தடுத்துடுவாங்க. காரணம் கேட்டா, கரோனா எச்சரிக்கைனு சொல்லிடுவாங்க. இதுக்குப் பேர்தான் கரோனா அரசியல்'னு விதவிதமா யோசிச்சு சோஷியல் மீடியால கதை கதையா எழுதினாங்கன்னா பயம் வராமல் என்ன செய்யும்?

அதனால் சனிக்கிழமை முழுக்க நிகழ்ச்சி நல்லபடியா நடக்கணும், நான் நல்லா ஹோஸ்ட் பண்ணணும்னு ஒரே ப்ரேயர்தான். ஏன்னா, ஸ்போர்ட்ஸ் பக்கம் போயிட்டதால கொஞ்சநாளா சினிமா டச் இல்லை. அதனால 'தளபதி 64' ஆ ஆரம்பிச்சு 'மாஸ்டர்' ஆனது வரைக்கும் இந்தப் படத்தைப் பத்தின அத்தனை தகவல்களையும் திரட்டிக் கொஞ்சம் ஹோம் வொர்க் பண்ணிட்டுத்தான் ஸ்பாட்டுக்குப் போனேன். 'துப்பாக்கி'க்குப் பிறகு விஜய் சாரை பக்கத்துல பார்க்கிறதும் இந்த நிகழ்ச்சிதான். விழா நடந்த ஹோட்டலுக்குள் நுழையறப்ப இருந்தே திக் திக் ஃபீல். அங்க விஜய் சார்கிட்ட இருந்து அந்த 'ஹாய்' வர்ற வரைக்கும் பதற்றமாதான் இருந்தது. எனக்கு நல்லா ஞாபகமிருக்கு. 'துப்பாக்கி' விழால கேஷுவலான ஒயிட் ஷர்ட், ஜீன்ஸ்ல வந்திருந்தார். நேத்து கறுப்பு கோட். எனக்கென்னவோ அந்த காஸ்ட்யூம்ல அவர் கொஞ்சம் இறுக்கமாவே தெரிஞ்சார். ஆனா, விஜய் சேதுபதி ஸ்பாட்டுக்கு வந்த பிறகு ஒரே கலகலப்புதான். 'விஜய் சார் நீங்க அழகா இருக்கீங்க'னு அவர் சொன்னதும் விஜய் வெட்கப்பட, 'ஏம்ப்பா க்ளோஸப் வைங்கப்பா'ன்னார். உடனே நான் விஜய் சேதுபதிகிட்ட, 'நீங்க ரொம்ப ரொம்ப அழகு சார்'னு சொல்லி அவரையும வெட்கப்பட வச்சுட்டேன்'' என்றவருக்கு, விழா முடிந்ததும் விஜய், விஜய் சேதுபதி இருவருக்கும் நடுவில் நின்றபடி ஒரு செல்ஃபி எடுக்கும் எண்ணமும் இருந்ததாம்.

''இந்த காஸ்ட்யூம்ல அழகா இருக்கேனான்னு விஜய் சார் கேட்டார் பாருங்க... விஜய் சார் நீங்க என்னக்குமே அழகுதான்’’ என்கிறார் பாவனா.

அதிகார மையம், `நண்பர்' அஜித், விஜய் ஆன விஜய் சேதுபதி... `மாஸ்டர்' விழா எப்படி?
அடுத்த கட்டுரைக்கு