
ஆங்கரிங்னா என்ன, டைமிங்ல பேசுறதுன்னா என்ன, லைவ்வில் கால் கட் ஆனா எப்படி சமாளிக்கணும்? திடீர்னு காலர்ஸ் நம்மளை ஏதாவது காமெடி சொல்ல சொல்லுவாங்க
காலியான பிறகும் மணக்கும் கடுகு டப்பா போல, தற்போது சீரியலில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்தாலும் அவருடைய ஆங்கரிங் தொனி மாறவேயில்லை. நாம் கேட்கும் அத்தனை கேள்விகளுக்கும் கடகடவென பதில் அளித்தார் அர்ச்சனா. இவரை ‘ஆதித்யா’ அர்ச்சனா என்றால்தான் பலருக்கும் சட்டென நினைவிற்கு வரும். தற்போது, சன் டி.வி-யில் ஒளிபரப்பாகும் ‘தாலாட்டு’ தொடரிலும், ‘எதிர்நீச்சல்’ தொடரிலும் நடித்துக் கொண்டிருப்பவரை ஒரு டப்பிங் இடைவெளியில் சந்தித்தேன்.
“சின்ன வயசில இருந்தே நடிக்கணும்னு ஆர்வம். எனக்கு முதல் புராஜெக்ட் தெலுங்கில் கிடைச்சது. அதைத் தொடர்ந்து ‘அண்ணி’ சீரியல் பண்ணினேன். பிறகு, ‘மிலிட்டரி’ படத்திலும் நடிச்சேன். அந்தச் சமயம் சினிமாவில் ஆர்வம் இல்லாததனால சீரியலில் கவனம் செலுத்த ஆரம்பிச்சேன். தொடர்ந்து பல சீரியல்களில் நடிச்சேன். நடிச்சிட்டு இருக்கும்போதே எனக்குத் திருமணம் ஆகிடுச்சு. கர்ப்பமாக இருந்த சமயம்தான் ‘திருமதி செல்வம்’ தொடரில் நடிச்சேன். ஏழு மாசம் வரைக்கும் நடிச்சேன். பிறகு குழந்தையைப் பார்த்துக்கணும்னு பிரேக் எடுத்தேன்.
நான் லைட் மியூசிக் சிங்கர். ஒரு பொது நிகழ்ச்சியில் ஈரோடு மகேஷ் அண்ணனைப் பார்த்தோம். அப்ப அவர்கிட்ட எங்க அம்மா ஆங்கரிங் வாய்ப்பு ஏதாவது இருந்தா அர்ச்சனாவுக்காகச் சொல்லுங்கன்னு சொன்னாங்க. அவர்தான் ஆதித்யாவில் ஆங்கரிங்கிற்கான ஆடிஷன் நடக்குதுங்கிற விஷயத்தைச் சொல்லி என்னைப் போகச் சொன்னார். எனக்கு ஆங்கரிங் பற்றி சுத்தமா எந்த ஐடியாவுமே இல்லை. ஆடிஷனில் வடிவேல் பாலாஜிகூட சேர்ந்து டிரை பண்ணச் சொன்னாங்க. அப்போதெல்லாம் எனக்கு இவங்க யாருமே பரிச்சயமும் கிடையாது. கன்டென்ட் இப்படிப் பேசுங்கன்னு அவரே எனக்குச் சொல்லிக் கொடுத்தார். பிறகு லைவ் பண்ணச் சொன்னாங்க. ஆதவன்கூடதான் ஃபர்ஸ்ட் லைவ் பண்ணினேன். கிட்டத்தட்ட 6 வருஷம் ஆங்கரா டிராவல் பண்ணினேன்.
ஆங்கரிங்னா என்ன, டைமிங்ல பேசுறதுன்னா என்ன, லைவ்வில் கால் கட் ஆனா எப்படி சமாளிக்கணும்? திடீர்னு காலர்ஸ் நம்மளை ஏதாவது காமெடி சொல்ல சொல்லுவாங்க... அதுக்கு நாம தயாராக இருக்கணும் அப்படின்னு படிப்படியா எல்லாமே கத்துக்கிட்டேன். என்னுடைய ஷோவில் என் காலர்ஸ்கிட்ட நிறைய விடுகதைகள் கேட்பேன்.. அதே மாதிரி, இன்னைக்கு என்ன ஸ்பெஷல்னு ஒவ்வொரு தேதியையும் குறிப்பிட்டுச் சொல்லுவேன். என்னுடைய கோ - ஆங்கர்ஸ் எனக்கு ரொம்பவே உதவி பண்ணினாங்க. பிறகு நான் மட்டும் தனியாவே ஹோஸ்ட் பண்ண ஆரம்பிச்சேன். ‘ஜோக் கடி’ன்னு நான் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது.

‘ஆதித்யா’ அர்ச்சனான்னு மக்கள் கூப்பிடும்போது ரொம்பப் பெருமையா இருந்துச்சு. இத்தனை வருஷம் ஆகியும் அந்தப் பெயரை எடுக்க மனசில்லாம அப்படியே வச்சிருக்கேன். மக்கள் மிகப்பெரிய பலம். எல்லாருமே எனக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணினாங்க. பலர் ரெகுலரா கால் பண்ணுவாங்க. அவங்க ஹலோன்னு சொன்னாலே அவங்க பெயரை கரெக்டா சொல்லிடுவேன். அந்த அளவுக்கு நெருக்கமான உறவுகள் கிடைச்சாங்க” என்றவரிடம், மீண்டும் நடிக்க வந்தது குறித்துக் கேட்டோம்.
“இரண்டாவது பாப்பாவுக்காக மறுபடியும் ஆங்கரிங்கை விடவேண்டிய சூழல் ஆகிடுச்சு. நடிக்கலாம்னு முடிவு பண்ணி மேனேஜர்ஸ்கிட்ட சொல்லி வெச்சிருந்தேன். சன் டி.வி-யில் ‘கல்யாண பரிசு’ சீரியலுக்காகக் கேட்டாங்க. நடிக்கணும் என்பது எனக்குப் பிடிச்ச விஷயம். அதனால ஓகே சொன்னேன். ஆனா, அப்பவே நிறைய விஷயங்கள் மாறி இருந்துச்சு. முன்னாடி எல்லாம் டைரக்டர்ஸ், மேனேஜர்ஸ் இவங்க ஓகேன்னு முடிவு பண்ணுவாங்க. அப்பவே சேனல்தான் முடிவு பண்ணணும் என்கிற சூழல் இருந்துச்சு. முதலில் சேனல் தரப்பில் என்னை ரிஜெக்ட் பண்ணிட்டாங்க. திடீர்னு ஒருநாள் மேனேஜர் போன் பண்ணி செலக்ட் பண்ணிட்டாங்கன்னு சொன்னார். சரி கடவுள் நமக்குன்னு ஒரு வழியை அமைச்சுக் கொடுக்கிறார்னு நடிக்க ரீ-என்ட்ரி கொடுத்துட்டேன்.
நான் குண்டா இருக்கேன் என்பதைக் காரணம் காட்டி நிறைய வாய்ப்புகள் மறுக்கப்பட்டிருக்கு. அதையெல்லாம் வெறியா எடுத்துக்கிட்டு ஒர்க்கவுட் பண்ணி இப்ப ஓரளவு எடையைக் குறைச்சிட்டேன். இன்னமும் உடல் எடையைக் குறைக்கிற முயற்சியில்தான் இருக்கேன். நான் கிட்டத்தட்ட 20 வருஷமா இந்தத் துறையில் இருக்கேன்னு ஆன்ட்டி, பாட்டின்னு எல்லாம் கமென்ட் பண்ணுவாங்க. நான் படிக்கும்போதே மீடியாவுக்குள்ள வந்துட்டேன். அதைப் புரிஞ்சுக்காம அவங்க பேசுறதை எல்லாம் பார்க்கும்போது வருத்தமா இருக்கும்.
‘கர்மா’ன்னு ஒரு வெப் சீரிஸில் நடிச்சிட்டிருக்கேன். என்னுடைய பலமே என் குடும்பம்தான். அம்மா, அப்பா, கணவர் இவங்களுக்கு அடுத்து என் குழந்தைகளும் என் ஆசைக்குத் தடை சொல்லாம சுதந்திரமா பறக்க வைக்க விரும்புறாங்க. அதனாலதான் அடுத்தடுத்த கனவுகளை நோக்கி என்னால நகர முடியுது. அதே மாதிரி, சீக்கிரமே என்னுடைய ஆங்கரிங்கையும் நீங்க திரையில் பார்க்கலாம்’’ என்றார்.