Published:Updated:

`வடசென்னை'-க்குப் பிறகான இடைவெளி இதனால்தான்! - மனம் திறந்த ஆண்ட்ரியா

இந்த கவிதைத் தொகுப்பில் முழுக்க முழுக்க சோகமே நிரம்பியிருக்கிறது. இத்தனை வலி மிகுந்த கவிதைகளை எழுத என்ன காரணம்?

ஆண்ட்ரியா
ஆண்ட்ரியா

தமிழ் சினிமாவில், 'பச்சைக்கிளி முத்துச்சரம்', 'விஸ்வரூபம்', 'தரமணி' என முக்கியமான படங்களில் நடித்த நடிப்புக்காக பேசப்படும் நடிகைகளில் ஒருவர், ஆண்ட்ரியா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம், `வடசென்னை'. பெரிதாகப் பேசப்பட்ட இந்தப் படத்துக்குப் பிறகு எந்தப் படத்திலும் நடிக்காமல் இருந்துவந்தார்.

ஆண்ட்ரியா
ஆண்ட்ரியா

வடசென்னை படத்துக்குப் பிறகு, புதிய படங்கள் எதையும் ஒப்புக்கொள்ளாமல் இருந்துவந்த அவர், சமீபத்தில் மனஅழுத்தத்துக்கான ஆயுர்வேத சிகிச்சை எடுத்துவருவதாக பகிர்ந்திருந்தார். இந்நிலையில், அவர் எழுதிய `Broken Wings' என்ற தலைப்பிலான கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா, பெங்களூருவில் நடந்தது. இந்த கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவில், ஆண்ட்ரியா கலந்துகொண்டார்.

அவரிடம், ``இந்த கவிதைத் தொகுப்பில் முழுக்க முழுக்க சோகமே நிரம்பியிருக்கிறது. இத்தனை வலி மிகுந்த கவிதைகளை எழுத என்ன காரணம்'' என ரசிகர்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். அதற்கு ஆண்ட்ரியா அளித்த பதில், மேடையில் இருந்த அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முறிந்த சிறகு
முறிந்த சிறகு

``திருமணமான நபருடன் நெருங்கிய நட்பில் இருந்தேன். அந்த நபரால் உடலளவிலும் மனத்தளவிலும் அதிகமாக பாதிக்கப்பட்டேன். அதன் காரணமாக மன அழுத்தத்தை உணர்ந்தேன். அந்த பாதிப்புகளில் இருந்து மீண்டு வரவே ஒரு சிறிய இடைவெளி எடுத்துக்கொண்டு ஆயுர்வேத சிகிச்சை எடுத்தேன்" எனப் பதிலளித்துள்ளார் ஆண்ட்ரியா.

சென்னையில் இன்று நடைபெறும் ஏ.ஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார். இதுதொடர்பான புகைப்படம் ஒன்றை அவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.