கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

அண்ணாத்த - சினிமா விமர்சனம்

ரஜினி
பிரீமியம் ஸ்டோரி
News
ரஜினி

கீர்த்தி சுரேஷும் தன் பங்கைச் சரியாகவே செய்திருக்கிறார். ஆனால் ரஜினி படத்தில் ரஜினியைத் தாண்டி வேறு யார் வெளித்தெரிய முடியும்?

2020-ன் ரஜினியை 80களின் கதையில் நடிக்க வைத்து 90களின் பின்னணி இசையைக் கோத்தால் அதுதான் ‘அண்ணாத்த.'

ஊர் பிரசிடெண்டான ரஜினிக்குத் தங்கை என்றால் கொள்ளைப் பிரியம். ‘உலகத்துலயே என் மேல அதிகம் பாசம் வைக்கிறது அண்ணன்தான்' என தங்கை கீர்த்தி சுரேஷும், ‘தங்கையைத் தாண்டி ஒருத்தர்மேல என்னால பாசம் வைக்கமுடியும்னா அது தங்கச்சி குழந்தை மேலதான்' என அண்ணன் ரஜினியும் பாசத்தை லாரி லாரியாகக் கொட்டும் ரகம். வழக்கம் போல தங்கையின் திருமண வாழ்க்கைக்குள் ஒரு வில்லன் நுழைய, ‘அண்ணனுக்குத் தெரிஞ்சா கஷ்டப்படுவாரு' எனத் தங்கை தவ வாழ்க்கை வாழ, ரஜினிக்கு இறுதியாய் விஷயம் தெரிந்து, அவர் கீர்த்தி சுரேஷின் கண்ணீருக்குக் காரணமானவர்களைத் தேடித் துவைப்பதுதான் கதை.

ரஜினி - ஒரு நொடிகூடக் குறைந்துவிடாத எனர்ஜியோடு படம் முழுக்கப் பரபரக்கிறார். இவ்வளவு பெரிய ஸ்டாரானாலும் அப்படியே இயக்குநரின் சொல்லுக்குத் தன்னை ஒப்புக்கொடுக்கும் பண்பு பாராட்டுக்குரியது. ஆனால் படத்தின் சிக்கலும் அதுவே. அரதப் பழைய காட்சிகளால் ரஜினியின் உழைப்பு வீணடிக்கப்பட்டிருக்கிறது. வழக்கமாய் ரஜினி பட ஹீரோயின்களுக்கு என்ன வேலையோ அதுவே நயன்தாராவுக்கு.

அண்ணாத்த - சினிமா விமர்சனம்

கீர்த்தி சுரேஷும் தன் பங்கைச் சரியாகவே செய்திருக்கிறார். ஆனால் ரஜினி படத்தில் ரஜினியைத் தாண்டி வேறு யார் வெளித்தெரிய முடியும்? சூரி, சத்யன், சதீஷின் காமெடிக்கு அவர்களே சிரித்திருப்பார்களா என்பது சந்தேகமே. பார்ப்பவர்களை லேசாக எடுத்துக்கொள்ளும் அலட்சியம் இன்னும் எத்தனை நாளைக்கு சதீஷ், சூரி? ஏன் முதல் பாதியில் பிரகாஷ் ராஜ், ஏன் இரண்டாவது பாதியில் இரண்டாவது வில்லன் ஜெகபதி பாபு எனப் படம் நெடுக ஏகப்பட்ட ஏன்கள்.

இமானின் பின்னணி இசை பெரிய ஏமாற்றம். ஒரே பிஜிஎம்-மை இரண்டே முக்கால் மணிநேரத்திற்கும் வாசித்துச் சோதிக்கிறார். வெற்றியின் ஒளிப்பதிவு ஒவ்வொரு ப்ரேமிலும் திருவிழா உணர்வைத் தருகிறது. இரண்டாம் பாதியை இன்னமும் சுருக்கியிருக்கலாம் எடிட்டர் ரூபன்.

அண்ணாத்த - சினிமா விமர்சனம்

அண்ணன் - தங்கை பாசத்தைக் கடத்த வசனங்களை மட்டுமே நம்பி இறங்கியிருக்கிறார் இயக்குநர் சிவா. ஆனால் அவையும், ‘விலாவுல சிக்கின வெட்டருவா மாதிரி வலிச்சது, சுடுமணல்ல பதிச்ச காலு மாதிரி எரியுது' என ரைமிங் உவமைகளாகவே போட்டுத்தாக்க, ‘தந்தூரி அடுப்புல வெச்சுத் தாளிச்ச மாதிரியிருக்கு’ என்று தாங்க முடியாமல் நம்மைக் கதறவைக்கிறது. இருக்கும் ஒன்றிரண்டு சென்டிமென்ட் காட்சிகளிலும் ரஜினி வழுக்கிவிழும் அளவுக்குப் பாசத்தைக் கொட்டுகிறார் (ஏற்கெனவே கனமழை!)

ரஜினிக்கு வில்லன் வேண்டுமே - சரி, அப்போ ஒரு கார்ப்பரேட். ஆனா ஒரு வில்லன்னா நீளம் போதாதே என இரண்டு வில்லன்கள் என்று எக்கச்சக்க சோதனைகள்!

அண்ணாத்த - சினிமா விமர்சனம்

பல ஆண்டுகளுக்கு முன் பிசைந்த பஜ்ஜி மாவில் தீபாவளிப் பலகாரம் சுட முயன்றிருக்கிறார் இயக்குநர் சிவா. ஆனால் ‘அண்ணாத்த’ பார்த்து மனசு புண்ணானதுதான் மிச்சம்.