Published:Updated:

சென்னை திரும்புகிறாரா ரஜினி... `அண்ணாத்த' ஷூட்டிங் மீண்டும் தொடங்குமா?

 ரஜினி
ரஜினி

ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் பரபரப்பாக நடந்து கொண்டிருந்த ரஜினியின் 'அண்ணாத்த' ஷூட்டிங் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

'சிறுத்தை' சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் திரைப்படம் 'அண்ணாத்த'. இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, சூரி மற்றும் மீனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பரபரப்பாக சென்று கொண்டிருந்த ஷூட்டிங் கொரோனா வைரஸின் லாக்டெளன் காரணமாக நடைபெறாமல் இருந்தது.

தற்போது ஷூட்டிங் தொடங்க அரசு அனுமதியளித்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜி ராவ் ஃப்லிம் சிட்டியில் கடந்த டிசம்பர் 14-ம் தேதி முதல் நடைபெற்று வந்தது. இறுதிகட்ட படப்பிடிப்புகள் பரபரப்பாக நடைபெற்று கொண்டிருந்ததில் நயன்தாரா மற்றும் ரஜினி பங்கேற்றனர். இவர்களுடன் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினியும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்றிருந்தார். இவர்கள் இருவரும் ஸ்பாட்டில் எடுத்த போட்டோ ஸ்டில்லும் இணையத்தில் வைரலானது. தன்னுடைய அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டிருந்த ரஜினி, படத்தின் ஷூட்டிங்கை ஹைதராபாத்தின் கடும் குளிரிலும் விரைந்து முடிக்க எண்ணியிருந்தார்.

 கீர்த்தி சுரேஷ், ரஜினி
கீர்த்தி சுரேஷ், ரஜினி

ஆனால், தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தற்போது அறிவித்துள்ளது. தொழில்நுட்ப கலைஞர்கள் நால்வருக்கு கொரோனா வந்த நிலையில் படப்பிடிப்பை நிறுத்தியிருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். மேலும், ரஜினிக்கு கொரோனா நெகட்டிவ் எனவும் கூறியுள்ளனர். இருந்தும் படக்குழுவினர் தனிமைப்படுத்தப்பட்டு ஹைதராபாத்தில் தங்கியுள்ளனர். படக்குழு விரைவில் ஷூட்டிங் முடித்து கொண்டு சென்னை திரும்ப எண்ணியிருந்த நிலையில், தற்போது நால்வருக்கு கொரோனா பாசிட்டிவ் எனும் செய்தியால் அதிருப்தி அடைந்துள்ளனர்.

விரைவில் ரஜினி சென்னை திரும்ப இருக்கிறார். ரஜினியின் கால்ஷீட்டே இன்னும் 30 நாட்கள் இருக்கின்றன. நிலைமை சரியான பிறகுதான் அவர் ஷூட்டிங் வருவார் எனத் தெரிகிறது. அதனால் இப்போதைக்கு 'அண்ணாத்த' படப்பிடிப்பு மீண்டும் தொடங்குவது சந்தேகமே.

அடுத்த கட்டுரைக்கு