Published:Updated:

Annaatthe விமர்சனம்: சென்னையில் வதம் செய்தால் திருப்பாச்சி, கல்கத்தாவில் காப்பு கட்டினால் அண்ணாத்த!

Annaatthe | அண்ணாத்த

பொத்திப் பொத்தி வளர்த்த தங்கை, சந்திக்கும் பிரச்னைகளும் அதற்கு அண்ணன் தரும் தீர்வுகளும்தான் தீபாவளிக்கு வெளியாகியிருக்கும் 'அண்ணாத்த' படத்தின் ஒன்லைன்.

Annaatthe விமர்சனம்: சென்னையில் வதம் செய்தால் திருப்பாச்சி, கல்கத்தாவில் காப்பு கட்டினால் அண்ணாத்த!

பொத்திப் பொத்தி வளர்த்த தங்கை, சந்திக்கும் பிரச்னைகளும் அதற்கு அண்ணன் தரும் தீர்வுகளும்தான் தீபாவளிக்கு வெளியாகியிருக்கும் 'அண்ணாத்த' படத்தின் ஒன்லைன்.

Published:Updated:
Annaatthe | அண்ணாத்த
சூரக்கோட்டை கிராமத்திற்கு எல்லாமுமாய் இருப்பவர் ஊராட்சி மன்றத் தலைவர் 'அண்ணாத்த' என்கிற காளையன். ஆனால், அவருக்கு எல்லாமே அவர் தங்கை தங்க மீனாட்சிதான். ஊரில் நடக்கும் பிரச்னைகளுக்கு ஒரு லோக்கல் வில்லன்; அதன் மூலம் ஒரு காதலி என கிராஃப் ஸ்லோவாக போக, தங்கைக்கு ஒரு கல்யாணம் என புதிய ரூபத்தில் பிரச்னை வருகிறது. தடால்புடாலென கல்யாண வேலைகள் நடக்க, அடுத்து என்ன நடக்கிறது, அடுத்து அடுத்து என்ன நடக்கிறது என நீள்கிறது கதை. சிம்பிளாக சொல்வதானால், சென்னை ரவுடிகளை வதம் செய்தால் திருப்பாச்சி; கல்கத்தா மாஃபியா கும்பலுக்குக் காப்பு கட்டினால் 'அண்ணாத்த'.

'அண்ணாத்த'வாக ரஜினி. மனிதரின் எனெர்ஜி லெவல் ஒவ்வொரு படத்துக்கும் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. ஒன்லைனர்கள், அடிதடி, காமெடி என ஜாலியாக நடித்துக்கொடுத்திருக்கிறார். ரொம்பவும் க்ளீஷேவான முதல் பாதியை கடத்த வைப்பதில் ரஜினியின் பங்கு மிக அதிகம். 'அண்ணாத்த'வின் பாசமிகு தங்கையாக கீர்த்தி சுரேஷ். வயது, தோற்றம் எல்லாவற்றையும் மறந்துவிட்டு ரஜினியின் தங்கை கீர்த்தி சுரேஷ் என நாம் நம்ப ஆரம்பிப்பதற்குள் பாதி படம் வந்துவிடுகிறது. பிற்பாதியில் அவருக்கு இன்னமும் சற்று கனமான வேடம். சூப்பர் ஸ்டாரின் காதலியாக 'லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா. அப்படியே டைட்டில் கார்டிலும் போட்டிருப்பது சிறப்பு. நயன்தாராவும் தன் பாத்திரத்தைச் சிறப்பாகச் செய்து பாஸ் மார்க் வாங்குகிறார்.

Annaatthe | அண்ணாத்த
Annaatthe | அண்ணாத்த

குஷ்பூ, மீனா போன்றவர்களை வைத்து நாஸ்டால்ஜியா ஃபீலைக் கொண்டு வர முயன்றிருக்கிறார்கள். ஆனால், இன்ட்ரோ பின்னணி இசையைத் தவிர எந்த நாஸ்டால்ஜியாவும் எட்டிப் பார்க்கவில்லை. முதல் பாதிக்கான கௌரவ வில்லனாக பிரகாஷ்ராஜ். பச்சைக்கிளி கதாபாத்திரத்தில் வரும் சூரிக்கு லீ லீ என முடியும் காமெடி ஒன்லைனர்கள் எழுதிக்கொடுத்திருக்கிறார்கள். இதுபோக சதீஷ், சத்யன், லிவிங்ஸ்டன், பாண்டியராஜன் எனப் பலரையும் வைத்து பேக் டு பேக் காமெடி கலவரங்கள் நடத்துகிறார்கள். குருநாதா!

படத்தின் பிரச்னை அரதப் பழைய கதையோ, க்ளீஷே காட்சிகளோ அல்ல. டிரெய்லரிலேயே படத்தின் கதை இதுவாகத்தான் இருக்கும் என ஆறு வயது சிறுவன்கூட யூகிக்கக்கூடிய அதன் தன்மைதான். ஆனால், வசனங்களை அள்ளி இறைத்திருக்கிறார்கள். குடும்பம்ங்கறது, பொறந்த வீடுங்கறது, பாசம்ங்கறது, தங்கச்சிங்கறது என யார் பேச ஆரம்பித்தாலும், 'சோடா வாங்கியாரவா' எனக் கேட்கும் அளவுக்கு பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அதனாலேயே பெரிய திரையில் மெகா சீரியல் பார்க்கும் எபெக்ட்டை கொடுத்துவிடுகிறது 'அண்ணாத்த'. அதிலும் ஏற்கெனவே தெரிந்த கதையில், முதல் பாதி மனிதர்கள் இன்டர்வெல்லுடன் குட்பை சொல்ல, இரண்டாம் பாதியில்தான் டோக்கன் போட்டுக்கொண்டு வில்லன்களே வருகிறார்கள். ஒவ்வொருவராய் வந்து அறிமுகமாகி செட்டிலாவதற்குள் விடிந்து வெள்ளைக் கோழி கூவிவிடுகிறது.

Annaatthe | அண்ணாத்த
Annaatthe | அண்ணாத்த

தன் பிறப்பைப் பற்றி தவறாகப் பேசிவிட்டார் என கர்ஜிக்கும் சின்ன வில்லனோ, மணிக்கு ஒருமுறை தன் பிறப்பைப் பற்றி தானே தவறாகத்தான் பேசிக்கொண்டிருக்கிறார். சின்ன வில்லனுக்கு 'விவேகம்' விவேக் ஓபராய் கெட்டப் என்றால், பெரிய வில்லன் ஜகபதி பாபுவுக்கு 'சிறுத்தை', 'விஸ்வாசம்' பட கெட்டப்புகள். அந்தத் தாடியையும், மீசையையும் சற்று தள்ளி வைத்துவிட்டு, ஜகபதி பாபுவா என நாம் சுதாரிப்பதற்குள் கிளைமேக்ஸ் வந்துவிடுகிறது. வில்லனை வதம் செய்யும் ஸ்கெட்சுகள் புதிதாக இருந்தாலும், ஒரு தடவைக்கூட ஹீரோ தோற்க மாட்டார் எனும்போது இம்புட்டு நீளமான சண்டைகள் எதற்கு என்னும் கேள்வியும் எட்டிப் பார்க்கிறது.

'சார சார காற்றே' பாடலின் மான்டேஜ்களில் வின்டேஜ் ரஜினி. அதில் ரஜினி, நயன் இருவருக்குமான காஸ்டியூம் செலக்சென் எல்லாம் பக்கா. இமானின் இசையில் 'வா சாமி' பாடலுக்கான பில்ட் அப்புகளும், திலீப் சுப்பராயனின் சண்டைகளும் படத்துக்கு மாஸை ஏற்றி வைக்கின்றன. வெற்றியின் கேமரா, ஒரு கமர்ஷியல் படத்துக்குத் தேவையான அனைத்தையும் டிக் போட்டு செய்து முடித்திருக்கிறது. முதல் பாதியில் மட்டும் பாரபட்சம் பார்க்காமல் ரூபன் கத்திரி போட்டிருக்கலாம்.

Annaatthe | அண்ணாத்த
Annaatthe | அண்ணாத்த

கண்ணாமூச்சி ஆட்டமாய் இரண்டாம் பாதி லென்த்தாக நகர்ந்துக்கொண்டிருக்க, மயங்கிக் கிடக்கும் அடியாட்களை எழுப்பி தங்க மீனாட்சி 'யாருங்க உங்கள அடிச்சாங்க' என எமோஷனலாய் கேட்கும்பொழுது "ஏம்மா தங்க மீனாட்சி இன்னுமா நீ அதைக் கண்டுபுடிக்கல?" என்று நமக்கே வெறுப்பாகிவிடுகிறது.

மொத்தத்தில், கனெக்ட் ஆகாத எமோஷன்களால் 'அண்ணாத்த' மற்றுமொரு மசாலா படமாகக்கூட கடந்துபோக மறுக்கிறது.