Published:Updated:

அனபெல் சேதுபதி - சினிமா விமர்சனம்

விஜய் சேதுபதி - தாப்ஸி
பிரீமியம் ஸ்டோரி
விஜய் சேதுபதி - தாப்ஸி

மற்ற உணர்ச்சிகளையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு நகைச்சுவையை மட்டுமே முன்னிலைப்படுத்தி இருக்கிறார்கள்.

அனபெல் சேதுபதி - சினிமா விமர்சனம்

மற்ற உணர்ச்சிகளையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு நகைச்சுவையை மட்டுமே முன்னிலைப்படுத்தி இருக்கிறார்கள்.

Published:Updated:
விஜய் சேதுபதி - தாப்ஸி
பிரீமியம் ஸ்டோரி
விஜய் சேதுபதி - தாப்ஸி

பிரமாண்டமான மாளிகைக்குள் பேய்கள், அந்தப் பேய்க்கூட்டத்திற்குள் மாட்டிக்கொள்ளும் ஒரு குடும்பம், அதன்பின் நிகழும் கலாட்டா என டெம்ப்ளேட்டிலிருந்து துளி விலகினாலும் தெய்வக்குத்தமாகிவிடும் என்கிற ரீதியில் வந்திருக்கும் படம் இந்த 'அனபெல் சேதுபதி.'

ஊரின் பெரும்புள்ளியான கதிரேசன் அண்ட் கோவிடமிருந்து ஒரு பாழ்பட்ட நிலத்தை வாங்குகிறார் மன்னர் வீர சேதுபதி. `எதுக்கு இதைப்போய் இவ்ளோ காசு போட்டு வாங்குறாரு?' என சகலரும் ஆச்சரியப்பட, அதில் தன் மனைவிக்காக பிரமாண்ட மாளிகையைக் கட்டுகிறார் சேதுபதி. அந்த மாளிகையைப் பார்த்து ஆசைகொள்ளும் கதிரேசன் அதைத் தனதாக்கிக் கொள்ள முயல்கிறார். அதற்காக சில விபரீத முயற்சிகளும் எடுக்கிறார். 70 ஆண்டுகள் கழித்து இன்று அந்த மாளிகையில் கதிரேசனின் மொத்தக் குடும்பமும் பேய்களாக அடைபட்டு அலைகிறது. இடையில் என்ன நடந்தது, இவர்களுக்கு விடுதலை உண்டா இல்லையா என்பது... ஆவ்... மீதிக்கதை.

அனபெல் சேதுபதி - சினிமா விமர்சனம்

வீர சேதுபதியாக விஜய் சேதுபதி. கதைச் சுருக்கத்தைவிடக் குறைவான நேரமே படத்தில் வருகிறார். அதிலும் வழக்கமான சிரிப்பு, நடிப்பு. சமீப காலமாக சிறந்த கதைகளாகத் தேர்ந்தெடுத்து நடிக்கும் தாப்ஸி இதில் வசன உச்சரிப்புக்குக்கூட மெனக்கெடவில்லை. காமெடி என மிகை நடிப்பை அள்ளித் தெளிக்கிறார்.

ராதிகா, ராஜேந்திர பிரசாத், ஜெகபதி பாபு என சீனியர் நடிகர்கள் திரைமுழுக்க வலம்வருகிறார்கள். ஆனால், நடிப்பதற்கான வெளி இல்லாமல் சும்மா வந்து வசனம் பேசிவிட்டுப் போகும் அவர்களைப் பார்க்க ரொம்பவே பரிதாபமாக இருக்கிறது. யோகிபாபுவின் ரொம்ப சுமாரான ஒன்லைனர்களே பெட்டராகத் தோன்றுமளவிற்குத்தான் இருக்கிறது மற்றவர்களின் ‘பங்களிப்பு.’

கிருஷ்ண கிஷோரின் இசை, கெளதம் ஜார்ஜின் ஒளிப்பதிவு என எதுவுமே பளிச்சென ஈர்க்கவில்லை. அப்படி ஈர்க்கும் மாளிகையின் கலை இயக்கமும் ஒருவித பிளாஸ்டிக் தன்மையோடேவே இருப்பது உறுத்தல்.

இது காமெடிப் படமா, குழந்தைகளுக்கான பேய்ப் படமா என்கிற குழப்பம் நமக்கு மட்டுமல்ல, இயக்கிய தீபக் சுந்தர்ராஜனுக்குமே இருக்கும்போல. அரதப்பழைய காமெடி பன்ச்கள், சிரிப்பே வராத சீக்வென்ஸ்கள் என இழுத்து இழுத்து இரண்டேகால் மணிநேரம் நம் பொறுமையை சோதிக்கிறார்கள். நடுவே வரும் காதல் போர்ஷனிலும் ரசிக்கும்படி எதுவுமில்லை.

அனபெல் சேதுபதி - சினிமா விமர்சனம்

மற்ற உணர்ச்சிகளையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு நகைச்சுவையை மட்டுமே முன்னிலைப்படுத்தி இருக்கிறார்கள். ஆனால் அதுவும் வேலைக்கு ஆகாததால் மொத்தமாக இலக்கு தப்பிப்போய்விட்டது `அனபெல் சேதுபதி.'