சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

புத்தம் புது காலை

புத்தம் புது காலை
பிரீமியம் ஸ்டோரி
News
புத்தம் புது காலை

தாத்தா பேத்திக்கு இடையேயான முறிந்த உறவை மீட்கும் கதை சொல்கிறது கௌதம் மேனனின் ‘அவரும் நானும் / அவளும் நானும்’.

அன்பு எப்போதும் மெல்லிய நீரோட்டமாக மனித வாழ்க்கையில் ஓடிக்கொண்டிருக்கிறது என்பதைச் சொல்லும் நான்கு படங்கள், ஜாலியான ஒரு படம் என ஐந்து பூக்களால் ஆன மாலை, இந்தப் ‘புத்தம் புது காலை’

இளமை இதோ இதோ - சுதா கொங்கரா

27 நிமிடத்தில் ஓர் அழகிய காதல் கதையை ஹைக்கூவாகச் சொல்கிறது ‘இளமை இதோ இதோ.’ மனைவியை இழந்து, தன் மகளையும் திருமணம் செய்துகொடுத்துவிட்டுத் தனியாக வசிக்கும் ஜெயராமை ஒரே ஒருநாள் சந்திக்க வருகிறார் பழைய காதலி ஊர்வசி. அவர் வந்த நேரம், மோடி 21 நாள் லாக்டௌன் அறிவிக்கிறார். அந்த 21 நாள்களில் மனதளவில் இளைஞர்களாக மாறும் அவர்களுக்குள் வரும் நெருக்கத்தையும் உரசலையும் கலகலப்பாகச் சொல்லியிருக்கிறார் சுதா கொங்கரா. ‘இளமை ஜெயராமாக’ அவரது மகன் காளிதாஸ், ‘இளமை ஊர்வசி’யாக கல்யாணி பிரியதர்ஷன். ஜெயராமும் ஊர்வசியும் சின்ன சின்ன ரியாக்‌ஷன்களில்கூட சிரிப்பு மூட்டுகிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசை, இளமைக்கு இனிமை சேர்த்திருக்கிறது.

ரேட்டிங் 😍😍😍

அவரும் நானும்/ அவளும் நானும் - கௌதம் மேனன்

தாத்தா பேத்திக்கு இடையேயான முறிந்த உறவை மீட்கும் கதை சொல்கிறது கௌதம் மேனனின் ‘அவரும் நானும் / அவளும் நானும்’. சயின்டிஸ்ட் தாத்தாவாக எம்.எஸ்.பாஸ்கர், ஐடி பேத்தியாக ரிது வர்மா. வழக்கமான ‘வாய்ஸ் ஓவர்’ கௌதம் மேனன் படங்களின் சாயல் இல்லாமல் இருப்பது பெரும் ஆறுதல். எம்.எஸ்.பாஸ்கர் வழக்கம்போல் நடிப்பில் மிளிர்கிறார். தன் மகளின் குரல் குறித்தும் இசை குறித்தும் அவர் சொல்லுமிடத்தில் நம் கண்களும் கலங்கிவிடும். ஒட்டுதல் இல்லாத பேத்தியாக வந்து உறவாக மாறும் பாத்திரத்தில் இயல்பாக நடித்திருக்கிறார் ரிது. அந்தப் பாடல் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்.

ரேட்டிங் ❤️❤️❤️

புத்தம் புது காலை

காஃபி எனிஒன் - சுஹாசினி மணிரத்னம்

ஐசியூவில் இருக்கும் தன் அம்மாவைக் காண வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருகிறார்கள் சகோதரிகளான சுஹாசினியும் அனு ஹாசனும். வீட்டுக்கு வருபவர்களுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. அம்மாவை ஐசியூவில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து, வீட்டிலேயே வைத்துக் கவனிக்கிறார் அப்பா காத்தாடி ராமமூர்த்தி. மகள்களின் எதிர்ப்பை மீறும் அப்பா, மிகத்தாமதமாகப் பிறந்து அம்மாவுடன் சண்டை போட்ட ஸ்ருதிஹாசன் என்று கதை நகர்கிறது. ‘வசூல்ராஜா’வில் கோமாவில் இருந்து மீளும் கதையை முழுக்கதையாக மாற்றியிருக்கிறார்கள் மணிரத்னமும் சுஹாசினியும். அந்நியமான வசனங்கள். செயற்கையான நடிப்பு. ஐந்து படங்களில் சுமாரான படம் இதுதான்.

ரேட்டிங் ❤️

Reunion - ராஜீவ் மேனன்

பாரில் பணிபுரியும் ஆண்ட்ரியாவின் வண்டி பஞ்சராக, எதேச்சையாகச் செல்லும் வழியில் தன் பள்ளி நண்பன் சிக்கில் குருசரண் வீட்டுக்குச் செல்கிறார். டாக்டரான குருசரண், தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய சூழல். லாக்டௌனும் அறிவிக்கப்பட, குருசரண் அம்மா லீலா சாம்சனுடன் தங்குகிறார். இரண்டு வெவ்வேறுவிதமான மனநிலைகள் கொண்ட நண்பர்களின் சந்திப்பைச் சொல்கிறது ராஜீவ் மேனனின் ‘ரீ யூனியன்.’ ஒருவரின் வாழ்க்கையில் இன்னொருவர் குறுக்கிடாத இயல்பான நாகரிகம் படத்துக்கு அழகு சேர்க்கிறது.

ரேட்டிங் ❤️❤️

புத்தம் புது காலை

Miracle - கார்த்திக் சுப்பராஜ்

வாழ்க்கையில் ‘மிராக்கிள்’ என்று நம்பும் சம்பவம் பல்பு வாங்கவைத்தால் எப்படி இருக்கும் என்பதை காமெடியாகச் சொல்கிறது கார்த்திக் சுப்பராஜின் ‘மிராக்கிள்.’ லாக்டௌனால் முடங்கிக்கிடக்கும் பாபி சின்ஹாவும், அவரின் நண்பரும் ஆளில்லாத ஒரு கம்பெனியில் நுழைந்து திருட்டுத்தனம் செய்வதன் மூலம் நடக்கும் எதிர்பாராத ‘மிராக்கிள்’ இது. அதிலும் அந்த கார்ப்பரேட் சாமியார் ட்விஸ்ட் செம. மற்ற நான்கு படங்கள் பயணிக்கும் நேர்க்கோட்டில் இருந்து விலகிப்பயணித்தாலும் இந்த ‘மிராக்கிள்’ தரமான சம்பவம்தான்.

ரேட்டிங் 😂😂😂

அமேசான் ப்ரைமில் நல்ல சினிமா என்றால், அது பக்கத்து மாநிலங்கள் அல்லது அயல்மொழி படங்கள் என்பதுதான் இந்த லாக்டௌன் காலத்து சூழலாக இருந்தது. அதை சற்று மாற்றியிருக்கிறது புத்தம் புது காலை.