கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

சினிமா விகடன்: பாவக் கதைகள்

சினிமா விகடன்
பிரீமியம் ஸ்டோரி
News
சினிமா விகடன்

Paava Kadhaigal

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியிருக்கிறது நெட்ப்ளிக்ஸின் முதல் தமிழ் ஆந்தாலஜியான ‘பாவக் கதைகள்.' சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன், கௌதம் மேனன், வெற்றிமாறன் என டாப் இயக்குநர்கள் கைகோத்திருக்கும் இந்த நான்கு கதைகள் எப்படி இருக்கின்றன?

தங்கம்

80-களின் கோவை வட்டாரம். திருநங்கையான சத்தாருக்கு (காளிதாஸ்) சரவணன் (சாந்தனு) மீது மையல். ஆனால் சத்தாரை நண்பனாகக் கருதும் சாந்தனுவோ சத்தாரின் தங்கை சாய்ரா (பவானிஸ்ரீ) மேல் காதல் வயப்படுகிறார். சத்தாரின் உதவியோடு ஊரை விட்டு ஓடுகிறார்கள் சாந்தனுவும் பவானிஸ்ரீயும். ஓராண்டு கழித்து ஊர் திரும்பும் ஜோடிக்குக் காத்திருக்கும் அதிர்ச்சியும், அவர்கள் ஆற்றும் எதிர்வினையுமே இந்த ‘தங்கம்.'

இதில் நிஜ ‘தங்கம்', சத்தாராக நடித்திருக்கும் காளிதாஸ் ஜெயராம்தான். திருநங்கை உடல்மொழியும் காதலும் கழிவிரக்கமும் ததும்பும் முகபாவனைகளுமாய் அசத்தியிருக்கிறார். சாந்தனு, பவானிஸ்ரீ தொடங்கி மற்ற நடிகர்களும் பொருத்தமான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். படத்தின் பலம், ஜஸ்டின் பிரபாகரனின் இசை. ஷான் கருப்பசாமியின் கனமான கதையைக் கவனிக்கத்தக்க வகையில் படமாக்கியதற்காக சுதா கொங்கராவுக்கு ஸ்பெஷல் கைகுலுக்கல்கள். கிராமத்தின் அசல் முகத்தைப் பதிவு செய்திருக்கும் இயக்குநர், 80-களின் மனிதர்கள் `திருநங்கை'களை அணுகிய விதத்தையும் சமரசமின்றிக் காட்ட முற்பட்டிருக்கிறார். திருநங்கைகள் எந்நேரமும் காதல் உணர்வுடனும் அதற்கான உடல்மொழியுடனும் மட்டுமே உலவுவார்கள் என்பது இந்தக் கதைக்கு உதவியிருந்தாலும், அதுவும் பொதுப்புத்தி அடிப்படையிலான பொதுமைப்படுத்தலே!

சினிமா விகடன்: பாவக் கதைகள்
சினிமா விகடன்: பாவக் கதைகள்
சினிமா விகடன்: பாவக் கதைகள்
சினிமா விகடன்: பாவக் கதைகள்
சினிமா விகடன்: பாவக் கதைகள்
சினிமா விகடன்: பாவக் கதைகள்

லவ் பண்ணா உட்றணும்

சாதிவெறி அரசியல்வாதி அப்பாவுக்கு (பதம் குமார்) ஆதிலஷ்மி - ஜோதிலஷ்மி (அஞ்சலி) என இரு மகள்கள். ஆதி, வீட்டு டிரைவரைக் காதலிப்பது தெரிந்து இருவரையும் ஆணவக்கொலை செய்துவிடுகிறார் அப்பா. இது தெரியாமல் ஊருக்கு வந்திறங்கும் ஜோதி ஒரு தன்பால் ஈர்ப்பாளர் என்கிற விஷயம் தெரியவர அவரையும் கொல்லத் துணிகிறார் தந்தை. அவருக்கு ‘காதல்’ என்றால் என்ன என்பதை உணர வைக்கும் ஜோதியும் நண்பர்களும், பின் வரும் அந்த ஒரு ட்விஸ்டும்தான் இந்த ‘லவ் பண்ணா உட்றணும்.’

கல்கி கோச்லினுக்குத் தமிழில் நல்வரவு! அஞ்சலி நடிப்பு, தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு, அனிருத்தின் இசை படத்தின் பலமான தூண்கள். ஆனால் சாதிவெறி, ஆணவக்கொலைகள் குறித்த எந்தப் புரிதலும் இல்லாத விக்னேஷ்சிவன் படத்தின் இயக்குநர் என்பதுதான் துரதிர்ஷ்டம். ஆணவக்கொலையையே நகைச்சுவைக் காட்சியாக மாற்றியிருப்பதும் ஆண்களை அண்டவிடாமல் வளர்ந்ததால்தான் ஒரு பெண் லெஸ்பியன் ஆனதாகச் சொல்வதும் எனப் படத்தின் நோக்கத்துக்கே எதிரானதாக இருக்கிறது படம். விக்னேஷ்சிவன் இந்தமாதிரி சீரியஸான விஷயத்தைப் படமாக்குகிறேன் என்று சொதப்புவதை இனிமேலாவது விட்டுரணும்!

சினிமா விகடன்: பாவக் கதைகள்

வான்மகள்

ஒரு மகன், இரு மகள்கள் எனப் பாசத்தின் ஊற்றாக இருக்கும் சத்யா (கௌதம் மேனன்), மதி (சிம்ரன்) குடும்பம், மகளுக்கு நேரும் சிறார் வன்புணர்வை எப்படி எதிர்கொள்கிறது என்பதுதான் `வான்மகள்' சொல்லும் கதை.

குழந்தைகள்மீதான பாலியல் வன்முறை என்னும் கனமான கதைக்களத்தைத் தேர்ந்தெடுத்து மிகச்சுமாரான படத்தைக் கொடுத்திருக்கிறார் கௌதம் மேனன். மிகச்செயற்கையான காட்சிகள், மனதில் பதியாத வசனங்கள், பாலியல் வன்புணர்வுக்கு ஆணுறுப்பை நீக்குவதுதான் தீர்வு என்னும் பழைமைத்தனமான புரிதல் என முடிந்தவரை சொதப்பியிருக்கிறார் கௌதம். இருக்கும் நடிகர்களில் ஆங்காங்கே மிகைநடிப்பு தென்பட்டாலும் ஓரளவுக்குக் காப்பாற்றியிருப்பது சிம்ரனின் நடிப்பு. காப்பாற்றத் தவறிய நடிப்பு கௌதம் மேனனுடையது. உடல்மொழி, முகபாவனை என எல்லாவற்றிலும் செயற்கை பாவனை. உண்மையிலேயே பார்வையாளர்களான நமக்குத்தான் இது ‘பாவக்கதை.’

சினிமா விகடன்: பாவக் கதைகள்

ஓர் இரவு

சாதிமறுப்புத் திருமணம் செய்து கர்ப்பமாய் இருக்கும் மகள் சுமதியை (சாய் பல்லவி)இரண்டாண்டுகளுக்குப் பிறகு தேடிக் கண்டுபிடித்து, ஊரில் வளைகாப்பு நடத்த அழைத்துவருகிறார் ஜானகிராமன் (பிரகாஷ்ராஜ்). எல்லாம் சுமுகமாக முடிந்தது என்று நினைக்கும்போது, சாதியம் தன் கோரப்பல்லைக் காட்டும் கொடூரத்தை ரத்தமும் சதையுமாகச் சொல்கிறது வெற்றிமாறனின் ‘ஓர் இரவு.’

பிரகாஷ்ராஜ், சாய்பல்லவி எனத் தேர்ந்த இரு நடிகர்கள் ஒட்டுமொத்தப் படத்தையும் தூக்கி நிறுத்துகிறார்கள். அதிலும் பிரகாஷ்ராஜ் நடிப்பின் உச்சத்தை வழங்கியிருக்கிறார். கிராமத்து அப்பாவுக்குள் எப்படி சாதி பூதம் ரத்தப்பசியுடன் ஒளிந்திருக்கும் என்பதை யதார்த்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார். “அவரு ஏன் என்ன பாத்துக்கணும்? நானே என்னைப் பாத்துக்குவேன்!”, “நல்லாப் படிச்சா சுதந்திரம் தானா கிடைக்கும்” போன்ற வசனங்கள் அழகு.

எளிமையான கதை... நடக்கப்போவதை நாம் முன்னரே யூகிக்க முடிந்தாலும் ஒவ்வொரு ஷாட்டிலும் அத்தனை அழகியல். ஆணவக்கொலையையும் சாதிவெறியையும் அழுத்தமாகப் பதிவு செய்தது பாராட்டத்தக்கது. ஆனால் எந்த நம்பிக்கையையும் அளிக்காமல் ‘சாதிமறுப்புத் திருமணம் செய்தால் இதுதான் கதி’ என்ற எதிர்மறை எச்சரிக்கையுணர்வைப் படம் ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சமும் வரத்தான் செய்கிறது.

சினிமா விகடன்: பாவக் கதைகள்